Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நிலாவில் ஜாதி ஒழிப்பு-முனைவர் வா.நேரு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா திடீரென்று வெனிசுலா நாட்டின் அதிபரையும் அவரது மனைவியையும் வெனிசுலா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குக் கடத்தி, சிறை பிடித்தது. கேட்டால் வெனிசுலாவில் ஊழல் செய்கிறார் அதிபர் என்று அமெரிக்கா சொன்னது. உண்மையில் எண்ணெய் வளம் மிக்க வெனிசுலா, ஈரான் மற்றும் அரபு நாடுகள் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. அதற்காகப் பல திட்டங்களைத் தீட்டுகிறது. தன்னுடைய படை வலிமையால் உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. ரஷ்யா இப்போது பலமில்லாத நிலையில், அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் ஒரு வல்லரசாகச் சீனா இருக்கிறது. இந்த இரு நாடுகளும்தான் உலக நாடுகளின் போக்கை இன்றைக்கு கட்டுப்படுத்துகின்றன.

 இவர்கள் பூமியை மட்டுமல்ல, நிலாவையும் கட்டுப்படுத்த போட்டியிடுகிறார்கள். 1969ஆம் ஆண்டு நிலவில் மனிதர்களை வெற்றிகரமாக இறக்கியது அமெரிக்கா. ஏறத்தாழ  50 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ச்சியாக நிலவிற்கு மனிதர்களை அனுப்பும்  நாசாவின் ஆர்டெமிஸ் II &  நாசாவின் ஆர்டெமிஸ் III போன்ற திட்டங்களை அமெரிக்கா வகுத்திருக்கிறது. 2028இல் அமெரிக்க வீரர்கள் நிலாவில் இறங்கி அதன் மேற்பரப்பை எல்லாம் ஆய்வு செய்வார்கள் என்று நாசா அறிவித்திருக்கிறது.

 அமெரிக்காவின் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ஆர்டெமிஸ் திட்டங்கள் வெறுமனே அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல. பின் எதற்கு? மனிதர்கள் நிலவில் போய்த் தங்க இயலுமா? அப்படித் தங்குவதற்கான நிலம் இருந்தாலும் மனிதர்களுக்குக் குடிக்கவும் மற்ற உபயோகங்களுக்கும் தண்ணீர் கிடைக்குமா? அங்குத் தண்ணீர் எந்த வடிவத்தில் உள்ளது? அதை எப்படி மனிதர்களுக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது என்று பல சோதனைகளை உள்ளடக்கியதாக இந்தப் பயணம் இருக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

குடியேற விரும்புவது மட்டுமல்ல,  நிலாவில் இருக்கும் கனிம வளங்களைத் தோண்டி, தங்கள் நாட்டிற்குக் கொண்டு வர விரும்புகிறார்கள். அதற்கு  நிலாவில் டேராப் போட வேண்டும். எனவே, நிலாவில் நிரந்தமாகத் தங்குவதற்கான ஒரு தளத்தை அமைப்பதும் அமெரிக்காவின் நோக்கம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

இப்படி நிரந்தரமான ஒரு தளத்தை அமெரிக்கா மட்டும் அமைக்கட்டும் என்று மற்ற உலக நாடுகள் சும்மா இல்லை. மற்ற நாடுகளும் இப்படி ஒரு தளத்தை அமைப்பதற்காக, அதன் மூலம் நிலாவில் இருக்கும் கனிம வளங்களைக் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சீனா, இந்தியா முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜப்பான், மற்றும் அய்ரோப்பிய நாடுகள் போன்ற நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன. நமது பூமியில் மிக அரிதாக உள்ள ஹீலியம் 3 என்று சொல்லக்கூடிய அரிய பொருள் நிலாவில் இருக்கிறது. அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு அந்த ஹீலியம் 3 என்பது மிகவும் பயன்படும் என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்றைக்குச் செயற்கை நுண்ணறிவு சர்வர்களை(கணினிகளை) குளிர்விக்க  நிறையத் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த ஹீலியம் 3 குவாண்டம் கணினிகளைக் குளிர்விக்கப் பயன்படும். அணுக்கரு உலைகளில் எரிபொருளாக இந்த ஹீலியம் 3 பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்கள். மீத்தேன், மோனாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சிலிகேட் ஆக்சைடுகள் மற்றும் சல்பேடுகள் போன்ற பல கரிம மற்றும் கார்பன் சார்ந்த மூலக்கூறுகள், தனிமங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர்.

 இப்படி நிலாவில் இருக்கும் தனிமங்களை, வளங்களைச் சுரங்கம் அமைத்துத் தோண்டி எடுக்கலாமா? என்பது பற்றிய கருத்துகளில் அறிவியலாளர்கள் வேறுபடுகிறார்கள். பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக விண்வெளியில் நடைபெற்ற மோதல்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் ஆவணமாக நிலா இருக்கிறது. அதனால் அதனை அழிக்கக்கூடாது, பாதுகாக்க வேண்டும் என்கின்றனர் சிலர்.

நிலாவில் போய், அங்கு இருக்கும் வளங்களைக் கொண்டு வருவதில் அரசாங்கங்கள் மட்டுமல்ல, சில தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்த அளவில் அவர்களின் ஒரே  நோக்கம் லாபம் மட்டும்தான். எலான் மாஸ்க் போன்றவர்களின் தனியார் நிறுவனங்களை அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதிக்கிறது என்றால், சீன நாட்டினர் அய்ந்து தனியார் நிறுவனங்களுக்கு நிலவில் சென்று ஆராய்ச்சி செய்வதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருக்கும் தனியார் நிறுவனங்களும் இணையப்போகிறார்கள்.

 அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விமானத்தில், சென்னையில் இருந்து சென்றால் 16 மணி நேரம், 17 மணி நேரம் ஆகும். மிக நீண்ட பயணமாக இருக்கும். இந்தப் பயணத்தில், இடையில் இலண்டன் அல்லது துபாய் போன்ற இடத்தில் விமானங்கள் நிற்கின்றன. சில மணி நேரம் நின்று பிறகு மறுபடியும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் பயணிகளோடு செல்கின்றன. செல்லும் பயணிகளுக்கும் துபாய், இலண்டன் போன்ற இடங்களை இறங்கி சுற்றிப் பார்க்காவிட்டாலும் இலண்டன், துபாய் விமான நிலையங்களைப் பார்த்த, அந்தச் சூழலைப் பார்த்த ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. விமானங்களுக்கும் எரிபொருள் போன்றவை நிரப்புவதற்குக் கொஞ்ச நேரம் இப்படி நின்று செல்வது வசதியாக இருக்கிறது. அதுபோலச் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முயற்சி செய்யும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நிலவை மனிதர்கள், ராக்கெட் போன்றவை நின்று மறுபடியும் செல்லும் இடங்களாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்போகிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. அப்படி ஏற்பட்டால் சென்னை விமான நிலையத்தில் இருப்பது போன்ற பல கடைகள் நிலாவில் திறக்கப்படக்கூடும். நிலாவில் கடை வைக்கவும் போட்டி ஏற்படக்கூடும்.

தரையில் இருக்கும் பெட்ரோல் போன்ற வளங்களை எடுப்பதற்காகவே உலகில் போர்கள் இப்போது நடைபெறுகின்றன. நிலாவில் இருக்கும் கனிம வளங்களை எடுப்பதற்காக எதிர்காலத்தில் எப்படி எப்படி எல்லாம் போர்கள் நடைபெறும் என்பது இப்போது தெரியவில்லை.தனியார் நிறுவனங்கள் இந்தப் பூமியில் அளவிற்கு அதிகமாகச் சுரங்கங்களைத் தோண்டி, தோண்டி பூமியின் சுற்றுச்சூழலுக்கே மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் நிலாவில் போய்த் தோண்ட ஆரம்பித்தால், நாம் வாழும் பூமிக்கும், நிலாவிற்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியவில்லை.

இந்தியர்கள் பலர் அமெரிக்காவிற்குச் சென்றார்கள். பலர் நிரந்தரக் குடியுரிமை பெற்று வாழ்கின்றனர். ஆனால், அங்கு சென்ற பலர் இந்தியாவில் இருக்கும் இந்த இழி ஜாதிமுறையை, ஜாதி மனதை விட்டுச்செல்லவில்லை. ‘அமெரிக்காவில் ஜாதிகள்’ என்று புத்தகம் எழுதும் அளவிற்கு ஜாதிய மனப்பான்மை அங்கும் ஊடுருவி, அமெரிக்காவிலும்  ஜாதி  நஞ்சை விதைத்து வைத்திருக்கிறார்கள். இந்தியர்கள் நிலவிற்குச் சென்று குடியேறும்போதும் ஜாதியை விட்டு செல்வார்களா? இல்லை அங்கும் நாங்கள் கடவுளின் முகத்தில் இருந்து பிறந்தவர்கள், அதனால் நாங்கள் தான் உயர்ந்த ஜாதி என்னும் மூளைப்பிறழ்வு நிலையில்தான் செல்வார்களா என்னும் கேள்விதான் நம்மைப் போன்றவர்களுக்கு எழுகிறது.

அப்படித்தான் அவர்கள் நிலாவிற்கும் செல்வார்கள் என்றால் அங்கு ஜாதி ஒழிப்பைப் பேச தந்தை பெரியாரின் கருத்துகள்தான் தேவைப்படும். மனித நேயமே ஆட்சியாளர்
களின் அடிப்படையாக அமைந்து அதற்கு ஏற்றாற்போல் சட்டங்கள் இயற்றப்பட்டால்தான் மனிதர்கள் பூமியில் வாழ்ந்தாலும் நிலாவில் வாழ்ந்தாலும்  ஏன் பிரபஞ்சத்தில் எங்கு வாழ்ந்தாலும் நிம்மதியாய் வாழ்வார்கள். இயற்கை வளம் எல்லாம், எல்லோரும் வாழ்வதற்கான வளமாக அமையும்.