உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வு 10.09.2008 அன்று நடைபெற்றது. பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்னும் மூடக்கருத்தினை, ஜோதிட உலகம் மக்கள் மத்தியில் பரப்பி பீதி ஏற்படுத்தி வந்த நிலையில், அவ்வாறு அழியாது என்பதை 85 நாடுகளைச் சேர்ந்த 8,500 விஞ்ஞானிகள் சேர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையில் ஆய்வு செய்து அறிவித்தனர். அறிவியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லான இந்தச் சோதனையின் முடிவுகள் வெளியான நிலையில் மறுநாள் (11.09.2008) இது குறித்த அக்கருத்தினை நாம் விளக்கி பரப்புரை செய்தோம். பூமியின் மேற்பரப்பிலிருந்து 300 அடி கீழே தோண்டி நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பல நாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டன. தரைக்குக்கீழே உருவாக்கப்பட்ட 27 கி.மீ தூரமுள்ள பிரம்மாண்டமான சுரங்கப்பாதையில் புரோட்டான் கற்றைகள் முதல் முறையாக வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டு சுழற்றப்பட்டன. இது இயற்பியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மைல்கல்லாகக் கொண்டாடப்பட்டது.

இதன்மூலம் உலகம் தோன்றியது தொடர்பான பல்வேறு உண்மைகள் வெளியிடப்பட்டன. ஆயிரம் எரிமலைகள் வெடித்தாலும் மனித இனம் காப்பாற்றப்படும் என்பதை இச்சோதனை விளக்கியது. இதனை எடுத்துக்காட்டி, இவ்வளவு அரிய அறிவியல் சாதனைகள் படைக்கப்படும் நிலையில் இந்த நாட்டு பழமைவாதிகள் தேவையில்லாமல் நடராஜர் சிலையைக் கொடுத்து இது சிவனின் ருத்ரதாண்டவம் என்று கூறி திசைதிருப்ப முயல்வது மகா வெட்கக்கேடு மட்டுமல்லாமல் பெரும் மானக்கேடும் ஆகும் என்று கண்டித்தோம். மேலும், “ அறிவியலில் இப்படி மதவியலைக் கலப்பது, சந்தனக் கோப்பைக்குள் சேற்றை வீசுவது போன்ற அசிங்கம் அல்லவா?

இதை ‘பிரளயம்’ என்று கடவுள் பெயரிட்டு, “கடவுள் பொருள்” என்று கூறிய விஞ்ஞானியே மாறி, (பீட்டர் ஹிக்ஸ் – 1964 இல்) இப்போது அந்த மர்மப் பொருள் அவரது
பெயரிலேயே “ஹக்ஸ் போசான்” என்று அழைக்கப்படும் நிலையில், இப்படி இந்தியப்
பார்ப்பனிய விஞ்ஞானிகள் – பழமைப் பாசியை அதில் தொடுக்க முன்வரலாமா?
நமது நாட்டு ஏடுகள், ஊடகங்கள் ஒரு பக்கம் இதையும் வெளியிட்டு, இன்றைய “ராசிபலன்” ஜோசியம் என்றும் இன்னொரு பக்கத்தில் வெளியிடுகின்றன! அறிவியல் குழந்தைகளான தொலைக்காட்சிகளும் “ராசி பலன்” கூறுவதைவிட மிகவும் கண்டனத்திற்குரியது வேறு உண்டா?

கம்ப்யூட்டர் கண்டுபிடித்துத் தந்தால், அதில் பிள்ளையாரையும், ஜோதிடத்தையும் இணைக்கும் “களிமண் மனிதர்கள்” தான் இந்த ஞான பூமியின் சிறப்பா?
பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் கிடைத்த விடை, வெற்றி இது!
மனித குலத்தை, பகுத்தறிவாளர்களான அறிவியல்வாதிகள் மனிதநேயர்கள்தான் காப்பாற்றுவார்களே தவிர, கடவுளோ, மதங்களோ, சடங்குகளோ, ஜோதிடமோ காப்பாற்றாது. பயத்தை உருவாக்கி பயன்பட நினைப்பவையே அவை. புரிந்து
கொள்ளுங்கள்” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தோம்.

11.09.2008 அன்று காலை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகள் ஜனனி ராஜ்குமார் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்திவிட்டு அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற செங்கை சிவம் அவர்களின் இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தோம். (பூங்கா ஜேசுதாஸ், கி.திவ்யா ஆகியோர் மணமக்கள்.) மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், சிறுபான்மையோர் நல
ஆணைய தலைவர் வின்சென்ட் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பரிதி இளம்வழுதி. சுப.தங்கவேலன் மற்றும் சென்னை மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.
செப்டம்பர் 15 அன்று அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்ற இராமானுஜம் – ஜெயலெட்சுமி ஆகியோர் திருமணப் பொன்விழாவில் பங்கேற்றோம். மாலை இனமுரசு நடிகர்கள் சத்யராஜ் அவர்களின் மகன் சிபிராஜ் – ரேவதி திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தினோம்.

மறுநாள் (16.9.2008) அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் அன்று மாலை அண்ணாவின் சிறப்பு மற்றும் புகழுக்கு முக்கியக் காரணம் அவரது சமுதாயப் பணியா? அரசியல் பணியா? கலைப் பணியா? என்னும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்தில் நடுவராகப் பங்கேற்று உரையாற்றி தீர்ப்பளித்தோம். சமுதாயப் பணியே என்னும் தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன், ஆவடி திருநாவுக்கரசு ஆகியோரும், அரசியல் பணியே என்னும் தலைப்பில் சு.அறிவுக்கரசு, டெய்சி மணியம்மை ஆகியோரும், கலைப்
பணியே என்னும் தலைப்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கவிஞர் செ.வை.ர.சிகாமணி
ஆகியோரும் வாதிட்டனர். இறுதியாக நாம் தீர்ப்பளிக்கும் போது அண்ணாவின்
புகழுக்கு காரணம் சமுதாயப் பணியே என்று கூறி தீர்ப்பளித்தோம்.

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை தட்டிப் பறிக்கும் வகையிலான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நம் கருத்தினை 17.9.2008 அன்று தெரிவித்தோம்.
மத்தியக் கல்வி நிறுவனங்களான அய்.அய்.டி., அய்.அய்.எம். (IIT’s&IIM’s) முதலியவற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகும், உச்சநீதிமன்றத்தில் அதனை எதிர்த்து வழக்காடி இடைக்காலத் தடை வழங்கி, 2 ஆண்டுகள் காலதாமதம் செய்து நீட்டித்து பார்ப்பன மேலாதிக்க ஜாதியினர் வம்பு செய்தனர்.
இறுதியில் வழக்கில் தீர்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் இந்த 27 சதவிகிதம் ஒரு தடவையில் ஒதுக்கப்படாது; ஓர் ஆண்டுக்கு 9 சதவிகிதம்தான் இடஒதுக்கீடு என்று கூறி, மூன்று ஆண்டுகள் முடிந்தால்தான் 27 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கும் என்று கூறி, “குளறுபடிகளை” கமிட்டிகள் மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த சிலர் செய்தனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பில், கிரிமீலேயர் என்ற பொருளாதார அளவுகோலையும், அரசியல் சட்ட விரோதமானது என்றாலும் அதனையும் புகுத்தி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்தனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. அர்ஜுன் சிங் அவர்களது சீரிய முயற்சியாலும், நமது தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களது வற்புறுத்துதலாலும் சமூகநீதிக்காகப் போராடும் நம்மைப் போன்ற பல முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளின் இடையறாத போராட்டங்களாலும் எப்படியோ ஒரு வகையாகக் கணக்குத் திறக்கப்பட்டது. ஆனால், கைக்கெட்டியதையும் தட்டிவிடும் சூழ்ச்சி மிகவும் சாமர்த்தியமாக, உச்சநீதிமன்றத்தைப் பயன்படுத்தியே நடக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த உச்சவரம்பு பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் உண்டு என்றால், அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி தானே!

அதுமட்டுமல்லாமல், பொருளாதார வரம்பு மிகவும் குறைவு, சம்பள உயர்வு மத்திய அரசில் பெற்றுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதனால் பாதிக்கப்படுவர்; அதன்மூலம் பூர்த்தியாகாத பொதுப்போட்டி (Open Compettion) என்ற பிரிவில் உயர்ஜாதிக்கே செல்லும் நாடகம் அரங்கேறும் என்று நாம் முன்பே கூறினோம். அதையே அப்போதைய தீர்ப்பு எடுத்துக்காட்டியது .
ஜஸ்டிஸ் இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் உள்ள தேசிய பிற்படுத்தப்
பட்டோர் நலக் கமிஷன், வருமான வரம்பை ஆண்டுக்கு 4 லட்சமாக உயர்த்திடவேண்டும் என்ற பரிந்துரையை திருமதி மீராக்குமாரின் அமைச்சரகத்திற்கு அனுப்பி 3 மாதங்களுக்கு
மேல் ஆன நிலையில், அங்கே அது குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தது. (இது நமக்கு ஏற்புடைத்தது அல்ல. என்ற போதிலும்கூட) இதன்மூலம், உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு கூத்து நிறைவேற மறைமுகமான உதவி செய்வது போன்ற நிலையே நீடிப்பது பெரும் மோசடி என்பதை நம் அறிக்கையில் எடுத்துக்காட்டினோம்.
வருமான வரம்பினை உயர்த்தும் பரிந்துரையை உடனடியாக ஏற்றுக்கொண்டு அமல்படுத்தினால், காலி இடங்கள் அய்.அய்.டி., போன்ற நிறுவனங்களில் பொதுப்போட்டிக்கு வராது என்பதால் தாமதப் படுத்தினார்கள். எனவே வருமான வரம்புக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஏன் தரக்கூடாது? அது அவர்களது 27 சதவிகிதம்தானே!
உயர்ஜாதி முன்னேறிய வகுப்பினர் உள்ளே நுழையவே இப்படி ஒரு திட்டமிட்ட
ஏற்பாடு நடைபெறுகிறது என்பதை எடுத்துக் காட்டி, நாட்டில் உள்ள அனைத்துச் சமூகநீதி
யாளர்களும் கொதித்து எழவேண்டும் என்று தெரிவித்தோம்.
மேலும், நாடு தழுவிய கிளர்ச்சிகளும் வெடிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதில் சமூகநீதியாளர்கள் கட்சி வேறுபாடின்றி ஒன்றுதிரண்டு போராட முன்வர ஆயத்த
மாவீர்! என்று அறைகூவல் விடுத்தோம்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளை தொடங்கினோம். இவ்வறக்கட்டளைக்கான தொகை ரூபாய் ஒரு இலட்சத்துக்கான வரைவோலையை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில், அதன் செயலாளர் என்ற முறையில் நாம், தந்தை பெரியார் 130ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று (17.09.2008) பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் இராமச்சந்திரன் அவர்களிடம் வழங்கினோம். பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் வீ.அரசு அவர்கள் உடனிருந்தார். திராவிடர் கழகப்பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை உடன் வந்திருந்தார். அன்று (17.09.2008) மாலை திருவல்லிக்கேணியில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.கழகப் பொருளாளர் கோ.சாமிதுரையும் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழியும் பங்கேற்று உரையாற்றினர். மறுநாள் சிங்கப்பூரில் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சிறந்த கவிஞர் பட்டமங்கலம் வி.இக்குவனம் கலைஞர் அவர்களைப் பற்றி சித்திரப்பாக்களில் எழுதிய செம்மொழிக்காவலர் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, சென்னை மயிலையில் கற்பகம் ஓட்டல் கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று நூலை வெளியிட்டோம். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் துணைத் தலைவர் அ.இராமசாமி முதல்படியைப் பெற்றுக்கொண்டார். ‘அந்தாதி’யும் ‘வெண்பா’வும் பாடுவதில் ஆற்றல்மிக்க கவிஞர் இக்குவனம் அவர்களின் கவிதைத் திறனைப் பாராட்டி ‘வெண்பா சிற்பி’ என்ற பட்டத்தை வழங்கினோம்.செம்மொழி நிலையத்தின் சார்பில் டாக்டர் வ.இரகுராமன் வரவேற்றார். தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மா.செல்வராசன் தலைமையேற்றார்.
பேராசிரியர் முனைவர் என்.சுப்பிரமணியன் அவர்கள் சிறந்த வரலாற்று ஆசிரியர் பல வரலாற்று நூல்களைப் படைத்தவர். அவர்களுக்கு, அவர் பேராசிரியராகவும், சுய சிந்தனையாளராகவும் விளங்கியமைக்காகவும், ஆராய்ச்சியாளராக உண்மையை
வெளிக்கொண்டு வரும் அருந்திறன் கருதியும், பல்கலைக்கழக அளவில் சமுதாய மறுமலர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணியைக் கருத்தில் கொண்டும் “தலைசிறந்த அறிவுக் கருவூலமான கல்வியாளர்” என்ற விருதை 19.09.2008 அன்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்றுப்பேரவையின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிக்குழு சார்பில் வழங்கிப் பாராட்டினோம். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொன்னவைக்கோ, தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் என்.இராஜேந்திரன், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.முத்துக்குமரன், மாநிலத் திட்டக்குழு
உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் பெ.ஜெகதீசன் தமிழக உயர்கல்வித் துறை
அமைச்சர் முனைவர் க.பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
21.9.2008 அன்று திருச்சியில் நடைபெற்றதி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்று
முதலமைச்சர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட அண்ணா நூற்றாண்டு மலரைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினோம். அப்போது தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி உரையாற்றினோம்.
ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்படுவதைக் கண்டித்தும். இதனைத் தடுத்து
நிறுத்திட உருப்படியான எவ்விதச் செயலையும் செய்ய மறுக்கும் இந்திய அரசின் போக்கினைக் கண்டித்தும். இந்தியா முழுமையும் சிறுபான்மையின மக்களுக்கு
எதிராக சங்பரிவார்க் கும்பல் கட்டவிழ்த்து விடும் வன்முறையைக் கண்டித்தும் 23.09.2008
அன்று சென்னை – சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினோம். சென்னை பெரியார் திடலில் இருந்து பேரணியாக சென்ற நம்மையும் ஆயிரக்கணக்கானத் தோழர்களையும் காவல்துறை கைது செய்தனர். நம்முடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாவலர் அறிவுமதி,
பேராசிரியர் தெய்வநாயகம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இலங்கைஎம்.பி.சிவாஜிலிங்கம், பேராயர் எஸ்ரா சற்குணம், டாக்டர் சையத் சத்தார் ஆகியோர் தங்கள் கண்டன உரைகளை ஆற்றி போராட்டத்தைப் பாராட்டிச் சென்றனர்.
நீண்ட நாட்களுக்குப்பின் இந்தப் போராட்டமே ஈழப் போராட்ட ஆதரவுக்கான எழுச்சியை ஏற்படுத்தியப் போராட்டமாம்!
நினைவுகள் நீளும்…





