Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எரிபொருள்பற்றாக்குறையும்,மிதிவண்டியும்-முனைவர் வா.நேரு

அறிவியல் முன்னேற்றத்தால் பயணம் செய்வதற்கான வசதிகள் கூடியுள்ளன. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், இரயில், விமானம் என்று பயணம் செய்யும் வாகனங்கள் பெருகியுள்ளன. ஆனால் இன்றும் பலருக்கு விமானப் பயணம் என்பது கனவாகவே உள்ளது. அறிவியல் முன்னேற்றத்தால் கிடைத்தப் பயண வசதி என்பது கையில் உள்ள பணத்தோடும்,  அவர்களின் தேவையோடும் இணைந்து உள்ளது. தேவை இருந்தாலும் பயணம் செய்யப் பணம் இல்லையென்றால் பயணம் செய்ய இயலாது.

பயணம் செய்வது பணத்தோடு இணைந்து உள்ளது போலவே பயணம் செய்யும் வாகனங்கள், அவை பயன்படுத்தும் எரிபொருள்களோடு இணைந்து உள்ளன. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் எல்லா இடத்திலும் உலகில் கிடைப்பதில்லை. பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் பெருமளவில் இருக்கும் நாடுகளே இன்றைக்கு உலகின் பணக்கார நாடுகளாக இருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா போரின் காரணமாக உலக அளவில் எரிபொருளுக்கானத் தட்டுப்பாடு மிகப்பெரிய அளவிற்கு இருந்தது. இப்போது அது மிதப்பட்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தியாகத்தான் உலகிற்கு எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும்.

எரிபொருள் இல்லாமல் இயங்கும் பயண வண்டிகள் இன்றைய தேவையாக இருக்கிறது.எரிபொருளுக்கு மாற்றாகச் சூரிய சக்தியால் இயங்கும் வாகனங்கள், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் போன்றவை மாற்றாகச் சொல்லப்படுகின்றன. மின்சாரப் பற்றாக்குறை ஏற்கனவே தமிழ்நாடு போன்ற இடங்களில் பலவிதமான பாதிப்புகளைக் கொடுக்கும் நிலையில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்கள் பெருமளவில் பெருகினால், மின்சாரம் இன்மையும் பெரும் பாதிப்பாக மாறக்கூடும். மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களில் பயணிப்பது பெரும் பிரச்சனையாக மாறக்கூடும். சூரிய சக்தியினால் இயங்கும் வாகனங்களுக்குச் செலவாகும் பணமும் மிக அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

நமது பயணத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நெடுந்தூரம் செல்லும் பயணம்.பல நூறு மைல்கள் கடந்து போகவேண்டிய பயணம். இதற்குப் பொதுப்போக்குவரத்து வாகனங்களைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.. பொதுப்போக்குவரத்தான பேருந்து, இரயில் போன்றவற்றைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். தாராளமாக இடம் கிடைக்கும் வகையில் பேருந்து, இரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அடுத்ததாகத் தனிப்பட்டவர்கள் உபயோகப்படுத்தும் தனி வண்டி வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தலாம்.  இருவர் இருக்கும் வீட்டில் மூன்று கார்கள்,  நாலு இருசக்கர வாகனங்கள் நிற்கின்றன. இதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம்.

மதுரை போன்ற நகரங்களில் அரைக் கிலோமீட்டர், ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்குக் கூட எரிபொருள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களைத் தான் பயன்படுத்து
கிறோம். அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தலாம். மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வைப் பெரும் அளவில் கொண்டு வரவேண்டும்.

தற்போது 50, 60 வயதுகளில் இருப்பவர்களின் இளமைக்காலம் முழுவதும் பயணம் என்பது மிதிவண்டிகளில்தான் அமைந்தது. 10,20 கி.மீ.தூரத்திற்கு எல்லாம் மிதிவண்டிகளில் செல்வது, வருவது எல்லாம் இயல்பாக இருந்தது. தினந்தோறும் மிதிவண்டியில் செல்வது, வருவது எல்லாம் மிகச்சிறந்த உடற்பயிற்சிகளாகவும் அமைந்தது. உடல் எடை எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. கடந்த 20,30 ஆண்டுகளில் எல்லாம் மாறிவிட்டது.மிதிவண்டிகளின் பயன்பாடு என்பது மிகவும் குறைந்துள்ளது.

இன்றைக்கு மிதிவண்டி என்பது வீட்டிற்குள் வைத்து உடற்பயிற்சிக்காக ஓட்டப்படும் ஒரு கருவி என்ற அளவில் சுருங்கி விட்டது.மிதிவண்டியைப் பயன்படுத்துவது குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு வேண்டும். மிதிவண்டி ஓட்டுவதால் பெட்ரோல், டீசலுக்குச் செலவழிக்கும் பணம் மீதமாகும். சுற்றுச்சூழலுக்குப் புகையால் ஏற்படும் ஆபத்துக் குறையும். வாகனப் பராமரிப்புக்கென்று வீட்டில் ஒதுக்கும் பணச்செலவு குறையும்.

ஆனால், மிதிவண்டியைப் பெருமளவில் பயன்படுத்தும்போது, அதற்கெனத் தனியாகப் பாதை வேண்டும். மதுரை போன்ற இடங்களில் மிதிவண்டியில் செல்வது பல நேரங்களில் ஆபத்தானப் பயணமாக மாறிவிடுகிறது. ஒரே பாதையில் விரைந்து விரைந்து செல்லும் கார்களும், இருசக்கர வாகனங்களும் மிதிவண்டியில் செல்பவர்களைப் பயமுறுத்துகின்றன.  விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்று என்னவென்றால், மிதிவண்டிகளுக்கு எனத் தனிப்பாதை அமைக்கவேண்டும்.நடைபாதை தனியாக இருப்பதுபோலப் பொதுப் பாதையிலேயே மிதிவண்டிகளுக்கு எனத் தனியாகப் பாதை அமைக்க வேண்டும்.

மிதிவண்டிப் பயன்பாடு,விழிப்புணர்வு என்று சொன்னால் பலரும் சுட்டிக்காட்டும் நாடு நெதர்லாந்து. நெதர்லாந்து  நாட்டின் மக்கள்தொகை ஒரு கோடியே 80 இலட்சம்.ஆனால் அந்த நாட்டில் உள்ள மிதிவண்டிகளின் எண்ணிக்கை இரண்டு கோடியே 40 இலட்சம் என்று குறிப்பிடுகின்றனர். மிதிவண்டிப் பயன்பாடு என்பது ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தால் அந்த நாட்டில் கட்டப்பட்டது. 1970களில் பெரும் அளவில் நடந்த கார் மற்றும் இருசக்கர வாகன விபத்துகளால் குழந்தைகள் பலர் இறந்தனர். மக்கள் பெருமளவில் ஒன்று கூடி ‘குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடு‘ என்று அரசாங்கத்திற்கு எதிராகப் போராடினர். அதன் விளைவாகக் கார், பைக் நிறுத்துமிடங்களுக்குப் பதிலாகப் பெரும் அளவிலான மிதிவண்டி  நிறுத்துமிடங்களை அரசாங்கமே நிறுவியது. மக்களும் பெரும் அளவில் மிதிவண்டிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்று அவர்களின் வாகனப் போக்குவரத்தில் 25 சதவீதம் மிதிவண்டிப் பயணமே என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

அதுமட்டுமல்ல, இப்போது நடைபெற்ற ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போர் போலவே 1970களில் ஒரு போர் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் நடைபெற்றுள்ளது. அந்தப் போரினால் எரிபொருள் கிடைக்காமல் மிகவும் துன்பப்பட்ட நாடுகளில் ஒன்று நெதர்லாந்து. .அப்போதுதான் கார்களுக்குப் பதிலாக வேறு மாற்று வழி வாகனப் போக்குவரத்தைப் பற்றி யோசித்திருக்கிறார்கள். முடிவு,  மிதிவண்டி பயன்பாட்டைப் பெருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தியிருக்கிறது.

நாம் சென்னையில் 40 கி.மீ.க்கு இருசக்கர வாகனத்தில் சென்றால்  நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போடவேண்டும். ஆனால் நெதர்லாந்தில் நீங்கள் 1 கி.மீ.க்கு மிதிவண்டியில் சென்றால் அரசாங்கம் உங்களுக்கு 23 செண்ட் பணம் கொடுக்கும். அதாவது  நாம் 10 கி.மீ.  மிதிவண்டியில் சென்றால் அரசாங்கம் 10 ரூபாய் நமக்குக் கொடுக்கும். மிதிவண்டி வாங்கினால் அந்த நாட்டில் வரி கட்டவேண்டியதில்லை.வரிவிலக்கு உண்டு.

அரசாங்கம் மற்றும் தனியார்  நிறுவனங்களில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மிதிவண்டியில் வந்தால் அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் அருகிலும் மிதிவண்டி பழுதானால் அதைச் சரி செய்யும் கடைகள் இருக்கின்றன.மிதிவண்டியில் வரும் ஊழியரை அவரது மேலாளர் பாராட்டுகின்றார், வரவேற்கின்றார் மிதிவண்டிக்கென்று தனியான பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் மிதிவண்டிகள் மட்டுமே செல்ல முடியும். பொதுப்பாதையில் மிதிவண்டிகள் கடந்தால் அதற்கு எப்படி வழிகொடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டுநருக்கான பயிற்சியின் போதே கற்றுக் கொடுக்கிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கு நெதர்லாந்தில் எப்படி மிதிவண்டிப் பயணக் கலாச்சாரம் இருக்கிறது என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்கள். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்களை அங்கு ஓட்டச் சொல்கிறார்கள்.

நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாம் நகரம் உலகின் மிதிவண்டித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.ஆம்ஸ்டர்டாம் நகரில் 40 சதவீதப் பயணம் மிதிவண்டிப்பயணமே. மொத்த இருசக்கர வாகனப் பாதையின் நீளம் 767 கி.மீ. அதில் மிதிவண்டிக்களுக்கு மட்டும் எனத் தனியாக இருக்கும் பாதையின் நீளம் 515 கி.மீ. 68 சதவீதம் பேர் வேலைக்குப் போக, வர மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் இருப்பவர்கள் மட்டும், ஒரு நாளைக்கு  6,65,000 முறை மிதிவண்டியில் செல்லுகின்றனர். அவர்கள் நகருக்குள் மிதிவண்டியால் கடக்கும் தூரம் ஒரு நாளைக்கு 20 இலட்சம் கி.மீ. தூரம். பூமியின்  சுற்றளவு போல 50 மடங்கு தூரம் இது.

ஆம்ஸ்டர்டாம் நகருக்கு வருபவர்கள் தனியாக இருக்கும் மிதிவண்டிப் பாதையைப் பார்த்து வியக்கிறார்கள். மிதிவண்டிகள் நிறுத்துவதற்கெனப் பல இடங்கள் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருக்கின்றன.  ஒவ்வொரு நிறுத்துமிடத்திலும் 10,000க்கு மேற்பட்ட மிதிவண்டிகளை நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கின்றன. இணையத்தில் பல செய்திகள் நெதர்லாந்தின் மிதிவண்டிக் கலாச்சாரம் பற்றி இருக்கின்றன.(https://www.bbc.com/news/magazine-23587916)

ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் பல நிறுவனங்கள் மிதிவண்டிகளை வாடகைக்கு விடுகின்றன. மதுரையில் ஒரு காலத்தில் தெருவுக்குத் தெரு மிதிவண்டிகளை வாடகைக்கு விடும் கடைகள் இருந்தன. இப்போது மிதிவண்டிகளை வாடகைக்கு விடும் கடைகளே மதுரையில் நான் அறிந்த வரையில் இல்லை.

கார்களைப் பயன்படுத்துபவர்களின் நன்மைகளை முன்னிட்டே நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை எல்லாம் போடப்படுகின்றன.எத்தனை வழிச்சாலைகள் போட்டாலும் நடைபாதையும், மிதிவண்டிப் பாதையும் இணைத்து, தனித்துப்போடுமாறு திட்டங்களை அமைக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு  நாட்டில் வாழும் எல்லோருக்குமான சாலைகளாக இருக்க முடியும்.

மீண்டும் மிதிவண்டிப் பயன்பாட்டை ஒரு பண்பாட்டுப் புரட்சி போலக் கொண்டு
வரவேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் மிதிவண்டியில் சென்று வருவது ஊக்குவிக்கப்படவேண்டும். அதற்கென மிதிவண்டிகளை வாடகைக்கு விடும் கடைகள் அமைக்கப்படவேண்டும். மிதிவண்டி விற்பனைக்கு இருக்கும் ஜி.எஸ்.டி. வரிகள் நீக்கப்பட வேண்டும்.

திராவிட இயக்க ஆட்சிகளில் +1, +2 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டில் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வருவதற்கு ஊக்கப்படுத்தப்பட்டனர்.அந்தத் திட்டங்கள் தொடர வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் மிதிவண்டிக்கெனத் தனிப்பாதைகள் அமைக்கப்படவேண்டும்.பெண்கள், ஆண்கள், மாணவர்கள், மாணவிகள் என அனைவரும் மிதிவண்டியில் செல்வதற்கு விருப்பம் ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன்மூலம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒரு போக்குவரத்துக் கருவியாக மிதிவண்டி ஒவ்வொருவராலும் கையாளப்பட வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பிரச்சாரமாக நாம் இதனை முன்னெடுக்க வேண்டும்.