Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அறிவுத்துறையில் வளர்ச்சி..தந்தை பெரியார்-தந்தை பெரியார்

நம்நாடு அறிவுத் துறையில் முன்னேறாவிட்டாலும், செலவுத் துறையில் நன்கு முன்னேறியுள்ளது எனக்குத் தான் தெரியும். எனக்கு 83 வயது ஆகின்றது. பொருளாதாரத் துறையிலும், வாழ்க்கைத் தரத்திலும் நாடு மிகமிக முன்னேறி உள்ளது. நீங்கள் இளைஞர்கள். உங்களுக்குத் தெரியாது. 80 ஆண்டுகளுக்கு முன் நாம் மிகமிக பின்தங்கிய நிலையில்தான் இருந்தோம். வேட்டிக் கட்டிக் கொண்டு வெளியே வருபவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலானோர் கோவணம்தான் கட்டிக் கொண்டு இருப்பார்கள். பெண்களின் ஆடை, அணிகலன்களும் அப்படியே. நாகரிகம், உணவு முதலியனவும் அப்படித்தான்.

தொழில் துறையிலும், கல்வித் துறையிலும் பின்தங்கிதான் இருந்தோம். அன்று பெரிய தனவான்கள் எல்லாம் கோயில், குளம் கட்டுவதிலும், உற்சவம், சத்திரம், சாவடிகள் கட்டுவதிலுமே ஈடுபட்டு இருந்தார்கள். இப்போதுதான் இம்மாதிரி அறிவுக்கோயில் (கல்லூரி) கட்ட மக்கள் முன் வந்துள்ளார்கள்.

இன்றுதான் நாம் 100-க்கு 30-35 பேர்கள் படித்துள்ளோம். இன்னும் அய்ந்து வருஷத்தில் 50 பேர், 10 வருஷத்தில் 100 பேர்கள் படித்து விடுவோம்.

இன்று தொழில் துறையில் மிகவும் முன்னேறிக் கொண்டு இருக்கின்றோம். பொறாமைக்காரர்களும், பொறுப்பு இல்லாதவர்களும்தான் வேலை இல்லை, வேலை இல்லை என்று கூப்பாடு போடுகின்றார்கள். இது தவறு. வேலை இல்லாமல் போவது இல்லை. 12 அணாவுக்கு வேலை செய்த தச்சன் இன்று 3 ரூபாய்க்குக் கிடைக்க மாட்டான் என்கின்ற நிலை உள்ளது. முன்பு 10 அணா, 12 அணாவுக்கு வேலை பண்ணிய கொத்து வேலைக்காரன் எல்லாம் இன்று 3 ரூபாய், 3.50 ரூபாய் கொடுத்தாலும் வேலைக்குக் கிடைக்கவில்லை. முன்பு 10 ரூபாய், 12 ரூபாய்க்கு அச்சாஃபீசில் கம்போஸ் செய்தவன் இன்று மாதம் 60, 65 கொடுத்தாலும் ஆள் கிடைக்கவில்லையே.

எனவே, நாம் எவ்வளவு தூரம் தொழிலில் முன்னேறியுள்ளோம். ஆனால், தொழிலுக்குத் தகுதியான ஆட்கள்தானே கிடைக்கவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது. தொழில் துறையில் நாம் முன்னேறாமலும் இல்லை. நமது தலைவர் கையில் 30 மில்கள் உள்ளன. இந்த நாட்டில் தொழிலிலோ, அறிவுத் துறையிலோ, மற்ற மற்ற துறைகளிலோ நம்மவர்கள் வளரக் கூடாது என்றும், இன்றும்கூட எதிர்ப்பு இருக்கின்றது.

அறிவுத் துறையைப் பற்றிக் கூறு கின்றாயே, நீ எதைக் கொண்டு இப்படிக் கூறுகின்றாய் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அக்கம் பக்கத்து நாடுகளைப் பற்றித்தான் கூறுகின்றேன். காட்டுமிராண்டியாக இருந்த வெள்ளைக்காரன், ரஷ்யாக்காரன், நீக்ரோ ஆகியவர்கள் எவ்வளவு தூரம் முன்னேறி அதிசய அற்புதங்களைக் கண்டுபிடித்து வாழ்கின்றான்! இதைப் பார்த்தே கூறுகின்றேன்.

நம் நாட்டில் அறிவுத் துறைக்குத் தக்க சாதனமே இல்லை. இதற்கான ஆளும் தோன்றவே இல்லை. ஆனால், நம்மைக் காட்டுமிராண்டியாக்கவே சாதனங்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தான் தோன்றினார்கள். அறிவுத் துறையில் மட்டும் நம் நாடு மிகவும் கீழேதான் உள்ளது.

நாம் எந்த அறிவுச் சாதனத்தைக் கொண்டு, எந்தப் பெரிய மனிதர்களின் மொழியைக் கொண்டு முன்னேற நினைத்தோமோ, அந்தப் பெரிய மனிதர்களால் அறிவு வளர்ச்சிக்கு இடம் ஏற்படவே இல்லை.

நான் நடுநிலையில் நினைத்துப் பார்த்துக் கூறுகின்றேன். அறிவு வளர நியாயமே இல்லை. நாம் எடுத்துக்காட்டாக யாரைப் பிடிக்கின்றோம், முன்னோர்களை. அதாவது ஆயிரம், இரண்டாயிரம் வருஷத்து முன்னோர்களைப் பிடிக்கின்றோம். இப்படி 1,000, 2,000 வருஷத்துக்கு முன்னே உள்ளவனுக்கு எப்படி அறிவுக்கண் இருக்க முடியும்? என்ன சாதனம் அவனுக்கு அந்தக் காலத்தில் இருந்திருக்க முடியும்?

நான் சாதாரணமாக அறிவியல் முன்னோருக்கு வள்ளுவரை எடுத்துக் காட்டுவேன். வள்ளுவர் குறளை 100-க்கு 50 பங்குதான் ஒத்துக் கொள்பவன். 100-க்கு 100 ஒத்துக் கொள்ளமாட்டேன்.  நானும், மற்றவர்கள் மாதிரி ஒத்துக் கொண்டவன். ஆனால், நானும் புலவன் போல பொய் சொன்னவன் ஆவேன். எனவே, நமக்கு வேண்டியது அறிவுதான். தாராளமாக சுதந்திரமாக சிந்திக்கும் அறிவுதான் தேவை. இதைப் பெரியவர்களிடம் எதிர்பார்ப்பது கஷ்டம்.

உங்களைப் போன்ற இளைஞர்களை நினைத்துத்தான் என் கருத்தைக் கூறுகின்றேன். இளைஞர்கள் தான் நாளைக்கு விஞ்ஞான அதிசய அற்புதங்களைக் கொண்டு நாட்டை முன்னுக்குக் கொண்டு போக வேண்டியவர்கள்.

நான் இனிவரும் உலகம் என்ற நூலில் கூறியுள்ளேன். பருந்து பறப்பது போல, ஏரோப்பிளான் பறப்பது போல மனிதனும் பறக்க தன் உடம்பிலேயே இயந்திரத்தைக் கட்டிப் பறக்கும் காலம் வரும் என்று கூறியுள்ளேன். இதுகளெல்லாம் இளைஞர்களால்
தான் முடியும். பெரியவர்களால் முடியாது.

சாதாரணமாக நம்பிக்கையைத்தான் எல்லா காரியங்களுக்கும் பயன்படுத்து
கின்றோமே ஒழிய, அறிவைப் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. நம் மக்களுக்கு முரட்டு நம்பிக்கை உண்டு. 100க்கு 95 பேர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஏதோ என்னைப் போன்ற சிலருக்குத்தான் கிடையாது. மற்றபடி எல்லோருக்கும் நம்பிக்கை உண்டு.

கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு எது எது கடவுளுக்கு அதிகாரம், எது எது மனிதனுக்கு அதிகாரம், எது எது கடவுளால் ஆவது, எது எது மனிதனால் ஆவது என்ற தெளிவு எந்த நம்பிக்கைக்காரனுக்குமே இல்லை. கடவுளுக்கு என்ன அதிகாரம்? மனிதனுக்கு என்ன அதிகாரம் என்று வரையறுத்துக் கொள்ளப்படவே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன் பிரசிடெண்டுக்கு எவ்வளவு அதிகாரம், மந்திரிக்கு எவ்வளவு அதிகாரம் என்ற சந்தேகம் வந்தது. இதுவே இப்படி என்றால், கடவுள் பற்றி சுத்தமாக நினைப்பதுவே இல்லை.

நாம் ஏன் இது, இதுகள் செய்யக் கூடாது? நாம் ஏன் ஆகாயவெளிக்குச் சென்று சந்திரன் மண்டலம் போகக் கூடாது என்ற சிந்தனையே இல்லையே. சந்திர மண்டலத்துக்குப் போய் வந்தான் என்றால், சும்மா புளுகுகின்றான் என்கின்றான். ஆனால், சோசியன் சந்திரன் மண்டலத்தைப் பற்றி, அவன் மனைவியைப் பற்றிப் புளுகினால், அதனை நம்புகின்றான். இப்படிப்பட்ட மக்களும் இருப்பது எல்லோருக்கும் தானே அவமானம்?

மாணவர்கள் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டும். ஒரு தடவை வழுக்கி விழுந்தால் மறு தடவை திருத்திக் கொள்ளலாம். எந்த விஷயத்தையும் அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். முன்னோர்கள் சொன்னார்கள், சாஸ்திரம் சொல்லுது என்று பார்க்கக் கூடாது.

30 வருடம் முன் நாடு எப்படி இருந்தது? இன்று எப்படி முன்னுக்கு வந்து உள்ளது என்பது எனக்கே தெரிகின்றதே. இதுவே இப்படி என்றால் 1,000, 2,000 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு நாம் முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருந்திருக்
கின்றோம் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.

எனது அருமை நண்பர் ராஜாஜி அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன், நமது பெரியவாள்கள் நன்கு யோசித்துத்தான் ஜாதி முறையை ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அவரைவிட அந்தஸ்தில் உள்ள ஜவகர்லால் நேரு அவர்கள் கூறியுள்ளார்:

“ஜாதி முறை அந்தக் காலத்துக்கு வேண்டு மானால் ஏற்றதாக இருந்து இருக்கலாம்.  நம் முன்னோர்கள் ஏற்படுத்தியும் இருக்கலாம். நம் முன்னோர்கள் காலம் காட்டுமிராண்டி காலம். இந்தக் காலத்துக்குப் பொருந்தாது” என்று ஒரே அடியாக அடித்து விட்டார்.

நம்முடைய எண்ணங்கள், கருத்துகள் பின்னோக்கிப் போகாமல் அறிவுத் துறையிலேயே போகுமேயானால் நாமும், மற்ற நாட்டார்கள் போல முன்னுக்கு வர முடியும். நமது கடவுள், மதம், சாஸ்திரத் துறைகளை எல்லாம் எடுத்துக் கொண்டால் துர்நாற்றம்தான் வீசும். நாம் மலமே எடுத்து பழக்கப்பட்டதினால் மலத்தின் துர்நாற்றம் தெரியாமல் பழகிவிட்டது.

நாம் அறிவுத் துறைக்கு கடவுளும், மதமும், சாஸ்திரமும் எவ்வளவு கேடானது என்பதற்கு இந்த மதுரையே போதுமே. வருஷத்துக்கு ஒருமுறை கழுவேற்றும் திருவிழா நடைபெறு
கின்றதே. அறிவுப் பிரச்சாரம் செய்த சமணனுக்கு இதுவா கதி? எந்தக் கடவுளை எடுத்தாலும் அவனைக் கொன்றான், இவனைக் கொன்றான், 1,000, 2,000 பேரைக் கொன்றான், லட்சம் பேரைக் கொன்றான், இதுதானே பெருமையாக உள்ளது.

உலகம், அறிவுத் துறையில் எவ்வளவோ முன்னுக்கு வந்து உள்ளது. 1,000, 2,000 மைல்கள் எல்லாம் கூப்பிடு தொலைவுக்கு வந்து விட்டது. இங்கு ஃபோனை எடுத்து ஹலோ என்றால், அந்தக் கணமே ‘Yes’ என்கின்றான். ஏதோ இப்படிப்பட்ட கனதன வான் எல்லாம் இப்படி அறிவுத் துறையில் திரும்பியதின் காரணம் தானே இப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் நான் வந்து இப்படி அமரும்படியும், பேசும்படியுமான யோக்கியதை வந்து இருக்கிறது.

நமது பிரதம மந்திரி நேரு அவர்களின் தங்கையர் திருமதி விஜயலட்சுமி பண்டிட் அவர்கள் மேல்நாட்டில் ஒரு வெள்ளைக்கார மாதுவுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த மாது நீங்கள் எவ்வளவோ இப்போது முன்னேறியுள்ளீர்கள் என்று கூறினார். அதற்கு உடனே விஜயலட்சுமி அம்மையார், நாங்கள் இன்னும் எவ்வளவோ முன்னுக்குப் போய் இருப்போம். பாழும் உங்கள் நாகரிகம் வந்துதான் எங்களின் முன்னேற்றத்தைத் தடுத்து விட்டது என்று கூறினார். உடனே அந்த வெள்ளைக்கார அம்மாள் பட்டென்று சொன்னார், எங்களுடைய நாகரிகம் உங்கள் நாட்டில் பரவாது இருக்குமேயானால், நீங்கள் இந்த நாட்டிற்கே வந்து இருக்கவே முடியாதே. உங்கள் கணவன் செத்த போதே உங்களையும் உங்கள் நாட்டில் நாங்கள் வருவதற்கு முன் இருந்த பழக்கப்படி உங்கள் கணவனோடு அல்லவா சேர்த்து வைத்து கொளுத்தி இருப்பார்கள். எங்கள் நாகரிகத்தின் பயனாகத் தானே இன்று நீங்கள் விதவையாகியும் உயிருடன் இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அந்த அம்மாளுக்கு வெட்கமாகப் போய்விட்டது.

நம்முடைய நடத்தைகள், செய்திகள் பற்றி வெளிநாட்டுக்காரன் எவ்வளவுக் கேவலமாக நினைக்கின்றான், கேலி பண்ணுகின்றான் என்பதற்கு வேடிக்கையான ஒரு செய்தியையும் கூறுகின்றேன். எங்கள் வீட்டுப் பையன் என் அண்ணன் மகன் சம்பத் ரஷ்யாவுக்குப் போய் இருந்தான். அவனுடன் எங்கள் ஜில்லாக்காரன் கோபிச்செட்டிப்பாளையம் சுப்பண்ண கவுண்டர் மகன் ராமசாமி என்பவரும் போய் இருந்தார். இவரும் பார்லிமெண்டு மெம்பர்தான்.

இவர்களைப் பார்த்து ஒரு துடுக்குக்கார ரஷ்யச் சிறுவன், “ஆமாம், உங்கள் நாட்டில் மாட்டைக் கும்பிடுகின்றீர்களாமே, நிஜமா?” என்று கேட்டான். சம்பத் நம்ம கூட கொஞ்ச காலம் இருந்தவன். ஆகையால், அவன் தந்திரமாகப் பின்வாங்கிக் கொண்டு அந்த ராமசாமியைப் பார்த்து இந்தப் பையன் ஏதோ கேள்வி கேட்கின்றான். பதில் கூறுங்கள் என்றான்.

ஓகோ அப்படியா, “ஆமாம் நாங்கள் மாடு ஜீவசத்தான பால் கொடுக்கின்றது, அதனால் கும்பிடுகின்றோம்” என்றார். அந்த பையன் கேட்டான், “மாட்டைவிட எருமை அதிகப் பால் கொடுக்கின்றதே, அதில் அதிக ஜீவசத்து உள்ளதே, அதை ஏன் கும்பிடக் கூடாது?” என்று கேட்டானாம். அதற்குப் பதில் கூற முடியாமல் அவர் இது எங்கள் நாட்டுப் பழக்கம் என்று கோபத்தோடு கூறினாராம். நம் நிலை இந்த யோக்கியதையில் தானேயுள்ளது?

நாம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவுத் துறையில் சிந்திக்க ஆரம்பித்து இருப்போமேயானால், நாம் எவ்வளவோ முன்னுக்குப்போய் இருப்போம். நான் கொஞ்சம் துணிந்து கூறுவேன். காந்தி சகாப்தம் இல்லாது இருந்தால் இன்னும் அதிகம் முன்னேறி இருப்போம். இயந்திரங்களை எல்லாம் பிசாசுகள் என்று கூறி ராட்டினத்தையும் தக்ளி முறையையும் கொண்டு வந்து பரப்புவதில்தான் ஈடுபட்டோம். நானும் இப்படி இயந்திரங்களை எல்லாம் முட்டாள்தனமாகப் பேய் என்று சொன்னவன்தான். பிறகு புத்தி வந்து தவறுக்கு வருந்தியவன் ஆவேன்.

இயந்திரத்தின் காரணமாகவே நாம் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்து உள்ளோம். எங்களைப் போன்ற அறிவியல் வாதிகள் பண்டைக் காலம் முதல், புராணக் காலம் முதல் கண்டிக்கப்பட்டும், வெறுக்கப் பட்டும் வந்து இருக்கின்றனர்.

இன்று காலம் மாற ஆரம்பித்து விட்டது. எங்கள் கருத்துகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் மக்களால் ஜீரணமாக்கக் கூடியதாக இல்லாது இருந்தாலும் காது கொடுத்தாவது கேட்கும் நிலைக்கு வந்து உள்ளார்களே, அதுவே மிக்க மகிழ்ச்சி.

மனிதன் சமுதாயத்தையே நம்பி வாழ்கின்றான். சமுதாயத்தில் நீதி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதுகள் இல்லை என்றால் மனித சமுதாயத்துக்கும் மிருகப் பிராயத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் அறிவுத் துறை யிலேயே கவனம் செலுத்த வேண்டியதும். அவசியம்.

(22.8.1961 அன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தியாகராசர் தொழிலியல் கல்லூரி மன்றத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை,

– (‘விடுதலை’ 1.9.1961)