Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இரட்டைமலை சீனிவாசன்அவர்களின் இணையிலா வரலாற்றுச் சாதனைகள்!-மஞ்சை வசந்தன்

தாழ்த்தப்பட்டோர் மாநாடு

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகத் திகழ்ந்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1895ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை விக்டோரியா மண்டபத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். வருவாய்த் துறை சார்ந்த அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கிராம அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணிப்பதாகவும், தரம் தாழ்த்தி நடத்துவதாகவும் அம்மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார். மேல்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதையும் கண்டித்தார்.

‘‘நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால், நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இனிமேலும் நாங்கள் எல்லாவிதமான கொடுமைகளையும் ஏற்கமாட்டோம்’’ என்று உயர்ஜாதிக்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

கவர்னர் மாளிகையில் காலடி வைத்தார்

1895ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் எல்ஜின்பிரபு சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். அதை அறிந்த இவர், ‘பறையன் மகாஜன சபை’ சார்பில் அவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்தார்.

கவர்னர் ஜெனரல் மாளிகைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் செல்வது என்பது கற்பனைக்குக்கூட வராத ஒன்றாக இருந்த காலத்தில், அதையும் செய்து காட்டினார். அந்த அனுபவத்தை அவரே விவரித்தும் இருந்தார்.

‘‘நாங்கள் நேராகக் கட்டடத்திற்கு முன்புறம் சென்று வண்டிகளை விட்டு இறங்கி, கவர்னர் மாளிகைக்குள் சென்றோம். அங்கே இதற்குமுன் இவ்வின மக்கள் செல்லாத காரணத்தால், தலைமைச் செயலாளர் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இம்மாளிகையில் ஆங்கிலோ – இந்தியர்கள், முகம்மதியர்கள், கிறித்துவர்கள் எட்டு எட்டுப் பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு காத்திருந்தார்கள். நாங்களும் கும்பலாகச் சேர்ந்து நின்றோம். எங்களைக் கண்ட மற்றச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெறுப்பும், சினமும் கொண்டவர்களாகத் தோன்றினார்கள். அவர்களோடு எங்களையும் சமமாக, ஒரு சமூகத்தவராக அங்கீகரித்து தக்க சமாதான நல்மொழி கூறினார் எல்ஜின் பிரபு’’ என்று அன்றைய நிகழ்வை உணர்வுப்பூர்வமாகப் படம் பிடித்தாற்போல் விளக்கினார்.

சமூக முன்னேற்றத்திற்குக் கல்வி அவசியம்
என்ற உண்மையை இவர் நன்கு உணர்ந்திருந்தார். காரணம், இவர் இளம் வயது முதற்கொண்டே அவ்வாறு கல்வியின் கட்டாயம் கருதி பல்வேறு இடர்ப்பாடுகளைச் சமாளித்துக் கற்றவர்.

‘‘முன்னேற்றத்திற்குக் கல்வியே முக்கியக் காரணம்’’ என்று 1893இல் ‘பறையன்’ ஏட்டில் எழுதியிருந்தார். எனவே, தன் நோக்கப்படி, தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சியில் அதிகம் அக்கறைக் காட்டினார்.

1893இல் வெளியிடப்பட்ட அரசாணையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த ஆணையின்படி அந்த வாய்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பாகச் சென்னை நகரில் பல பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1893இல் இது சார்ந்து அரசிடம் இவர் கோரிக்கை வைத்து, அரசாணையைச் சரியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். அதன் பலனாய், தாழ்த்தப்பட்டோருக்கானக் கல்வி, தடையின்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆம், சென்னை நகராட்சியே பள்ளிக்கூடங்களை நடத்தும்படியும், அதில் தாழ்த்தப்பட்டவர்களைத் தடையின்றி சேர்த்துக் கொள்ளும்படியும் அரசு ஆணையிட்டது.

1900இல் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் வெளிநாடு சென்றார். தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது காந்தியாரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காந்தியாருக்கு இவர் திருக்குறள் கற்றுக் கொடுத்ததோடு, தமிழில் கையொப்பம் இடவும் கற்றுக்கொடுத்தார்.

1921இல் மீண்டும் இவர் இந்தியாவிற்குத் திரும்பினார். மீண்டும் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கானத் தொண்டினைத் தொய்வின்றிச் செய்தார்.

சட்டமன்றச் சாதனை

1923இல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது நீதிக்கட்சி ஆட்சி நடந்தது.

இவரது துணைவியார் ரங்கநாயகி அம்மையாரும் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தீண்டாமையைத் தடை செய்து சட்டம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று தனது கணவருக்கு ஆலோசனை கூறி, அதைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்படி கணவரைத் தூண்டிக் கொண்டேயிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், 1924இல் சட்ட நிரூபனச் சபையில் இது குறித்து ஓர் தீர்மானம் கொண்டு வந்தார். நகரம் அல்லது கிராமத்திலுள்ள எந்தவொரு பொதுப் பாதையையும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் பயன்படுத்தலாம் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்குள் எந்தவொரு ஜாதியினரும் போகலாம் என்றும், பொது நீர் நிலைகளை எந்த ஜாதியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு, 1925இல் ஓர் அரசாணை வெளியிட்டது. ரங்கநாயகி அம்மையாரின் விருப்பம் நிறைவேறி தாழ்த்தப்பட்டோருக்கு இருந்தத் தடைகள் நீக்கப்பட்டன. இந்த ஆணை வருவதற்கு அடித்தளமிட்ட ரங்கநாயகி அம்மையார் 1928இல் மரணமடைந்தார். அவரது கல்லறையில் கீழ்க்கண்டவாறு செதுக்கப்பட்டிருந்தது.

‘‘இவ்வம்மையாரின் கோரிக்கைக்கிணங்கி, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் பொது ரஸ்தாக்கள் (வீதிகள்), கிணறுகள், பொது இடங்கள், கட்டடங்கள் முதலியவற்றை உபயோகிக்க பின்வரும் கவர்ன்மெண்ட் உத்தரவைத் தங்கள் பக்தாவான (கணவரான) சீனிவாசன் பெற்றனர்.’’

இந்தக் கல்வெட்டு தாழ்த்தப்பட்டோரின் உரிமைப் போராட்ட வரலாற்றின் நினைவுச் சின்னமாக அமைந்தது.

அரசாணைகள் வந்துவிட்டாலே வாய்ப்புகள் வந்து விடுவதில்லை என்பதுதானே இந்தியாவின் வரலாறு. அதற்கேற்பவே, இப்படியொரு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அது ஏட்டளவில்தான் இருந்ததேயன்றி செயல்முறைக்கு வரவில்லை. என்றாலும், இப்படியொரு உரிமையைப் பெற்றதே அன்றைக்கு அரும்பெரும் சாதனையாகும்.

வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்

1928-1929இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு, இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கரையும், இவரையும் இந்திய அரசு தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டது பற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகள் பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே விளக்குகிறார்கள்.

‘‘சர்வ கட்சி மகாசபை என்னும் வட்டமேஜை மாநாட்டிற்கு என்னையும், டாக்டர் அம்பேத்கரையும் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் நகமும், சதையுமாக இருந்து உழைத்தோம். 1928-1929ஆம் ஆண்டுகளில் நடந்த மகாசபைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். 1930 ஆம் ஆண்டு டாக்டர் மட்டும் மகாசபைக்குப் போனார். என் ஆலோசனையைக் கேட்க இந்தியா இராஜப் பிரதிநிதி கமிட்டிக்கு (Viceroys Conssolative Committee) என்னை அழைத்துக் கொண்டார்கள்.’’ என்று கூறும் அவர், அங்கு நடந்த நிகழ்வு ஒன்றையும் விளக்குகிறார்.

‘‘ஜார்ஜ் மன்னரையும், இராணியையும் காணும் பொருட்டு, வின்சர் காஸ்சல் (Windsor Castle) என்னும் ராஜ மாளிகைச் சபைக்கு இந்தியப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். என்னுடன் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி இருவரும் கைகுலுக்கி உபசரித்தார்கள். இப்படியாக மூன்று தடவை நடந்தது. ராஜா மாளிகையில் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. பின்னுமோர் தடவை மன்னரிடம் சம்பாஷிக்க (பேச) நேர்ந்தது. தீண்டாமை என்றால் என்னவென்று மன்னர் வினவினார். ‘மேல்ஜாதியான் என்போன்  கீழ்ஜாதியான் தெருவில் விழுந்துவிட்டால் மேல்ஜாதியான் தூக்கிவிடமாட்டான்’ என்று நான் கூறியபோது, மன்னர் திடுக்கிட்டு அசந்து நின்று, ‘‘அவ்விதம் நடக்க என் ராஜ்ஜியத்தில் விடவே மாட்டேன்’’ என்றார். மன்னர் மாளிகைக்குள் பிரவேசிக்கவும் மன்னரோடு கைகுலுக்கி பேசவுமுண்டான பாக்கியம் நமது சமூகத்தைப் பொருந்தியதல்லவா. இதர சமூகத்தோடு நம்மையும் சமமாக மன்னர் நடத்தியதனால் ஆங்கிலேய அரசாட்சி எவ்வளவு அன்பும், அருமையானதென்றும் நம் இனம் முன்னேறவுஞ் செய்ததென்றும் விளங்குகிறது’’ என்று வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வைப் பாமரத் தமிழில் விளக்கியுள்ளார்.

அந்த மாநாட்டில் இவர் கலந்துகொண்டபோது, ‘‘ராவ் சாகிப் ஆர்.சீனிவாசன் பறையர். நான் ஒரு தீண்டப்படாதவன்’’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையொன்றை தன் மேலாடையில் மாட்டியிருந்தார். இதைப் பார்த்துத்தான் மன்னர் அக்கேள்வியைக் கேட்டார்.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியைவிட ஜாதி இந்துக்களின் கொடுமையான ஆதிக்கம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்ற உண்மையும், ஆங்கில ஆட்சி வந்திராவிட்டால், இந்த விடிவுகூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்ற உண்மையும் இவற்றால் விளங்குகின்றன.

‘‘தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால்தான் தீண்டாமை என்னும் கொடிய பழக்கம் ஒழியும். சட்டசபையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தால்தான் எங்கள் இலட்சியங்களை அடைய நாங்கள் போராட முடியும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை’’ என்று அந்த மாநாட்டில் தன் சமூகத்திற்குரிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

சொத்துள்ளவருக்கும், படிப்புள்ளவருக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற அந்தக் காலத்தில், தன் இனம் முன்னுக்கு வரவேண்டும் என்றால், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று ஆணையிடப்படவேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை அவர் முன் வைத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்து அவர் கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது இதன்மூலம் விளங்குகிறது.

அரசியல் அதிகாரத்தைப் பெறாத எந்தச் சமுதாயமும் முன்னுக்கு வர இயலாது என்பது ஆழமான உண்மை. அதை நுட்பமாக அறிந்து, அதைக் கோரிக்கையாக வைத்தார். அக்காலத்தில் இந்த அளவிற்கு விழிப்போடு சிந்திப்பது என்பதும், சிந்தித்து எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவது என்பதும், அதுவும் அயல்நாட்டிற்குச் சென்று உலகையே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களிடம் அது குறித்துக் கோரிக்கை வைப்பது என்பதும் வியப்புக்குரிய அரிய செயல்களாகும். அவற்றை ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட தமிழர் செய்திருக்கிறார் என்பது தமிழர்க்குப் பெருமை, தாழ்த்தப்பட்டோர்க்கு அதனிலும் பெருமை. {