Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரின் போர் முறை

பெரியார் நடத்திய போர் என்பது வழக்கமாக குறிப்பிடும் தனி மனிதன் அல்லது சமூகம் அல்லது நாடு அல்லது கண்டங்களுக்கு இடையே நடைபெறும் போர் பற்றியது அல்ல.

மனிதத்துக்கு எதிராய் மனித குலத்தின் மாண்புக்கு எதிரானவைகளை எதிர்த்தழிக்கும் கருத்தியல் போரே “பெரியாரின் போர்” ஆகும்.

ஆக, எந்த ஒன்றை எதிர்த்து நடக்கும் செயலும் எதிரான காரணங்களை எதிர்த்து நின்று போராடுவதாகும். மனிதச் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் ஒன்றை அழித்திட அல்லது அப்பணியில் முழுவெற்றி பெற்றிட மூலகாரணத்தைக் கண்டு அழிப்பதே முழுவெற்றியாகும். அதுவே, அறிவார்ந்த அணுகுமுறையும் ஆகும். ஆக, மூலத்தைத் தாக்குவதே “பெரியாரின் போர் முறை” ஆகும்.

தந்தை பெரியார் மனிதப்பற்றே ஏற்கத்தக்க பற்று என்று ஆய்ந்தறிந்து உரைத்து, எனக்கு மனிதப்பற்றைத் தவிர வேறு பற்றில்லை என்று பிரகடனப்படுத்தினார். இக்கருத்தானது உலகளாவிய கருத்துகளில் உச்சமான கருத்து என்றால் மிகையில்லை. மனிதப்பற்று மட்டுமே எனது பற்று என்பது மனிதனை – மனிதத்தை – மனித நேயத்தை அளவிடும் உயர்ந்த எல்லை என்றால் மிகையில்லை.

தந்தை பெரியார் தான் வாழும் நாட்டில் மனிதத்திற்கு எதிரானவைகள் அனைத்தையும் எதிர்த்து மனிதம் காத்திடத் துணிந்தார்.

மனித நேயத்திற்கு எதிரான ஜாதி, மதம், மொழி, இனம், நாடு, ஆட்சி அதிகாரம், நீதி, உணவு, உடை, வாழிடம், பொருள், கல்வி, பொது உரிமைகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் மனிதர்கள் சமத்துவமின்றி பலநூறாக பிரிக்கப்படும் கொடுமை. மானங்காக்க உடலில் உடையணிவதிலும் ஆதிக்கம், உழைத்தால் கேவலம் எனும் கொடுமையிலும் கொடுமை. இறப்பிற்குப் பிறகும் வேற்றுமை, வேற்றுமையிலும் தொடக்கூடாத – பார்க்கக்கூடாத – அருகே கூட அனுமதிக்கக்கூடாத வெறித்தன வேறுபாடு. ஏன், ஆறு அறிவுக்குக் குறைவான விலங்குகள் இடம் கூட இல்லாத ஒற்றுமையின்மை என்ற  மனித சமூக வாழ்வியல் நடப்புகளைக் கண்டு கொதித்தெழுந்தார்.

உணவில்லை – உடையில்லை – நாடில்லை என்ற முழக்கங்களைவிட மனிதநேயமே இல்லை – ஏன் இவர்கள் மனிதர்களே இல்லை எனும் நிலைகண்டு இதனை மாற்றத் துணிந்தார். ஆம், மனிதனை மனிதனாக்கும் தொண்டே என் தொண்டு என்று பிரகடனப்படுத்தினார்.

மனிதன் மனிதனாக வாழ, மனிதனை மனிதன் மதிக்க, மனிதம் காக்கப்பட தடையினை பிறப்பு, ஜாதி, வர்ணம், மதம் போன்ற தடைகளெல்லாம் நேரடிக் காரணமாக இருக்கிறது. இவைகளை எதிர்த்து பெரியார் தனது மனிதநேயச் சிந்தனையை முன்னெடுத்து வெற்றியடைய விரும்பினார்.

தந்தை பெரியார், மானம் காக்க சிந்தித்ததால் அதற்குத் தடையாக, பிறக்கும் போதே ஜாதியுடன் மனிதன் பிறப்பதை அறிந்தார். இதற்கு மதமும், கடவுளும் என்பதை அறிந்தார். அதைப் பகுத்தறிவுப் பார்வை கொண்டு பகுத்தறிந்தார்.

முடிவில், ஜாதியை ஒழித்து மனித சமத்துவத்தை உருவாக்க நினைத்த பெரியார் மதத்தை எதிர்க்க வேண்டியிருந்தது. மதம் கடவுளால் உருவாக்கப்பட்ட ஒன்று என்றதும் கடவுள் நம்பிக்கையை எதிர்த்தார். கடவுள் என்பது ஓர் நம்பிக்கையாகவே இருந்தது என்றாலும் அது இல்லாதது மட்டுமின்றி – பிற மூடநம்பிக்கைகளுக்கு எல்லாம் மூலாதாரம் என்பதால் கடவுள் பற்றி தனது ஆழமான சிந்தனையைச் செலுத்தினர். அதன் விளைவாக கடவுள் நம்பிக்கையைக் கட்டமைக்க அறிவியல்பூர்வமான வகையில், உளவியல் அறிவோடு ஆரியர்கள் திராவிடர்களை அடிமை கொள்ள உருவாக்கியதைக் கண்டுபிடித்தார்.

கடவுள் நம்பிக்கையைத் திராவிடர்கள் மத்தியில் நிலைநிறுத்த பார்ப்பனர்கள் உருவாக்கிய தலைவிதி தத்துவம், ஆன்மா, 4 – வேதங்கள், 6 – சாஸ்திரங்கள், 14 – லோகங்கள், 18 – பெரும் புராணங்கள், 18 – சிறு புராணங்கள், 12 – ஆழ்வார்கள், 63 – நாயன்மார்கள், 48,000 ரிஷிகள், 60,000 – பிரகஸ்பதிகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், 43 இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகள், 4 – யுகங்கள், ஆறு தலைகள், 12 கரங்கள் உடைய தெய்வங்கள்,  9 கிரகங்கள், 7 நரகங்கள், சொர்க்கம், காமதேனு, கற்ப்பகத்தரு, நெருப்பாறு, மயிர்ப்பாலம் என இன்னோரன்ன கற்பனை செய்திட முடியாதவைகள் எல்லாம் கடவுளின் கட்டமைப்பு இயக்கும் நிலைகள் என்று உருவாக்கி, மனிதனின் மூளைக்கு விலங்கிட்டு, பகுத்தறிவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததனால் ஏராளமான மூடத்தனங்கள் உருவாக்கப்பட்டு திராவிடர் இனம் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

எந்த ஒரு மூடநம்பிக்கைக்கும் பார்ப்பனர்கள்ஆளாகி தன் காலத்தை, பணத்தை, வாழ்வை, எதிர்காலத்தை வீணாக்காமல் இருப்பதே மூடநம்பிக்கைக்கு அவர்களே கர்த்தாவாக இருப்பதை விளங்கிடலாம். அவர்களின் சூழ்ச்சியை நாம் அறியாமல் இருக்கவே, கடவுள் என்ற ஒரு நம்பிக்கையைப் பிம்பத்தை உருவாக்கி அவர்கள் செய்துவரும் மனிதச் சுரண்டல், அறிவுச்சுரண்டலைச் சாதுர்யமாக செய்து வருகின்றார்கள்.

இச்சூழ்ச்சியைப் பெரியார் அறிந்தமையால் நம் வீழ்ச்சிக்குக் காரணம் கடவுள் என்று
ஆய்ந்தறிந்து அதன் பெயரில் ஆயிரக்கணக்கான மூடத்தனத்தை உருவாக்கிய கொடுமையிலிருந்து திராவிடர்கள் விடுபட மூடத்தனத்திற்கு தாயான – பிறப்பிடமான கடவுள் நம்பிக்கைப் பற்றி ஆராய்ந்தார். இல்லாத கடவுள் நம்பிக்கையே  மற்ற மூடநம்பிக்கைகளின் தோற்றுவாயின் என்ற மூலத்தைக் கண்டு, கடவுளை மற மனிதனைநினை என்றார்.

எந்த ஒரு மாற்றமும் – கடவுள் இல்லை என்ற முடிந்த முடிவான தத்துவத்தின்
வெற்றியால் முடியும் என்றுரைத்தார்.

கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத இடமே மனிதர்களின் மானமும் – அறிவும் ஓங்கிடும் என்பதை அறிந்து அதே பிரச்சாரமாய் பெரியார் இருந்திட்டார். தனது போர்முறை என்பது மூலத்தைத் தகர்ப்பது என்று தெளிவோடும், துணிவோடும் பெரியார் தனது புரட்சிகரமான  பிரச்சாரத்தை நடத்தினார்.

மனித இன விடுதலைக்கு கடவுள் நம்பிக்கை எனும் அடிப்படை மூடநம்பிக்கையே முழுமுதற்காரணம் என்ற நிலையில் பெரியார் “மூலத்தைத் தாக்கும்” போர்முறையைக் கொண்டு புதியதோர் அறிவுடைய உலகை உருவாக்க பகுத்தறிவு இயக்கம் தொடங்கி முழக்கமிட்டார்.

மனிதஇன விடுதலைக்கு மூடநம்பிக்கைகளின் தோற்றுவாயாக இருக்கும் “கடவுள் நம்பிக்கையே” முழு முதல் மூலகாரணம் என்பதால் பெரியாரின் போர் முறை என்பது மூலத்தை அழிக்கும் போர்முறையாகையால் புதியதோர் அறிவுடைய உலகம் பார்க்க கடவுள் நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டும் என்று பெரியார் முழக்கமிட்டார். போராடினார், வெற்றிப்பாதையில் பயணிக்கிறார்.

பெரியாரின் போர்முறையைப் பின்பற்றி ‘பெரியார் உலகம்’ படைப்போம்!

பெரியாருக்குத் தோல்வியே கிடையாது. வெற்றி பெறுவதில் காலம் பிடிக்கலாம். இறுதி வெற்றி பெரியாருக்கே. ஆம், பெரியாரின் மூலத்தைத் தாக்கும் போர் முறையே முற்றான
வெற்றிக்கு அடிப்படை. இப்போர்முறையால் தான் ஆயிரக்கணக்கான சமூக மாற்றங்கள்,
வெற்றிகளைப் பெரியாரால் குவிக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலும் குவிய இருக்கிறது என்பதில் எந்த அய்யமும் இல்லை.