Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்க்குரிசில்குன்றக்குடி அடிகளார் !-முனைவர் கடவூர் மணிமாறன்

ரியபல சிந்தனையை விதைத்து நாட்டின்;

அறியாமை இருளகலப் புரட்சி செய்த

பெரியாரின் பெருமதிப்புக் குரிய ரான

பேசுபுகழ்க் குன்றக்குடி அடிக ளாரோ

பெரியமனம் படைத்தவரே! எழுத்தால் பேச்சால்

பிறர்உள்ளம் கவர்ந்திட்ட ஆற்றல் மிக்கார்!

உரியசெயல் மடத்தினிலே நாளும் செய்தே

உயர்புகழை நிலைநாட்டிப் பெருமை கொண்டார்!

இலக்கியமும் சமயமுமே விழியி ரண்டாய்

எண்ணியவர்! பட்டிமன்றத் தலைமை யேற்று

நலம்சேர்த்தார் நற்றமிழ்க்கே! தொண்டுள் ளத்தால்

நல்லோர்தம் மனங்களிலே வாழு கின்றார்!

அலகில்சீர் படைப்புகளால் வாணாள் எல்லாம்

அருஞ்சிறப்புச் சாதனைகள் படைத்தார்! மக்கள்

நலவாழ்வு பெற்றிடவே மடத்தில் அந்நாள்

நயத்தக்க சீர்திருத்தம் இனிதே செய்தார்!

முற்போக்குக் கருத்தியலை முதலாய்க் கொண்டார்!

மூடநெறி மக்களையே முடமாய் ஆக்கும்;

நற்பண்பால் ஒழுக்கத்தால் நன்மை மேவும்;

நம்பிக்கை, விடாமுயற்சி வெற்றி நல்கும்!

பொற்புடனே தொழில்யாவும் சிறக்கு மாயின்

புதுமைமிகு நற்காலம் தோன்றும் என்றே

பற்பலநற் கருத்துகளை மேடை தோறும்

பாங்குறவே பகிர்ந்திட்டார் அடிக ளாரும்!

பன்னூறு திருமடங்கள் இருந்த போதும்

பைந்தமிழை வளர்க்கின்ற மடமாய் என்றும்

குன்றக்குடித் திருமடத்தை ஒளிரச் செய்தார்!

குளிர்தமிழில் புலமைவளம் சிறக்கப் பெற்றார்!

நன்னெறிகள் தழைத்தோங்கும் வழிகள் கண்டார்

நஞ்சனைய சாதிமத மோதல் இன்றிப்

பன்னரிய முன்னேற்றம் பகுதி மக்கள்

பற்பலவும் எய்திடவே உழைத்து வந்தார்!

காவிஉடைக்(கு) என்றுமிவர் பெருமை சேர்த்தார்!

களங்கத்தைச் சேர்ப்போரோ பலரும் உள்ளார்

பாவிகளாய் மாற்றார்தம் வெறுப்பைக் கொள்வர்!

பழமையினில் புரண்டெழுந்தே மனிதம் மாய்ப்பர்!

ஏவலராய், அடிமையராய், மக்கள் தம்மை

எடுபிடியாய் ஆக்குவதில் தேர்ந்த நாளில்

மேவுபுகழ் சேர்த்திட்ட அடிக ளாரோ

மேன்மைமிகு குமுகநலன் கண்போல் காத்தார்!

திருக்குறளில் ஆழ்ந்தகன்ற தேர்ச்சி மிக்கார்!

திருவள்ளுவர், குறட்செல்வம் குறளாம் நூறு

திருக்குறட்நற் சிந்தனைநூல் வரிசை தன்னில்

திறன்கூறும் பதினாறு தொகுதி மற்றும்

அருஞ்செல்வம் சிலம்புநெறி, கம்பன் கண்ட

ஆட்சியிலே அரசியலாம் நூல்க ளோடு

சிறுகதைகள் நாடகங்கள் பலவும் தீட்டிச்

செந்தமிழ்க்கே இயன்றாங்கு வளமும் சேர்த்தார்!

‘மணிமொழி”நல்  ‘அருளோசை”  இதழ்க  ளோடு

‘மக்கள்சிந் தனை”யும்’தமி  ழகமும்” மற்றும்

அணிசேர்க்கும் அறிகஅறி வியலும் தந்தார்!

அன்பரெலாம் பல்லாண்டு படிக்க லானார்!

இனிக்கின்ற ‘கவியரங்கில் அடிகளாரும்”

என்பதுடன் பாவேந்தர் உலகம் ‘மண்ணும்

மனிதர்களும்” எனும்பெயரில் தன்வர லாற்றை

மாண்புறவே வெளியிட்டு மகிழ்ச்சி கொண்டார்!

ஏற்றமிகு தம்; வாழ்வில் எழுப தாண்டாய்

இனியபல தொண்டுகளால் வழிகள் காட்டி

மாற்றத்தை உருவாக்கப் பாடு பட்டார்!

மனத்தூய்மை வினைத்தூய்மை பேணி வந்தார்!

ஆற்றிவந்த தமிழ்ப்பணிகள் வரலா றாகும்!

அருஞ்சமய நெறிகளிலே புதுமை சேர்த்தார்!

போற்றிடுவோம்! மாமனிதர் அடிக ளாரின்

புகழ்பாடிப் பெருமையெலாம் சேர்ப்போம் நாமே{