Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சநாதனத்தை செயலிழக்கச் செய் !கரசேவை கருத்தும் முற்போக்குமுழாம் பூசிய தரப்பும்!-* பேராசிரியர் மணிகோ. பன்னீர்செல்வம்

“அரசுப் பணிகளை தனியார் மையமாக்கு” என்பது போல தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறையை “அறங்காவலர் மயமாக்கு” என்னும் கோரிக்கையை
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழி வந்தவர்களும் “கோயிலை அடிமைப்படுத்துவதை நிறுத்து” எனும் முழக்கத்தோடு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து, வரலாற்று வழி வந்த கோயில்களை விடுவி என்ற கோரிக்கையை கால்சென்டர் குருஜி ஒருவரும் முன்வைத்து வந்தார்கள்.  இப்போது மூன்றாவதாக எழுந்து வரும் வாதம் இன்னொன்று. இந்து அறநிலையத்துறை செயல்பாடுகளால் தான் ஆகம அடிப்படை வாதத்தன்மையும் எல்லா வழக்காறுகளையும் வைதீக மயமாக்கும் போக்கும் சநாதனம் சர்வ வியாபகம் கொண்டதாகவும் மாறுகிறது எனவும், மாற்றத்தை விரும்பாத மாறு வேடமிட்ட கருத்து ஒன்று அறிவுச் சமூகத்திற்குள் புழங்க விடப்படுகிறது.

மேல் தோற்றத்தில் பெரியார் இயக்கத்தின் கருத்து போலவே தோன்றுகிற ஆனால்,
ஆர்.எஸ்.எஸ்ஸின் கர சேவை கருத்து இது. ஏன்? எப்படி? இந்த மூன்றாவது கருத்து முதல் இரண்டு கருத்துகளை ஓர் பாசாங்குக்காகக் கூட எப்போதும் எதிர்த்ததே இல்லை.தன்னை முழு புரட்சியாளனாக முற்றுரிமை கோரி இந்து அறநிலையத்துறை நிருவாகத்தின் மீது குண்டு மழை பொழிகிறது. இந்த “பாவனையான பகுத்தறிவு” அணுகுமுறை முயலுகிறது. இந்து அறநிலையத்துறை என்பது கோயில்களின் அசையும் அசையா சொத்துக்களைப் பொருளாதாரக் கோணத்தில் நிர்வகிப்பதோடு – எல்லா வளங்களையும் ஒருமுகப்படுத்தித் திரட்டுவதன் மூலம் ‘இந்து மதமே’ வலிமை அடைகிறது. பலன் பெறுகிறது என்கிறது. ஆம் இப்படி ஒரு கோணத்தில் வாதிடும் உரிமை ஒருவருக்கு உண்டு. ஆனால் இந்து மதத்தின் சநாதனத்தின் உயிர் இந்து அறநிலையத்துறையின் ஆற்றல் வாய்ந்த நிருவாக நடைமுறையில் இல்லை. அது அதற்கு வெளியே குடிமைச் சமூகத்திற்குள் அன்றாடம் புதுப்பிக்கப்படும் பார்ப்பனியச் சடங்கு வணிகம் மந்திரம் (பூஜை, யாகம்) மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான தனி ஒரு பார்ப்பனச் சடங்கு நிகழ்த்தினர்களாலும் தனியார் மடங்களாலும் தான் (காஞ்சி, அகோபில மடம்) சமூகத்தில் உயிர் தடித்து விடுகிறது அதை எதிர்த்து இந்த முற்போக்கு முழாம் பூசிய கருத்துத் தரப்பு எப்போதும் வாய் திறந்தது இல்லை புரட்சியை அரசு செய்யாது.  சிந்தனையாளர்களும் செயல்பாட்டாளர்களும் தான் இயக்க வடிவில் திரண்டு கிளர்ச்சி செய்ய வேண்டும்.

குடிமைச் சமூகத்திற்குள் குறுக்குக் கேள்வி கேட்காதது ஏன்?

அந்த சநாதனத்தின் ஊற்றுக் கண்ணை உலர்த்தி தூர்ந்து போகச் செய்ய வேண்டும்.அதற்கான வரலாற்றுப் பூர்வமான வேலைகளை பெரியார் இயக்கம் மேற்கொண்ட போதெல்லாம் அதை முழுவதுமாக எதிர்த்து மக்கள் பாவம் பற்றுக்கோடு இல்லாமல் தவிக்கிறார்கள் எனவே நம்பிக்கை அவர்களுக்கு தேவைப்படுகிறது என்று மார்க்சியர்களின் மேற்கோளை மேம்போக்காகக் காட்டி “சமய, சடங்கு வினைகளையே” (இறை நம்பிக்கை அல்ல) பற்றுக் கோடாகத் தொடரும்படி பார்த்துக் கொண்டவர்கள், இந்தக் கருத்தியல் கரசேவகர்கள் தாம். உண்மையில் இந்த எண்ணில் அடங்கா சடங்கு வினைகளைச் சமூகத்தில் நீட்டிக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருப்பவர்கள் சமூகத்தில் சர்வ வியாபகம் செய்யும் சநாதனிகளே ஒழிய, இந்து அறநிலையத்துறை நிருவாகம் அல்ல.ஒருவேளை இதுவரை கோயிலுக்குள் மேற்கொள்ளப்பட்டிருக்காத ஒரு சடங்கு வினையே அனைத்திந்திய இந்துத்துவச் சாய்வோடு ஓர் அர்ச்சகர்/பூசகர் புதிதாக மேற்கொண்டால் அதைத் தனது துறை சார் வழிகாட்டு நெறிகளின் படி தடுத்து நிறுத்த முனைவது இந்து அறநிலையத்துறை நிருவாகமே ஆகும்.

ஆனால் அதனையும் மீறி உனக்கு ஏன் அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறை என்றும் உன்னுடைய வேலை பொருளாதார நிருவாக நடைமுறைகளைக் கவனிப்பது மட்டும்தான் என்றும் வலியுறுத்தி வழக்கும் தொடுத்து புதியப் புதிய நடைமுறைகளை புகுத்த முனையும் இந்துத்துவ அரசியல் சாய்வு கொண்ட சநாதனிகளை இந்த “முதிரா முற்போக்கு கருத்து” என்றும் எதிர்த்ததும் இல்லை. ஏனென்று கேள்வி கேட்டதும் இல்லை. மொத்த அறநிலையத்துறையையுமே இல்லாமல் ஆக்கிவிட்டு அதற்குப் பதிலாக நல்மனம் கொண்ட அறங்காவலர்கள் மூலம் அதை மாற்றீடு செய்ய வேண்டும் என்கிற சநாதனத்தின் அரசியல் இயக்க முழக்கத்தை இந்த மூன்றாம் தர கருத்து குடிமைச் சமூகத்திற்குள் புகுந்து ஒருபோதும் குறுக்குக் கேள்வி கேட்டதில்லை.

வைதீகத்திற்கும் வழக்காறுகளுக்கும் வேறுபாடு தெரியாமல் சநாதனம் எல்லாவற்றையும் உள்ளிழுத்து ஆகம அடிப்படை வாதமாக செயல்படுத்துவது இந்து அறநிலையத்துறையின் நிருவாகம் கோயில்களின் பொருளாதார வல்லமையைக் கூட்டியதும் கேள்வி கேட்காத அரசுச் செயல்பாடுகளால் தான் காரணம் என்கிறது இந்த முகாம். ஆகம அடிப்படை வாதம் சார்ந்த நோக்கு கோயிலுக்குள் பணிபுரியும் (அரசுப் பணி) அர்ச்சகர்களுக்கு எங்கிருந்து வருகிறது – சமூகத்திலிருந்து தானே.

அங்கு நமது எதிர்வினை என்ன என்ற கேள்விக்கு இந்து அறநிலையத்துறை ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்கிறது அந்தச் சிந்தனை.

 இந்து அறநிலையத் துறையின் அச்சு நூல்கள் வைதீகத்தின் வலு சேர்ப்பா?

நூற்றுக்கணக்கான சநாதனம் பேணும் இதிகாச,புராணிக, தலபுராண நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் இந்து அறநிலையத்துறை அத்தகைய ‘அச்சுத்துறை’ சார்ந்த பங்களிப்பால் வைதீக கருத்துக்கே வலுச்சேர்க்கிறது என்கிறது அந்த ‘இளம்பிள்ளை வாதம்’. உண்மையில் ஏற்கனவே பல ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டதும் மரபுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் ஆகிய நடைமுறைகளையே அறிந்தேற்கப்பட்ட வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகே கோயில்களுக்குள் இந்து அறநிலையத்துறை நிறைவேற்ற முடியும். மாறாக புதிதாக அச்சிடப்பட்ட ‘பழம் நூல்கள்’ (யாப்பு – அணி இலக்கண அடர்த்தி கொண்டவை) கற்பனைகள், புனைவுகள் எதுவும் புதிய நடைமுறைகளைப் புகுத்தி விட முடியவே முடியாது. ஆனால் நாள்தோறும் வெளிவரும் நாளேடுகளும் தினமணி, தினமலர், குமுதம், கோகுலம் போன்றவை வெளியிடும் குரு பெயர்ச்சிகளும் சனிப் பெயர்ச்சிகளும் மற்றும் எல்லா சாதாரண கொண்டாட்டங்களையும் சநாதனமயப்படுத்தும் நிறுவனங்களால் தான் வைதீகம் வயிறு பெருத்து வளர்கிறதே அன்றி திட்டவட்டமான வரம்பெல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட இந்து அறநிலையத்துறையின் நடைமுறையால் அல்ல. ஒருவேளை ஒரு சநாதனி இந்து அறநிலையத்துறைக்குள் ஆட்சியில் சார்ந்து பொறுப்பேற்று உள் நுழைந்து இதுவரையிலான அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி வேறொரு திசைக்கு இழுத்துச் செல்லுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதனை ஆட்சியியல், அரசியல், நீதித்துறை சார்ந்தும் மேலதிகமாக சமூகவியல் சார்ந்தும் எதிர்வினை ஆற்றி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டுமே அன்றி, இந்து அறநிலையத்துறையைக் கலைத்து விட வேண்டும் என்கிற ‘ஒழுங்கவிழ்ப்பு’ச் (anarchy) சிந்தனை தமிழ்நாட்டுக்கு எந்த நல்விளைவையும் தராது.

விரைவாக கோயில்கள் தர்மகர்த்தாக்கள் வசமாவது தான், இந்த ஒழுங்கவிழ்ப்புச் சிந்தனையின் ஒரே விளைவாக இருக்கும். இந்து அறநிலையத்துறை வெளியீடாக வெளிவரும் “பழம் நூல்களுக்கு”ச் சரியான முறிய மருந்து தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை வெளியிடும் “கீழடி” பொருநை, வெளி நாகரிகம் இன்னும் பல, வரலாற்றுக் காலம் சார்ந்த நூல்களும் அதற்கு முந்தைய காலத்து நிலைமைகள் பற்றிய நூல்களும் தான்.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிட்ட அம்பேத்கரின் நூல்கள் (இலக்கு 100 தொகுதிகள்) இப்போதைக்கு 27 தொகுதிகள் போன்ற வெளியீடுகள் தான்.

அவற்றைச் சரியாக சமநிலைப்படுத்தி ஓட்டிச் செல்ல ஆட்சியியல் சார்ந்து திராவிட மாடலின் நாயகன் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வும், சமூகப் பண்பாட்டியல் சார்ந்து ஆசிரியர் கி.வீரமணி அய்யா தலைமையிலான திராவிடர் கழகமும் நீண்ட நெடிய பணி அனுபவத்தோடும் தொண்டறச் சக்தியோடும் (Ethical work force) தயார் நிலையில் தான் இருந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மேலும், தீவிரமாகவும் கூர்மையாகவும் குறிப்பாகவும் காலம், இடம் சார்ந்து எதிர்வினையாற்ற ஆளுமைகள் வேண்டுமென்றால் ஏராளமான வல்லுநர்கள், திறப்பறிவு பெற்றவர்கள் தமிழ் நாடெங்கும் விரைவில் பரவி இருக்கிறார்கள். இவர்களும் கூட இவ்விரு அமைப்புகளோடும் தலைமைகளோடும் நேரடியாகவும் சற்றே விலகி நின்றும் உறவில் தொடர்ந்து கொண்டிருப்பவர்களே ஆவார்கள்.

இந்துத்துவத்தையும் சநாதனத்தையும் வைதீகத்தையும் தீவிரமாக ஒருவர் எதிர்கொள்ள விரும்பினால் அவற்றுக்கு சமூகத்தில் சாலை முக்குகளில், தெரு ஓரங்களில் ஒரு மாபெரும் நெருக்கடியை,வாழ்வாதார நெருக்கடியை உருவாக்குவது தான் ஒரே வழி. இந்து அறநிலையத்துறை என்பது இந்து மதத்தின் வரலாற்று வெளிவந்த அடாவடித்தனங்களை, போக்கிரித்தனங்களை, ஊதாரித்தனங்களை கோயில்கள் என்கிற சட்டகத்துக்குள் கிடக்குப்பிடி போட்டு கட்டுப்படுத்த உருவான ஒரு திராவிட இயக்க (பார்ப்பனர் அல்லாதார் இயக்க) கண்டுபிடிப்பாகும்.