| ம |
ேற்கு மாம்பலத்தில் இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் செயலாளரும், இலங்கை குடிபெயர்ந்தோர் நலச்சங்கத்தின் தலைவருமான ஏ.எஸ்.மணவைத் தம்பி அவர்களின் படத்தினை 01.09.2008 அன்று காலை திறந்து வைத்தோம். விழாவில் நம்முடன் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவுத், இலங்கை ஏதிலிகள் சங்கத் தலைவர். எஸ்.செல்வநாயகம், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ஶ்ரீநி காந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சாத்தான்குளம் நகரத் திராவிடர் கழக முன்னாள் தலைவர் காலம் சென்ற மானமிகு பெரி.பால். அரசு சொர்ணம்மாள் ஆகியோர் பேத்தியும் பா.மதிஅரசு – ராஜகுமாரி தம்பதியரின் மூத்த மகளுமான செல்வி ஷோபா – அ.கார்த்திகேயன் (சென்னை வை.அன்பழகன் அ.கனகம் அவர்களின் செல்வன்) வாழ்க்கை ஒப்பந்த விழாவில் பங்கேற்று வாழ்த்தினோம்.
உரத்தநாடு ரெங்கமணி திருமண அரங்கில் 02.09.2008 அன்று காலை 8.30 மணியளவில் செல்வன் இரா.மகேசுவரன் – செல்வி
சி.அமுதா ஆகியோரது மணவிழாவினைத் தலைமையேற்று நடத்தி வைத்தோம். தொடர்ந்து காலை 10 மணிக்கு அத்திவெட்டி வீரையன் அவர்களின் இல்லத்தையும், இல்லத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அவரது தந்தை பெரியசாமி அவர்களின் சிலையையும் திறந்து வைத்தோம். மாவட்டத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கழக செயலவைத் தலைவர் இராசகிரி தங்கராசு உள்ளிட்டத் தோழர்கள் பங்கேற்றனர். அன்று மாலை ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சி மிகுந்த நிகழ்வில் கலந்து கொண்டோம்.
உரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் என் பவள விழாவையொட்டி ஒரு பெரிய அளவிற்கு நுழைவு வளைவு (Arch) ஒன்றை உருவாக்கியிருந்தனர். இதன் திறப்பு விழா
02.09.2008 அன்று மாலை 6 மணி ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்றது. கழகச் செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு. திராவிடர் கழக ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஆ.இலக்குமணன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் அந்த ஊர் மக்களின் கோரிக்கை
யான அந்த ஊர் நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்துவதற்கு நாம் பரிந்துரை செய்து அதை அரசு ஏற்று உயர்நிலைப் பள்ளியாக ஆணை வெளியிடப்பட்டதையும் அதற்கு மன்னை நாராயணசாமி அவர்களின்
பெயர் சூட்டப்படுவதற்கு நாம் பரிந்துரை
செய்ததையும் அவ்வாறு அவரது பெயர் சூட்டப்
பட்டதையும் நினைவு கூர்ந்தார். டாக்டர் வீகேயென்
கண்ணப்பன் (இணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்) முன்னிலை வகித்தார். பவளவிழா வளைவை பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் திறந்து வைத்தார். திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை, கழகப் பொதுச்செயலாளர்கள் கலி. பூங்குன்றன்.
சு.அறிவுக்கரசு துணைப் பொதுச் செயலாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், துரை. சந்திரசேகரன் டாக்டர் பிறைநுதல்செல்வி, மாநில சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் கலைவாணி வீரமணி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச்சந்திரன், உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த விழாவுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்களும், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வாழ்த்துகளை அனுப்பியிருந்தனர்.
04.09.2008 அன்று நடைபெற்ற சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஆவின் பால் விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றோம். அன்றைய தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் உ.மதிவாணன் பங்கேற்று திறந்து வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாக இயக்குநர் மீனா நாயர் அய்.ஏ.எஸ். மற்றும் அபூர்வா வர்மா அய்.ஏ.எஸ். ஆகியோர் பங்கேற்றனர்.
அமெரிக்க நாட்டின் சிகாகோவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பும், சென்னை தமிழ்நாடு மூதறிஞர் குழுவும் இணைந்து 05.09.2008 அன்று நடத்திய கருத்தரங்க நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்கள் அதற்கு ஊற்றுக்கண்ணாக இருக்கின்ற மதத்தை ஆதரிக்கலாமா என்று கேள்வி எழுப்பினோம், இந்த நிகழ்வில் அமெரிக்கப் பகுத்தறிவு மனித நேயரும், 48 நூல்களின் ஆசிரியரும், ‘தடையற்ற ஆய்வு’ (Free Inquiry) எனும் இதழின் ஆசிரியரும், ‘சுதந்திர ஆய்வுக்கான மய்யத்தின்’ நிறுவனத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பால்கர்ட்ஸ்உரையாற்றிய பொழுது, பெரியார் இந்தியாவில் செய்தப் பணியை உலகில் பிற மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார். (Whatever Periyar did here in India has to be taken to people everywhere, said Prof. Paul Kurtz). திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நன்றி கூறினார்.
சென்னை பெரியார் திடலில் 2008, செப்டம்பர் 6, 7 இரண்டு நாட்களில் 3 மாநாடுகள் மற்றும் பெரியார் பன்னாட்டமைப்பின் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
முதல்நாள் காலை மாநில மகளிரணி மாநாடு கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி வரவேற்புரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தொடக்கவுரையாற்றினார். ‘தடைகளைத் தகர்க்கும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெண்களுக்கு கல்வி நிறுவனங்களில் கட்டாய கராத்தே பயிற்சி தேவை. பெண் சிசுக்கொலைக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும். பெண்களுக்கு அர்ச்சகர் உரிமை வேண்டும். சொத்துரிமையில் பெண்களை நீக்கி எழுதும் உயில் செல்லாது என்பதற்கானச் சட்டம் தேவை போன்ற முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானமும் சிறப்புத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மாலையில் திராவிடர் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன் தலைமையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி மாநாட்டைத் திறந்து வைத்தார். கழகப் பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு தலைமையில் கழகப் பணிகளில் ‘‘முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது மதச்சார்பின்மையா? சமூக நீதியா? பகுத்தறிவா?’’ என்னும் தலைப்பில் ஓர் அறிவார்ந்த பட்டிமன்றம் நடைபெற்றது. வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றும் தமிழர்கள் நாம் என்பதற்காகத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் ஆட்சியான கலைஞர் ஆட்சியைக் காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அடுத்த நாள் 07.09.2008 அன்று காலை பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு மாநில திட்டக் குழு துணைத் தலைவர் டாக்டர் மு.நாகநாதன் மாநாட்டைத் திறந்து வைத்தார். உணவுத்துறை அமைச்சர்
ஏ.வா.வேலு பகுத்தறிவுக் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மதமற்ற உலகம் என்னும் தலைப்பில் அறிவார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் பொதுச் செயலாளர் பி.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பொருளாளர் சாமிதுரை தலைமை வகித்தார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் கு.வெ.கி.ஆசான், கேரளாவைச்
சார்ந்த பகுத்தறிவாளர் நியூ.கலாநாதன்
ஆந்திர பகுத்தறிவாளர் விகாஸ் கோரா, இனமுரசு
சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
அரசு அலுவலகங்களில் எந்தவித மதச் சின்னங்களும், வழிபாட்டு நிலையங்களும் இருக்கக்கூடாது, மதப் பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை தேவையில்லை. மதச் சடங்குகள் பெயரால் அத்தியாவசியப் பொருள்கள் வீணாவதைத் தடுத்திடுக! என்றும், மகரஜோதி மோசடியைத் தடை செய்ய வேண்டும் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்று மாலை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது. 1996ஆம் ஆண்டு சமூகநீதி, காவலர் வி.பி.சிங்
அவர்களுக்கு முதன்முதலில் இவ்விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2008ஆம் ஆண்டுக்கான விருது தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவர் டாக்டர் ராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் அமெரிக்காவின் ‘Free Inquiry’ இதழின் முதன்மை ஆசிரியரும், ‘‘சென்டர் ஃபார் ஃபிரீ என்கொயரி’’ (Center for Free Inquiry) என்னும் நாத்திக அமைப்பின் தலைவரான பேராசிரியர் பால்கர்ட்ஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். விருதினைப் பெற்றுக்
கொண்ட முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ‘‘திராவிடர் கழகத் தலைவர் எனது ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள், பெரும் படையைத் தயாரித்து வைத்திருக்கிறார். எனவே, பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது – சரியாது என முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உணர்ச்சி மேலிடக் குறிப்பிட்டார்.
மேலும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமது உரையில்,
‘‘பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய
பெயரால் சமூகநீதி விருது வழங்க நான் அழைக்கப்பெற்று, உங்களுடைய அன்பு கலந்த
வாழ்த்துகளோடு, பாராட்டுகளோடு, பெருமிதமான
கைதட்டல்களோடு அந்த நிகழ்ச்சி ஓரளவு
நிறைவுற்று என்னுடைய நன்றி உரையோடு நிறைவுற்றது. இதிலே கலந்து கொண்டு, என்னை வாழ்த்தியுள்ள அனைவருக்கும் என்னைப் பாராட்டி மகிழ்ந்த அனைவருக்கும் என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய இனிய இளவல் வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, இது விருது அல்ல, போர்வாள் என்று சொன்னார்கள். ஆம். ஆங்கிலச் சொல்லைச் சற்று மாற்றிச் சொன்னால் – இது அவார்டு (Award) அல்ல ஸ்வார்ட் (Sword) (பலத்த கைதட்டல்).
இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று பல்லாண்டு காலம் பகுத்தறிவு
வாதியாக, சுயமரியாதைக்காரனாக, மானமுள்ளத் தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அறிந்திருக்கின்ற காரணத்தால்தான் என்னை
அழைத்து பொருத்தமான விருது இது என்று தேர்ந்
தெடுத்து வீரமணியின் பெயரால் உள்ள விருதை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்.
சிலர் சொல்லக்கூடும், இவர் வயதென்ன, இவருடைய பதவி என்ன இவருடைய செல்வாக்கு என்ன, இவர் போய் வீரமணியின் பெயரால் ஒரு விருதைப் பெறுவதா என்று எப்போதுமே இயற்கையாக சிண்டு முடிகின்றவர்கள் இதைச் சாக்காக வைத்துப் பேசக்கூடும், எழுதக்கூடும். நான் தக்கார் ஒருவருடைய கையால்தான் – ஒருவருடைய பெயரால் தான் இந்த விருதைப் பெற்றிருக்கிறேன் என்பதை மிகப் பெருமையோடு எண்ணிப் பார்த்து, விருது வழங்கிய பெரியார் பன்னாட்டு மய்யத்திற்கு என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சுயமரியாதைக்காரன் என்பதற்காக, சமூகநீதியிலே அக்கறை உள்ளவன் என்பதற்காக – சமூகநீதி தழைக்க வேண்டும். நிலைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகின்ற பட்டாளத்திலே ஒரு சிப்பாய் என்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் மறந்து விடவில்லை. இந்த விருதை எனக்கு வழங்கிய நம்முடைய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் நண்பர்கள் கடல் கடந்து அமெரிக்க நாட்டிலே வாழ்கின்ற நண்பர்கள் என்றாலும்கூட, எங்கிருந்தாலும் நம்மையெல்லாம் இணைக்கக் கூடிய கொள்கை உணர்வு, இன உணர்வு – இன்றைக்கு அந்தப் பிணைப்பின் காரணமாக பெரியார் திடலிலே ஒன்றுசேர்ந்து உங்களுடைய அன்பான வாழ்த்துகளை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்.
வீரமணியின் பெயரால் ஒரு விருது என்றதும், அது என்ன விருது, சமூகநீதிக்கான விருது என்றால் பல பேருக்குப் புரிகிறது. சமூகநீதிக்காகப் போராட்டம் இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 1920ஆம் ஆண்டிலேயிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சமூகநீதிக்கானப் போராட்டம். அந்தப் போராட்டத்தை மேலும் வேகப்படுத்தி பல வெற்றிகளைக் குவித்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர் வழி நின்று போராடிய பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் – அவர்களையெல்லாம் தலைவர்களாக, தளபதிகளாக ஏற்றுக் கொண்டு களத்திலே நின்ற, இன்றளவும் நின்று கொண்டிருக்கின்ற எங்களுக்கும் உண்டு என்பதை, நீங்கள் எல்லோரும் மிக நன்றாக அறிவீர்கள்.
எனக்கு இந்த விருதை வழங்கும் நேரத்தில் இளவலும் இந்தத் தமிழகத்தினுடைய மக்களின் – தமிழ் மக்களின் – தமிழர்களின் தலைவருமான வீரமணி அவர்கள் சொன்னார்கள் – நான் ஒரே வரியில் என்னைப் பற்றி ஒரு நிரூபருக்குப் பேட்டி கொடுத்ததைச் சொன்னார்கள். உங்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்கள் என்று கேட்ட பத்திரிகைச் செய்தியாளரிடம் நான் சொன்ன பதில் – நான் மானம் உள்ள சுயமரியாதைக்காரன் என்று சொன்னதை நினைவூட்டினார்கள். ஆம், இன்று நேற்றல்ல, என்னுடைய பாலப் பருவத்திலேயே அந்த உணர்வு எப்படியோ என்னுடைய உடலில், உள்ளத்தில், ரத்தச் சுழலில் ஒட்டிக் கொண்டு அது என்னை வளர்த்திருக்கின்றது” என்று கூறி, இரண்டு சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய பேராசிரியர்
பால்கர்ட்ஸ் உலகெங்கும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள் பரவி வருவதைச் சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்தார்கள். அவரது உரையில், “என்னைப் பொறுத்தவரையில், நியூயார்க் அரசுப் பல்கலைக்கழகத்தில், தத்துவம் எனப்படும் மெய்யறிவுத் துறையில் நான் பேராசிரியர் ஆவேன். உலகின் பல்வேறு பகுதிகளில் பெரியாரின் புகழ் பரவி வருவதைக் காண்கிறேன்; அதற்குக் காரணம் அவர் காட்டிய வழி அறநெறி வழியாகும். மோசமாக நடத்தப்பட்ட மக்கள் தன்மதிப்போடும் மாண்போடும், தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ள வேண்டுமெனில், சுயமரியாதை ஓர் இன்றியமையாத் தேவை என்பதைப் பெரியார் வலியுறுத்தினார்; மக்கள் தங்களைத் தாங்களே சார்ந்திருக்க வேண்டும் என்ற உணர்வையும் அது ஊக்குவித்தது.
வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிப் புகழ் பெற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் வீரமணி சமூகநீதி விருது வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார். அவரது அறிவுத் தொண்டைப் பாராட்டி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு 09.09.2008 அன்று ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கப்பட்டது.
இந்தத் தொடரில் (அய்யாவின் அடிச்சுவட்டில்) சமூகநீதி சார்ந்த ஒரு முக்கியச் செய்தியை முன்னமே குறிப்பிட்டு இருந்தோம். உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது என்று ஒன்றிய அரசு முடிவு எடுத்த நிலையில் அவ்வாறு அதிகப்படுத்தப்பட்டால் அது சமூகநீதி அடிப்படையிலான நியமனமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம் இதற்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும் வேண்டுகோள் வைத்திருந்தோம். கழகத்தின் இந்தக் கோரிக்கையினை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.
அப்போதிருந்த 49 நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 33 நிரந்தரப் பதவிகள், 27 கூடுதல் பதவிகள் ஆகும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பெண்களிலிருந்து இந்த நியமனங்கள் சமூகநீதி அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும் என்று சட்ட அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்திருந்தார். இது நம் கழகக் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகும்.
நினைவுகள் நீளும்…
