Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வள்ளுவரைப்பற்றிபார்ப்பனப்புரட்டு-சு. ஒளிச்செங்கோ

திருவள்ளுவர் பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று, ஒரு பார்ப்பன வெறியர் பேசியதைத் திரு.க.அயோத்திதாசப் பண்டிதர் கேள்விக் கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய “நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை” என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதைக் கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாசப் பண்டிதர் இராயப்பேட்டைச் சாக்கிய பெளத்த சங்கத் தலைவராகயிருந்து தொண்டாற்றியவர். “தமிழன்” என்ற வார இதழை 1907இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் “பார்ப்பன வேதாந்த விவரம்” “வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம்” “நந்தன் சரித்திர விளக்கம்”, “நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை” “திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தா ரென்றும் பொய்க்கதை விபரம்” ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

அறிஞர் திரு.க.அயோத்திதாசப் பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பெளத்த சங்கத்தைப் பற்றித் திரு.வி.க. “அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று” என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம், திரு சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்பொழுது, “வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கல – சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்பொழுது கூட்டத்தில் கேட்டுக்கொண்டிருந்த அறிஞர் திரு.க.அயோத்திதாசப் பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக்கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு திரு.சிவநாம சாஸ்திரி “சரி, கேளும்” என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் ‘எம்.ஏ.’ ‘பி.ஏ.,’ படித்துப் பட்டங்களைப் பெற்று
உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்
களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு. க. அயோத்திதாசப் பண்டிதர் ‘தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர்’ என்று கேட்டார்.

திரு.சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாசப் பண்டிதர், ‘ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர்,
சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்து ஆனரபில். திரு.பி.அரங்கைய நாயுடும். திரு.எம்.வீரராகவாச்சாரியாரும், அறிஞர் திரு.க.
அயோத்திதாசப் பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

திரு.சிவநாம சாஸ்திரியைக் கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு. சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவி விட்டார்.

வையம் போற்றும் நூலாம் “திருக்குறளை”த் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றித் திரு. சிவநாம சாஸ்திரியார் இழிவுபடுத்திப் பேசித்தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல; பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதைத் தம் தொழிலாகத் தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

இத்தமிழ்நாட்டில் அறிவுச் சுடர் தந்தை பெரியார் தோன்றாதிருப்பின் இந்நாடு எந்நிலை அடைந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமோ!

எண்பத்தெட்டாண்டுகளை இனிதாய் முடித்து எண்பத்தொன்பதாமாண்டைக் கனிவாய்க் காணும் தந்தை பெரியார் வாழ்க இனிது!

– தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் 1968