Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஒரே வானம் !இரண்டு பேரழிவுகள் !!-வெற்றி அமுதன்

நேரம் அதிகாலை நான்கு மணி. செம்புலம் இன்னும் இருளின் கரங்களில் கிடந்தது. கடலின் உப்புக் காற்று தெருக்களை மெதுவாகக் கடந்து சென்றது. தென்னங்கன்றுகளின் இலைகள் ஒன்றோடொன்று உரசிய சத்தம் தவிர கிராமம் முழுவதும் அமைதியாக இருந்தது.

தொலைவில் கருங்கடலின் மீது சில மஞ்சள் விளக்குகள் மட்டும் மிதந்தன. அவை இரவிலேயே கடலுக்குள் சென்றிருந்த மீன்பிடிப் படகுகளின் விளக்குகள். கிழக்கு வானம் இன்னும் கருமையாகவே இருந்தது. விடியல் வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது.

சேகர் வீட்டின் வாசலில் அமர்ந்து வலையின் கிழிந்த கண்ணிகளை இணைத்துக்கொண்டி
ருந்தான். அவரது கைகள் வேகமாக வேலை செய்தன. அந்த வேலைக்கு அவர் கண்களைப் பயன்படுத்தவே தேவையில்லை. சிறுவயதில் தந்தை கற்றுக் கொடுத்த திறமை, இப்போது விரல்களின் நினைவாக மாறியிருந்தது.

வீட்டுக்குள் இருந்து மல்லிகை வெளியே வந்தாள். அவள் கையில் இருந்த புகைபறக்கும் காபியை சேகரிடம் கொடுத்தாள்.

இருவரும் சில நொடிகள் பேசவில்லை. அந்த மௌனம் அவர்களுக்குப் புதிதல்ல. ஏழை வீட்டில் பல நேரங்களில் வார்த்தைகளைக் காட்டிலும் மௌனம்தான் அதிகம் பேசும்.

“நேத்து கடல்ல மீன் எப்படி?” என்று மல்லிகை மெதுவாகக் கேட்டாள்.

“பாதி வலை காலி.” “இன்னைக்கும் தூரம் போவீங்களா?”

சேகர் கடலை நோக்கிப் பார்த்தார்.

“கரைக்கு அருகே மீன் இல்ல. கொஞ்சம் ஆழம் போக வேண்டியிருக்கும்.” மல்லிகையின் முகத்தில் கவலை தெரிந்தது.

“டீசலுக்கு வாங்கின கடனே இன்னும் அடைக்கல, டீசல் விலையும் ஏறிடுச்சு.”

“ஆனா கடல் நம்மள ஏமாத்தாது.” அந்த வார்த்தையைச் சொல்லும்போது சேகருக்கே முழு நம்பிக்கை இல்ல.

அந்த நேரத்தில் கதவு திறந்தது. ஏழு வயது ஆதவன் கண்களைத் தேய்த்தபடி வெளியே வந்தான்.

“அப்பா…”

“என்னடா?”

“இன்று பெரிய மீன் கொண்டு வாங்க.” சேகர் அவனைத் தழுவி தூக்கிக்கொண்டார்.

“நீ பள்ளிக்கூடம் போய் வர்றதுக்குள்ள பிடிச்சிக்கிட்டு வந்துடுவேன்” என்றார் சேகர்.

கடற்கரையில் ஏற்கனவே சில படகுகள் தயாராக இருந்தன. ராஜன் டீசல் கேனை எடுத்துவந்தார்.

இம்ரான் இயந்திரத்தின் மூடியைத் திறந்து எண்ணெய் அளவைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“சேகரா…” என்று ராஜன் அழைத்தார்.

“இன்னைக்கும் தென்கிழக்குப் பக்கம் போவோமா?”

“ஆமாம்.”

“நேத்து அங்கயும் ஒண்ணும் இல்லையே.”

சேகர் சிறிது நேரம் அமைதியாக நின்றார்.

பிறகு “கடல் மாறுது” என்றான். அந்த இரண்டு வார்த்தைகளும் காற்றில் கனமாக நின்றன.

யாரும் பதில் சொல்லவில்லை.

மீனவர்கள் கடலை வெறும் தொழிலாகப் பார்ப்பதில்லை. அவர்கள் அதன் முகபாவனையைப் படிக்கக் கற்றவர்கள்.

அன்று கடல் வழக்கம்போல் தெரியவில்லை. அலைகள் சிறியதாக இருந்தன. ஆனால் நீரோட்டத்தில் ஏதோ விளக்கமில்லாத மாற்றம் இருந்தது.

சேகர் சகாக்களுடன் தயாராக இருந்த படகில் ஏறினான். இயந்திரம் கர்ஜித்தது.
மெதுவாக படகு கரையைவிட்டு விலகியது.

கரையில் நின்ற மல்லிகை கையை அசைத்தாள். சேகர் திரும்பிப் பார்த்தான். அது வழக்கமான ஒரு விடைபெறல்.

ஆனால் சில விடைபெறல்கள், அப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், வாழ்க்கையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடும். அதை யாரும் முன்கூட்டியே அறிய முடியாது.

அதே நேரத்தில்…

கிராமத்தின் மேற்குப் பகுதியில் இருந்த வயலை நோக்கி விவசாயி முருகேசன் நடந்துகொண்டிருந்தார்.

எழுபது வயதைக் கடந்துவிட்டவர். ஆனால் விடியற்காலையில் வயலைப் பார்க்காமல் அவரால் எந்த நாளையும் தொடங்க முடியாது.

அவரின் பின்னால் பேத்தி காவேரி ஓடிவந்தாள்.

“தாத்தா… என்னையும் கூட்டிட்டுப்போங்க.”

முருகேசன் சிரித்தபடி, “வா.” என்றார்.

வயலின் எல்லையை அடைந்ததும் அவர் நின்றுவிட்டார். காவேரி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

“ஏன் நின்னுட்டீங்க?”

முருகேசன் குனிந்து மண்ணை அள்ளினார். அது விரல்களுக்குள் தூளாக உதிர்ந்தது.

“இந்த மண்ணுக்குத் தாகம்.”

“மண்ணுக்கும் தாகம் வருமா?” தாத்தா

“மனிதனுக்கு தண்ணீர் இல்லேன்னா தாகம்.

மண்ணுக்கு மழை இல்லேன்னா தாகம்.” என்றார் விவசாயி முருகேசன்.

காவேரியும் மண்ணைத் தொட்டாள். அவளது சிறிய விரல்களில் ஒட்டாமல் அது சிதறிப்போனது.

முருகேசன் மெதுவாக வானத்தை நோக்கிப் பார்த்தார்.

“இந்தப் பருவமும் பொய்த்துப் போகக்கூடாது…” இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. தனக்குத்தானே மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.

இப்போது செம்புலம் விழித்திருந்தது.

தேநீர்க் கடையின் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் சிரிப்பு தெருக்களில் ஒலித்துக்கொண்டிருந்தது.

ஆனால் அந்தச் சிரிப்புக்கு நடுவிலும், கிராமத்து மக்களின் முகத்தில் கடந்த சில மாதங்களாகப் பதிந்திருந்த ஒரு கவலை மட்டும் மாறவில்லை.

தேநீர்க் கடையின் முன் மூன்று விவசாயிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

“இந்த முறை நாற்று போடலாமா?”

“தண்ணீர் இல்லாம எப்படி?”

“கடன் வாங்கி விதை போட்டா, மழை இல்லன்னா எல்லாமே போயிடும்.”

அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவும் நம்பிக்கை பற்றியது. அந்த நம்பிக்கையே
இப்போது குறைந்து கொண்டிருந்தது.

முருகேசன் தேநீர் கடையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

கடைக்காரர் ராமசாமி டம்ளரை நீட்டியபடி கேட்டார்.

“வயல் எப்படி இருக்கு?”

“வயல் இருக்கு… விளைச்சல்தான் இல்ல” என்று முருகேசன் சொன்னார்.

கடைக்காரர் சிரிக்கவில்லை. அந்த வார்த்தையை அவர் பலமுறை கேட்டிருந்தார். ஆனால்
ஒவ்வொரு முறையும் அது புதிதாகவே இருந்தது.

அதே நேரத்தில்…

நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பெருநகரம் வேறு ஒரு கவலையுடன் விழித்துக்கொண்டிருந்தது.

பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நிழலைத் தேடியபடி பேருந்திற்காக நின்று கொண்டிருந்தனர்.

குடிநீர் லாரியைச் சுற்றி நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர்.

கட்டிடத் தொழிலாளர்கள் வெயில் அதிகரிப்
பதற்கு முன்பே வேலைக்குச் செல்லத் தயாரானார்கள்.

சாலையோர தேநீர்க் கடையில் ஆட்டோ
ஓட்டுநர்கள் வெப்பத்தைப் பற்றி பேசிக்
கொண்டிருந்தனர்.

உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குளிர்சாதன அறைகளுக்குள் இன்னும் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

ஒரே நகரம்…ஒரே வெப்பம்…ஆனால் அந்த வெப்பம் எல்லோரையும் ஒரே மாதிரி தாக்கவில்லை.

குளிர்சாதன வசதி இல்லாத வீடுகளிலும், திறந்தவெளியில் வேலை செய்பவர்களிடமும் அந்த வெப்பம் அதிகமாகக் கொதித்தது.

பருவநிலை மாறும்போது, அதன் முதல் சுமையைச் சுமப்பவர்கள் பெரும்பாலும் உழைத்து வாழும் மக்கள்தான்.

ஆனால் செய்திகளில் அவர்கள் பெயர்கள் அரிதாகவே வரும்.

அந்த நாளும் அப்படித்தான்.

யாருக்கும் தெரியாமல்… ஒரு கிராமம் வறட்சியுடன் போராடிக்கொண்டிருந்தது. ஒரு நகரம் வெப்பத்துடன் போராடிக்கொண்டிருந்தது. இரண்டின் மேலேயும் ஒரே வானம் விரிந்திருந்தது.

அதே நகரத்தின் மறுபுறம், கண்ணாடிச் சுவர்கள் கொண்ட காலநிலை ஆய்வு மையத்தில் டாக்டர் ஆனந்தி தனது கணினி முன் அமர்ந்திருந்தார்.

திரையில் உலக வரைபடம். பசிபிக் பெருங்கடலின் நடுப்பகுதி சிவப்பு நிறத்தில் மின்னியது.

திரையில் இருந்த அறிக்கையை மீண்டும் ஒருமுறை பார்த்தார் ஆனந்தி.

“கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது.”

“பருவக்காற்றின் போக்கில் மாற்றம்.”

“சில பகுதிகளில் மழை குறையலாம். சில பகுதிகளில் அதிக மழை பெய்யலாம்.”

அருகில் இருந்த இளம் ஆய்வாளர் கேட்டார்.

“மேடம்… இதனால் என்ன நடக்கும்?”

ஆனந்தி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். அங்கு வெயிலில் சாலை அமைக்கும் தொழிலாளர்கள் வியர்வையில் நனைந்தபடி வேலை செய்துகொண்டிருந்தனர்.

“காலநிலை மாற்றம் எல்லோரையும் பாதிக்கும்,” என்றார் அவர். “ஆனா… முதலில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா?”

“யார் மேடம்?”

“விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள்… ஒரு நாள் வேலை நின்றாலும், அவர்களின் வாழ்க்கையே தடுமாறிவிடும். வசதியாக வாழ்பவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதைச் சமாளிக்க அவர்களிடம் அதிக வாய்ப்புகள் இருக்கும்.”

இளம் ஆய்வாளர் அமைதியாகத் தலையசைத்தார்.

அப்போது ஆனந்தி மெதுவாகச் சொன்னார்:

“இயற்கை எல்லோரையும் பாதிக்கும். ஆனால் அந்தப் பாதிப்பின் பாரம் எல்லோரின் தோளிலும் சமமாக விழுவதில்லை.”

மதிய நேரம்.

செம்புலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் வகுப்பு தொடங்கியது.

ஆசிரியர் அருண் வகுப்பறைக்குள் வந்தார். அன்று அவர் புத்தகத்தைத் திறக்கவில்லை.

கரும்பலகையில் பெரிய எழுத்துகளில் ஒரு சொல்லை எழுதினார்.

“எல்நினோ”

மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

காவேரி மெதுவாகக் கேட்டாள்.

“சார்… எல்நினோன்னா என்ன?” என்றாள் காவேரி.

அருண் சிரித்தார்.

“இது ஒரு மனிதரின் பெயர் இல்லை. கடலில் நடக்கும் ஓர் இயற்கை நிகழ்வின் பெயர்.”

அவர் மேசையின் மீது இருந்த பூமி உருண்டையை எடுத்தார்.

“இந்தப் பூமியில் நிலத்தைவிட கடல்தான் அதிகம். சில ஆண்டுகளில் பசிபிக் பெருங்
கடலின் ஒரு பகுதியில் கடல் நீர் வழக்கத்தைவிட அதிகமாகச் சூடாகும். அந்த மாற்றம் காற்றின் போக்கையும், மேகங்களின் பயணத்தையும் மாற்றும்.”

அவர் சிறிது நேரம் நின்று மாணவர்களைப் பார்த்தார்.

“மேகங்கள் மாறினால் என்ன ஆகும்?” என்றார் ஆசிரியர் அருண்.

ஒரு மாணவன் எழுந்து,

“மழை மாறும் சார்,” என்றான்.

“சரிதான்.”

“மழை மாறினால் முதலில் யார் பாதிக்கப்படுவார்கள்?”

வகுப்பறை சில நொடிகள் அமைதியாக இருந்தது.

காவேரி கையை உயர்த்தினாள்.

“விவசாயிகளா?”

“ஆம்.”

“மீனவர்களா?”

“ஆம்.”

“கூலி வேலை செய்பவர்களா?”

அருண் தலையசைத்தார்.

“ஆம். ஏனெனில் அவர்கள் இயற்கையோடு சேர்ந்து உழைத்து வாழ்கிறார்கள். மழை மாறினாலும், கடல் மாறினாலும், அதன் தாக்கத்தை முதலில் உணர்வது அவர்கள்தான்.”

வகுப்பறை முழுவதும் அமைதியாக இருந்தது.

அன்று மாணவர்கள் ஒரு புதிய சொல்லை மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

இயற்கையில் நிகழும் ஒரு சிறிய மாற்றம், மனித வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்துகொள்ளத் தொடங்கினர். 

மாலை நான்கு மணி.

தேநீர்க் கடையின் முன் இருந்த வேப்ப
மரத்தின் நிழல் நீண்டு தெருவில் படர்ந்திருந்தது. வேலை முடித்த விவசாயிகளும், மீனவர்களும், கூலித்தொழிலாளர்களும் அங்கே கூடியிருந்தனர்.

தேநீர்க் கடைக்காரர் ராமசாமி டம்ளரில் தேநீரை ஊற்றிக்கொண்டே கேட்டார்.

“முருகேசா… இந்த வருஷமும் மழை பொய்த்தால் நம்ம ஊரு என்ன ஆகும்?”

முருகேசன் பதில் சொல்லவில்லை. டம்ளரின் விளிம்பை விரலால் தடவிக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தின் பின்புறத்தில் இருந்து ஒருவர் பேச ஆரம்பித்தார்.

“இது எல்லாம் தெய்வக் குத்தம். கோவிலுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றலை. அதனால்தான் இப்படியெல்லாம் நடக்குது.”

உடனே மற்றொருவர்,

“அதுமட்டுமில்லை. ஜோசியர் சொன்னாரு. இந்த வருஷம் கிரக நிலையும் சரியில்லையாம்,” என்றார்.

ராமசாமி சிரித்தபடி குறுக்கிட்டார்.

“நேத்து ரேடியோல கேட்டேன். ‘எல் நினோ’ன்னு ஏதோ சொன்னாங்க. கடல் வெப்பம்
அதிகமா இருந்தா காற்று மாறுமாம். அதனால மழையும் மாறுமாமே?”

“அது என்ன எல்நினோ?” என்று ஒருவர் கேட்டார்.

“எனக்கும் முழுசா தெரியாது. ஆனா நகரத்
துல இருக்கிற விஞ்ஞானிகள் அதைப்பத்திதான் பேசிக்கிட்டிருக்காங்க,” என்றார் ராமசாமி.

அந்த நேரத்தில் ஆசிரியர் அருண் தேநீர்க் கடைக்குள் வந்தார். எல்லோரும் பேசி முடியும் வரை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிறகு மெதுவாகக் கேட்டார்.

“ஒரு கேள்வி கேட்கலாமா?”

“கேளுங்க சார்,” என்றார் ராமசாமி.

“நம்ம ஊர்க் குளம் கடைசியாக எப்போ தூர்வாரப்பட்டது?”

யாரும் பதில் சொல்லவில்லை.

“ஏரிக்கரை இருந்த இடத்துல இப்போ என்ன இருக்கு?”

“வீடுகள்…” என்று ஒருவர் மெதுவாகச் சொன்னார்.

“பத்து வருடத்துக்கு முன்னாடி இருந்த மரங்களில் எத்தனை இப்போ இருக்கு?”

மீண்டும் அமைதி.

ஆசிரியர் அருண் மெதுவாகச் சொன்னார்.

“யார் எதை நம்புறாங்க என்பது அவரவர் உரிமை. ஆனால் மழைநீர் போகும் வழியை நாமே அடைச்சிருந்தா, மரங்களை நாமே வெட்டியிருந்தா, குளங்களை நாமே ஆக்கிரமிச்சிருந்தா, அதுக்கும் பதில் தேட வேண்டியதுதானே?”

முருகேசன் ஆழமாக மூச்சுவிட்டார்.

“என் அப்பா காலத்துல இந்தக் குளம் ஒருபோதும் முழுசா வறண்டதில்லை.”

“ஏன்?” என்று அருண் கேட்டார்.

“அப்போ மழைநீர் போற வழியை யாரும் அடைக்கல.”

தேநீர்க் கடையில் இருந்த இளைஞன் ஒருவன் மெதுவாகச் சொன்னான்.

“மழை வரலன்னு மட்டும் சொல்லிட்டு நம்ம பொறுப்பை மறந்துட முடியாதுபோல…”

அருண் சிரித்தார்.

பிறகு “அதுதான் அறிவியலோட முதல் படி. ’ஏன்?’ன்னு கேட்க ஆரம்பிக்கிறது” என்றார்.

அதே நேரத்தில்…

கடலின் நடுவில் சேகர் வலையை இழுக்க முயன்றார். வழக்கத்தைவிட வலை இலகுவாகவும் இல்லை, கனமாகவும் இல்லை. ஏதோ வித்தியாசமாக இருப்பதை அவர் உணர்ந்தார்.

வலையை மேலே இழுத்துப் பார்த்தார்.

அதில் சில சிறிய மீன்கள், கடற்பாசிகள், பிளாஸ்டிக் பைகள், பழைய தண்ணீர் பாட்டில் மட்டுமே இருந்தன.

ராஜன் ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டார்.

“இத்தனை தூரம் வந்ததுக்கு இதுதானா?”

இம்ரான் கடலை உற்றுப் பார்த்தார்.

“அண்ணே… நீரோட்டம் மாறியிருக்கு. கடல் சரியில்ல.”

சேகர் எதுவும் பேசவில்லை. கடலை அமைதியாகக் கவனித்தார்.

பல ஆண்டுகளாக கடலில் வாழ்ந்த அனுபவம் அவருக்கு ஒன்று சொன்னது.

கடல் மாறிக்கொண்டிருந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்பு அமைதியாக இருந்த அலைகள் இப்போது வேகமெடுத்தன. காற்றும் திடீரென திசை மாறியது. படகு பலமாக ஆடத் தொடங்கியது.

சேகர் உடனே முடிவு செய்தார்.

“கரைக்குத் திரும்பலாம்.”

இம்ரான் இயந்திரத்தை இயக்கினார்.

படகு கரையை நோக்கித் திரும்பியது.

ஆனால் கடல் அவர்களை எளிதாக அனுப்பத் தயாராக இல்லை.

அதே நேரத்தில், நகரத்தில் இருந்த காலநிலை ஆய்வு மய்யத்தில் டாக்டர் ஆனந்தியின் கணினித் திரையில் புதிய எச்சரிக்கை தோன்றியது.

“கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு.”

ஆனந்தி உடனே தொலைபேசியை எடுத்தார்.

“கடலோர மாவட்டங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்புங்கள்,” என்றார்.

அவரது குரல் அமைதியாக இருந்தது. ஆனால் அவசரம் தெரிந்தது.

ஏனெனில் இயற்கை ஒரு கணத்தில் மாறுவதில்லை.

கடலின் நீரோட்டம் மாறும்.

அதன்பிறகு காற்று மாறும்.

அந்த மாற்றங்களை முதலில் உணர்வது, கடலையும் வானத்தையும் நம்பி வாழும் மீனவர்கள்தான்.

 மாலை ஆறு மணி ஆனதும் செம்புலம் கடற்கரையில் மீன்பிடிக்க சென்ற படகுகள் திரும்பி வந்துகொண்டிருந்தன.

கரையைத் தொட்ட முதல் படகை பார்த்தவுடன் குழந்தைகள் ஓடினார்கள்.

“குழந்தைகள் அப்பா வந்துட்டாரு!” என்றதும் ஒரு வீட்டில் சிரிப்பு. இன்னொரு வீட்டில் நிம்மதி. மூன்றாவது வீட்டில் இரவு உணவுக்கான ஆயத்தம்.

ஒவ்வொரு படகும் கரையை அடையும்போது, ஒவ்வொரு குடும்பத்தின் இதயத் துடிப்பும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

மல்லிகை மட்டும் இன்னும் கடலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது கண்கள் ஒவ்வொரு படகையும் ஆராய்ந்தன.

“அது நம்ம படகு இல்ல…”

அவள் தனக்குத்தானே முணுமுணுத்தாள்.

ராஜனின் மனைவி அருகில் வந்து தோளில் கை வைத்தபடி, “இன்னும் கொஞ்சம் நேரம் ஆகலாம்” என்றாள்.

மல்லிகை பதில் சொல்லவில்லை. சில நேரங்களில் நம்பிக்கை பேசாது. அது வெறுமனே காத்திருக்கும்.

மணி ஆறு முப்பது ஆகியிருந்தது.

கடற்கரை வெறிச்சோடத் தொடங்கியது. திரும்பி வந்த படகுகள் அனைத்தும் கரையில் கட்டப்பட்டிருந்தன.

ஆனால்… சேகர் சென்ற “அம்மன்-3” என்ற சிறிய விசைப்படகு மட்டும் வரவில்லை. சேகருக்கு சிக்னல் கிடைக்கவில்லை. அதனால் மீனவர்கள் கடலோரக் காவல் நிலையத்துக்குத் தகவல் அனுப்பியிருந்தனர்.

மீனவர்கள் அனைவரும் மீனவர் சங்கத்தலைவர் சின்னத்தம்பியுடன்  கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர்.

யாரும் “ஏதாவது நடந்திருக்குமோ?” என்று சொல்லவில்லை. ஆனால் அந்தக் கேள்வி எல்லோருடைய முகத்திலும் எழுதப்பட்டிருந்தது.

மீனவர் சங்கத் தலைவர் சின்னத்தம்பி தன் கைப்பேசியை மீண்டும் மீண்டும் பார்த்தார்.

அதே நேரத்தில்… கடலின் நடுவில். வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. காற்றின் வேகம் திடீரென்று அதிகரித்தது.

படகு உயர்ந்த அலையின் மேல் ஏறி, மறுநொடியில் பள்ளத்தில் விழுவது போல ஆடியது.

சேகரின் மகன் ஆதவன் காலையில் வீட்டைவிட்டு கிளம்பும்போது சொன்னது சேகரின் நினைவுக்கு வந்தது.

“அப்பா பெரிய மீன் கொண்டு வாங்க…” சேகர் சிரிக்க முயன்றார். அந்தச் சிரிப்பு உதடுகளைத் தாண்டவில்லை.

“ராஜா…” என்று ராஜனை அழைத்தார்.

“வலையை வெட்டிடலாம்.” ராஜன் அதிர்ச்சியடைந்தான்.

“அண்ணே… அந்த வலை வாங்க நாம எவ்வளவு கடன் வாங்கினோம்?”

“வலை மீண்டும் வாங்கலாம்.” சேகர் உறுதியுடன் சொன்னார்.

“உயிரை வாங்க முடியாது.”

ஒரு கணம் யாரும் பேசவில்லை. அடுத்த நொடியில் கத்தி வலையின் கயிற்றை அறுத்தது.

கடல் வலையை விழுங்கிக்கொண்டது. படகு சற்று இலகுவானது. இம்ரான் இயந்திரத்தை முழு வேகத்தில் இயக்கினான். ஆனால் கடல் இன்னும் அவர்களைச் சோதித்துக் கொண்டிருந்தது.

நகரத்தில்…

டாக்டர் ஆனந்தி மாவட்ட நிர்வாகத்துடன் காணொலி ஆலோசனையில் இருந்தார்.

“கடலுக்குள் இன்னும் படகுகள் இருக்கிறதா?”

“சில தகவல்கள் வந்திருக்கின்றன, மேடம்.”

“மீட்புக் குழுக்களை உடனே அனுப்புங்கள்.”

அவர் திரையில் இருந்த கடல் வரைபடத்தைப் பார்த்தார்.

அறிவியல் கணக்குகள் அவருக்கு ஒரு விஷயத்தைச் சொன்னது. கடலின் நடத்தை மாறியிருந்தது. ஆனால் அந்த வரைபடத்தில் மல்லிகையின் கண்ணீரும் இல்லை. சேகர் குழந்தையின் காத்திருப்பும் இல்லை.

“திரையில் ஓடிய வரைபடம் கடலின் மாற்றத்தைக் காட்டியது; அந்த மாற்றத்தின் தாக்கத்தைச் செம்புலம் தன் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்தது.”

இரவு ஒன்பது மணி. மீட்புப்படகின் விளக்கு தொலைவில் தெரிந்தது. கரையில் நின்றிருந்த அனைவரும் மூச்சைப் பிடித்தனர்.

“படகு வருது…” என்று ஒருவர் கத்தினார்.

மல்லிகை ஓடினாள்.

மீட்புப்படகு கரையை நெருங்கியது. அதன் பின்னால் இன்னொரு சிறிய படகு.

அது சேகரின் படகு. இயந்திரம் பழுதடைந்திருந்தது. வலையின் பெரும்பகுதி கடலில் போயிருந்தது.

ஆனால்… சேகர் உடனிருந்தவர்களும் உயிருடன் இருந்தனர். படகு கரையைத் தொட்டதும் மல்லிகை எதுவும் பேசவில்லை.

அவள் சேகரது கையை மட்டும் இறுகப் பிடித்தாள். அந்தப் பிடியில் கோபமும் இல்லை. கேள்வியும் இல்லை.

ஒரு நீண்ட நிம்மதி மட்டும் இருந்தது.

சேகர் கரையைப் பார்த்தார். பிறகு காலியான படகைப் பார்த்தார்.

“கடல் மாறிப்போயிருக்கு, முன்ன மாதிரி இல்ல…” என்று மெதுவாகச் சொன்னார்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட விவசாயி முருகேசன் வானத்தைப் பார்த்தார்.

அதே நேரத்தில்… ஒரு மழைத்துளி அவரது உள்ளங்கையில் விழுந்தது. அவர் சிரிக்கவில்லை. அழவும் இல்லை.

அந்த ஒரு துளி வறண்ட நிலத்தை உயிர்ப்பிக்கப் போதுமானதல்ல என்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆனால்… அந்த மழைத்துளி வானம் இன்னும் மனிதனை முற்றிலும் கைவிடவில்லை என்பதற்கான ஒரு சிறிய அறிகுறியாக இருந்தது.

வானத்தில் மின்னல் ஒரு கோடு வரைந்தது. செம்புலம் அமைதியாக இருந்தது.

ஒரே வானத்தின் கீழ், சமமில்லாத வாழ்க்கைகளுடன் பூமி இயங்கிக் கொண்டிருந்தது. {