தந்தை பெரியார் ஒரு பிறவி நாத்திகர் – பிறவிப் புரட்சியாளர் – பிறவி மனிதாபிமானி என்ற சிறப்புக்குரிய தனித்துவம் படைத்தவர்.
பெரியார் ஒரு புரட்சியாளர் என்பதைவிட ஒரு முழுப்புரட்சியாளர் என்பதே சரியான கணிப்பாகும் .
பலர் புரட்சிகரமானக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், முழுமையாக அதன்படி வாழ்ந்ததில்லை. பலர் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள், நேரடியாக மக்களைத் தேடிச் சென்று பரப்பிடவில்லை. சிலர் தங்கள் கருத்துகளை நேரடியாக மக்களிடம் பரப்புரை செய்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் அந்த கருத்துகளை பரப்புவதற்கு யாரும் இல்லை. ஆனால், பெரியார் ஒருவர் தான் சுயமாகச் சிந்தித்து புரட்சிகரக் கருத்துகளைக் கூறி, அதன்படி வாழ்ந்து, தாமே மக்களிடம் அதனைப் பிரச்சாரம் செய்து, அதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்கி தனக்குப் பிறகும் அப்பணியைச் செவ்வனே செய்திட உரிய அனைத்து கட்டமைப்புகளை உருவாக்கியதோடு, தன் வாழ்நாளிலேயே தனது கொள்கைகள் பெற்ற வெற்றியைக் கண்டு மகிழ்ந்தவராக பாராட்டப் பட்டவராக விளங்குபவர் ஆவார்.
எனவே, தந்தை பெரியாருக்கு நிகரான புரட்சியாளரைக் காண்பது அறிது. உலகின் முதல் முழுப் புரட்சியாளர் என்ற சிறப்புக் குரியவராகிறார்.

பொது வாழ்வுக்கு பெரியார் வந்த பின்பு பிரச்சாரம் – போராட்டம் என்ற இரண்டு அணுகுமுறைகளையும் தனது கொள்கை வெற்றிக்கான இணையில்லாக் கருவிகளாக கொண்டு செயல்பட்டார். பல்வேறு நிலைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். பெரியார் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார், இந்த இரண்டும் பெரியாரின் பங்களிப்பும் முழுமையாக சாகும் வரை இருந்திருக்கிறது என்பதே வியப்புக்குரியது.
போராட்டக் களத்தில் போராட்டத்தில் பங்கேற்கும் தோழர்களுக்கு உரிய இலக்கணங்களை உலகில் எந்தத் தலைவரும் சிந்திக்காத வகையில் சிந்தித்துள்ளார்.
போராட்டம் நடத்துவோருக்கு பெரியாரிட்ட ஆணைகள் :
• போராட்ட அறிவிப்பு
• போராட்டத்தை நடத்துவது
• போராட்டக்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்
மேற்கண்டவாறு மூன்று நிலையில் போராட்டத்திற்குரிய ஆணைகளைப் பெரியார் ஒவ்வொரு போராட்டத்திலும் அறிவித்திருக்கிறார்.
குறிப்பாக இந்தி எதிர்ப்பில் போராட்டம், வடநாட்டார் சுரண்டல் ஒழிப்புப் போராட்டம், வகுப்புரிமைப் போராட்டம், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம், பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டம், கோயில் கருவறை நுழைவுப் போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், இராமன் பட எரிப்புப் போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபட எரிப்புப் போராட்டம், மனுதரும எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களை அறிவித்து நடத்திய பெரியார், போராட்டத்தில் ஈடுபடுவோர்க்கு இட்ட ஆணைகள் மிக மிக முக்கியமானவை.
பொதுவாக, எந்தப் போராட்டமாக இருந்தாலும்
• காவல்துறையிடம் நாள், இடம், போராட்டத்தின் பெயர் நோக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.
• போராட்டத்திற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள தலைவரின் கட்டளைப்படி நடக்க வேண்டும்.
• கட்டுப்பாடு காத்தல் மிகவும் அவசியம்.
• பலாத்காரம், துவேஷம், சமாதான பங்கம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
• கனிவுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.
• பெயரை அழிக்க அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.
• பெயர் பலகையில் உள்ள பெயரை மட்டுமே அழிக்க வேண்டும், பலகைக்கோ மற்ற சொற்களுக்கோ சேதாரம் ஏற்படக் கூடாது.
• கடைபெயரை அழிக்க விருப்பம் விருப்பமில்லா கதோர் கடையின் முன் நின்று முழக்கமிட
வேண்டும்.
• நம்மீது கல்லெறிதல், தடியடி போன்றவைகள் தூண்டிவிடப்பட்டால் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தாது சாதுவாக இருத்தல் வேண்டும்.
• ‘தீ’ பயன்டுத்தும் போராட்டத்தில் மணலும் நீரும் வைத்திருக்க வேண்டும்.
• பொதுச்சொத்துக்களுக்கு எந்தவிதச் சேதமும் நடைபெறக் கூடாது.
• கட்டுப்பாடின்றி காட்டு மாடுகள் போல் நடந்து கொள்ளக் கூடாது.
• காவல் துறை அடித்தால் வாங்கிக் கொள்ள வேண்டும் திருப்பித் தாக்குதல் கூடாது.
• குறித்த நேரத்தில் போராட்டம் நடைபெற வேண்டும்.
• பொதுமக்களுக்கும் – போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
• போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை உடன் அனுப்ப வேண்டும்.
• நமது இயக்கம் ஒருபோதும் இரகசிய இயக்கம் இல்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு போராட்டத்தில் கடைப்பிடிக்க
வேண்டிய கட்டுப்பாடுகளை ஆணைகளாக அறிவித்த ஒரு புரட்சிகரமான இயக்கம் – புரட்சிகரமான தலைவர் பெரியார் இயக்கத்தைத் தவிர, பெரியாரைத் தவிர உலகில் வேறு எங்கு நோக்கினாலும் துருவி துருவித் தேடினாலும் கிடைப்பார்களா? எனவே தான் பெரியார் ஒரு புரட்சியாளர்.
போராட்டக் களத்தில் களமாடும் கட்டுப்பாடுமிக்க போராட்டக்காரர்களுக்கு தந்தை பெரியாரின் கட்டளை போல் கட்டுப்பாடுகள் விதித்த தலைவர் – களத்தில் வெற்றி வாகை சூடியத் தலைவர் உண்டா? என்பதற்கு இன்று வரை இல்லை என்பதே உலகம் கூறும் ஒரே பதில்.
வாழ்க! புரட்சியாளர் பெரியார். {





