Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொருளாதார அடிப்படையில்இடஒதுக்கீடு ஏன் கூடாது-மஞ்சை வசந்தன்

இடஒதுக்கீடு என்பது சமூகக் காரணங் களால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பின்தங்கியுள்ள, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு, அப்பாதிப்பை ஈடுகட்டும் வகையில், அவர்களுக்கு உரிய பங்கைக் கிடைக்கச் செய்யும் வகையில் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் செய்யப்பட்ட ஏற்பாடாகும்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பின் அடிப்படையில், ஜாதியடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு அதே பிறப்பு, ஜாதியடிப்படையில் வழங்கப்படும் சிறப்பு உரிமையே இடஒதுக்கீடு.

ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கல்வி கற்க உரிமை, உயர்பதவிகள் வகிக்க உரிமை, உடமைகள் வைத்துக் கொள்ள உரிமை என்று ஆட்சி அதிகாரம் மூலம் உறுதிசெய்து கொண்டு, பெரும்பான்மை மக்கள் கல்வி கற்கக்கூடாது; பதவிகள் பெறக்கூடாது; அவர்கள் உயர்ஜாதியினருக்கு அடிமைகளாய் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அதைச் சட்டப்படியாகவும், சாஸ்திரப்படியாகவும் நடைமுறைப்படுத்தினர்.

அதேபோல் பெண்ணாகப் பிறந்த காரணத்தால் அவள் ஆணுக்கு அடிமை; அவர்களுக்குக் கல்வி, சொத்து, பதவி உரிமைகள் கூடாது. அவள் வீட்டு வேலைகளைச் செய்து வீட்டுக்குள்ளே முடங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதனால், ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் தங்கள் உரிமைகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய்ப் பெற முடியாது, அடிமைகளாய் வாழ்ந்தனர்.

சமூகநீதி

இவ்வாறு பிறப்பால் உரிமைகளைப் பறிப்பது மனித உரிமைக்கு எதிரானது. எனவே, அனைவருக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் அளிக்கப்படவேண்டும் என்ற சிந்தனையும், விழிப்பும் ஏற்பட, ஷாகு மகராஜா, அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையும், வாய்ப்பும் தருவதோடு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் என்பதால், அதை ஈடுசெய்யும் வகையில் அவர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பு களிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற உரிமைக்குரல் – சமூகநீதிப் புரட்சிக்குரல் எழுப்
பினர். இவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயம் உணரப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, சட்ட ரீதியாக அளிக்கப்பட்டது.

எனவே, இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான ஒரு சட்டரீதியான ஏற்பாடே தவிர, அது ஒன்றும் பிச்சையல்ல; அது ஒடுக்கப்பட்டோருக்கான, உரிமை மறுக்கப்பட்டோருக்கான உரிமை!

இடஒதுக்கீட்டுக்கு எது அடிப்படை?

இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டபின் எதனடிப்படையில் அதைத் தருவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது சமுதாயநிலை, கல்வி, பொருளாதாரம் போன்றவை கருத்துகளாகக் கொள்ளப்பட்டன. பொருளாதாரம் என்பது நிலையானது அல்ல. அது மாறக்கூடியது. இன்று ஏழை நாளை பணக்காரன் ஆக முடியும். இன்று பணக்காரனாக உள்ளவன் நாளை ஏழையாக மாற வாய்ப்புண்டு. எனவே, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று உறுதியாகக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.

சமுதாயநிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் இருப்பது. ஜாதியாலும், பிறப்பாலும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் தலைமுறைத் தலைமுறையாய் பாதிக்கப்பட்ட சமுதாயப் பின்னணி கொண்டவர்கள் என்பதால், இடஒதுக்கீட்டிற்கு சமுதாய நிலை முதன்மையாகக் கொள்ளப்பட்டது. சமுதாய நிலை, பிறப்பு அடிப்படையில் கல்வியும் மறுக்கப்பட்டதால் சமுதாயம், கல்வி ஆகிய இரண்டும் இடஒதுக்கீட்டிற்கான அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. யார் ஒருவர் சமுதாய நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ளார்களோ அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட போதே, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கக்கூடாது என்று; சமூகநீதியில் அக்கறையுள்ளவர்களால் முடிவு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் கல்வியையும், வேலைவாய்ப்பையும் தங்களுக்கு மட்டுமே உரியவையாக வைத்திருந்த ஆதிக்க ஜாதியினர் இந்த இடஒதுக்கீட்டு ஏற்பாட்டைத் தீவிரமாய் எதிர்த்தனர். அதற்கு என்னென்ன தடைகளை உருவாக்க முடியுமோ அதையெல்லாம் தொடர்ந்து உருவாக்கி வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் போட்டியிட்டு, கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வரும் நிலை ஆதிக்க ஜாதியினரை வெறுப்புக் கொள்ளச் செய்தது. இடஒதுக்கீடே கூடாது, அது தகுதித் திறமையைப் பாதிக்கும். தகுதியுள்ளவர்களின் வாய்ப்பைப் பாதிக்கும். எனவே, இனி இடஒதுக்கீடே கூடாது. இன்னும் எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு கொடுப்பது? என்று பொங்கி எதிர்த்தனர்.

9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணை

அப்படிப்பட்டச் சூழலில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், வருமான வரம்பு வைத்து, வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம் என்று அவரைச் சம்மதிக்க வைத்து, 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையைப் பிறப்பிக்கச் செய்தனர். தமிழர் தலைவர் தலைமையில் திராவிடர் கழகம் அந்த ஆணையைக் கடுமையாக எதிர்த்துப் போராட்டம் நடத்தியது. மக்கள்
எம்.ஜி.ஆரை வெறுத்துத் தேர்தலில் தோல்வியுறச் செய்தனர். அதன்பின் தமிழர் தலைவர் அவர்களின் ஆலோசனையை ஏற்று அந்த ஆணையை ரத்து செய்தார். வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கைப் படுதோல்வி அடைந்ததால் ஆதிக்க ஜாதியினர் ஆத்திரம் அடைந்தனர். இடஒதுக்கீட்டுக்கு எதிராய் மீண்டும் போராட்டங்கள் நடத்தினர். ஆனால், பெரியாரால் விழிப்பூட்டப்பட்ட மக்கள் மத்தியில் அவர்கள் தோல்வி கண்டனர்.

பி.ஜே.பி. ஆட்சியில் பொருளாதார அடிப்படை

தாங்கள் முழுக்க முழுக்க அனுபவித்து வந்த வேலைவாய்ப்புகளைப் பட்டியல் பிரிவினரும், பிற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீட்டின் மூலம் பங்குபோட்டதாலும், தங்களுக்கு இடஒதுக்கீட்டுப் பயன் கிடைக்காமல் இருப்பதாலும், எப்படியாவது இடஒதுக்கீட்டுப் பயன் அடைய குறுக்கு வழியில் சதி செய்து, ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியைப் பயன்படுத்தி பொருளாதார அடிப்படையில் முற்பட்ட ஜாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டைச் சட்டமாக்கினர்.

இது சமூகநீதி அடிப்படையில் மிகப்பெரிய மோசடியாகும். ஆண்டுக்கு 8 இலட்சத்திற்கு மேல் வருவாய் பெறுகின்றவர்கள் ஏழைகள் என்று மோசடியாக ஒரு வருமான எல்லையை வகுத்து 10% இடஒதுக்கீட்டைப் பெற்றனர். 4% மக்கள் தொகையைக் கொண்டவர்கள், பொருளாதார அடிப்படை என்ற மோசடி மூலம் 10% இடஒதுக்கீட்டைப் பெற்று வருகின்றனர். இதன் விளைவாய் தற்போது உயர் பதவிகளையெல்லாம் சூழ்ச்சியாக அபகரித்து வருகின்றனர்.

பொருளாதார அடிப்படை கூடவே கூடாது

பொருளாதார அடிப்படை மூலம் பெரிய முதலாளிகளின் பிள்ளைகள் கூட இடஒதுக்கீட்டைப் பெறும் அநியாயம் தற்போது அரங்கேறி வருகிறது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் பொருளாதார அடிப்படையில் நலிந்தவர்கள் என்ற பெயரில் பார்ப்பனர்கள் பதவிகளை அபகரிக்கும் மோசடி தற்போது வெளியாகியுள்ளது.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பணிகளுக்கான குடிமைப் பணிகள் தேர்வு 2025இல் EWS (பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு) இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான 104 பேரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆய்வு செய்துள்ளது. இதில் அய்.அய்.டி. பட்டதாரிகள்,  ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான கட்டணம் வசூலிக்கும் நகரத்தின் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும் வணிகக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பிரபலமான குடிமைப்பணிப் பயிற்சி மய்யங்களில் (64.4%) பயின்றவர்கள், தனியார் பள்ளிகளில் (44.4%) படித்தவர்கள், தொழில் நடத்தும் பெற்றோர்களைக் கொண்டவர்கள் (26.9%) மற்றும் பெருநிறுவனத் துறையில் (9.6%) பணிபுரிந்தவர்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வில் 958 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் உயர்ஜாதி ‘ஏழை’களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தேர்ச்சி பெற்ற 104 விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகப்பக்கங்கள், பயிற்சி மய்யப் பதிவுகள் மற்றும் பள்ளி-கல்லூரி விவரங்களை இந்த நாளிதழ் ஆய்வு செய்தது.

குறைந்தது 67 விண்ணப்பதாரர்கள் டில்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள பிரபலமான பயிற்சி மய்யங்களில் (எ.கா: வஜிராம் & ரவி, வஜிராவ் & ரெட்டி, மற்றும் திருஷ்டி அய்.ஏ.எஸ்) பயின்றுள்ளனர்; இங்கு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ. 2.65 லட்சம் வரை இருக்கலாம். மொத்தத்தில், 104 விண்ணப்பதாரர்களில் குறைந்தது 84 பேர் புகழ்பெற்ற பயிற்சி மய்யங்களில் முறையான குடிமைப்பணிப் பயிற்சியைப் பெற்றுள்ளனர்; இவர்களில் பலர் ஃபோரம் அய்.ஏ.எஸ், நெக்ஸ்ட் அய்.ஏ.எஸ், கிங் மேக்கர்ஸ் அய்.ஏ.எஸ் மற்றும் யூ.பி.எஸ்.சி வாலா போன்ற மய்யங்களில் பயின்றுள்ளனர்.
அரசு அல்லது பல்கலைக்கழகம் நடத்தும் பயிற்சித் திட்டங்களில் கலந்துகொண்டவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. சில பயிற்சி மய்யங்கள் கல்வி உதவித்தொகைகளை வழங்கினாலும், அவை வரையறுக்கப்பட்ட அளவிலேயே உள்ளன.

குறைந்தது 46 விண்ணப்பதாரர்கள் தலைநகர் டில்லியைச் சுற்றிய பகுதிகளிலும், லக்னோ, ராய்ப்பூர் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற மாநிலத் தலைநகரங்களிலும் உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துள்ளனர் என்பதை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு கண்டறிந்துள்ளது.

குறைந்தது 28 விண்ணப்பதாரர்களின் பெற்றோர்கள் சொந்தமாகத் தொழில் நடத்துகின்றனர். கடைகள் மற்றும் வர்த்தகம் முதல் எஃகு உற்பத்தி (steel fabrication), ஜவுளி மற்றும் இனிப்புத் தயாரிப்பு வரை பல்வேறு தொழில்கள் இதில் அடங்கும். இக்குடும்பங்களில் குறைந்தது அய்ந்து குடும்பங்கள் தேசியத் தலைநகர் பகுதியிலும், ஒன்று மாநிலத் தலைநகரிலும், மற்ற எட்டு குடும்பங்கள் பல்வேறு மாவட்டத் தலைமையிடங்களிலும் உள்ளன. யு.பி.எஸ்.சி. தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பு, குறைந்தது 10 பேர் தனியார்த் துறையில் (பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய மென்பொருள், கட்டுமான நிறுவனங்கள் உட்பட) பணிபுரிந்து வந்தனர்; இவர்களில் சிலர் நல்ல ஊதியத்தைப் பெற்று வந்தனர்.

தேர்ச்சிப் பெற்ற 104 பேரில் குறைந்தது 14 பேர் அய்.அய்.டி.களிலும், குறைந்தது மூவர் தேசியத் தொழில்நுட்பக் கழகங்களிலும் (NIT) இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஆவர். 27 பேர் டில்லி பல்கலைக்கழகத்திலும், மூவர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (JNU) பயின்றவர்கள் என்று ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் தரும் தகவல் கூறுகிறது.

இவர்கள் எல்லாம் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட ஜாதி ஏழைகளா? இது எவ்வளவு பெரிய மோசடி! இந்த மோசடியைத் தொடர்ந்து அனுமதிக்கலாமா?

மோசடிச் சட்டம்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை மீறி, உருவாக்கப்பட்டது இச்சட்டம். இந்தச் சட்டத்திற்கு எதிரானது தமிழ்நாடு தான் என்பது உறுதியாகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தான் இதில் தெளிவாக இருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தெளிவான முடிவெடுத்தது. சமூகநீதியில் அக்கறை கொண்ட சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனால், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் கூட இதில் பா.ஜ.க.வின் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். இது வரலாற்றில் நடத்தப்பட்ட பெருந்தவறு மோசடி! அதனுடைய விளைவு தான் இந்த அநியாயங்கள்.

தமிழர் தலைவர் கண்டனம்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இத்தகைய மோசடியை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது கண்டன அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அறிவித்துள்ளார்.  குடிமைப்பணித் தேர்வுகளில் நடந்துள்ள இந்த மோசடி குறித்து விசாரிக்க வேண்டுமென்று கல்வியாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், உண்மையில், பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பதே சமூகநீதித் தத்துவத்துக்கு விரோதமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். சட்டப்படி இந்த ‘அரிய வகை உயர்ஜாதி ஏழைகளுக்கான’ இடஒதுக்கீடு அறவே அகற்றப்பட வேண்டும்.

இப்போது அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ்., தேர்வுகளில் நடந்துள்ள இந்த மோசடி குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஏமாற்றியவர்களின் தேர்ச்சி ரத்து
செய்யப்பட வேண்டும். இவர்கள் தான் நாளை இந்த ஆட்சியை நடத்தக் கூடிய பொறுப்பை ஏற்கக் கூடியவர்கள் என்பது பொது ஒழுக்கத்துக்கும் நேர்மையான நிர்வாகத்துக்கும் உகந்ததா? கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்
பட்டுள்ள நியமனங்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் நுழைய விடாமல் உறுதியாக இருந்த தி.மு.க. அரசு!

இது நீட் தேர்வை விட மோசமானது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை நசுக்கும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டை எந்தவிதக் குழப்பத்திற்கும் இடம்கொடாமல் ஒழித்துக்கட்ட வேண்டும்.

கடந்த அய்ந்தாண்டுகள் நடைபெற்ற தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் “திராவிட மாடல்” அரசு இந்தப் பிரச்சினையில் மிகவும் உறுதியாக நின்று சரித்திரம் படைத்தது. ஒருபோதும் தமிழ்நாட்டில் உயர்ஜாதியினருக்கான பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீட்டுக்கு இடமே இல்லை என்பதில் உறுதியாக இருந்தது.

தமிழ்நாட்டு புதிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!

அந்த நிலைப்பாட்டிலிருந்து தற்போதைய, புதிய தமிழ்நாடு அரசும் கொஞ்சமும் மாறிவிடக் கூடாது! இது வெகுமக்களான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் பிரச்சினை! ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது, இதில் மாற்றத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று பார்ப்பன உயர்ஜாதியினர் குறியாக இருக்கின்றனர். இந்த இடஒதுக்கீடு எப்படி மோசடிக்கு வழிவகுக்கக் கூடியது என்பதற்குக் கண் முன்னே இன்று ஆதாரம் கிடைத்துள்ளது. எனவே, மிகுந்த கவனத்துடன் இந்த அரசும், “குறிப்பாக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களும் மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டுவது அவசியமாகும்!” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார், வழிகாட்டியுள்ளார்.

எனவே, குறுக்கு வழியில் சூழ்ச்சியாய்க் கொண்டுவரப்பட்ட இந்த அநியாயச் சட்டத்தை இரத்து செய்து, கல்வி, சமூகநிலையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட, மக்கள் ஒருங்கிணைந்து போராடி வெற்றிபெற வேண்டும். இது நமது கட்டாயக்கடமை!