1) கே: ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆவதற்குள்ளேயே பழிவாங்கும் நடவடிக்கைகளை த.வெ.க. ஆட்சி தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறதே?
– த.குணசேகர், திருச்சி.
ப: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பயிற்சியோ – அனுபவமோ இல்லாதவர்களையே பெரிதும் கொண்ட த.வெ.க ஆட்சி வந்து 50, 60 நாட்களில் ஆக்கப்பூர்வப் பணிகளைச் சிறப்பாக செய்வதில்தான் முழுகவனம் செலுத்த முன்வரவேண்டும்.பழிவாங்கும் அரசியலைத் தொடர்ந்தால் அதன் எதிர்விளைவு, தேர்வு செய்த வாக்காளர்களையே ‘நாம் தவறான முடிவு செய்து விட்டோம்’ என்பதைச் சிந்திக்கச் செய்யும்.
அதன் எதிரொலி – நடக்கவிருக்கும் இடைத்தேர்தல்களில் – எப்போது நடக்கிறதோ அப்போது பிரதிபலிக்கச் செய்யும் என்பதை முதலமைச்சருக்கு ஆலோசனைகளைக் கூறும் அருகில் உள்ளவர்கள் உணர்த்துவது நல்லது! பல அமைச்சர்களின் வாய்த் துடுக்கு வக்கனையால் ஊடகம் உட்பட பலரும் முகம் சுளிக்கும் நிலை இருக்கிறது என்ற யதார்த்தம் புரிய வேண்டும் – ஆட்சியாளருக்கு!
2) கே: பி.ஜே.பியின் மாநிலத் தலைவராக இருந்து, தற்போது புதிய அரசியல் கட்சித் தொடங்கியுள்ள அண்ணாமலை, விஜய்யின் ஆட்சிக்கு ஓர் ஆண்டு காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே?
– ப. மணி, திருச்செங்கோடு.
ப: பரிதாபத்திற்குரிய அண்ணாமலை யாருக்கு ஆதரவு தேவை! எப்பக்கம் கிடைக்கும் என்று ஏங்கி, இப்படி ஏதாவது ஒன்றைக் கூறி, செய்தித் தலைப்பாக விரும்புகிறார்!அரசியல் என்பது, ‘நாளை என்ன செய்தி என்பதே அறிய முடியாத ஒன்று’ என்று மாஜி. அய்.பி.எஸ். போகப்போகப் புரிந்து கொள்வார்!
3) கே: ராமர் கோவில் கட்டுவதில் மும்முரம் காட்டிய பா.ஜ.க. அதில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி வாயே திறக்கவில்லையே?
– ந.நெடுமாறன், பண்ருட்டி.
ப: ஆர்.எஸ்.எஸ். செயலாளர்கூட இராமர் கோயிலில் வருவாய் திருட்டு, கொள்ளை பற்றி “வருத்தம்” தெரிவித்து கருத்து கூறுகிறார்; பி.ஜே.பி.யின் புதிய தலைவரோ ‘இது சனாதனத்திற்கு எதிரானவர்கள் கூறும் ஒன்று’ என்று கூறி முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயலுகிறார். அப்படியெனில், ஆர்.எஸ்.எஸ்.சும் சனாதனத்திற்கு எதிரா? சிரிப்புத்தான் வருகுதய்யா! அக்குழு போட்ட பிரதமரே வாய் திறந்து கண்டிக்க முன்வரவில்லையே!
4) கே: அரசு வழக்குரைஞர்கள் நியமனத்திற்குப் பல லட்சங்கள் கேட்கப்படுவதாக அக்கட்சியினரே வழக்குத் தொடுத்துள்ளனரே, ‘தூய சக்தி’ என்னாயிற்று?
– வ. ரவிக்குமார், புதூர்.
ப: வழக்கு நிலுவையிலுள்ளது. நீதிமன்றம்தான் இதற்கான சரியான தீர்ப்பைத்தர வேண்டும்.
5) கே: மேற்கு வங்கத்தில் நடந்துவரும் அரசியல் காட்சிகளை இயக்குவது யார்?
– கி. சிவா, நாகை.
ப: உலகறிந்த ரகசியம் – டில்லி ஆபரேஷன் தான்!
6) கே: விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
– சி. கீதா, தாம்பரம்.
ப: நிறைவேற்றப்பட வேண்டும்; விவசாயிகள் இப்போதே வீதிக்கு வந்து போராடத் துவங்கியுள்ளது அவர் கவனத்துக்குச் சென்றிருக்குமே!
7) கே: மக்கள் பிரச்சனைக்காக எதிர்க்கட்சியான தி.மு.க. வீதியில் இறங்கிப் போராடவில்லை என்கிற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– து. ஜீவா, வலங்கைமான்.
ப: ஆளுங்கட்சியாக உள்ளபோது மக்கள் பிரச்சனைகளை ஆட்சி மூலம்
தீர்க்க முயலும் எந்தக் கட்சியும் வீதிக்கு வரவேண்டிய அவசியமில்லை. எதிர்க்கட்சிகள் அதனைச் செய்வதும், அதை ஆளுங்கட்சி செவிமடுத்துச் செயல்படுவதும்தானே வாடிக்கை!ஒன்றிய அரசு நிதிப் பிரச்சனை, ஆளுநர் பிரச்சனை முதலிய பல பிரச்சனை தி.மு.க. அரசுக்கு. வீதிக்கு வந்து போராடவில்லையா? எனவே, அரசியல் சார்புநிலைக் குற்றச்சாட்டு முறையல்ல.
8) கே: ‘சூப்பர் எல்நினோ’வின் தாக்கம் தொடங்கிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. நமது அரசுகளுக்கும், மக்களுக்கும் உங்கள் அறிவுரை என்ன?
– ப. ரவி, செஞ்சி.
ப: பல வாரங்களுக்கு முன்பே, இதுபற்றி விளக்கமான அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளேன். ‘எல்நினோ’, சூப்பர் எல்நினோவுக்கு மூலகாரணம் புரியும் நிலா புவி வெப்பசலனம் பற்றி உடனடி தற்காலிகத் தீர்வு தாண்டி, மக்கள் இயக்கத்தை உருவாக்கி பிரச்சாரம், தேவையான சட்டப் பாதுகாப்பு,
மக்கள் மனதில் பதிந்து, பெரும் ஒத்துழைப்பை உருவாக்கி, தொடர் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமையை ஒன்றிய, மாநில அரசு மக்களும் இணைந்து
மேற்கொண்டு முன்வரவேண்டும். அரசியல் பார்வைக்கு அப்பாற்பட்டு!

9) கே: ஒன்றிய பா.ஜ.க. அரசின் பலம் நாடாளுமன்றத்தில் கூடிவருகிறதே?
– து.ரமேஷ், சென்னை
ப: கட்சிகளைக் கபளீகரம் செய்வதும், கட்சிகளை உடைத்துத் தங்களது கட்சி – அணியில் சேர்ப்பதனால் கூடியிருக்கும் இந்த அமித்ஷாவின் “ஆபரேஷன் 2/3 பெரும்பான்மை” நாட்டில் ஜனநாயகத்தைப் பாதிக்கும் ஆபத்துக்கான அறிகுறி! (தலையங்கத்தை படித்துப் பார்க்கவும்).





