Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனிதநேய நோக்கில்தந்தை பெரியாரின்பெண்ணியம் !-

முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

மூடநம்பிக்கை தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு அவர் ஒரு விருப்பு வெறுப்பற்ற ‘பவுதிகத் தராசு’ என்பதை எடுத்துச் சொல்கிறது.

இத்தனைப் பேரின்

மொத்தச் சரக்கும் அவரே!

வழக்காடும் வன்மையில் தமிழ்நாட்டு வால்டேர்,

பொருளியல் நீதி வகுப்பதில் புலமைசேர் மார்க்ஸ்.

கருத்து வண்ணத்தில் உருக்கு கன்பூசியஸ்.

மறுத்துரை கூறலில் மதிப்புறு இங்கர்சால்

பழைமையைச் சாடலில் அறிஞர் பெர்னாட்ஷா

புதுமைகள் சேர்த்தலில் புயலெனும் ரூசோ.

இத்தனைப் பேரின் மொத்தச் சரக்கவர்.

வைதீகர்க்கெல்லாம் ஒற்றைத் தலைவலி மெய்யறிவாளர்க்கோ மிதந்த பூங்காற்று விருப்பு வெறுப்பற்ற பவுதிகத் தராசு.

மானுடச் சமத்துவம் என்ற விருப்பே தந்தை பெரியாரைச் சாதனைத் தலைவராய் செதுக்கியது. காலத்தின் நெருக்கடி பிரசவித்த பெம்மான் பெரியார் மட்டும் பிறவாது
போயிருந்தால் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றம் கானல் நீரே. பல்வேறு நூற்றாண்டுகளை அந்த நூற்றாண்டுகளில் தோன்றிய சிந்தனை
யாளர்களின் சிந்தனைகளை உள்ளடக்கியவர் பெரியார் என்பது பேரறிஞர் அண்ணாவின் கணிப்பு. ‘‘பெரியார் தனிமனிதரல்லர் – அவர் ஒரு வரலாறு. ஒரு காலகட்டம் திருப்பம்’’ என்றும் புகழ்ந்தார் அண்ணா.

உலக அனுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்று பெரியாரைப் போற்றினார் கல்கி. ‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்றார் புரட்சிக்கவிஞர்.

ஒடுக்கப்பட்டோர்
வாழ்வுரிமைப் பெற்றனர்

பாராட்டை எதிர்பார்க்காத ஈரோட்டுப் பாதையின் ஏந்தலான தன்மானத் தந்தை
பெரியார். அனைத்துவித ஒடுக்குமுறைகளிலிருந்தும் மக்களை மீட்டெடுக்கும் பெரும் போரில் ஈடுபட்டார். அவரின் போராட்டத்தின் வெற்றி பெருமிதமான வாழ்க்கையை நம் மக்களுக்குத் தந்தது. அறிவில் திருவுண்டானது; ஆற்றலில் புதுவேகம் பிறந்தது; அடிமைத்தளை அகன்றது; எட்டா நிலையிலிருந்த வேலை வாய்ப்புகளைப் பெற்றனர் மக்கள். காரணம் கிட்டாக் கனியாயிருந்த கல்வி கிடைத்ததால்! சமூகநீதி மறுக்கப்பட்டுக் கிடந்த மக்களுக்கு அந்நீதி கிடைக்கச் செய்தவர் பெரியாரே! ஒடுக்கப்பட்ட இடத்தில் எல்லாம் பெரியார் நுழைந்தார்; உடைந்து நொறுங்கின ஆதிக்கக் கதவுகள்! பெரியாரின் எண்ணம் ஈடேறியது – ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையால்!

ஒடுக்குமுறைகளிலேயே கீழான – மோசமான ஒடுக்குமுறை பெண்கள் மீதான ஒடுக்குமுறையே! ஜாதீய ஒடுக்குமுறைமைக்கும் கொடுமையானது பெண்ணிய ஒடுக்குமுறை. அதனால் தான், நாட்டின் விடுதலை என்பது கூட பெண் விடுதலைக்குப் பிறகே என்பதற்கொப்ப புரட்சிக்கவிஞர் ‘‘பெண்ணடிமை தீருமட்டும் – பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே’’ என்றார்.

‘‘பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல் ஜாதிக்காரர்கள், கீழ் ஜாதிக் காரர்களை நடத்துவதைவிட, பணக்காரர்-ஏழையை நடத்துவதைவிட, எஜமான்-அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும். அவர்கள் எல்லாரும் இருவருக்கும் சம்பந்தம் ஏற்படும் சமயங்களில் மாத்திரம் தான் அடிமையாக, நடத்துகிறார்கள். ஆனால், ஆண்களோ பெண்களைப் பிறப்பு முதல் இறப்பு வரை அடிமையாகவும்,கொடுமையாகவும் நடத்துகிறார்கள்’’ என்று ஆணாதிக்க மனோ பாவத்தையும், பெண்ணடிமையின் நீட்சியையும் பெரியார் குறிப்பிட்டார்.

‘‘சிறுவயதில் தந்தைக்கும், திருமணமானவுடன் கணவனுக்கும், வயது முதிர்ந்த நிலையில் மகனுக்கும் கட்டுப்பட்டவளாக பெண் இருக்க வேண்டும் என்பது கொடுமை அல்லவா?’’ என்றார் பெரியார்.

‘‘பெண்களை அடிமைத்தளையிலிருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சமபொறுப்பும் ஏற்படும்படிச் செய்து விட்டோமேயானால் மனிதச் சமூகத்தின் நன்மைக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் பெரும்பாகத்தையும் செய்தவர்கள் ஆவோம்’’ என்று சமுதாயப் பொறுப்பினை அறிவுறுத்தி
யவர் பெரியார்.

ஆண்மை – தாய்மை

‘‘பெண்கள் வியாதியஸ்தர்களாய் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்தக் கர்ப்பம் என்பதே மூலகாரணமாக இருக்கின்றது…. பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று பெண்கள் கருதுவதால் சுதந்திரமும், வீரமும் இன்றி அடிமையானதுமான காரியங்களுக்கு ஆளாகிறார்கள்….

“ஆண்மையின் கொடுமையிலிருந்து மட்டுமல்லாது பெண்கள் தாய்மையின் கொடுமை
யிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும்’’ என்றதோடு, ‘‘ஒரு மனிதன் தான் பிள்ளைக்குட்டிக் காரனாய் இருப்பதனாலேயே தான் யோக்கி யமாகவும், சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப்பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அநாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது’’ என்றும் பிள்ளைப்பேறு என்பது பற்றிய தமது மதிப்பீட்டை வெளிப்படையாகப் பகன்றவர் பெரியார்.

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!

‘‘மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்ற பெரியார் ‘‘பெண்கள் கல்வியையும், வேலையையும்தான் தங்கள் அழகாகக் கருதிட வேண்டும்’’ என்றார். ‘‘உலகப் பெண்கள் எல்லோரையும் விட இன்பமாகவும், சுதந்திரமாகவும், முழு வாழ்க்கை வாழுகின்றவர்களாகவும் மாறவேண்டும்’’

‘‘பெண்களின் திருமண வயது உயர்த்தப்படவேண்டும்; வயது அதிகம் ஆக ஆகத்தான் ஒரு
பெண் உளவியல், உணர்ச்சி இயல் அடிப்படையில்திருமணத்தை எதிர்கொள்ளவும் முடியும்’’என்றதுடன், இளம்பெண் திருமணத்தடைச் சட்டத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரமும் அந்தக் காலகட்டத்தில் செய்தவர் பெரியார் என்றார்.

அதிசயம் அவர்!

ஆணாதிக்கச் சமுதாய அமைப்பில் மிகமிக அற்புதமான, காணக்கிடைக்காத அதிசயம் பெரியார். பெரியாரின் சிந்தனையிலும், செயலிலும் மிக உன்னதமானது பெண்ணுரிமைக் கோட்பாடு. தனி வாழ்க்கை வேறு; பொதுவாழ்க்கை வேறு என்று பிரித்துப்பார்க்க முடியாதது பெரியாரின் வாழ்வு. உண்மையும், நேர்மையும், துணிச்சலும் மனிதத்துவமும் நிறைந்த அவரைப் போன்ற பொதுத்தொண்டு புரிந்தோர் அரிதினும் அரிதானவர்களே! உலகில் பெண்ணியச் சிந்தனைக்கும், பெண் விடுதலைக்குமான செயல்பாடுகளுக்கும் முன் மாதிரியாகவும், வேறு எவரையும் ஒப்பிடமுடியாதபடி திகழ்ந்தவரும் பெரியாரே ஆவார். பெண் உரிமைக் காவலர் என்பதன் முழு அடையாளமும் அவரே.

தொலைநோக்கு

புத்துலக தீர்க்கதரிசி அவர். பெண்களுக்கான புதுயுகம் காணப் போராடியவர். அதனால் பெண்ணடிமைச் சாடலில் அவரிடம் சுட்டெரிக்கும் சொற்களைக் காண்கிறோம். தார்மீக கோபம் நிரம்பி வழிந்தது அவரின் வார்த்தைகளில்.

பெண் விடுதலைக்கான தொலைநோக்குச் சிந்தனையில் கர்ப்பத்தடையை அறிமுகம் செய்து வலியுறுத்திய முதல் பெண்ணுரிமைப் போராளி பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பிரச்சாரத்தை இந்த நாட்டில் அரசு தொடங்குவதற்கு முன்பே பெண்கள் கருப்பாதையைச் சாத்திட ஆணையிட்டவர் பெரியார்.

எவரும் கற்பனை செய்துகூட பார்க்காத காலத்திலேயே ஆண் – பெண் சேர்க்கையின்றி பிள்ளை பெறும் காலம் வரும் என்று சோதனைக் குழாய் குழந்தை சிந்தனையை வெளியிட்ட சமூக விஞ்ஞானி பெரியார். அவரின் அன்றைய முன்னறிவிப்பு இன்று நிரூபணமாகி உள்ளதை-வெற்றி பெற்றுள்ளதை நாம் பார்க்கிறோம்.

ஆணாதிக்கச் சூழலும், பழைமைவாதிகளும், புராண – இதிகாச விரும்பிகளும், வேத படைப்பாளர்களும், ஆரவார சுகபோகிகளும் பெண்களின் இருப்பை மறுத்தவர்கள்தாம். பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய கடமையே என்று உறுதிப்படுத்தினர். பெண்களின் கோபத்தைக்கூட ஊடல் என்று உருக்குலைத்தார்கள். பெண்களையும், பெண்களின் உறுப்புகளையும் அழகின் அடையாளம் என்றார்கள்.

ஜாதிபேத சமுதாய அமைப்பு கெட்டிப் படுத்தப்பட்ட இந்தியச் சமுதாயத்தில் ஆண்கள் எஜமானர்கள். பெண்களோ எல்லாவிதமான ஆதிக்கச் சமூக அமைப்புக்கும், அடிபணிந்து போன ஆண் அடிமைகளுக்கும் அடிமையாகித் தவித்தார்கள். ஆண்களின் ஆழ்மனதில் பெண்கள் தீனியாகவே திணிக்கப்பட்டார்கள் நமது சமுதாய அமைப்பில்!

மொழிகளையும், நாடுகளையும் கடந்து விரிந்து நின்ற பெண்ணடிமைத்தனம் மானுட
உலகின் அவமானச் சின்னமன்றோ! ஆணாதிக்கத்தால் வாழ்வின் இனிமைகள் எல்லாம் மன உணர்ச்சிகள் எல்லாம் மறுக்கப்பட்டக் கொடுமை – கொடுமையிலும் கொடுமையன்றோ!

‘‘உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண் குலத்தை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். பெண்ணடிமை ஒழிந்த இடமே சமத்துவம், சுதந்திரம் எனும் முளை முளைக்குமிடம்’’ என்று அறிவித்தவர் பெரியார் மட்டுமே! பெண்களுக்கான விடுதலைத் தீர்வாய் – தியாக முத்திரையாய் பெரியார் ஒருவரே திகழ்ந்தார்.

                          (தொடரும்)