அண்மையில் பார்த்த ஒரு திரைப்படம் மனதிற்கு அவ்வளவு நிறைவைக் கொடுத்தது. அதன் இயக்குநர் சசி அவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றியது. அந்தத் திரைப்படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனியும் சசியும் இணைந்து கொடுத்திருக்கும் ஒரு திரைப்படம்.

“மனிதச் சமூகத்துக்குக் கடுகளாவாவது புத்தியும், நேர்மையும் இருக்கிறது என்று சொல்லப்பட வேண்டுமானால், இந்த விதவைக் கொடுமை முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டும். இந்தக் கொடுமை பகுத்தறிவுள்ள மனிதச் சமூகத்தில் இருக்கிறது என்றால், பகுத்தறிவுக்கு இழிவு கற்பிக்க இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கிறேன்” என்றார் தந்தை பெரியார். (குடிஅரசு 15-6-1935)
விதவைத் திருமணம் பற்றிய படங்கள் நிறைய தமிழில் வந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய நாடகமான ‘காதல் ஜோதி’ முதலில் நாடகமாக நடத்தப்பட்டுப் பின்னர் திரைப்படமாக எடுக்கப்பட்ட விதவைத் திருமணம் பற்றிப் பேசும் படம். ‘இரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் எம்.ஆர்.இராதா தன்னுடைய மனைவியைத் திருமணம் செய்து கொள்ளும்படி தன்னுடைய நண்பர் எஸ்.எஸ்.இராஜேந்திரனிடம் சொல்லுவார். அதே மாதிரி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக வரும். சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டுகால வரலாற்றில் விதவை மறுமணம் என்பது பிரச்சாரம், நாடகம், சினிமா என்பது மட்டுமல்ல, பலர் விரும்பி தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்று வாழ்கிற, வாழ்ந்து மறைந்த வரலாறு உண்டு.

ஆனால், வளர்ந்து நிற்கும் குழந்தைகளுக்கு ஓர் அம்மாவாக இருப்பவர், கணவனை இழந்தவர் மறுமணம் செய்து கொள்ளலாமா? அப்படி அம்மாவாக இருப்பவர் மறுமணம் செய்து கொண்டால் அதனை வளர்ந்து நிற்கும் அவரது பிள்ளைகள் ஏற்றுக்கொள்வார்களா? அவரின் பிறந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர் வாழும் கிராமம் ஏற்றுக்கொள்ளுமா? என்னும் கேள்விகளை எழுப்பி ஆமாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக இந்தப் படம் சொல்கிறது.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கிராமங்கள் என்பவை பெண்களுக்குச் சிறைக்கூடங்
களாகத்தான் இருக்கின்றன. ஜாதிக் கட்டுப்பாட்டை மிகவும் கறாராகக் கடைப்பிடிக்கும், அதனை வலியுறுத்தும் இடங்களாகத்தான் கிராமங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. இந்தக் கதைக்களனாக ஒரு கிராமத்தைத்தான் இயக்குநர் எடுத்திருக்கிறார். அதற்காகவே இந்தப் படக்குழுவைப் பாராட்டலாம்.

கிராமத்துத் தெருக்கள், அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள், கிராமத்தில் இருக்கும் ஜாதி வன்மத்தையும் பெண் அடிமைத்தனத்தையும் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் சில பெரிய மனிதர்கள், தாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், பெண் என்றால் இப்படித்தான் இருந்து சாகவேண்டும் என்ற மனநிலை கொண்ட மனிதர்கள் என்று களத்தை மிகக் கச்சிதமாக அமைத்திருக்கிறார்கள்.
அம்மா என்றால் தெய்வம். அம்மா என்றால் புனிதம். அம்மா என்றால் தியாகம். அம்மா என்றால் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து, பின்பு அவர்கள் வெளியூர் சென்று விட்டால் தனியாகவே வாழ்ந்து, தன் சுக துக்கங்களை மறந்து சாகும் ஒரு பெண் என்பதை இப்படம் கட்டுடைத்திருக்கிறது. அம்மாவும் ஒரு மனுசி. அம்மாவுக்கும் பசிப்பது போல, தண்ணீர் தாகம் எடுப்பது போல, உடல் தேவையும் இருக்கும். அதனை முறைப்படுத்துவதற்கு ஒரு வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு அவளுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதனை எந்தச் சாஸ்திரத்தின் பெயராலும், சடங்குகளின் பெயராலும், வெங்காயம், விளக்குமாறு பெயராலும் தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பதை இப்படம் உரக்கச் சொல்கிறது. அதனை வெகு அருமையாக, எதிர்க்கருத்து உள்ளவர்கள் கூட பார்த்தால் ஏற்றுக்கொள்ளும் வண்ணமாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் கணவனை இழந்த பெண்ணாகச் செல்வி என்னும் கதாபாத்திரத்தில் நடிகை சுவாசிகா நடித்திருக்கிறார். மிகச் சரியானத் தேர்வு. நடிகை சுவாசிகா இந்தத் திரைப்படத்தில் செல்வி என்னும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கணவனை இழந்த பின்பு தன்னுடைய இரண்டு மகன்களான பாஸ்கர் மற்றும் விவேக் ஆகியோரைப் படிக்க வைப்பதற்கும், அவர்களை வளர்ப்பதற்கும் படாத பாடுபடுகிறார். கணவனை இழந்தபின்பு தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் சென்று, உறவுகளோடு வாழலாம் என்று முடிவெடுத்துப் போகும்போது அங்குக் கிடைக்கும் எதிர்மறைச் சொற்களால் தனியாக வாழ்வது என்று முடிவெடுத்து உழைத்து வாழ்கிறாள். தனியாக இருக்கும் பெண் என்றவுடன் ஆண்கள் அடுத்தடுத்து அவளிடம் முறை தவறி நடக்க அழைக்கின்றார்கள். மனத்திடத்துடன் அவர்களை எதிர்கொள்கிறாள் அப்படிப்பட்ட, ஊரில் இருக்கும் ஒரு பெரிய மனிதனை கலர் பெயிண்டை மேலே ஊற்றி எதிர்ப்புக் காட்டுகிறாள். ஊருக்கு முன்னால் அவமானப்படும் அந்தப் பெரிய மனிதன் செல்விக்கு எதிரியாக மாறுகிறான். பல்வேறு சூழ்ச்சிகள் செய்கிறான்.
அம்மா, மறுமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள் என்று தெரிந்தவுடனேயே ,அவளது மூத்த மகன் பாஸ்கரிடம் ஏற்படும் கோபத்தை, உணர்ச்சியை இந்தப் படத்தில் அழகாகக் காட்டி இருக்கிறார்கள். அவனது படிப்பில் ஏற்படும் மாற்றம், அவனது குணத்தில் ஏற்படும் மாற்றம், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் கொதித்து அவன் அலையும் நேரத்தில், அம்மாவும் ஓர் உயிர்தான், அவளுக்கும் ஆசைகள், விருப்பங்கள் உண்டு.அவளுக்கும் அவள் விரும்பும் வாழ்க்கை தேவை என்பதை உணர்த்தும் விதத்தில் மகனின் ஆசிரியராக இருக்கும் கன்னியாஸ்திரி அவனோடு உரையாடுகிறார். மகன் மாறுகிறான். உடலின் தேவை பற்றிக் கன்னியாஸ்திரியாக இருக்கும் ஒரு பெண் பேசுவது என்பதே சிறப்பான அணுகுமுறைதான்.
மனைவியை இழந்த கணவனாக விஜய் ஆண்டனி இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பின் உள்ளே வருகிறார். தன்னை மறுமணம் செய்து கொள்ள முன்வரும் செல்வியைப் பற்றிச் சொல்கிறபோது ‘எனக்கு மறுவாழ்வு கொடுக்கிறார்’ என்று சொல்கிறார். பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்கிறார்கள் என்றுதான் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கணவனை இழந்த ஆணுக்கு, மனைவியாகும் பெண்ணும் ‘மறுவாழ்வு’தானே கொடுக்கிறாள் ஆணுக்கு. அதனை ஓர் ஆண் கதாபாத்திரத்தை விட்டே சொல்ல வைத்திருப்பது சிறப்பு.
விதவை மறுமணம் குறித்த திரைப்படங்கள் நிறைய தமிழ்ச்சினிமா உலகில் வந்திருக்கின்றன.ஆனால், அம்மாவின் நிலைமை குறித்துச் சிந்தனை செய்து மகன்கள் செய்துவைக்கும் இந்தக் கதை தமிழ் சினிமாவிற்குப் புதிது.அதற்கு அடிப்படையாக அமைந்த உண்மைச்சம்பவத்தின் கதாநாயகர்களான செல்வி, ஏழுமலை, பாஸ்கர், விவேக். அதே பெயரிலேயே சினிமாவின் கதாபாத்திரங்கள் இருப்பதும் சிறப்பு. அந்தப் பேட்டியில் செல்வி, பாஸ்கர் குறிப்பிட்ட பல செய்திகள் இந்தத் திரைப்படத்தில் காட்சிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்தத் திருமணத்தைப் பற்றிப் பிபிசி தமிழ் விரிவான ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. https://www.bbc.com/tamil/articles/c2xeggxx682o இந்த இணைப்பில் இப்போதும் சென்று வாசிக்கலாம்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்தபின்பு எனக்கு ஒரு சிந்தனை தோன்றியது. ‘லிவிங் டுகெதர்’ என்னும் நடைமுறை இளம் பருவத்தினர் வயதில், நகரங்களில் மிக அதிகமாக இருக்கின்றது. அப்பாவை இழந்த அம்மாக்கள், அல்லது அம்மாக்களை இழந்த அப்பாக்கள் ‘லிவிங் டுகெதர்’ நடைமுறையில் தனக்குப் பிடித்தமானவர்களோடு இணைந்து வாழ்வதை, அவர்களது பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளவேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று தோன்றியது. மறுமணம் செய்வது ஒரு முறை, லிவிங் டுகெதராக இணைந்து வாழ்வது ஒரு முறை. இரண்டில் ஏதாவது ஒன்றை விரும்பும் பெற்றோர்களுக்கு அதற்கான உரிமையை அவர்கள் எடுத்துக்கொள்வதற்குப் பிள்ளைகள் முன் வரவேண்டும்.
உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. பெண்களை இன்னும் சிறைக்கைதிகளாகத்தான் வைத்திருப்போம் என்னும் மனநிலை மாறவேண்டும். திரைப்படத்தில் செல்வியின் மகன் பாஸ்கர் தன்னுடைய அம்மாவைப் பற்றிப் பேசும்போது, ‘எலிக்கூண்டிற்குள் இருக்கும் எலியைப் போலத்தான் தன் தாய் வீட்டிற்குள் இருக்கிறார்’ எனக் குறிப்பிடுவார். “விதவைகள் வாழ்க்கை ஒரு சிறைக்கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்ப்பந்தம் ஒவ்வொரு விதவைக்கும் இருந்து வருகிறது” என்று தந்தை பெரியார் குறிப்பிடுவார். அதைக் காட்சிப்படுத்துவது போல இந்த எலிக்கூண்டு ஒப்பீடு தோன்றியது.
பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடுதான் என்று ஓர் ஆய்வு குறிப்பிட்டது. மறுமணம் செய்து கொள்ள விரும்பும் செல்வியை அவனது அண்ணனும் அவளது குடும்பத்தினரும் இணைந்து ஆணவக்கொலை செய்ய முயல்வது பெரும் அதிர்ச்சி தரும் காட்சி. இன்னும் பலரும் மாறாமல்தான் இருக்கிறார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தும் காட்சி. அப்போது வரும் ஒரு வசனம் ’42 வயதில் உனக்கு அது கேட்குதா?’ என்று தன் தாய் கேட்கும்போது, ’உனக்கு புருசன் இருக்கிறான். 66 வயதில் அது உனக்குக் கேட்கும்போது எனக்குக் கேட்கக்கூடாதா’ என்னும் செல்வியின் கேள்விக்கு அரங்கில் விழுந்த கைதட்டல்கள் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. படத்தில் ஓர் இடத்தில் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? என்னும் புத்தகத்தைப் பாஸ்கரின் காதலியான வந்தனா கையில் வைத்திருக்கும் காட்சி வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் நடத்திவைத்த ஏற்றிவைத்த ‘விதவைத் திருமணம்’ என்னும் நெருப்பு, திரையரங்குகளில் கருத்துகளாய், வசனங்களாய் தெறிக்கும்போது கிடைக்கும் கைதட்டல்கள் உற்சாகத்தை அளிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் சசி உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். நாம் அனைவரும் தியேட்டரில் சென்று இப்படத்தைப் பார்க்கவேண்டும். இன்னும் பல படங்கள், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளைக் கைகளில் ஏந்தி வெளிவரட்டும்.பழைய பஞ்சாங்கங்கள் கிழியட்டும்…





