Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

திராவிடர் தளபதி பனகலரசர் நீடு வாழ்க!-பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்

பெரும்பான்மை மக்களாக நாமி ருந்தும்

பெருஞ்செல்வம் பெற்றவராய்ச் செழித்தி ருந்தும்

அருந்தொழில்கள் ஆற்றுதிறன் கொண்டி ருந்தும்

அறமூட்டும் திருக்குறள்தான் பெற்றி ருந்தும்

வெறுப்பறியா உயர்குணத்தை உற்றி ருந்தும்

விழியென்றே தமிழ்மொழியே வாய்த்தி ருந்தும்

சிறுபான்மைப் பார்ப்பனர்தம் அடிமை யாகிச்

செக்குமாடாய் உழன்றுழன்றே சிறுமை கொண்டோம்!

பனகலரசர் தலைமையேற்ற ஆட்சி வந்தே

பார்ப்பனர்கள் அல்லாதார் மீட்சி பெற்றோம்!

இனக்காவல் இராமநிங்க ராயர் வந்தே

இனப்பகையை எதிர்கொள்ள எழுத்த றிந்தோம்!

மனம்படைத்த பெருஞ்செல்வர் ஆள வந்தே

மனிதர்களாய் நாம்வாழ வழிக ளுற்றோம்!

அனைவர்க்கும் அனைத்துமென்றார் ஆள வந்தே அறிவுபெற்றோம்! ஆளுமையாய் உயர்ந்தெ ழுந்தோம்!

வழக்கொழிந்த சமஸ்கிருதம் கற்றார் மட்டும்

மருத்துவத்தைப் பயில்வதற்கு முடியும் என்ற

வழக்கிலிருந்த விதிமுறையை நீக்கி நாமும்

மருத்துவத்தைக் கற்பதற்கு வழிய மைத்தார்!

கலகமின்றிக் குழப்பமின்றிக் காரி யத்தைக்

கையெழுத்தால் சாதித்தார் பனகல் மன்னர் !

சுழன்றடிக்கும் சூறையெனச் சூழ்ச்சி வென்று

சூத்திரர்க்கும் வாய்ப்பளித்த அரசர் வாழ்க!

ஆண்டவர்தம் அருள்வேண்டி மன்னர் மக்கள்

அளித்துவந்தார் பெருத்தகொடை கையூட் டாக!

ஊன்பெருத்தார் பார்ப்பனர்கள் கருவ றைக்குள்

உள்ளமர்ந்தே ஒட்டுண்ணி போலே உண்டு!

ஆண்டிருந்த பனகலரசர் கண்ட திர்ந்தே

அறநிலையத் துறையமைத்துத் தடுத்தார் கொள்ளை!

ஆண்டவர்க்கும் காவலாக ஆட்சி தந்தே

ஆண்டவராய் வரலாற்றில் நிலைத்தார் வாழ்க!

பஞ்சமர்கள் பறையரெனுஞ் சாதிப் பேர்கள்

பழிச்சொல்லின் பாங்குடைத்த தென்று ணர்ந்தே

அஞ்சாத சீர்திருத்தச் செம்மல் மன்னர்

ஆதித்தி ராவிடராய் மாற்றம் செய்தார்!

வஞ்சமனு வர்ணமுறை செய்த தீங்கை

வாஞ்சையுடன் களையெடுத்த அரசர் வாழ்க!

நெஞ்சமுற்ற நேயத்தினால் நீதி செய்த

நேர்மைமிகு நீதிக்கட்சித் தலைவர் வாழ்க!

எல்லையிலா அதிகாரம் பெற்ற பார்ப்பார்

இல்லையிடம் எனமறுத்தார் நம்பி ள்ளைக்கு!

பள்ளிகளில் பார்ப்பனரல் லாதோ ருக்கும்

பங்குதனைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் கண்டார்!

கள்ளமிலா வெளிப்படையாய்த் தேர்வு செய்யும்

கடமையினை ஆற்றுவதற்குக் குழுவும் தந்தார்!

கொள்ளையென இடமனைத்தும் கவ்விச் சென்ற

குள்ளநரிக் கூட்டத்தின் பல்லொ டித்தார்!

தாண்டமுடி யாதவொரு தடைச்சு வர்போல்

சனாதனம் செயலாற்றும் தன்மை சொன்னார்!

தீண்டாமை தீர்ப்பதற்குத் திட்டம் வேண்டும்!

திராவிடர்க்குக் கல்விதரப் பள்ளி வேண்டும்!

ஆண்டாண்டாய் அனுபவித்த தொல்லை போக்க

அறிவுபெறச் சூத்திரர்க்கும் உதவ வேண்டும்!

மாண்டேகு செம்ஸ்போர்டு குழுவின் முன்னே

மதியரசர் திராவிடர்க்காய் வாதஞ் செய்தார்!

எப்பக்கமி ருந்தெதிர்ப்பு வந்திட் டாலும்

இசைவளிப்பேன் நாடுநன்மை பெறுஞ் செயற்கு!

தப்பான செயல்தீங்கு விளைக்கு மென்றால்

தடுப்பதற்குத் தயக்கமின்றி முடிவெ டுப்பேன்!

எப்பாடு பட்டாலும் ஏற்ற கொள்கை

இழப்பதென்றால் பதவியிலே இருக்க மாட்டேன்!

ஒப்பாரும் மிக்காரும் இல்லா மன்னர்

உதிர்த்தமொழி உளங்காட்டும் பளிங்கைப் போலே!

அதிர்ச்சிக்கும் துயருக்கும் அளவே இல்லை

அரசர்தம் உயிர்நீத்த மறைவைக் கேட்டு!

சதியெதிர்க்கும் திராவிடர்தம் கொள்கைப் போரில்

தளபதியார் போர்முடியும் முன்னி றந்தார்!

மதியரசர் தேடற்கே அரிய ரென்றும்

மாற்றில்லா ஒப்புயர்வு கொண்டாரென்றும்

கதியற்றார் திராவிடர்கள் இறப்பால் என்றும்

கண்ணீரைப் பெரியாரின் இரங்கல் சிந்தும்!

செல்வரெனப் பிறந்தாலும் இல்லா தார்க்காய்ச்

சீர்திருத்தத் தொண்டுசெய்த செம்மல் வாழ்க!

கல்வியினைக் காற்றாகப் பரவச் செய்தே

கடையரையும் நுகரவைத்த வள்ளல் வாழ்க!

கொள்ளையர்கள் பிடியிருந்த கோவில் மீட்டுக்

குறைகளைந்து முறைசெய்த அரசர் வாழ்க!

தொல்குடியாம் திராவிடர்தம் உரிமைப் போரின்

தளபதியார் பனகலரசர் நீடு வாழ்க! {