Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்நாட்டுக்கு பி.ஜே.பி. அரசின் துரோகங்கள்!நூல் தயார்!

1.      கே: மக்கள் நலத் திட்டங்களுக்கு  மாநில அரசு செலவிடுவதைக் கண்டு கொதித்து, தன் எதிர்ப்பைக் காட்டியுள்ள உச்சநீதிமன்றத்தின் கருத்து ஏற்புடையதா?

– வெ.கருப்பசாமி, அருப்புக்கோட்டை

        ப : ஏற்புடையதல்ல. எளிய மக்கள் – குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டோரின் வாழ்வில் ஒருவகை உதவி என்பதை, மக்கள் மகிழ்ச்சியோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். ‘ஒருவரின் செலவு, மற்றவரின் வரவு’ என்பது பொருளாதார வளத்தின் வெளிப்பாடு என்று, ‘கீன்ஸ்’ என்ற பொருளாதார நிபுணரின் கருத்தை அறியாத நீதிப்போக்கு இது.  மக்களை விட்டு விலகியவர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. இலவசங்கள் என்று இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

2. கே : உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பார்ப்பனர் சார்புடைய நிகழ்வில், பகுத்தறிவாளர்கள் பற்றி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து, தன்னுடைய வன்மத்தைக் காட்டியுள்ளதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

– ம.லாரன்ஸ், திண்டிவனம்

        ப: ‘அவரின் உண்மை முகம் எப்படிப்பட்டது என்பதை அவர் காட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்.காரரின் முகம் அது! துரோணாச்சாரி குரு எப்படி நடந்து கொண்டார் என்பதை, பாதிக்கப்பட்ட ஏகலைவன்களால் தானே உணர முடியும்? துரோணப் பரம்பரைகளுக்குப் புரியாது. காலம் அதைக் கற்றுக் கொடுக்கும்!

3.     கே : மயிலாடுதுறை அருகே கிடைத்துள்ள அதிக அளவிலான அரிய தமிழ்ச் செப்பேடுகளை உலகப் புராதனச் சின்னமாக ஏற்க, ஒன்றிய அரசு விண்ணப்பிக்காததால் யுனெஸ்கோ அங்கீகாரத்தை இழந்துள்ளோம். இப்படிப்பட்ட தமிழ் விரோத பா.ஜ.க. அரசு எப்படி தமிழ்நாட்டில் வாக்குக் கேட்கிறது?

– மூ. கதிரேசன், வெங்கல்

        ப : நல்ல கேள்வி. இதை மக்கள் மன்றத்துக்கு வீடுதோறும் – இதுபோன்ற வஞ்சகத்தைத் தோலுரித்துக் காட்டும் பிரச்சாரம் பெருமழை போன்று பெய்யட்டும் – தேர்தல் நேரத்தில்!

4.     கே : அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவையே ஏற்கமுடியாது என்று டிரம்ப் கூறியுள்ளது எந்த அடிப்படையில்?

– சு.புண்ணியகோட்டி, செங்கை

        ப : அது அவருக்குத் தான் வெளிச்சம், நானே ராஜா – எல்லாமும் நானே என்ற – என் ஆட்சி என்ற – ஒரு பேரரக்கனின் புலம்பல்.

5. கே : தஞ்சை மாநாடுகள் ஏற்படுத்திய எழுச்சியை, அப்படியே வீடுதோறும், வீதிதோறும் மக்களிடம் விழிப்பூட்ட, தேர்தலில் பிரச்சாரமாகக் கொண்டு செல்ல வேண்டியது கட்டாய
மல்லவா?

– எம். பிரபாகர், பட்டுக்கோட்டை

      ப : நம் கடமையைக் கூறும் உங்களுக்கு நன்றி.

6.     கே : ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த துரோகங்களைத்
தொகுத்து, சிறுநூலாக மலிவு விலையில் மக்களிடம் கொண்டு செல்வீர்களா?

– துரை. வேலன், வேலூர்

        ப : நூல் தயாராகிக் கொண்டுள்ளது.

7.     கே : “உத்தரப்பிரதேசம் வேகமாக வளர்ந்து வரும் மாநிலம்” என்று ஒரு பக்க விளம்பரம் தமிழ்நாட்டுச் செய்தித்தாள்களில் வந்துள்ளதன் நோக்கம் என்ன?

– எஸ். திலீபன், சென்னை

        ப : உத்தரப்பிரதேசம் எதில் வளர்ந்து வரும் மாநிலம் என்பதே நடுநிலையாளர்கள், அறிவியலாளர்கள் கேள்வி!

8.     கே : ஜெயலலிதாவை மிக உயர்ந்த தலைவர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளதையும், தி.மு.க. மீது ஊழல் கறை யைப் பூசும் ஒன்றிய அரசின் முயற்சியையும் எப்படிப்
பார்க்கிறீர்கள்?

– ஆர்.முகுந்தன்,ராணிப்பேட்டை

        ப : சென்ற தேர்தல் ஜெயலலிதா பிறந்த நாளில் வரவில்லை. இப்போது கூட்டணியோடு தேர்தல் வருவதால், தேர்தல் பரப்புரையில் இது ஒரு “பீடிகை – அவ்வளவே! ‘லேடி சொன்ன மோடி’ பேசுகிறார்!