| ஆ |
வடி அண்ணா சிலை அருகில் 20.8.2008 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று. ஜாதி ஒழிப்புப் பணியைச் சமுதாயப் புரட்சியைச் செய்து வருகின்ற இயக்கங்கள் தி.க, தி.மு.க., என்பதை விளக்கியும் சென்னையில் செப்.6,7 ஆகிய தேதிகளில் நடைபெற விருந்தமாநில மகளிரணி, மாநில இளை ஞரணி, பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு ஆகியவற்றை விளக்கியும் உரையாற்றினோம்.
இக்கூட்டத்தில் அம்பத்தூர் பகுதி தோழர்கள் புகழேந்தி வினோதினி இணையர்கள் கூட்ட மேடையில் அடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொண்டனர். மறுநாள் சென்னையில் வளர்ந்து வரும் தொழில் அதிபர்களான எஸ்.விஜயகுமார் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து இயக்கக்கூடிய ஸ்பீடு மெயில் எனப்படும் கூரியர் நிறுவனத்தினைத் தொடங்கி வைத்து பாராட்டினோம். 22-8-2008 அன்று தாராபுரத்தில் நகர தி.க செயலாளர்
தா.சா.பால்கிருட்டிணன் – மரகதம் ஆகியோரது மகன் பா.அறிவுமணி, பிச்சைமுத்து – வாசுகி அம்மாள் ஆகியோரது
மகள் பி.ஞானசேகரி மணவிழாவை நடத்தி வைத்தோம். அடுத்த நாள் (23.08.2028) சென்னை கிண்டியிலுள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்ற பி.ஜி.பி. நிறுவனங்கள் மற்றும் லீ ராயல் மெரிடியன் ஆகியவற்றின் தலைவர் பழனி ஜி.பெரியசாமி -விசாலாட்சி’ பெரியசாமி ஆகியோரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோம். இந்நிகழ்வில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர், அன்றைய தமிழ்நாடு சபாநாயகர் ஆவுடையப்பன், அமைச்சர்கள் மு.க ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, க.துரைமுருகன், மாலை மலர் நிருவாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், உச்சநீதிமன்ற நீதிபதி மோகன், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொடுங்கையூரில் 24.8.2008 அன்று காலை நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் தி.செ.கோபால் அவர்களின் அண்ணன் மகன் கே.இராசு-எஸ்.எம்.ஜெயலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தோம். உடன் எல்.பலராமன்,செங்கைசிவம், திருவொற்றியூர் செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 26.08.2008 அன்று நடைபெற்ற
இந்துசமய அறநிலையத்துறை தொடங்கி
யுள்ள அர்ச்சகர் பயிற்சி நிலையங்களில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களைக் கோயில்
களில் அர்ச்சகராக நியமித்தல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அன்றைய அமைச்சர்களான மாண்புமிகு ஆர்க்காடு நா. வீராசாமி, துரைமுருகன், கே.ஆர்.பெரியகருப்பன், சிறப்பு தலைமைச் செயலாளர் கேயாஸ். ஸ்ரீபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் க.முத்துசாமி, நீதியரசர்
ஏ.கே.ராஜன், அரசு தலைமை வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ஆணையர் டி.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். அன்று மாலை திருவொற்றியூரில் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
மறுநாள் 27.8.2008 அன்று காலை மதுரை யாதவர் கல்லூரியில் திராவிட இயக்க மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இராம அரங்கண்ணல் படத்தினைத் திறந்து வைத்தோம். அன்று மாலை காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, முகவைப் பகுதியில் இயக்கத் தூணாக விளங்கிய சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர் சாமியின் நூற்றாண்டு விழாவினையொட்டி காரைக்குடி தமிழ்த்தாய் கோயில் சாலையில்
அமைக்கப்பட்டிருந்த என்.ஆர்.சாமி மாளிகையைத் திறந்து வைத்தோம். சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.எஸ்.
அவர்களின் மகன்களான சாமி.சமதர்மம்,
சாமி.திராவிடமணி சாமி.திராவிடச்செல்வம் ஆகியோர் பொறியாளர் சி.இராமன் அவர்களின் ஒத்துழைப்புடன் பெரியார் சுயமரியாதை நிறுவனத்திற்குச் சொந்தமான
இடத்தில் இந்தக் கட்டடத்தை உருவாக்கி
யுள்ளனர். அம்மாளிகையில் அமைந்திருந்த பெரியார் படிப்பகத்தை அமைச்சர் பெரிய
கருப்பன் திறந்து வைத்தார். நம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த கி.வீரமணி நூலகத்தை
“வீகேயென்” கண்ணப்பன் திறந்து வைத்தார். அமைச்சர் சுப.தங்கவேலன், சாமி. திராவிடமணி, வழக்கறிஞர் இன்பலாதன், சா.இராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
அப்போது ஒரு இனிப்பானச் செய்தியை அறிந்து மகிழ்ந்தோம். தமிழ்நாட்டில் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சிறந்த கல்லூரியாக வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. பொறியியல் கல்லூரிகள் தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலி டெக்னிக்) கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் தனித்தனியே தலைசிறந்தக் கல்லூரிக்கு ஆண்டுதோறும் விருது அளித்துப் பாராட்டுவது என்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி அமைக்கப்பட்டக் குழு இம்மூவகைக் கல்லூரிகளையும் ஆய்வு
செய்து, தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்குகளில்) வல்லம் – பெரியார் நூற்றாண்டு தொழில்
நுட்பக் கல்லூரியே (2006-2007) தலை சிறந்தது (Award of Best College) என்று அதிகாரப்
பூர்வமாக அறிவித்தது. முதன்முதலாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்
நாட்டில் உள்ள மொத்தம் 350 தொழில்
நுட்பக் கல்லூரிகளிலேயே (பாலிடெக்னிக்
களிலேயே) தலைசிறந்தது – முதன்மை
யானது என்ற விருதினைப் பெறும் முதல் கல்லூரி வல்லம் – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியாகும் .
2006-07ஆம் ஆண்டும் பொறியியல் கல்லூரியில் தலைசிறந்தது என்று காரைக்குடி
கல்லூரிக்கும் (A.C College of Engineering) கலைக் கல்லூரிகளில் சிறந்தது என்று சென்னை மாநிலக் கல்லூரிக்கும் அரசு சார்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதுபோலவே, கனடா அரசு சர்வதேசச் சாதனை விருதினையும் அறிவித்த முதல் ஆண்டே (2000) பெற்றதும் வல்லம் பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரியே என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 28.08.2008 அன்று தஞ்சை வல்லம் சென்ற நாம் கல்லூரி முதல்வர் மல்லிகா உள்ளிட்ட பணித் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம்.இதற்கான விருதினை டாக்டர் கலைஞர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி
வட்டம், தேவநல்லூர் அ.பண்டாரம் – கப.சீதையம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், திருச்சி பெரியார் கல்வி
நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ப.சுப்பிரமணியன் – ம.சுப்புலெட்சுமி
இணையரின் மகள் சு.காவ்யா – க.வெங்கடேசன் (மதுரை மாவட்டம்,
நாகமலை புதுக்கோட்டை லே.சுப்பிரமணியன் – க.ராஜாமணியம்மாள் ஆகியோரின் பெயரன், சு.சுந்தவேல், க.பகவதி இணையரின் மகன்), வாழ்க்கை இணையேற்பு விழாவை திருச்சி ஹோட்டல் சங்கத்தில் அமைந்துள்ள வசந்தம் திருமண அரங்கில் 28.08.2008 அன்று காலை நடத்தி வைத்தோம்.
நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர்
நல். இராமச்சந்திரன் வரவேற்புரை
ஆற்றினார். பல்கலைக்கழக இணைவேந்தர், கல்வி வள்ளல் “வீகேயென்” கண்ணப்பன், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், அன்றைய
போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் தாளாளர் சுந்தர்ராஜுலு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
அன்று மாலை கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் பள்ளியின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகளை வழங்கினோம். விழாவிற்கு பள்ளியின் நிதி அறங்காவலர் கி. அறிவழகன் வரவேற்புரையாற்றினார் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். தலைமை அறங்காவலர் துரைராஜன் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.
வேளாண்மைத் துறையில் கடந்த 18 ஆண்டுகளாக உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் 1,707 உதவி வேளாண்மை
அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு
நன்றி தெரிவித்து நாம் வெளியிட்ட அறிக்கை
யில் இந்த அரசுக்கு ஒரு முக்கிய வேண்டு
கோளை வைத்தோம். “நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த
தால், வேளாண்மைப் பட்டயப் படிப்பு படித்த அவர்கள், வேலையின்றி மிகவும் அவதியுற்று வருகின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் 35 வயதைக்
கடந்து நிற்பவர்கள். (பெரிதும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்
பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள், கிராமத்து இளைஞர்கள்). மேற்படி வயது வரம்பினை தளர்த்தி இவ்வரசால்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே உள்ள வயது வரம்பினை பின்பற்றி உதவி வேளாண்மை அலுவலர் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. வயது வரம்பு தளர்த்தப்படாமல் பணி நியமனம் செய்வதால், 35 வயதைக் கடந்தவர்
களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் வாழ்க்கை அவலமாகும் சூழ்நிலை அவர்களுக்கு உருவாகிவிடும். இனி எந்தக் காலத்திலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும். அவர்கள் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
எனவே, சமூகநீதியில் அக்கறையுள்ள முதலமைச்சர் அவர்களை கருணை உள்ளத்தோடு, உதவி வேளாண்மை
அலுவலர்களுக்கான பணிநியமன வயது வரம்பைத் தளர்த்தி, பின்பு அனைவருக்கும் பணிநியமனம் செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்” என்று தெவித்திருந்தோம்.
ஒரிசா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ்சின் துணைப் பிரிவுகளான விசுவ இந்து பரிஷ பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளின் வன்முறை வெறியாட்டங்கள் எல்லை கடந்து சென்ற நிலையில் இதனைக் கண்டித்தும் ஒன்றிய அரசு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஓர் அறிக்கையை 31.08.2008 அன்று வெளியிட்டோம்.
அந்த அறிக்கையில், “நவீன் பட்நாயக் தலைமையில் உள்ள ஒரிசா மாநில அரசு. பா.ஜ.க.வுடன் உறுதி பூண்ட கூட்டணியின் தைரியமும், கண்டும் காணாத அரசின் போக்கும்தான் இதற்கு காரணமா என்று தெரியவில்லை; என்றாலும் மூலகாரணம் இதுதான் என்பது வெளிப்படையாகும்!
கிறித்தவர்களின் மாதா கோயில்களை இடிப்பதோடு, கிறித்தவப் பாதிரிகளை கன்னியாஸ்திரிகள் மற்றவர்களை மேற்கூறிய இந்து தீவிரவாத அமைப்பினர் ஊர்களிலிருந்து அடித்து விரட்டுவது, தீயிட்டுக் கொளுத்துவது போன்ற வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் அற்ற தன்மை நீடிக்கிறது!
மதத் தீவிரவாதத்தை எம்மதத்தினர் கிளப்பினாலும் மனித நேயர் சகிக்க
மாட்டார்கள் – கண்டிக்கவே செய்வர்.
ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து தொழுநோயாளிகளுக்கு கிராமங்களில் சிகி அளித்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரின் குழந்தைகளையும் சேர்த்து உயிருடன் – அவருடைய ‘ஜீப்பில்’ அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர்
பஜ்ரங் தள் என்ற அமைப்பினர்! 1999ஆம் ஆண்டில் (ஜனவரி 23). அதே ஒரிசாவில் கன்னியாஸ்திரி
களை, பெண் வேடமிட்டுச் சென்று கடத்திக் கொலை செய்த கூட்டம்தான் அது!
இதை எப்படி ஒரிசா மாநில அரசு தடுக்காமல் – வேடிக்கை பார்க்கிறது?
பழிபோட்டு கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள்!
சில தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒரு காவிச் சாமியாரைக் காட்டி, (மாவோயிஸ்டுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது) அப்பழியை கிறித்தவர் மீது போட்டு, இப்படி ஒரு வன்முறை
வெறியாட்டத்தை அங்கு இந்துத் தீவிரவாதிகள் மதவெறியர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்!
மதத்தை ஏற்காதவர்கள் நாம் என்றாலும், மனித நேய மனித உரிமை அடிப்படையில் அத்தகைய கொடுஞ்செயல்களைக் கண்டிக்கத் தவறமாட்டோம்!
சென்னையிலும், மாவட்டத் தலைநகரங்
களிலும் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்கள் திராவிடர் கழகத்தவர்கள்.
மேலும் இராணுவத்தை அனுப்புக!
– மத்திய அரசு இதைக் கண்ட பிறகும் சும்மா இருக்கக் கூடாது. எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் – மேலும் கூடுதலாக இராணுவத்தை அங்கு அனுப்பி, பாதித்த சிறுபான்மை மக்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’’ என்று தெரிவித்திருந்தோம்.
(நினைவுகள் நீளும்)
