நடக்கின்ற ஆரியத்தின் கொடுங்கோல் ஆட்சி,
நாட்டோரை ஏய்த்துவரும் கொள்ளைக் கூட்டம்
அடங்காமல் ஆர்ப்பரிக்கும் கொடுமை என்னே!
அணுவளவும் மக்கட்குப் பயனும் உண்டோ?
மடமைகளை அரங்கேற்றி மகிழு கின்றார்!
மக்களையே மாக்களென நினைத்தார் போலும்!
நடமாடும் கடவுளரும் நாங்கள் என்றே
நாடகங்கள் நடத்துவதும் நாணக் கேடே!
அவரவரின் குலத்தொழிலைத் தொடர்ந்து செய்ய
ஆணையிட்டோர் வழியினரோ ஆட்சித் தேரில்!
தவறான கருத்தியலாம் ஏற்றத் தாழ்வைத்
தழலனைய சாதிமத உணர்வைத் தூண்டி
அவலங்கள் பெருகிடவே வழிகள் கண்டார்;
அணுவளவும் குமுகஅறம் எண்ணார்! காய்ந்த
உவர்நிலத்தில் பயிர்வளர்க்கும் உவகை கொண்டார்!
உட்பகையை வளர்த்திட்டே குளிரும் காய்வார்!
முற்போக்குச் சிந்தனைகள் முடமாய்ப் போக
மூடநெறி தலைவிரித்தே ஆட்டம் போட,
பிற்போக்குச் சாய்க்கடையில் புரண்டு நாளும்
பேதைமையின் வயப்பட்டே சழக்கை எல்லாம்
கற்கால மாந்தர்போல் முழுதும் நம்பிக்
கயமைக்கே ஆலவட்டம் சுழற்றல் நன்றோ?
நெற்பதரை உலையிலிடச் சோறும் ஆமோ!
நெருப்பினையே கையிரண்டால் அணைக்கப் போமோ!
ஆரியமாம் நச்சரவோ தமிழி னத்தை
அழித்திடவும் அடிமையென ஆக்கு தற்கும்
வீரியமாய்க் களத்தினிலே நிற்ப தெண்ணி
வெகுண்டெழுந்து மறத்தமிழர் வீழ்த்த வேண்டும்!
ஓரினத்தை, பண்பாட்டை, மரபை யெல்லாம்
உருக்குலைக்கத் திட்டமிட்டே ஒழிக்கப் பார்ப்பார்!
வேருக்கே வெந்நீரைப் பாய்ச்சும் வீணர்
வெம்பழிக்குச் சாவுமணி அடிப்போம் நாமே!
கோவில்கள் திருவிழாக்கள் குடமு ழுக்கு,
குலதெய்வம், காதுகுத்து, மொட்டை போடல்,
சாவினிலும் வேண்டாத சடங்கு, பொய்ம்மைச்
சாத்திரங்கள், பழக்கவழக் கங்கள் மற்றும்
ஏவலராய் ‘அவாள்’ முன்னர் வாயைப் பொத்தி
ஏதுமிலாக் கைக்கூலி யாக நாளும்
காவல்செயல், பரிகாரம், பூசை, வேண்டும்
கடும்விரதம் எல்லாமும் வேண்டாக் கூத்தே!
பெருங்குற்றம் இழைத்தாலும் பார்ப்பா னுக்கோ
பெரிதாகத் தண்டனைகள் தருதல் கூடா!
சிறுகுற்றம் சூத்திரனும் செய்திட் டாலும்
செப்பரிய கொலைக்குற்றம் வழங்கல் வேண்டும்!
ஒருகுலத்துக் கொருநீதி உரைக்கும் போக்கால்
ஒருநாளும் சமூகநீதி எவர்க்கும் கிட்டா!
வருவாயைப் பெருக்குகிற வழிகள் தேர்ந்த
வன்னெஞ்சர் வணங்குதற்கே உரிய ராமோ?
உடலுழைப்பே இல்லாமல் பிழைக்கக் கற்ற
ஓரினத்தார் ஆரியரே! ஊர்கள் தோறும்
முடமாக்கும் கோயில்களைப் பெரிதாய்க் கட்டி
மூடநெறி ஆர்ப்பரித்தே ஆடச் செய்வார்!
தடம்புரண்டு தடம்மாறித் தவறு செய்யும்
தருக்கர்களோ உயர்மதிப்புக் குரியர் ஆனார்!
மடமையினை அரங்கேற்ற மனுவின் பொய்யை
மறுத்துரைத்தல் குற்றமெனப் புலம்பு கின்றார்!
இல்லாத கடவுளரின் பெயரில் இங்கே
ஏமாற்றிப் பிழைக்கின்ற கொடியர் நாளும்
பொல்லாத வினையாற்றிப் பூரிக் கின்றார்!
பொய்களையே மந்திரமென் றுளறிக்கொட்டிக்
கல்லாதார் தமைமயக்கித் தட்டை ஏந்திக்
காணிக்கை குவிப்பதையே தொழிலாய்க் கொண்டார்;
புல்லர்தம் புனைசுருட்டும் புரட்டும் நம்மைப்
புதைகுழிக்குள் தள்ளுவதை ஏற்க லாமோ? |





