| வ |
லி என்பது எங்கோ எவரோ நினைக்க, இங்கு உங்களுக்கு வருவது இல்லை. வலி என்பது தானாகத் தோன்றுவதும் இல்லை. உங்களின் கவனக் குறைவால், உங்களின் அதீத அழுத்தங்களால், தொடர் பயன்பாடுகளால், எந்தவிதக் கவனிப்போ கேட்பாரோ அற்று இனியும் ஓய மாட்டோம் என்று கழுத்துத் தசைகள் ஒவ்வொன்றும் அழும் ஒப்பாரியே வலி. கழுத்து வலி என்பது இன்று இப்போது கணக்கெடுத்தாலும் பத்தில் பத்து பேருக்கு இருப்பதற்கும், அல்லது இனி வரும் காலங்களில் வருவதற்கும் நூறு விழுக்காடு சாத்தியம் உண்டு.
எப்படி என்றால்?
முழங்கால் அமைப்பு முறையே கழுத்துக்கும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால், முழங்காலை விடவும் கழுத்து முக்கியத்துவம் கொண்டது. காரணம், முதுகுத் தண்டு கழுத்தின் வழியே பயணித்து பின், முதுகின் இறுதி வரை சென்று உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் நரம்புகள் இணைப்பு கொடுத்து முடிகிறது. எனவே, கழுத்தின் தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ முதுகுத் தண்டைப் பாதிக்கும் என்பது தவிர்க்க முடியா உண்மை. எனவே, என்ன செய்தாலும் கழுத்தின் மீது மற்றவற்றை விடவும் கவனம் தேவை. சலூன் கடைகளில் நட்டு உடைப்பதும், மசாஜ் என்ற பெயரில் எல்லா திசைக்கும் சகட்டு மேனிக்கு அசைப்பதும் என்றைக்கும் சுகமானதாக அமையாது என்கிற எச்சரிக்கையோடு கழுத்தின் அமைப்பு முறையை அறிவோம்.
கழுத்து, மண்டை ஓட்டின் நீட்சியாய் ஏழு முதுகெலும்புகளோடு முடிகிறது. ஆனால், இதன் அசைவுத் தன்மை என்பது மூன்று திசைகளைக் கொண்டது. கீழும் – மேலும், வலதும் – இடதும், மற்றும் உங்கள் காது மடல் தோள்பட்டையைத் தொடுவது. இந்த மூன்று திசைகளுக்குள்ளும் எந்த அளவீட்டிலும் கழுத்து அசையும் தன்மை கொண்டது. இப்படி எல்லாத் திசைகளிலும் அசைக்கும் தன்மை வேண்டுமென்றால் அதற்கான இழுசக்தியும், எதிர்சக்தியும் சமமாக மற்றும் எல்லாத் திசைகளுக்கும் ஏதுவாக இருக்க வேண்டும். எனவே, கழுத்தைச் சுற்றியும் அதனுடைய எல்லா அசைவுகளுக்கும் தகுந்தாற்போல தசைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
முதுகெலும்புகளின் இடுக்கில் இருந்து நரம்புகள் வெளிவரும், அத்தோடு எலும்புகளுக்கு நடுவே முதுகுத்தண்டு பயணிக்கும். எனவே, இவற்றை முற்றிலும் மறைத்துப் பாதுகாக்க ஒட்டுக்கள் அங்கும் இங்கும் நிறைந்து கிடக்கும். முதுகெலும்புகளின் இடையில் இருந்து கைகளுக்குச் செல்லும் நரம்புகள் தான் பல்வேறு தருணங்கள் கழுத்து முதல் கை விரல்கள் வரை மின்சாரம் பாய்ச்சுவதாய், தொடர் வலியாய் இருப்பது; உங்கள் தசைகள் எல்லாம் ஓய்ந்து போய், பின்னர் எலும்புகளுக்கு மொத்தச் சுமையும் சென்று, அவற்றாலும் முடியாமல் இடையில் இருக்கும் மெத்தையை அழுத்தி, அவற்றால் சுமை தாங்கமுடியாமல், அதன் இருப்பைக் கடந்து பிதுங்கி வெளியில் வந்து அருகில் இருக்கும் நரம்புகளை அழுத்துவதே “டிஸ்க் பல்ஜ்” என்றும் அழைக்கிறார்கள்.
அது மட்டுமா?
நீங்கள் ஒவ்வொரு முறையும் தலையைக் கீழே குனிந்து செல்போன் பார்க்கும்போதும் எவ்வளவு அழுத்தமும், சுமையும் உண்டாகுகிறது என்று தெரியுமா? உங்கள் தலை நேராக இருக்கும்போது 5 கிலோ எடையில் இருப்பது 11 டிகிரியில் 12 கிலோவாகவும், 30 டிகிரியில் 18 கிலோவாகவும், மாறுகிறது. இது எத்தனைப் பெரிய சுமை? இந்தச் சுமையை டிகிரியில் 22 கிலோவாகவும், 60 டிகிரியில் 27 கிலோவாகவும் எதிர்கொள்ளச் சுற்றியுள்ள தசைகளும், மூட்டும் எத்தனைப் பாடுபடும் என்று என்றைக்காவது யோசித்தது உண்டா?
பல வருடங்களாய்த் தொடர் துன்புறு
த்தலுக்கு உட்படுத்தி, எந்தவித கருணையும் காட்டாமல் இனியும் தாங்க முடியாமல் தசைகளும், எலும்புகளும் சிதைந்து காயமாகும்போது மட்டும் அதற்கு கருணைக் காட்டுவதும், மாங்கு மாங்கு என எண்ணெய்த் தேய்ப்பதும், உடற்பயிற்சி செய்வதும், மருந்துகளால், அமிலங்களால் மட்டுப்படுத்த நினைப்பதும், எப்படி நியாயமாகும்?
சரி, இத்தோடு நான் கீழே பார்க்கவே கூடாதா? போன் பயன்படுத்தவே கூடாதா? கழுத்தைச் சுற்றி எப்போதும் கழுத்தை மறைக்கும் மெத்தை அணிந்து கொள்ளவா? இல்லை பல நிறங்களில் கிடைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளவா? பல ஆயிரம் கொடுத்து தலையணை மாற்றவா? மாத்திரை மருந்தென ஆயிரங்களில் செலவு செய்யவா? என்ன செய்யட்டும்? என்னவேண்டும் என்றாலும் செய்கிறேன் என்று கேட்டால்.
“தாலாட்டு கேட்டால் தங்கத் தொட்டில் வாங்கி கொடுக்கவா?” என்று கேட்பதற்கு நிகரானது. உங்கள் உடல் உங்கள் வளத்தை நம்பிக் கிடையாது. உங்கள் உடல் உங்களை நம்பி இருக்கிறது. அழும் குழந்தைக்கு ஆசுவாசப்படுத்தும் தாயின் வருடல் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் உங்களுக்காக அயர்ந்து, துவண்டு நிற்கும் உங்கள் தசைகளைத் தயார்படுத்துதல். உங்கள் தசைகள் எந்த நிலையிலும் உங்களைத் தடுப்பதே கிடையாது. அவற்றின் இயலாமையே உங்களைத் தடுக்கிறது.
என்ன செய்யலாம்?
இயன்முறை மருத்துவத்தைப் பொருத்த
வரை, உங்களை எந்த எல்லைக்குள்ளும் அடைக்கும் துறை இல்லை, உங்கள் எல்லை
களை விசாலமாக்குவதே எங்கள் இலக்கு, உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ செய்யுங்கள், எத்தனை மணி நேரம் வேண்டுமோ கணினி முன் அமருங்கள், எத்தனை மணி நேரமோ பயணம் செய்யுங்கள், எத்தனை மணி நேரமோ தலைக்கவசம் அணிந்து பயணியுங்கள், எத்தனை மணி நேரமோ குனிந்து படியுங்கள்.
ஆனால், எல்லாம் செய்த பின்னும், எதுவும் செய்யும் முன்னும் உங்கள் கழுத்துத் தசைகளைத் தயார் செய்யுங்கள். உங்கள் கழுத்துத் தசைகள் நீங்கள் நினைக்கும்போது மட்டும் அல்ல எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும். அதற்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுங்கள். எத்தனை முறை நாம் தலைகளை உயர்த்தி மேலே பார்க்கிறோம்? அப்போது மேலே பார்க்க உதவும் தசைகள் வேலை செய்யாமல். கீழே பார்க்கும் தசைகள் தேவைக்கும் அதிகமாய் வேலை செய்யாதா? இந்தச் செயலின்மை தசைகளுக்கு இடையில் சமமின்மையைக் கொண்டு வராதா?
எப்போதும் தரையை நோக்கியே பார்ப்பதால், நமக்கே தெரியாமல் நம்முடைய அமைப்புமுறை மாறுகிறது. தலை எப்போதும் முன்னுக்கு வந்தும், தோள்பட்டைகள் எல்லாம் சற்றே குறுகியும் இருப்பதைப் பார்க்கிறோம். இது மொத்தமுமே தசைகளின் சமமின்மையே. என்ன பெயர்களோடு நம்முடைய வலிகளை அழைத்தாலும் நான் எல்லாவற்றுக்கும் சொல்வது கவனமின்மையும், கண்டு கொள்ளாததும் தான்.
எனவே, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தசைகளைத் தயார் செய்யுங்கள். ஒவ்வொரு ஓட்டுநரும், ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு கணினி வேலை செய்பவரும், ஒவ்வொரு சமையல் செய்பவரும், ஒவ்வொரு மாணவரும், இப்படி ஒவ்வொரு என்று எல்லாருக்கும் சொல்கிறேன், நான் மேலே சொன்ன மூன்று அசைவுகளையும் செய்ய முடியாமல் போனால், இல்லை, நான் மேல் சொன்ன ஏதாவது செயல்கள் நீங்கள் செய்தால் உடனே உடற்பயிற்சியைத் தொடங்குங்கள். உங்களுக்கான தனித்துவமான உடற்பயிற்சிகளைக் கண்டறிந்து உங்கள் தசைகளைத் தயார்படுத்துங்கள். வலியில்லா வாழ்வு கனவல்ல. உரிமை! உங்கள் அளவளாவலுக்கு தசைகள் காத்திருக்கிறது.
மனிதன் தோன்றியதில் இருந்து அவனோடு எவ்வித சமரசமும் இன்றி ஊனாய், உயிராய் உடன் இருப்பது வலி. எல்லாம் விதி, எல்லாம் முன்னரே எழுதப்பட்டது என்கிற பிற்போக்குத் தத்துவங்களை உடைத்தெறிய பெருந்துணை புரிந்ததும் அதுவே. அறிவியலில் ஏற்பட்ட பெரும் புரட்சிக்கான அடிப்படையே, வலியில்லா வாழ்வையும், மகிழ்ச்சியான வாழ்வையும் நோக்கி மனிதன் நடக்கத் துவங்கியது தான். ஆனால், இன்றளவும் அந்த வலியின் மீதான ஆராய்ச்சிகளும், மருத்துவ வடிவங்களும் புதுப் புது அவதாரங்கள் எடுத்த வண்ணம் தான் இருக்கிறது. கருவும், களமும் நமக்குள் இருக்க, காற்றில் விடை தேடிக் கொண்டு இருக்கிறோம். {
