உலகில் மூன்றில் ஒருவருக்கென முழங்கால் வலி இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. நாமும் கூட நம்முடைய ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் முழங்கால் வலியால் அவதிப்படுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதற்கு உண்மையில் என்ன காரணம்? இதற்கான தீர்வுகள் தான் என்ன?
உடல் உருவாக்கும் தொழிற்சாலையில் நீங்கள் தான் காலுக்கான உற்பத்தி ஊழியர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி உங்கள் கால்களைத் தொட்டு நீங்களே ஒவ்வொன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டு எலும்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தொடையில் இருந்து ஒன்றும், காலின் தொடர்ச்சியாய் மற்றொன்றும்.
இந்த இரண்டு எலும்புகளும், இதை எப்படியாவது, எதை வைத்தாவது உருவாக்கு தம்பி. ஆனால், இதை வைத்து தான் மனிதர்கள் காலம் முழுக்க வாழ வேண்டும் என்று கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது.
இரண்டு எலும்புகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துப் பார்க்கிறீர்கள். இரண்டும் ஒன்றோடு ஒன்று உரசுகிறது.
இப்படி உரசினால், வருங்காலங்களில் தேய்மானம் ஏற்படும். அதோடு அல்லாமல், நீண்ட நாள் இப்படியே உரசினால் – எலும்பே கரைந்து விடும். என்ன செய்யலாம் என்று யோசித்து, இரண்டுக்கும் இடையில் ஒரு மெத்தை வைக்கலாம் என்று எண்ணம் தோன்றுகிறது.
நீரோடு இணைத்துச் சிலவற்றைச் சேர்த்து ஜெல்லி போன்ற ஒன்றை இரண்டு எலும்புகளுக்கு இடையில் வைத்தாகி விட்டது. இப்போது எலும்புகள் உரசவில்லை. எலும்புகளுக்கு இடையில் ஏற்படும் அசைவுகளும் அந்த ஜெல்லி போன்ற மெத்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எலும்புகள் சரியான அமைப்பு முறையில் இருக்க அங்கங்கே குட்டிக் குட்டி ஒட்டுகள் ஒட்டிக் கொண்டுள்ளன. அதற்கு “லிக்மென்ட்” என்று பெயரும் வைத்தாகி விட்டது.
இந்த எலும்புகளின் திடத்தை அதிகரிக்க சுற்றிலும் தடித்த கயிறுகள் அமைத்து அதற்கு “தசைகள்” என்று பெயரும் வைத்தாகி விட்டது. அதற்குள் மற்றொரு கட்டளையும் பிறப்பிக்கப்படுகிறது. உங்கள் தயாரிப்பின் காலாவதி என்பது உங்களின் பராமரிப்பில் இருக்கிறது என்று சொல்லப்பட்டு விட்டது. இப்போது உங்கள் தயாரிப்புகள் பயன்பாட்டிற்கு வருகிறது.
உங்கள் தயாரிப்பில் தான் உங்கள் கால்கள் நடந்துக் கொண்டு இருக்கிறது. இது தான் முழங்கால் அமைப்பு முறைக்கான ஒரு மேற்பார்வை.
சரி, பொருள் வந்து விட்டது. பயனும் தெரிந்து விட்டது. வலிக்கான காரணம் என்னவென்றால், இதற்கு இரண்டு விதிகள் இருக்கிறது. ஒன்று உங்கள் தயாரிப்பில் ஏற்படும் காயங்கள் அல்லது தொடர் பயன்பாடு இல்லாததால் செயல் இழத்தல் அல்லது அதன் தன்மையை இழத்தல்.
புரியவில்லையா?
காயம் என்பது நீங்கள் எதன் மீதாவது இடித்துக் கொள்வது, அல்லது விபத்து வழியாக முழங்கால்களில் ஏற்படும் காயம் என்பது மட்டும் அல்ல. ஒரு வயது குழந்தையிடம் பத்து கிலோ எடையைச் சுமக்கச் சொல்வதும் விபத்து தானே.
உங்கள் வாழ்வியல் முறை, உங்கள் பழக்க வழக்கம், உங்கள் உடல் எடை, உங்கள் உடலுக்கான ஓய்வு, உங்கள் உடற்தகுதி இவை எல்லாமும் கூட இந்தப் பெரும் விபத்திற்குக் காரணம் ஆகலாம். நீங்கள் உருவாக்கிய உங்கள் காலின் உட்பாகங்கள் உரிய பலத்தில் இருப்பது என்பது தயாரிப்பு நிறுவனத்திடம் இல்லை, உங்கள் பராமரிப்பில் இருக்கிறது.
போதுமான பலமில்லாத உங்கள் மெத்தைகள், ஒட்டுகள், தசைகளுக்கு திடீரென்று ஒரு பெரும் சுமையைக் கொடுப்பது என்பது கூட அந்த விபத்துக்குக் காரணம் ஆகலாம் அல்லது தொடர்ச்சியாக அதன் மீது உங்கள் உடல் எனும் பொதியைச் சுமக்க வைப்பது கூட இந்த விபத்திற்குக் காரணம் ஆகலாம். இது விதி ஒன்று.
மற்றொரு விதி, இது வரை அந்தத் தசைகள் பயன்படாமல் இருந்து இருக்கலாம். நான் நிற்கிறேனே, நடக்கிறேனே அதெல்லாம் பயன்பாடு இல்லையா? என்று வாதாட வருபவர்கள் முழுதும் படித்துவிட்டு வாருங்கள். உங்கள் தசைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்பாடு கொண்டுள்ளது. உங்கள் மெத்தைகள் அவற்றுக்குரிய செயல்பாடுகளில் ஈடுபடுதல் கட்டாயம். இவை தான் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இவை அனைத்துமே நீங்கள் செய்கிற நடத்தலில், நிற்பதில் முடிந்து விடும் என்று சொன்னால் அது எப்படி நியாயம் ஆகும்?
உங்கள் எலும்புகளில் ஒரு புறம் மட்டும் முழு பொதியைச் சுமக்க விட்டு மற்றொரு புறம் சுமை இல்லை என்றால் எப்படிச் சமம் ஆகும்?
இவை தான் முழங்கால் வலிக்கான காரணிகள். ஒரு தசை அதிகம் உழைக்கிறது, மற்றொரு தசை பயன்படாமல் போகிறது. இந்த இரண்டுக்கும் இடையில் சிக்கும் மெத்தையும், எலும்புகளும், ஒட்டுகளும் சமமின்றி எடையைப் பகிர்ந்து கொள்கிறது.
தொடர் அழுத்தம், தொடர் செயல்பாடு. தொடர் செயல்பாடு இன்மை இவையெல்லாம் உங்கள் படைப்புக்களை தாம் குறைக்கிறது. இதனால் மெத்தையில் மிதப்புத் தன்மையைக் குறைக்கிறது. தசைகளில் இறுக்கம் அதிகரிக்கிறது. எலும்புகளில் உரசல் ஏற்படுகிறது. தேய்மானம் அதிகரிக்கிறது. இந்த மூன்றும் உங்கள் அசைவுகளை, உங்கள் சுதந்திரத்தை, உங்கள் வலிமையைக் களவாடிச் செல்கிறது. உங்கள் முழங்கால் வலி, உங்கள் வாழ்வின் பல்வேறு தருணங்களைத் திருடி விடுகிறது.
வலி என்பது உங்களுக்கு எச்சரிக்கை மணி தான். ஏதோ ஒன்று சரியாக இல்லை என்று உங்கள் உடல் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு கூக்குரலிட்டு அழும்போது அதன் மீது அமிலங்களைப் பாய்ச்சுவது என்பது எத்தனைப் பெரிய வன்முறை? காரணங்களைத் தேட வேண்டாமா? விடைகளைக் கண்டறிய வேண்டாமா?
பொருள் தொட்டுணர்ந்தோம், பயன் தெரிந்தோம். காரணம் புரிந்தோம். தீர்வு?
முதலில் சொன்னது போலவே, உங்கள் தயாரிப்பின் காலாவதி என்பது உங்கள் பராமரிப்பில் தான் இருக்கிறது. உங்கள் பராமரிப்பு என்பது தொடர்ச்சியான பயன்பாடு தான். இங்கே மற்றொரு குழப்பமும் இருக்கிறது. பயிற்றுவித்தல் என்பதற்கும், பயன்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் அது.
நீங்கள் உங்கள் உடலை உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப பயிற்றுவித்தல் அவசியம் ஆகும். ஆனால், நம்மில் பலர் பயன்பாட்டையே பயிற்சியாக நினைக்கிறோம்.
ஒவ்வொரு தனி மனிதரின் தேவையும், பயன்பாடும் வேறுபடும். அந்த வேறுபாட்டை அறிந்து அவர்களுக்குரிய பயிற்சிகளைச் செய்தல் அவசியம்.
அதிக நேரம் நிற்பவரா? அதிக நேரம் நடப்பவரா? அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பவரா? இவர்களுக்கெல்லாம் ஒரே பயிற்சி என்பது, நீ எப்படி வேண்டுமானால் இரு, நான் கொடுக்கும் அரை ஜான் கைக் குட்டை தான் உனக்கு உடை என்பது போல ஆகும் என்றால் எத்தனைப் பெரிய வன்முறை. இதைத் தான் தொடர்ந்து நாம் நம் உடலின் மீது திணித்து வருகிறோம்.
உடலின் மீதான அக்கறை என்பது உங்களின் மீதான அக்கறை. உங்கள் சுதந்திரத்தின் மீதானஅக்கறை, உங்கள் மகிழ்ச்சியின் மீதான அக்கறை,உங்கள் குடும்பத்தின் மீதான அக்கறை.
பொருள், பயன்பாடு, வலியின் காரணம் எல்லாம் புரிந்தது. தீர்வு என்ன?
சமமின்மைகளைச் சமன்படுத்துவதே தீர்வாகும் என்பதன் அடிப்படையில் தசைகளின் பலமின்மையே முழங்கால் மூட்டின் மீது அழுத்தத்தையும், தொடர் அழுத்தம் மூட்டின் மெத்தை மீதான தேய்மானமாகவும், அதன் நீட்சி எலும்புகளின் தேய்மானமாகத் தொடர்கிறது. இதனைத் தடுக்க தொடர் பயிற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பயிற்சி என்பது ஒரு பத்து பயிற்சிகளை மட்டும் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பதல்ல, அதே போல எல்லாருக்கும் ஒரே பயிற்சி என்பதும் ஏதுவானதல்ல. எனவே எப்போதெல்லாம் உங்கள் இயல்பு தன்மைகளில் குறைபாடு தெரிகிறதோ? எப்போதெல்லாம் உங்கள் தினசரி வேளைகளில் தொய்வு தெரிகிறதோ? நேற்று வரை படிகள் ஏறினோம் இன்று முடியவில்லை என்றால் அதற்கு சமாதானம் அடையாதீர்கள். தரையில் நேற்று வரை அமர்ந்தோம் இன்று அமர முடியவில்லை, ஒப்புக் கொள்ளவே கொள்ளாதீர்கள். அதை வயதோடோ அல்லது உங்கள் உபநோய்களோடோ ஒப்பீடு செய்து சமாதானம் ஆகாதீர்கள். அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து உங்களுக்கென்று பிரத்தியேகப் பயிற்சிகளை இயன்முறை மருத்துவத்தின் வழியே கண்டறியுங்கள். மருந்தில்லா மருத்துவத்தின் வழி சுதந்திர வாழ்க்கையை வாழத் துவங்குங்கள்.





