முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்
கும் பெண்களை அழைத்துச் சென்றவர் பெரியார். பெண்ணடிமைச் சாடலில் – பெண்ணுரிமைக் கோரலில் தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பு மாத்திரமல்ல; அவருக்குப் பின்பு கூட இதுவரையில் யாரும் தோன்றவில்லை… எதிர்காலத்திலும்… கேள்விக்குறியே! பெண்ணுரிமைக்கானத் தளத்தில் உலகின் தன்னிகரில்லா சுயசிந்தனையாளராக உயர்ந்து நிற்பவர் பெரியார் மட்டுமே!
வேறுபாடு ஏன் ?
அங்க அமைப்பின்றி அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் இல்லை, என்ற பெரியார் ஆணுக்குத் தனிச் சொத்து என்ற முறை ஏற்பட்ட காலத்தில்தான் அவனது மனைவி அச்சொத்துக்கும் பாதுகாப்பாக மட்டுமல்லாது, அவனது தனிச்சொத்தாகவும் அமைந்து போனதை உறுதிசெய்து கொண்டார்.
பெண்களை ஒரு பொருளாகக் கருதி ‘ஒருவருக்குக் கொடுப்பது என்கின்ற முறை ஒழிய வேண்டும்’ என்றார். பெண்களை நாம் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடி வாழச் செய்வது தான் கடமை என்றார்.
நமது நாட்டில் நடக்கும் திருமணமுறை பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கும் சூழ்ச்சிதான் என்றார். கணவன் – மனைவி சம்பந்தமே, எஜமான் – அடிமை சம்பந்தமேயொழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்புமுறை சம்பந்தமோ அல்ல! என்றார்.
‘ஓர் அரசனுடைய மகளாயினும் ஒரு பெண் ஒரு வேலைக்காரனுக்கு வாழ்க்கைப்பட நேரிட்டால் அவனுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டியதுதான். தந்தை ஒரு நாட்டுக்கு அரசனாயிருக்கிறான் என்ற அளவுக்குத்தான் பெருமை அடையலாமேயன்றி, மனைவி என்ற முறையில் மற்ற பெண்களைப் போலவே அவளும் தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியவள் தான்’ என்றார் பெரியார்.
பெண்ணுரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறன் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விளக்கம் கூறியவர் பெரியார். ஓர் ஆணுக்கு என்னென்னவெல்லாம் உரிமைகளாக உள்ளதோ – அத்துணையும் பெண்ணுக்கும் உண்டு என ஓம்புவதே பெண்ணுரிமை என்றும் கூறினார்.
கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். ‘கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்படவில்லை என கேட்டார். ‘‘கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலை மீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண் மக்களை உலகம் முன்னேற்றமடையச் செய்ய முடியாது’’ என்றார்.
கணவன்-மனைவி, கற்பு, பிள்ளைப் பேறு, போலவே விதவை, விபச்சாரம் என்பனவும் கூட பெண் அடிமைத்தனத்தை உறுதி செய்யும் கருத்தாக்கங்களே என்பது அய்யா பெரியாரின் கருத்து. மனைவியை இழந்த ஆண் ‘விதவன் என்றோ விலை மகளிரிடம் செல்லும் ஆண் ‘விபச்சாரன் என்றோ ஏன் குறிப்பிடப்படுவதில்லை என்று பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை பகர்ந்தார் எவரும் இல்லை.
‘‘விதவைத்தன்மை என்பது எளியாரை வலியார் அடக்கி இம்சிப்பதல்லாமல் வேறல்ல’’ என்றார். விதவைப் பெண்களின் நிலையையும், வேதனையையும், எண்ணிக்கையையும் எடுத்துக்கூறி விதவை மறுமணத்தை வலியுறுத்தினார் பெரியார். விபச்சாரம் என்பதற்குப் பொருள் என்னவென்றால் தங்கள் ஆசைக்கும், மன உணர்ச்சிக்கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதே ஆகும் என்றார்.
இளமை மணம்
‘பால்ய விவாகம் என்ற பேரால் பெண்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைப் பெரியார் எதிர்த்தார். ‘‘பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளுக்கு, கல்யாணம் என்ற கடுவிலங்கு பூட்டி பிஞ்சிலே பழுக்கச் செய்து, வெம்பி அழியச் செய்யும் கொலை பாதகத்தைக் கண்டு எந்தக் கருணை உள்ளம்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?’’ என்றார்.
‘‘பெண்களின் திருமண வயது உயர்த் தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத் தான் ஒரு பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில் திருமணத்தை எதிர்கொள் ளவும் முடியும்.’’ என்றதுடன், ‘‘இளம்பெண் திருமணத் தடைச்சட்டத்தை ஆதரித்து தீவிரப் பிரச்சாரமும் அந்தக் காலகட்டத்தில் செய்தவர் பெரியார். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வர குரல் கொடுத்தார். தேவதாசிகள் சமுதாயத்தில் இருந்துதான் தீர வேண்டும் என்ற சத்தியமூர்த்தி பரம்பரையை முறியடித்தார்.
சொத்துரிமை
பெண்விடுதலைக்கு சொத்துரிமை இன்றியமையாதது என உணர்ந்த பெரியார், ‘‘பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பொருளாதார ரீதியான பாதுகாப்பும் சுதந் திரமும் பெண்களுக்கு இருக்க வேண்டுமா னால், அதற்குச் சுயமாக சம்பாதிப்பதற்கு வேலையும், கல்வியும்தான் அவசியம்’’ என்றார். ஆண்கள் புரியும் அனைத்து வேலை களிலும் பெண்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு தேவை என்றார். என்னிடம் ஆட்சி இருந்தால் ஆண்களுக்கான கல்வியைத் தடை செய்துவிட்டு பெண்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட காலம் படிக்க உத்தரவிடுவேன் என்றார்.
பெண் கல்வி
வெறும் ஆண்களை மாத்திரம் படிக்க வைத்துவிட்டு, பெண்களைப் படிக்க வைக்காமல் இருக்கும் சமூகம் ஒரு கண் குருடாக உள்ள சமூகத்தை ஒத்ததாகும் என்பது பெரியாரின் கருத்து.
‘‘பெண்களுக்குப் படிப்பு, தொழில் ஆகிய இவை இரண்டும் பெற்றோர்களால் கற்பிக் கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும். பிறகு தனக்கு வேண்டிய துணையைத் தேர்ந்தெடுக்கவும், சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும்கூடிய தன்மை உண்டாகும். பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள் சொத்துரிமை இல்லாததும் முக்கியக்காரணம் ஆகும். ஆதலால், பெண்கள் தாராளமாய், துணிவுடன் முன்வந்து சொத்துரிமைக்காகக் கிளர்ச்சி செய்து பெற வேண்டும்’’ என்றார் பெரியார்.
பொதுவாக மக்களின் அடிமைத்தனம் அகல – அடிமைத்தொழில் அகல பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்பது அய்யாவின் கருத்து. ‘‘பெண்களை அடிமை களாக ஆக்கியதன் பயனாய் மக்கள் அடிமை களால் வளர்க்கப்பட்டார்கள். அடிமைகளால் வளர்க்கப்பட்டதன் பலனாய் மக்கள் சகலத்திலும் அடிமைகளானார்கள். எனவே, மக்கள் அடிமைத் தொழிலினின்றும் நீங்க வேண்டுமானால் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்! பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!! முக்காலமும் பெண்கள் அடிமை நீங்க வேண்டும்!!!- இப்படி பெண்ணடிமை ஒழிவதே அனைத்து அடிமைத்தனங்களும் அகல வாய்ப்பாகும்’’ என்று பெரியார் கருதிய காரணத்தால்தான் பெண்ணுரிமைக்காகப் பாடுபடலானார் – போராடலானார் – பரப்புரையில் ஈடுபடலானார். அம்முயற்சியில் பெரியார் பெருவெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும். மகளிர் சமுதாயம் இன்று அடைந்துள்ள வளர்ச்சி அனைத்துக்கும் காரணம்-அடிப்படை பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனையே!
தமிழ்நாட்டில், இந்தியத் துணைக்கண்டத்தில், ஏன்? உலக அளவில் ‘பெண்ணினத்தின் வரலாறு புதுப்பிக்கப்பட்டது தந்தை பெரியாரின் அரிய தொண்டினால் தான். பெண் விடுதலைக்காகப் பெரியார் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட புதுயுகம் இது. பெண்களின் ஆளுமையும், ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டது அவராலே.
‘‘உங்களுக்குப் பெருமை வேண்டுமானாலும், உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதர்களுக்குத் தொண்டு புரிவதில், போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள்’’ என்றார் பெரியார்,
‘‘மனித வாழ்க்கை என்பது தொண்டு செய்வதுதான். தொண்டு செய்யாத வாழ்க்கை மிருக வாழ்க்கைக்குச் சமம்’’ என்றும் மனிதத் தொண்டுக்கு மகிமை ஏற்படுத்தியவரும் பெரியாரே!
அனைத்துத் தடைகளுக்கும் விடுதலை அவரே!
ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை…
கல்வி-வேலைவாய்ப்பு எனும் வாழ்வுரிமைக்
கான வாய்ப்பு…
மொழி உரிமை….
இன மேம்பாடு-விடுதலை…
வழிபாட்டுரிமை….
அனைத்துவிதமான ஒடுக்குமுறையிலிருந்தும்
விடுதலை….
இப்படி பல்வேறு தடங்களில் முத்திரை பதித்த பெரியாரின் தொண்டு ‘பெண் விடுதலை’ எனும் தடத்திலும் புதுப்பாதை அமைத்தது! பெண்ணடிமைத்தனத்தை பெரியார் போல் உலக அளவில் சாடியவர்கள் வேறு எவரும் இலர். பெண்களே கூடி நடத்திய பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ எனும் பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தனர். தந்தை பெரியார் போற்றிய பெண்ணியத்தைக் காப்போம்! |





