Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நீதிமன்றத்தை‘‘சிலிர்க்கச் செய்த சிறைப்பறவை’’தந்தை பெரியார்!-னைவர் க. அன்பழகன்

‘‘ஒப்பாரும் மிக்காரும் இல்லா உலகப் புரட்சியாளர்” தந்தை பெரியார் அவர்களின், ‘போராட்டமே வாழ்வு; வாழ்வே போராட்டம்’ என்ற புரட்சியாளரின் வாழ்வுக்கு இலக்கணமும் – இலக்கியமும் ஆன வரலாற்றில் பல அரிய செய்திகள் – களங்கள் – வெற்றிகள் – எதிரிகளின் வியப்புகள், சிறைக்கம்பிகள், வெட்கிப்பார்த்த வீரம் என நீதிமன்றத்தைச் சிலிர்க்கச் செய்த சிறைப்பறவை பெரியாரின் வரலாற்றில் பல உண்டு. அதில் ஒன்றைக் காண்போம்!

திருச்சி மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் ஆர்.எஸ். மலையப்பன் அவர்கள். அவர் “நரிக்குறவர்” போன்ற ஒடுக்கப்பட்ட சமூக இனமக்களின் – முன்னேற்றத்திற்குப் பல நன்மைகளைச் செய்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய்த் துறையில் பணியாற்றிய நிர்வாகத் திறன் பெற்றவர்.

குளித்தலை வட்டத்தில் நங்கவரம் பண்ணை நிலக்குத்தகைத் தகராறில் இவரது தீர்ப்புக்கு எதிராகப் பார்ப்பன நிலப்பிரபுக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த இரு பார்ப்பன நீதிபதிகள் இவருக்கு எதிராகத் தீர்ப்பளித்
தனர். அட்வகேட் ஜெனரல் பார்ப்பனர் என்பதால் ஒழுங்காக வாதாடாமல் கலெக்டர் மலையப்பனைப் பழிவாங்கினர். கலெக்டரைப் பதவிநீக்கம் செய்து உடனே வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்று பரிந்துரைத்தனர். இத்தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த பார்ப்பன “இந்து” நாளேடு வரவேற்று எழுதி மகிழ்ச்சிக் கூத்தாடியது.

திருச்சியிலிருந்த தந்தை பெரியார் இக்கொடுமையைக் கேள்வியுற்று கொதித்து எழுந்தார். உடனடியாக திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழுவைத் திருச்சியில் கூட்டினார். இதில் உயர்நீதிமன்றத்தீர்ப்பு மற்றும் அரசு அட்வகேட் ஜெனரல், கலெக்டருக்கு முறையாக வாதாடாமல் பழியேற்கச் செய்ததை கண்டித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்று மாலை திருச்சியில் இத்தீர்மானத்தை விளக்கி நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் 50,000 பேர்கள் கலந்துகொண்டனர். தந்தை பெரியார் ஒன்றேகால் மணிநேரம் கண்டன உரையாற்றினார். தீர்மானத்தை ஆதரிப்போர் கைஉயர்த்தக் கேட்டபோது கூடியிருந்த அய்ம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர்களும் கை உயர்த்தினர். எதிர்ப்போர் எனக் கூறியபோது ஒருவர் கூட எதிர்க்கவில்லை.

இதற்காக, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அட்வகேட் ஜெனரல் திரு.திருவேங்கடச்சாரியார் தொடர்ந்தார். நீதி அரசர் இராஜமன்னார், நீதி அரசர் ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் முன்னிலையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் “குற்றவாளி என்று ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டதும், தந்தை பெரியார் “இது சட்ட நீதிமன்றம்; நியாய நீதிமன்றமல்ல. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. அனுமதி கொடுத்தால் எனது கருத்துகளைப் போதிய கால அவகாசத்தோடு ஒரு ஸ்டேட்மெண்டாக தெரிவிக்கிறேன் என்றார்.

நீதிபதிகள் 15 நாள்கள் கெடு கொடுத்தனர். பெரியார் மீண்டும் 23.04.1957 அன்று சிறைக்குச் செல்லத் தயாராக பெட்டிப் படுக்கையுடன் நீதிமன்றம் வந்தார். நீதிபதிகளும் ஸ்டேட்மெண்ட் காப்பியைக் கொடுத்தனர். படிக்கச் சொன்னார்கள். 30 பக்க அறிக்கையை 1 மணிநேரம் படித்தார்.

பெரியார் தனது வாக்குமூலத்தில் பல விளக்கங்களைத் தந்துள்ள நிலையில் ஒருசில கருத்துகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்டினால் நீதிமன்றத்தில் – நீதிபதிகளையும், நீதிமன்றத்தை தந்தை பெரியார் விமர்சித்த தன்மையும் விளங்கிடும்.

பார்ப்பனர் நீதிபதிகளாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர், இருவர் அடிபட வேண்டியதுதான். ‘எல்லாப் பார்ப்பனர்களும் அப்படித்தானா?’ என்று கனம் ஜட்ஜூகள் சிந்தித்து, நான் சொல்வதைத் தவறு என்று கருதலாம். வாயில் – நாக்கில் – குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது. தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அது போலவாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை என்றார்.

பார்ப்பன நீதி அரசர்கள் முன்பாகவே, அவர்கள் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடு என்றும், வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது, தேன் கசக்காது என்று கூறியது தந்தை பெரியாரின் நெஞ்சுரத்தை – அஞ்சாமையை – நீதிக்காக, கொள்கைக்காக எந்த வினாவும் கொடுக்க சித்தமாயிருந்தார் என்பதையும் விளக்குகிறது.

இவ்வளவிற்கும் கலெக்டர் மலையப்பனை தந்தை பெரியார் பார்த்ததே கிடையாது. அவர் பெரியாரின் கொள்கை மற்றும் இயக்கத்தைச் சார்ந்தவரோ கிடையாது. இன்னும் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமானால் கலெக்டர் மலையப்பன் முரட்டுப் பக்தர். பெரியார் உலகு போற்றும் நாத்திகர். மேலும், கலெக்டர் மலையப்பன் பெரியாரின் உதவியைக்கூட நாடவும் கிடையாது.

பெரியார் தானாக இப்பிரசிச்னையை கையிலெடுக்கிறார். கடும்போர் புரிகிறார். நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிறார். அட்வகேட் ஜெனரல் இந்தியாவில் (ஏன் உலகிலேயே) எந்தத் தலைவரும் சொல்லத் துணியாததை பெரியார் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார் என்று கூறியது தந்தை பெரியார் நீதிமன்றத்தை எந்த அளவிற்கு சிலிர்க்கச் செய்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.

பெரியார் சந்தித்த ஒரு வழக்கு மட்டும் இங்கே சான்றுக்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இது போன்ற பல வழக்குகள் – அவமதிப்பு வழக்குகள் – இராஜதுரோக வழக்குகள் எனப் பல வழக்குகளைச் சந்தித்த நீதிமன்றத்தின் நீதிக்கு, நீதி சொன்ன நீதிமான்தான் அறிவாசான் தந்தை பெரியார்.  |