Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உயர்வு தந்ததுஎது?-ஆறு. கலைச்செல்வன்

மாசிலாமணி பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வகுப்பாசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“படித்து முடித்தபின் நீ என்ன வேலைக்குப் போக விரும்புகிறாய்?”, என்று ஒவ்வொரு மாணவனாகக் கேட்டார்.

“டாக்டர் ஆக விரும்புகிறேன்”, என்றான் ஒரு மாணவன்.

“பொறியாளர் ஆக விரும்புகிறேன்”, என்றான் மற்றவன்.

“கலெக்டர் ஆவேன்”, என்று உரத்தகுரலில் சொன்னான் வேறொரு மாணவன்.

இப்படி ஒவ்வொரு மாணவனும் ஒரு பணியினைச் சொன்னார்கள்.

மாசிலாமணியின் முறை வந்தது.

“நான் உங்களைப்போல் ஆசிரியராக விரும்புகிறேன்,” என்று பளிச்சென பதில் சொன்னான் மாசிலாமணி.

மாணவர்கள் இவன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தாலும் வகுப்பாசிரியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

“எங்கள் காலத்தில் நாங்கள் எளிமையாக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு வந்துவிட்டோம். ஆனால் இப்போது அப்படியல்ல. ஆசிரியர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றாலும் இப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர ‘நெட்’ எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் வெற்றிபெற வேண்டும்.”

இப்படி வகுப்பாசிரியர் சொல்லிக் கொண்டிருக்கும்போது இரவி என்ற ஒரு மாணவன் எழுந்து,

“நீட் தேர்வு என்றால் என்ன என்பது பற்றி சொல்லுங்க அய்யா’, என்று கேட்டான்.

“நீ தானே மருத்துவராக வரவேண்டுமென விரும்பினாய்! நீ கண்டிப்பாக நீட் தேர்வு பற்றித் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். நேஷனல் எலிஜிபிலிட்டி எண்ட்ரன்ஸ் டெஸ்ட் என்பதின் சுருக்கமே ‘நீட்’ என்பதாகும். இந்தத் தேர்வைத் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இந்தியா முழுமையும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு இத்தேர்வின் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும். 2013ஆம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்பட்டாலும், தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து நீட் தேர்வு இங்கு நடத்தப்படவில்லை. பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் நீட் தேர்வு தமிழ்நாட்டில் செயல்பாட்டுக்கு வந்தது.”

வகுப்பு ஆசிரியர் இவ்வாறு கூறியவுடன் மாணவன் இரவி ஒரு வினா எழுப்பினான்.

“தமிழ்நாடுதான் ‘நீட்’ தேர்வை எதிர்த்ததே. பிறகு எப்படி அய்யா 2017-18இல் அமலுக்கு வந்தது”, எனக் கேட்டான்.

“அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 2016, டிசம்பர் 5ஆம் தேதி அவர் இறந்து விட்டார். அதைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு நீட் தேர்வைக் கொண்டுவந்து விட்டது. ஆனால், நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் ஒவ்வோர் ஆண்டும் நடந்து கொண்டுள்ளது. வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியாகுதல், முறைகேடாக தேர்ச்சி பெறுதல், போன்ற கொடுஞ்செயல்கள் நடைபெற்று வருகிறது.”

“இதற்கு என்னதான் தீர்வு அய்யா?”, என்று கேட்டான் இரவி.

“மக்கள் எழுச்சிதான் இதற்குத் தீர்வு”, என்று சொல்லி முடித்தார் வகுப்பாசிரியர்.

அடுத்த சில ஆண்டுகளில் மாசிலாமணி தான் நினைத்தது போலவே ஆசிரியர் பயிற்சி முடித்து கல்வியியலில் பட்டம் பெற்றுவிட்டான். டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விலும், போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றுவிட்டான். ஆசிரியர் பணியும் கிடைத்துவிட்டது.

அதே நேரத்தில் இலட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகள் தகர்த்தெரியப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பல மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. தேர்வில் முறைகேடு, வினாத்தாள் கசிவு எனப் பலவகைப்பட்ட ஊழல்களுக்கும் பஞ்சமில்லை. ஆயினும், ஆதிக்கச் சக்திகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணாம் நீட் தேர்வை நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.

ஆசிரியர் பணிபெற்ற மாசிலாமணி பணியில் சேரத் தயாரானான். அவன் முதன்முதலாக பணியில் சேர இருக்கும் பள்ளி அமைந்துள்ள ஊர் ஒரு மிகச் சிறிய, போக்குவரத்து வசதி கூட அதிகமில்லாத கிராமம். மாசிலாமணியின் ஊரிலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அந்த ஊர். பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டு கி.மீ. தூரம் நடக்க வேண்டும். அல்லது சிற்றுந்து வரும்வரை காத்திருக்க வேண்டும்.

பணியில் சேர வந்திருந்த மாசிலாமணி குறித்த நேரத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்பதற்காக சிற்றுந்தை எதிர்பார்க்காமல் நடந்து சென்றான்.

ஊரை அடைந்தவுடன் அங்கிருந்தவர்களிடம் பள்ளி இருக்குமிடத்தை விசாரித்தான். தான் பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணியில் சேர உள்ள விவரத்தையும் தெரிவித்தான். அவர்கள் தூரத்தில் உள்ள ஒரு கோயிலைக் காட்டி அதன் எதிரில்தான் பள்ளி உள்ளது என வழிகாட்டினார்கள்.

அந்த இடத்தை நோக்கி நடந்தான் மாசிலாமணி. தோளில் ஒரு பையுடன் நடந்து வரும் அவனைப் பின் தொடர்ந்து சிறுவர்கள் சிலர் வந்தனர். அவர்களுக்கு மாசிலாமணிதான் புதிய கணக்கு ஆசிரியர் என்பது தெரிந்துவிட்டது. சற்றுநேரத்தில் நிறைய பள்ளிச் சிறுவர்கள் மாசிலாமணியைப் பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.

“இவர்தாண்டா நம்ம புதுகணக்கு வாத்தியார்”, என்றான் ஒரு சிறுவன்.

“உனக்கு எப்படிடா தெரியும்?”, என்று அவனிடம் மற்றொரு சிறுவன் கேட்டான்.

“வழிகேட்கும் போது அவரே சொன்னார்”, என்று பதில் சொன்னான் அந்த மாணவன்.

“சார் நம்மை அடிப்பாரோ?”, என்று சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு மாணவன்.

“பார்த்தால் அடிக்கமாட்டார் போல்தான் தோன்றுகிறது”, என்று பதில் சொன்னான் மற்றொரு மாணவன்.

மாசிலாமணி கோயில் அருகே வந்துவிட்டான். கோயிலின்முன் பலர் கூடியிருந்தனர். ஊர்த்தலைவர் காசிலிங்கம் கூட்டத்திற்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பூமாலை இருந்தது.

அனைவரும் மாசிலாமணியின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது மாசிலாமணிக்கு.

“வாங்க சார், வாங்க. நீங்கள் இன்று வேலையில் சேரவருவீர்கள் என்று நினைத்தோம். அதுபோலவே வந்துவிட்டீர்கள் ரொம்பவும் மகிழ்ச்சி. நம்ம ஊர் வழக்கப்படி முதலில் உங்களுக்கு கோயிலில் வரவேற்பு கொடுப்போம். கோயிலில் பூஜை செய்து சாமி கும்பிட்டுவிட்டுத்தான் நீங்கள் பணியில் சேரவேண்டும். அர்ச்சகர் சாமி உங்களுக்குப் பூரணகும்ப மரியாதை செய்வார். உள்ளே வாங்க”, என்று சொல்லியபடியே மாசிலாமணி கழுத்தில் மாலையைப் போட்டார் காசிலிங்கம். கூடியிருந்த பொதுமக்களும் பள்ளிப் பிள்ளைகளும் பலமாக கைத்தட்டினார்கள்.

ஆனால், மாசிலாமணி சற்றே தயங்கி நின்றான். அர்ச்சகர் கையில் பூஜைப் பொருட்களுடன் தயாராக நின்றார். பரிவட்டம் கட்டவும் தயாரானார். மாசிலாமணியின் பிறந்தநாள், நட்சத்திரம் எல்லாம் கேட்டார்.

ஆனால் எதுவும் பேசாமல் மாசிலாமணி தயங்கியதைக் கண்ட ஊர்த்தலைவர் காசிலிங்கம் சற்றே அதிர்ச்சியடைந்தார்.

“ஏன் தம்பி, கோயிலுக்குள் வாங்க”, என்று மீண்டும் அழைத்தார்.

“இல்லை சார், நான் கோயிலுக்குள் வரமாட்டேன். அந்தப் பழக்கம் எனக்கு இல்லை”, என்றான் மாசிலாமணி.

இதைக்கேட்ட ஊர்த்தலைவர், பொதுமக்கள், பள்ளிப் பிள்ளைகள் அனைவருமே அதிர்ச்சியடைந்தனர்.

“ஏன் தம்பி, நீங்க சாமி கும்பிடமாட்டீங்களா?” என வினவினார் காசிலிங்கம்.

“ஆமாம் அய்யா. நான் சாமி கும்பிட மாட்டேன். கோயிலுக்குள்ளும் வரமாட்டேன். அது தேவையில்லாத வேலை.”

இவ்வாறு மாசிலாமணி சொன்னதும் அங்கிருந்த, குறிப்பாகப் பெண்கள், அவனை வியப்புடன் பார்த்தனர்.

“சரி, இந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொள்ளுங்கள்”, என்று விபூதித் தட்டை நீட்டச் செய்தார் காசிலிங்கம்.

அதையும் மாசிலாமணி கண்டு கொள்ளவில்லை.

“தம்பி, நீங்க ஏன் கோயிலுக்குள் வர மறுக்குறீர்கள்? ஆண்டவன் புண்ணியத்தில்தானே நீங்கள் படித்து வேலைக்கும் வந்திருக்கிறீர்கள்?” என்றார் காசிலிங்கம்.

“இல்லை அய்யா, நான் மிகவும் எளியகுடும்பத்தில் பிறந்தவன். என் பெற்றோர் என்னை மிகவும் கடினப்பட்டு படிக்க வைத்தார்கள். எனது படிப்பு, வேலை மட்டுமல்லாது எனது பகுத்தறிவு வளர்வதற்கும் காரணம் பெரியாரும் அவர் பெற்றுத்தந்த இடஒதுக்கீடும்தான். கடவுளுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை”.

இவ்வாறு மாசிலாமணி சொன்னதும் அனைவரும் அவனை மேலும் வியப்புடன் பார்த்து, அவன் தொடர்ந்து பேசுவதைக் கேட்க ஆவல் கொண்டனர்.

“ஒரு காலத்தில் நம்போன்ற எளிய பிரிவினரின் கல்வி மறுக்கப்பட்டது. உயர்ஜாதியினருக்கு மட்டுமே கல்வி அளிக்கப்பட்டது. சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர் கல்வி கற்பது மதத்திற்கு எதிரானது எனக் கூறப்பட்டது. 1800ஆம் ஆண்டுகளில்தான் ஆங்கிலேயர்கள், கிருத்துவப் பாதிரியார்கள் வந்தபிறகு தான், நமக்கு கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் நோக்கம் வேறாக இருந்தாலும் நமக்கு கல்வி கிடைத்தது. பெண்களுக்கும் கல்வி கிடைத்தது. உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? சென்னையில் உள்ள, தற்போது மாநிலக் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரியில் ஒரு காலத்தில் உயர்ஜாதி மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். நீதிக்கட்சியால் 1920ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் காரணமாகவே எளிய வகுப்பு மாணவர்கள் கல்லூரியில் நுழைய முடிந்தது. இதற்கெல்லாம் முக்கியமான காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவரும் தந்தை பெரியார்தான்.

“கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்”, என்றார் பெரியார். அவர் நமக்கு வாங்கிக் கொடுத்த இடஒதுக்கீட்டால்தான் நான் படித்தேன். இப்போது பணியிலும் சேர்கிறேன். கடவுள் சக்தியால் அல்ல. அப்படி ஒரு சக்தியும் கிடையாது. மாறாக நம்மைப் படிக்கக்கூடாது என்று தடுத்தது இந்தச் சாமியும் மதமும்தான். நீங்கள் கொடுக்கும் இந்த மதக்குறியான விபூதியை நான் விருப்பமோடு பூசிக்கொண்டால் நான் மதத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள்படும். அதனால் இந்த மதத்தின்படி நான் சூத்திரனாகக் கருதப்படுவேன். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று மனுசாஸ்திரத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நமக்குத் தேவையா?”

அவன் பேசியதைக்கேட்ட கூடியிருந்த அனைவரும் பெரும் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

மேலும் மாசிலாமணி.

“இந்தப் பள்ளியில் இதுவரை எத்தனை மாணவர்கள் கணக்கில் நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்? எத்தனை இளைஞர்கள் அரசுப்பணிக்குச் சென்றிருக்கிறார்கள்?” என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டான்.

இந்தக் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

“அதை நான் செய்து காட்டுகிறேன். அதுதான் எளிய மக்களுக்குக் கல்வியும், இடஒதுக்கீடும் பெற்றுத்தந்த தந்தை பெரியாருக்கும், 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய பெரும்பணியாற்றிய ஆசிரியர் அய்யா வீரமணிக்கும் நான் செலுத்தும் நன்றிக் கடன்”, என்று கூறியபடியே பள்ளியை நோக்கி நடந்தான் மாசிலாமணி.

உண்மையை உணர்ந்த ஊர்த்தலைவரும், பொதுமக்களும் மாசிலாமணியைப் பின் தொடர்ந்தனர்.