Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அயோத்தி இராமன் கோயிலில் ஊழலா?வெளிவரும் உண்மைகள் !-மஞ்சை வசந்தன்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் கொடையளித்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கையாடல் செய்த விவரங்கள் நாடு முழுவதும் தெரியும் வகையில், பரவி வருகிறது. நடைபெற்ற ‘கையாடல்’ குறித்த விமர்சனங்களும், ஆக வேண்டிய நடவடிக்கை எடுப்பதற்கான கோரிக்கைகளும் பெருகிவரும் நிலையில் அயோத்தி ராமன் கோயில் கட்டுவதற்கு முன்பு பாபர்மசூதி இடிக்கப்பட்டது முதல், கோயில் கட்டும் பணியில் முதன்மையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பா.ஜ.கவும் கோயில் ‘கும்பாபிஷேகத்திலும்’ முதன்மையாக இருந்த பா.ஜ. கட்சி – நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ’கோயில் பணக் கையாடல்’ குறித்தும் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காதது நாடு தழுவிய கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் முறைகேடு குறித்து முறையான புகார் எதுவும் வராத நிலையிலும், மத்தியப் புலனாய்வு அமைப்புகளை அனுப்பி விசாரணை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ஜ.க. ஒன்றிய அரசு இதுநாள்வரை அயோத்தி ராமன் கோயிலில் நடந்துள்ள ‘கையாடல்’ குறித்து எந்தவித விசாரணையையும் மேற்கொள்ளாதது பொதுவெளியில் அய்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பா.ஜ. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அண்மையில் உத்தரப்பிரதேசம் – லக்னோ நகரில் பா.ஜ.க. ஊழியர் கூட்டத்தில், ‘அயோத்தி ராமன் கோயில் கையாடல்’ குறித்து முதன்முறையாக கருத்து தெரிவிக்கும் வகையில் வாய் திறந்துள்ளார். ஆனால் ‘கையாடல்’ குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியோ – நடைபெற்ற ஊழல் நடவடிக்கைகளில் பங்கு பெற்றோர் பற்றியோ எதுவும் அவர் பேசிடவில்லை.

கோயிலில் ‘பணக் கையாடல்’ நடைபெற்றது குறித்து இதுவரை எதையும் பா.ஜ.க. மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர் தெரிவிக்கவில்லை. இப்பொழுது அந்தக் கட்சியின் தேசியத் தலைவர், ‘ராமன் கோயிலில் நடந்துள்ள கையாடல்’ குறித்த எந்தவித பொறுப்பான கருத்தையும் கூறாமல், எதிர்க்கட்சியினரை வசைபாடுவதையும், எதிர்க்கட்சியினர் கூற்றுக்குப் பதில் அளிக்காத நிலையினையும் பொதுநலம் நாடுவோர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

அயோத்தி ராமன் கோயில்

திருட்டுப் பணத்தில் காதலிக்கு ‘அய்போன்!’

அயோத்தியில் உள்ள ராமன் கோயில் உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் அப்பணத்தைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.

அயோத்தி ராமன் கோயிலுக்கு பக்தர்​கள் அளிக்கும் நன்​கொடை, காணிக்கை பணம் திருடப்படுவதாக புகார்​கள் எழுந்​தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்​யப்​பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்​டது. இதுதொடர்​பாக விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு சார்​பில் கடந்த ஜூன் 15ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.அய்.டி.) நியமிக்கப்பட்​டது.

மூத்த அய்.ஏ.எஸ். அதி​காரி விஜய் விஷ்​வாஸ், மூத்த அய்.பி.எஸ். அதிகாரி கிரண், நிதித்துறை சிறப்புச் செயலா​ளர் நீல்ரத்தன் உள்​ளிட்​டோர் அடங்கிய எஸ்.​அய்.டி. குழு​வினர் ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்​டளை நிரு​வாகிகள், மூத்த அதி​காரிகள், ஊழியர்​களிடம் தீவிர விசாரணை நடத்​தினர். கடந்த ஜூன் 23ஆம் தேதி
எஸ்.அய்.டி. சார்பில் உத்தரப்பிரதேச அரசிடம் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அவினாஷ் சுக்லாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், அயோத்தி ராமன் கோவில் உண்டியல் பணத்தைத் திருடி, தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காதலிக்கு ஆடம்பரப் பரிசுகளை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமன் கோயில் பணத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.பி.அய் தற்காலிக ஊழியர் அவினாஷ் சுக்லா, தான் திருடிய பணத்தில் சுமார் ரூ.19 லட்சத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்காகச் செலவழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அவினாஷ் சுக்லா தனது காதலியின் வங்கி வழிக் கணக்கிற்கு நேரடியாக ரூ.2.5 லட்சம் பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார்.

மேலும், அவருக்கு ஒரு விலையுயர்ந்த ‘அய்’போன் ஒன்றையும் உண்டியல் பணத்தில் வாங்கிப் பரிசாக வழங்கியுள்ளார். தனது ஒரு சகோதரனின் ஆடம்பரத் திருமணத்திற்காக ரூ.6 லட்சம் பணத்தை அவர் செலவிட்டுள்ளார். மற்றொரு சகோதரனுக்கு ரூ.5 முதல் ரூ.6 லட்சம் வரை நேரடி ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

திருடப்பட்ட பணத்தைக் கொண்டு சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பில் ஒரு மாருதி காரை வாங்கியுள்ளார். காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, இந்தக் காரைத் தனது சகோதரர் அபிஷேக் பெயரில் அவர் பதிவு செய்திருந்தார். காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவினாஷ் சுக்லாவிடமிருந்து ரூ. 20.39 லட்சம் ரொக்கம், 1,121 அமெரிக்க டாலர், தங்கம், வெள்ளி நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்​
செயலாளர் சம்பத்ராய், அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் கடந்த 26ஆம் தேதி தங்​கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். சம்பத்ராயின் பதவி விலகலையடுத்து,
ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பின் மூத்த நிருவாகியும், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியுமான கிருஷ்ணமோகன் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காணிக்கைப் பெட்டி பொறுப்பாளர் ராம்சங்கர் யாதவ், காணிக்கைப்பணம் எண்​ணும் பிரிவைச் சேர்ந்த அனுகல்ப் மிஸ்ரா, லவகுஷ் மிஸ்ரா, சுபாஷ் சந்திர வஸ்​த​வா, கருணேஷ் பாண்டே, மணீஷ் யாதவ், அவி​னாஷ் சுக்​லா, ராம்​சங்கர் மிஸ்ரா ஆகியோரிடமிருந்து ரூ.79.85 லட்​சம் ரொக்கம் பறி​முதல் செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேசத்​தில் உள்ள இந்த விவகாரம் வெளிச்சத்​துக்கு வருவதற்கு முன்புவரை, ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வங்​கிக் கணக்குகளில் தினமும் சராசரி​யாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்​ளது.

ஆனால், திருட்டு விவ​காரம் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, இந்தத் தொகை தின​மும் ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்​ச​மாக அதிகரித்துள்ளது. இந்தத் தரவுகளின் அடிப்படை​யில், இதற்கு முன்பு தின​மும் ரூ.6 லட்சம் முதல் 8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனிடையே, அறக்கட்டளை சமர்ப்பித்த வருடாந்​திர வரவுசெலவு​கள் மீதான தணிக்கை கணக்குகளிலும் தவறுகள் இருப்பதை எஸ்.அய்.டி. கண்டு​பிடித்​துள்ளது. இதை உறுதி​செய்ய அறக்கட்டளை​யின் முன்னாள் முக்​கிய நிருவாகிகளான சம்பத்ராய், அனில்மிஸ்ரா
மற்​றும் கோபால்ராவ் ஆகியோரிட​மிருந்து சில முக்​கிய ஆவணங்​களை எஸ்.​அய்.டி. கோரி​யுள்​ளது.

மத்​திய அரசின் முன்​னாள் உள்​துறை செயலாளரான எஸ்​.லக் ஷ்மி நாரயணா தன் மனைவி சரஸ்வ​தி​யுடன் கடந்த ஏப்ரல் 2024இல் அயோத்​திக்கு வந்​துள்ளார். அப்போது தங்கமுலாம் பூசப்பட்ட 522 பக்க ராமச்சந்​திர​மானஸ் புனித நூலை (147 கிலோ) கோயிலுக்காக சம்பத்ராயிடம் அளித்துள்ளார். கருவறையில்வைப்ப​தாகக் கூறப்பட்ட நூலை காணவில்லை என்றும், இதற்கான ரசீது அளிக்கவில்லை என்​றும் புகார் தெரிவித்துள்ளார்.

ராமன் கோயிலில் வி.அய்.பி. தரிசனம் பெயரில் ரூ.30,000 வரை
வசூலித்தது அம்பலம்!

அயோத்​தி​யில் ராமன் கோயில் திறக்​கப்பட்ட பிறகு தின​மும் ஆயிரக்கணக்​கான பக்​தர்கள் வந்து செல்​கின்​றனர். வி.அய்.பி.க்கள், பணக்காரர்கள் அயோத்திக்கு வந்து ஒரே நாளில் தரிசனம் முடித்து திரும்ப விரும்​பு​கின்றனர். அத்துடன் ராமன் சிலைக்கு அரு​கில் நின்று தரிசிக்க நினைக்கின்றனர். இந்நிலையில், அவர்​கள் தங்கும் ஓட்​டல் நிருவாகிகளே வி.அய்.பி. தரிசனத்​துக்கு ஏற்பாடு செய்​துள்ளனர். இதற்​காக ரூ.30,000 வரை வசூலித்துள்ளனர்.

ராமன் கோயில் ஊழியர்​கள் சிலர் மூலம் ‘வி.அய்.பி.’ அனு​மதி சீட்டு வாங்கி அவற்றை ஓட்டல் நிருவாகிகள் பிரித்துக் கொண்டுள்ளனர். இதன்​ மூலம் மாதந்தோறும் லட்சக்கணக்​கான பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. ராமன் கோயில் காணிக்கைத் திருட்​டில் முக்​கியக் குற்றவாளியான ராம்ஷங்​கர் யாதவ் (எ) டின்னு யாதவுக்​கும் இதில் தொடர்பு இருந்துள்​ளது.

இச்​சூழலில் சிறீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் முக்​கிய நிருவாகி​களான சம்பக்ராய், அனில்மிஸ்​ரா, கோபால்ராவ் மீது அயோத்தி வழக்​குரைஞர்​கள் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்திருந்​தனர். இதற்கான புகாரை அயோத்தி நகரக்​ காவல்​ நிலை​யத்​தில்​ அளித்துள்ளனர்​.

அயோத்தி ராமன் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் அறக்கட்டளை நிருவாகி சம்பக்ராயிடம் 3 மணி நேரம் விசாரணை

அயோத்தி ராமன் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறக்கட்டளை நிருவாகிகள் சம்பக்ராய், அனில்மிஸ்​ரா, கோபால்ராவ் ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்​தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அயோத்தி காவல் துறையினர், அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பக்ராயிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்​தினர். அப்​போது, “காணிக்கைத் திருட்டு விவ​காரத்​தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. டின்னு (எ) ராம்ஷங்கர் யாதவ் இப்​படி செய்​வார் என எதிர்​பார்க்கவில்லை. இந்தத் தகவல் கிடைத்தவுடன் நான்​தான் உடனடி​யாக நடவடிக்கை எடுக்க உ.பி. அரசுக்கு கடிதம் எழு​தினேன். எனினும், காணிக்கை விஷ​யத்தில் முறை​கேடு நடக்காமல் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டியது எனது பொறுப்பு” என்று சம்பத் தெரி​வித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், ராமன் கோயில் சிசிடிவி கேமராக்களைக் கண்காணிக்க அர்​ஜுன் தேவ் என்ற அதி​காரியை உ.பி. அரசு நியமித்திருந்தது. இவர் ராமன் கோயில் கட்டுவதற்கு முன்​பாக 2009 முதல் ரேடியோ பராமரிப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரை பணி​மாற்றம் செய்யவிடாமல் அறக்கட்​டளை தடுத்​துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், காணிக்கைத் திருட்டுப் புகார் எழுந்தவுடன் சில நாட்களுக்கு முன்பு லக்னோவுக்​குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒரு விழிப்பூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘‘பா.ஜ.க. வெகுமக்களிடம் சேர்வதற்கான அரசியல் அஜெண்டாவாகக் கையில் எடுத்தது அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோயில் கட்டவேண்டும் என்ற விவகாரத்தைத் தான்! ஏறத்தாழ 35 ஆண்டுகளில் அதற்கான போராட்டங்கள், கலவரங்கள், ர(த்)த யாத்திரைகள், பாபர் மசூதி இடிப்பு, இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலத்தை ராமன் கோயில் கட்ட அனுமதித்த தீர்ப்பு, இவற்றையெல்லாம் கடந்து 2024 தேர்தல் வரைக்கும் ஜவ்வாக அதனை இழுத்துக் கொண்டு வந்து, அவ்வாண்டு ஜனவரியில் அதனைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

வளாகத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பணியாளர்கள் மீது போதுமான சோதனைகள் இல்லாதது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பதை விசாரணைக் குழு கண்டறிந்தது. தொழிலாளர்கள் வளாகத்திற்குள் கொண்டு செல்லும் அல்லது வெளியே கொண்டு வரும் பொருட்களைச் சரிபார்க்க வலுவான வழிமுறை எதுவும் இல்லை என்றும், இது நன்கொடைகளைக் கையாளுவதில் கண்காணிப்புக் குறைபாடு குறித்த கவலைகளை எழுப்புவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. நன்கொடைகளை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அதற்கெனத் தனி சீருடை, ஆடை விதிமுறைகள் இருந்தபோதிலும், அவர்கள் பெரும்பாலும் சாதாரண உடைகளிலேயே அறக்கட்டளை அலுவலகத்திற்குள் காணப்பட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்கள்!

மேலும், சிசிடிவி கண்காணிப்பு குறித்தும் விசாரணைக் குழு கவலைகளை எழுப்பியது. கண்காணிப்புக் கேமராக்களின் பார்வையில் படாத இடங்கள் (blind spots) மற்றும் போதிய கண்காணிப்பு இல்லாததால், தொழிலாளர்கள் திருட்டில் ஈடுபடுவதற்கு முன் கேமராக்களுக்கு முன்னால் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது என்றும், இது கோயிலின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்துவதாகவும் அவ்வட்டாரங்கள் குற்றம் சாட்டின.

A முதல் Z வரை மோடி ஆட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்திருக்கின்றன
என்று முன்பு ஓர் இணையதளத்தில் (www.corruptmodi.com) முழுப்பட்டியல் வெளியிட்டிருந்தார்களே! அந்த இணைய தளத்தை எல்லாம் முடக்கிவிட்டோம், மற்ற ஊடகங்களை வாயடைத்துவிட்டோம் என்ற தைரியத்தில் பேசுகிறார்களோ? அந்த விவரங்கள் எல்லாம் அழிந்து விடவில்லை. இன்னும் பல ஊடகங்கள் வாயிலாகப் பாதுகாக்கப்பட்டே உள்ளன. மக்கள் விழிப்புப் பெற்றே தீருவார்கள்! ஊழல் கூட்டம் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சேலத்த்தில் 04.07.2026 அன்று கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவிலும், 
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் அரசியல் முதலீடாக, பாபர் மசூதியை இடித்து, அயோத்தியில் அதே இடத்தில் கட்டப்பட்ட ராமன் கோயில் உண்டியல் வசூலில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் இது குறித்துப் பேச மறுத்தவர்கள், பின்னர் உத்திரப்பிரதேச அரசின் மூலமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர். இது போதாது. நடந்திருக்கும் முறைகேட்டில் உள்ள பெரும் தொடர்புகளை மூடி மறைக்கும் ஆபத்து இருப்பதாக எழும் சந்தேகத்தைப் போக்கும்வகையில், இவ்வழக்கு சி.பி.அய் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். எந்த நிர்பந்தங்களுக்கும் ஆட்படாமல் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று இப் பொதுக் குழு வலியுறுத்துகிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம், பக்தியை, மதத்தை, அவைசார்ந்த உணர்வுகளை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவது என்பது அவர்களின் அடிப்படைக் கொள்கை.

பெரும்பான்மை மக்கள் பக்தி உடையவர்களாக இருக்கிறார்கள் என்பதால், அவர்களைத் தங்கள் வயப்படுத்த பக்தியை, மதத்தைக் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். வடமாநிலங்களைப் பொறுத்தவரை ராமன் மீது பெருமளவு மக்கள் பக்தியுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதால், அதைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெறத் திட்டம் வகுத்துதான் ராமஜென்மபூமி என்ற சிக்கலை உருவாக்கினார்கள். ராமன் அயோத்தியில்தான் பிறந்தான் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாதநிலையில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தார் என்று ஒரு புனைவை உருவாக்கி, அங்குதான் ராமனுக்குக் கோயில் கட்டவேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தனர். அதைச் சாதித்தும் காட்டினர். அதற்கு அவர்கள் எல்லாவிதமான வன்முறைகளையும் பின்பற்றினர். நீதிமன்றமும் அதற்குத் துணை நின்றது. இன்றைக்கு ஒன்றிய அரசு
பி.ஜே.பி.யின் ஆளுகையில் இருப்பதற்கு முதன்மைக் காரணம் ராமஜென்மபூமி போராட்டங்களும், ராமருக்குக் கோயில் கட்டியதும்தான்.

ஆக, பி.ஜே.பிக்கு கடவுள், மதம் என்பதெல்லாம் அவர்கள் இலக்குகளை அடையப்பயன்படுத்தும் கருவிகள். ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களை உருவாக்கி அதைக் கொண்டு தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். சில நோக்கங்களை அந்த வழியில் நிறைவேற்றவும் உள்ளனர்.

அடுத்து, கோயில்களைக் கொள்ளைக் கூடாரங்களாக ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.  இவர்கள் பெரிதும் மதிக்கும் அயோத்தி ராமன் கோயிலிலேயே இந்தச் செயலைப் பெருமளவில் செய்துள்ளனர். உலக அளவில் பேசப்படும் அளவிற்கு அயோத்தி ராமன் கோயில் ஊழல் நடைபெற்றுள்ள நிலையிலும், அதைப்பற்றி பிரதமர் உட்பட
பி.ஜே.பி.யின் முக்கியத் தலைவர்கள் கருத்துக்கூறவோ, கண்டனம் தெரிவிக்கவோ இல்லையென்பது, அவர்களின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

எனவே, பக்தர்கள், குறிப்பாக ராமபக்தர்கள் பி.ஜே.பி.யிடம் மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்போடும் இருக்கவேண்டியது கட்டாயம். ராமன் மீதுள்ள பக்தியால் ஏராளமான பணத்
தைச்  சாதாரண மக்கள் அள்ளிக் கொடுக்கின்றனர். ஆனால், அந்தப் பணம் எப்படியெல்
லாம் கொள்ளையடிக்கப்படுகிறது, தனிப்பட்டவர்களின் வளர்ச்சிக்கு மடை மாற்றப்படு
கிறது என்பதை இந்த நிகழ்வும் தெளிவாகக் காட்டுவதால், பக்தியின் பெயரால் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதைத் தவிர்த்து, விழிப்போடும், எச்சரிக்கையோடும் இவர்
களிடம் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும். அதுதான் நாட்டுக்கும், நாட்டுமக்களின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் உகந்தது ஆகும். அயோத்தி நிகழ்வுகள் அதையே அனைவருக்கும் உணர்த்துகிறது.      |