| ச |
ூரியன் ஒரு பகவான். அவன் ஏழு குதிரைப்பூட்டிய தேரில் காலையில் புறப்பட்டு மாலையில் மறைகிறான் என்ற புராணக் கதைகளை இன்னமும் நம்பும் மடமை, அறியாமை, நிலவும் நாட்டில், அவர்கள் நம்பிக்கை எவ்வளவு மூடத்தனமானது என்பதை உலகநிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் உறுதிசெய்து வருகின்றன.
சூரியன் எரியும் நெருப்புப் பந்து. 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே சுட்டெரிக்கும் இயல்பு கொண்டது. அதிலிருந்து சிதறி விழுந்து, குளிர்ந்து உருவானதே நமது பூமி என்கிறது அறிவியல்.
ஆனால் சூரியனை கிரகமாக்கி, சோதிடம் கணித்து சூரியனார் கோயில் படையல் போட்டு முட்டி மோதும் மூடத்தனம் இந்த
நூற்றாண்டிலும் படித்த பட்டம் பெற்றவர்களிடமும் இடம்பெற்றிருப்பது வேதனை தருவது.
இயற்கையாய் அமைந்த இடைவெளியில் நாம் அறிந்த அளவில் சூரியன் முதன்மை
யானது. அதன் ஆதிக்கத்தில் சில கேள்விகள். அவற்றுள் பூமியும், நிலவும் அடங்கும். சூரியன் பகல்பொழுதிலும், நிலவு இரவுப் பொழுதிலும் நமக்குத் தெரிகின்றன.
உலகம் வாழ சூரிய ஒளி முதன்மையானது. மழை பொழியவும், பயிர்கள் வளரவும் அது கட்டாயம். சூரிய வெப்பமே மழைக்கு ஆதாரம். சூரிய ஒளியே உலகிற்கு வெளிச்சம் தருவது.
இப்படி எல்லாவகையிலும் முதன்மைப் பெற்று, அடிப்படையாய் விளங்கும் சூரியன் வெளிப்படுத்தும் வெப்பம் பூமியில் வாழும் நம்மை பெரிதும் பாதிக்கிறது. பொதுவாக, கோடையில் வெப்பம் அதிகமாகவும், மழைக்காலங்களில் வெப்பம் மிகக் குறைவாகவும் இருக்கும்.
ஆனால், சில சூழலில் மழையே இல்லாமல், வறட்சி மேலோங்கி வெப்பம் அனலாய் வீசுவதுடன் நிகழ்கிறது. அப்படிப்பட்ட ஓர் உச்சநிலையை இந்த ஆண்டு பூமி சந்திக்கவுள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். “பசிபிக் பெருங்கடலில், 50 ஆண்டுகளுக்குப்பின் உருவாகும் “சூப்பர் எல்நினோ நிகழ்வு” காரணமாக, தென்மேற்குப் பருவமழை கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது” என எச்சரித்துள்ளார்.
இயற்கையும், மனிதனும்
உலகம், கடவுள், படைப்பு என்பது அறியாமையால், அறிவியல் அறிவின்மையால் வந்த மூடநம்பிக்கை. உலகில் எதையும் ஆக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது என்பதே அறிவியல் உண்மை. அப்படியென்றால் உலகில் உள்ளவை எப்போதும் இருக்கிறது என்பதே அறிவியல் உறுதிசெய்துள்ள உண்மை.
எதையும் யாராவது ஒருவர் படைக்க வேண்டும் என்றால், அந்தப் படைப்பாளியைப் படைத்தது யார்? என்ற கேள்வி நீண்டுகொண்டே செல்லும். உலகத்தைக் கடவுள் படைத்தார் என்றால் அந்தக் கடவுளைப் படைத்தது யார்? விடை கூறமுடியாது.
கடவுள் தானே வந்தது என்றால், உலகம் தானே இருப்பது என்பது தானே சரி. இல்லாத கற்பனைக் கடவுள் தானே வந்தது என்றால், இருக்கும் உலகம் எப்போதும் இருக்கிறது என்று கொள்வதுதானே அறிவுக்கு ஏற்றமுடிவு!
ஆக, உலகம் எப்போதும் இருப்பது. அதில் மாற்றங்கள் நிகழும். மாற்றம் நிகழ்வதால் எதுவும் அழியாது உருமாறும். தண்ணீர் பனிக்கட்டியாகும், பனிக்கட்டி தண்ணீராகும், நீர்கொதித்தால் ஆவியாகும். ஆவி குளிர்ந்தால் நீராகும்.
மரம் பூமிக்கடியில் சென்று அழுத்தத்திற்கு உட்படும்போது கரியாகும். கரி மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது நிலக்கரியாகும்.
சூரியனிலிருந்து சிதறி பூமி உருவானது போல, மேலும் மாற்றங்கள் நிகழலாம். மெழுகுவர்த்தி எரிந்தால் அது அழிந்து இல்லாமல் போவது அல்ல. அதுவேறு உருமாற்றம் அடைந்துள்ளது என்பதே உண்மை.
ஆக, இயற்கையாய் இருக்கும் இவ்வுலகை மனிதன் பயன்படுத்தித் தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர அதைப் பாழாக்கக்கூடாது.
இயற்கையில் செம்பு கிடைக்கிறது; காந்தம் கிடைக்கிறது. செம்பைக் கம்பியாக்கி, செம்புக் கம்பிச் சுருளுக்கு நடுவே காந்தக்கட்டையைச் சுழற்றினால் செம்புக்கம்பியில் மின்சாரம் வரும். அந்த மின்சாரத்தைப் பயன்படுத்தி எண்ணற்ற வளர்ச்சிகளை, வசதிகளை மனிதன் பெறமுடியும், பெறுகிறான்.
இயற்கையைக் கெடுக்கலாமா?
அணுகுண்டு வெடித்தல், உலகில் புகை மாசு உருவாக்கல், கழிவுகளைக் கலந்து நீர் மாசு உருவாக்கல் போன்றவை இயற்கையை அழிக்கும் முயற்சி. இதன் விளைவாய் புவி வெப்பம் கூடுகிறது. வெப்பத்தின் விளைவாய் பருவமாற்றங்கள் சீர்கெடுகின்றன. கடலில் அணுகுண்டு சோதனை செய்கிறார்கள். அளவற்ற கழிவுகளை, இரசாயனங்களைக் கடலில் உலகெங்கும் கலக்கவிடுகிறார்கள். அதன் விளைவாய் கடல் மாசு அடைகிறது. கடல் மாசு அடைந்தால் உலகே மாசு அடையும்; மழை அளவு பாதிக்கப்படும்; பருவ சுழற்சியும் பாதிக்கப்படும்.
மலைகளைச் சிதைத்தல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் இயற்கைச் சமநிலைப் பாதிக்கப்படுகிறது. மழை அளவு குறைகிறது. புவி வெப்பமாகிறது; நிலத்தடி நீர் குறைகிறது. அதனால் மீண்டும் புவி வெப்பம்கூடி, மழை அளவு மேலும் குறைந்து, வறட்சியும், உற்பத்தி குறைவும் ஏற்படுகிறது.
தீர்வுகள் என்ன?
இயற்கையைக் காத்தல்:
இயற்கையால் நமக்குப் பயன்படுவதை அழியாது, பாதிப்படையாது காக்கவேண்டியதும், காத்து அடுத்தடுத்தத் தலைமுறைக்கு அளிக்க வேண்டியதும் நம் கடமை. இருக்கின்ற வளங்களையெல்லாம் இந்தத் தலைமுறையினரே சுரண்டிவிட்டால், அடுத்த தலைமுறையினர் எப்படி வாழ்வது? காற்று, நீர், மண் என்று எல்லாவற்றையும் இரசாயனங்களால் கெடுத்து, அழித்துப் பாழாக்கினால், அது அடுத்த தலைமுறைக்கு எப்படி பயன் தரும்? சிந்திக்க வேண்டும். அந்தச் சமூக, அக்கறையுடன் இயற்கை வளங்களை நாம் கையாள வேண்டும், பயன்படுத்த வேண்டும்.
இயற்கையைப் பயன்படுத்துதல்:
இயற்கையைப் பயன்படுத்த மட்டுமே நமக்கு உரிமையுண்டு. அதை அழிக்கவோ, பாழாக்கவோ, கெடுக்கவோ நமக்கு உரிமையில்லை. ஆதிக்க வெறியில், போரின் உச்சமாக அணுக்கருவிகளைக் கடலிலும், நிலத்திலும் வெடிக்கச் செய்வது இவ்வுலகிற்குச் செய்யும் மாபெரும் துரோகம். இயற்கை மூலிகைச் செடியாயினும், நீர், கனிமவளங்களாயினும், காடு, மலைகளாயினும் அவற்றை மனித நலத்திற்கும், உயிரினங்களின் உய்விற்கும் பயன்படுத்த வேண்டுமே தவிர, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தி அவற்றைச் சுரண்ட, முற்றாக அழிக்க நமக்கு உரிமையில்லை.
நிலத்தடி நீரை முற்றாக உறிஞ்சினால், கடல் நீர் உள்புகும். பிறகு குடிநீரே இல்லாமல் போகும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் செய்யவேண்டும். மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தைக் குறையாமல் காக்க முடியும். மாறாக, கழிவுகளை நிலத்திற்குள் செலுத்தக்கூடாது. அது சமுதாயக் குற்றம்.
மரம் வளர்த்தல்:
காகிதம் தயாரிக்க, வீடுகட்ட, விறகிற்கு என்று மரங்களை வெட்டுதல் கூடாது. ஒரு மரம் என்பது ஒரு தலைமுறை. ஒரு மரத்தை வெட்டுவது ஒருதலைமுறையை அழிப்பது போன்றது, ஒருமரம் வெட்டப்பட்டால் பத்து மரங்களை நடவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டால் மட்டுமே மரம் பெருகும்; அதன்மூலம் மழை பெருகும்; அதன் வழி புவி வெப்பமாதல் தடுக்கப்படும்.
எதிர்வரும் பாதிப்பு:
கடலில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அடிப்படையிலேயே, பல்வேறு வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில், பசிபிக் பெருங்கடலில், கிழக்கு மற்றும் மத்தியப் பகுதியில், வெப்பம் இயல்பை விட அதிகமாவது, ‘எல் நினோ’ என்றும், வெப்பநிலை குறைவது, ‘லா நினா’ என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது நிலவும் ‘லா நினா’ நிகழ்வு வலுவிழந்து வருகிறது. இதனால், இந்த ஆண்டு ‘எல் நினோ’ ஏற்படுவதற்கும், அதன் அடிப்படையில், இந்தியப் பெருங்கடலில், அய்.ஓ.டி., எனப்படும் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலைத் துறை, சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியதாவது:
பசிபிக் பெருங்கடலில், கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வெப்பநிலை உயர்வதைக் குறிக்கும் ‘எல் நினோ’, வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உருவாக உள்ளது. இதில் இயல்பாக ஏற்படும் ‘எல் நினோ’ சமயத்தில், வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். ஆனால், தற்போது, 50 ஆண்டுகளுக்குப் பின், ‘சூப்பர் எல் நினோ’ உருவாக உள்ளதால், கடலில் வெப்பநிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.
இதனால், இந்தியப் பெருங்கடலில், சுமத்ரா தீவுகள் முதல் சோமாலியா வரையிலான, பூமத்தியரேகையை ஒட்டிய பகுதிகளில், அய்.ஓ.டி., என்ற முறையில், வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
நடப்பாண்டு அக்., நவ., மாதங்களில், இந்த நிகழ்வு உருவானால், அடுத்த ஆண்டு முதல், தென்மேற்கு பருவமழைக் காலத்தில், மழைப்பொழிவு வெகுவாகக் குறையும். இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும்.
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில், வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், வடகிழக்குப் பருவ காலத்தில், 2015ஆம் ஆண்டு அளவுக்கு அதிக மழை பொழியவும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு காரணமாக, 2027 முதல் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு வறட்சி போன்ற பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிகரிக்கும் வெப்பமும்: பள்ளிச் சீருடைகளில் மாற்றமும்:
குழந்தையின் பள்ளிச் சீருடையை மாற்றும்போது, அது அழுக்காகிவிடுமோ என்ற எண்ணம் இல்லை. மாறாக, அவள் அதிக வெப்பான சூழ்நிலையில் அணிந்திருக்கும் சீருடையை எவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியும் என்பதே என் கவலை. ஏனெனில் அவள் அணியும் பாலியஸ்டர் (Polyester) போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட (Synthetic) துணிவகைகள், உடலில் வியர்வையை அடைத்து வைத்து, தோல் எரிச்சல், வெப்ப அழுத்தம் மற்றும் நீண்ட கால உடல்நலச் சிக்கல்களை உருவாக்குகின்றன. இன்றைய காலகட்டத்தில், பள்ளிகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, குளிரான நாடுகளில் அணியும் உடைகளைப் போன்ற வெஸ்ட், கோட் போன்ற மேற்கத்திய சீருடைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. எளிதில் சுத்தம் செய்யக்கூடிய மற்றும் எளிதில் பராமரிக்கக்கூடிய காரணத்தால், செயற்கையாக உருவாக்கப்பட்டத் துணி வகைகளை நோக்கிய மாற்றமும் வேகமாக அதிகரித்து வருகிறது. இவ்வுண்மையை அறிந்திருந்தும், மறுநாளும் அதே சீருடையை அணிய வைத்து, அதே வெப்பமான சூழ்நிலைக்குள் அவளை அனுப்ப வேண்டிய நிலையே ஏற்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில், மாணவர்கள் அணியும் சீருடைகளில் காலநிலைக்கு ஏற்ப தேர்வு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆஸ்திரேலியாவின் பல பள்ளிகளில், வெப்பமான காலங்களில் காற்றோட்டமான துணிவகைகள் (Breatheable fabrics) அல்லது பருத்தி போன்ற ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில்கூட, கோடைக்காலச் சீருடை மற்றும் குளிர்காலச் சீருடை என்று காலநிலைக்கேற்ப தனி வடிவமைப்புகள் உள்ளன. அதேபோல், சில அய்ரோப்பிய நாடுகளில் பள்ளிகள் பருவகாலத்துக்கு ஏற்ற சீருடைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலுள்ள அனைத்து இடங்களிலும் ஒரு பொதுவான புரிதல் உள்ளது — உடை என்பது தோற்றம் அல்லது ஒழுக்கம் சார்ந்தவை மட்டுமல்ல, அது நமது உடல் நலத்தையும் சார்ந்தது.
பள்ளிச் சீருடையும் நெகிழியும்:
இத்தேடலில் நான் புரிந்துகொண்ட மற்றொரு முக்கியமான ஒன்று பள்ளிச் சீருடைகளில் இருக்கும் நெகிழிப் பயன்பாட்டின் ஆபத்து. நாம் நினைப்பது போல குடுவைகள் (bottles), பைகள் போன்றவற்றில் மட்டும் நெகிழி இல்லை; நாம் அணியும் பாலியஸ்டர் போன்ற செயற்கைத் துணி வகைகளும் அதே நெகிழி வகையைச் சேர்ந்தவையே. இதில் நிறமூட்டும் ரசாயனங்கள் (Dyes), துணி சுருக்கம் வராமல் இருக்க பயன்படுத்தப்படும்
ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), வெள்ளைப்படுத்தும் ரசாயனங்கள், நீர் தடுக்கப் பூசும் ரசாயனங்கள், அதே நிறத்தைப் நிலைநிறுத்த பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், அதே நெகிழியின் ஆயுளை அதிகரிக்கச் சேர்க்கப்படும் BPA, Phthalates போன்ற வேதிப்பொருட்கள், நாம் பெயரிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குப் பல்வேறு வேதிப்பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ஆம், பாலியஸ்டர் என்பது பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்கையாக உருவாக்கப்படும் பாலிமர் ஆகும்.
இந்நெகிழி வகைத் துணிகளைக் குழந்தைகள் ஓர் ஆண்டில் சராசரியாக 210-220 நாட்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக அணிகின்றார்கள். இது உடலில் வெப்பத்தைத் தக்க வைத்து, வியர்வையை வெளியேற்றாமல் தடுக்கும். அதனால் வெப்ப அழுத்தம், தோல் எரிச்சல் போன்ற உடலியல் சிக்கல்களை அதிகமாக உருவாக்கும். மேலும், இத்துணிகளை மீண்டும் மீண்டும் துவைக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் நுண்ணெகிழித் துகள்கள் நமது நீர்நிலைகளிலும், நிலத்தடி நீரிலும் கலந்துச் சுற்றுச்சூழலுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொருமுறையும் துணி துவைக்கும் போதும் பல மில்லியன் நுண் நெகிழிகள் வெளியேறுகின்றன. இந்நுண் நெகிழிகள் நீரில் மட்டுமல்லாமல், உணவு மற்றும் காற்றிலும் கலந்து, முழு சுற்றுச்சூழல் அமைப்பையே பாதிக்கின்றன.
அடுத்ததாக வெப்பநிலை. வெப்பநிலை மட்டுமில்லாமல் “வெப்ப அழுத்தமும்” (Heat Stress) மாணவர்களை வதைக்கிறது. வெப்பநிலை, ஈரப்பதம் (Humidity), காற்றோட்டம், உடை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்ற பல காரணிகள் ஒன்றாகச் சேர்ந்து உடலில் வெப்பச் சுமையை அதிகரிக்கின்றன. குறிப்பாக, சுவாசிக்க முடியாத செயற்கைத் துணிவகைகள் வெப்பத்தைத் தக்க வைப்பதால் உடல் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. இதனால் சோர்வு, தலைவலி, கவனம் குறைதல், எரிச்சல், நீர்ச்சத்துக் குறைவு போன்ற சிக்கல்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகின்றன. அதிக வெப்ப அழுத்தம் மாணவர்களின் கற்றல் திறன், நினைவாற்றலைக் குறைக்குமென பல ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. மேலும், வெப்பமான சூழலில் மாணவர்களின் உடல் திறன் மற்றும் மன வலிமை குறைந்து, கல்வி மற்றும் அன்றாடச் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. எனவே, வெப்பநிலையை மட்டுமே பார்க்காமல், வெப்ப அழுத்தத்தைக் குறைக்கும் வகையில்
சீருடைகள் வடிவமைக்
கப்படுவது மிகவும் அவசியமாகிறது.
இதை நான் ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் நேரடியாகப் பகிர்ந்த போது, அவர்களின் பதில்கள் மிகவும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தன. “இந்த உடை மிகவும் சூடாக இருக்கிறது”, “இது மூச்சு அடைப்பது போல இருக்கிறது”, “இதை அணிந்து விளையாட முடியவில்லை”, “நண்பகல் வேளைகளில் மிகவும் எரிச்சலாக இருக்கிறது” — இவை குழந்தைகள் கூறிய நேரடி அனுபவங்கள். சிலர் “பருத்தி உடை நன்றாக இருக்கும்” என்று மாற்றுத் தீர்வையும் கூறினார்கள். சீருடை என்பது சமத்துவத்தை உருவாக்கும் ஒரு சமூகக் கருவி. அதேபோல, அது உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடாது.
இச்சிக்கல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; ஓட்டுநர்கள், நடத்துநர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்ற பலரும் வெப்ப நிலைக்குப் பொருந்தாத சீருடை வகைகளை அணிந்து வெப்பத்தில் சிரமப்படுகிறார்கள் என்பதும் அவர்களிடம் பேசும்போது தெரிய வந்தது.
அண்மைக் காலங்களில் பாலியஸ்டரின் உற்பத்தி மிகவும் அதிகரித்து வருகிறது. உலகளவில் ஏறத்தாழ 71–75 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்தத் துணிகளின் உற்பத்தியில் ஏறத்தாழ 67% வரை பாலியஸ்டர் ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.(Materials Market Report, Sep 2024). ஆனால், அது ஏற்படுத்தக்கூடிய உடல் சார்ந்த, சுற்றுச்சூழல் சார்ந்த, நெகிழிப் பயன்பாட்டின் கழிவு சார்ந்த சிக்கல்களோ கவனிக்கப்படாமல், குப்பை மேடுகளிலும் எரிவுலைகளிலும் மறைத்து எரிக்கப்படும். இதன்மூலம் வணிக நிறுவனங்களும் குழந்தைகளின் நலனை எண்ணாமல், தங்களது துணிகளை இலாப வெறியின் காரணமாக பல்வேறு சலுகைகளுடன் விற்கின்றனர். அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல் பெருமளவிலான சிக்கல்களை நம்மால் சரிசெய்ய இயலாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புவி வெப்பமாதலின் தாக்கத்தால் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்தீபகற்ப இந்தியப் பகுதிகளும் எதிர்காலத்தில் வெப்ப அலைகளால் பாதிப்படையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுநூல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெப்பம் மற்றும் குளிர் அலைகளை அளவிடுதலுக்கான ஆராய்ச்சி நெறிமுறை, அவற்றின் நீண்ட காலப் போக்கு, இயற்பியல் பொறிமுறைகள், முன்கணிப்பு, தகவமைத்தல், தணிப்பு போன்றவை குறித்த ஓர் ஆய்வுநூலை இந்திய வானிலை ஆய்வு மையம் 25.04.2023 அன்று வெளியிட்டது.
இந்த ஆய்வுநூல் இதுவரை வெப்ப அலைகளின் பாதிப்பு இல்லாத தென் தீபகற்ப இந்தியா என்றழைக்கப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கடலோர கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் எதிர்காலத்தில் வெப்ப அலைகளின் பாதிப்பு இருக்கும் என எச்சரிக்கிறது.
கடந்த 50 முதல் 60 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவை நீடிக்கும் கால அளவு, தீவிரத்தன்மை அதிகரித்து வருவதாகவும் இந்தப் போக்கிற்கு பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றமும் புதைபடிம எரிசக்திப் பயன்பாடுமே காரணம் என இந்த ஆய்வுநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சராசரியாக, வெப்ப அலை பாதிப்பு ஏற்படும் பகுதிகள் பருவத்தில் இரண்டு வெப்ப அலைகளைச் சந்திக்கின்றன. ஒரு வெப்ப அலை நிகழ்வானது அய்ந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். தற்போது, புவி வெப்பமாதலின் காரணமாக வெப்ப அலைகளின் எண்ணிக்கை, அவற்றின் கால அளவு மற்றும் அவற்றின் அதிகபட்ச கால அளவு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வுநூல் குறிப்பிடுகிறது.
இந்தியாவின் வெப்ப அலை ஏற்படும் பகுதிகளில், வெப்ப அலைகளின் மொத்த கால அளவு கடந்த 30 ஆண்டுகளில் ஏறத்தாழ 2.5 நாட்கள் அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவின் (IPCC) 2060ஆம் ஆண்டில் வெப்ப அலை நிகழ்வுகளின் கால அளவு 12 – 18 நாட்களாக அதிகரிக்கும் எனக் குறிப்பிடுகிறது. இந்த வெப்ப அலைகள் இதுவரை வெப்ப அலைகளால் பாதிக்கப்படாத தென்னிந்
தியாவிலும் பரவக்கூடும் என ஆய்வுநூல் எச்சரிக்
கிறது.
இப்படி நமது நிகழ்கால
மும் எதிர்காலமும் காலநிலை மாற்றத்தின் கோரப்பிடியில் சிக்கி
யிருக்கும் நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வது அவசியமாகும். ஒரு தாயாக, குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதே முதல் எண்ணம். ஆனால், ஒரு சமூகத்தின் அங்கமாக, நமது குழந்தைகளின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கே உண்டு. சீருடை என்பது ஒரு உடை மட்டுமல்ல — அது ஒரு சமூகத் தீர்மானம். அத்தீர்மானத்தில், வெப்பத்தைப் புரிந்துகொள்வதும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதும், குழந்தைகளின் உடல் நலத்தை முன்னிலைப்படுத்துவதும் அவசியமாக இருக்க வேண்டும்.
‘எல்நினோ’ அமைப்பால் சென்னை, புதுச்சேரி போன்ற கடலோர நகரங்களில் வெப்பநிலை கணிசமாக உயரும் மற்றும் எதிர்பாராத தீவிர வானிலை மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். கடும் வெப்பத்தினால் நீர்நிலைகள் வேகமாகக் காய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எனவே, அரசும், தொண்டு நிறுவனங்களும், ஒவ்வொரு தனிநபரும் இதில் அக்கறை செலுத்தி தீர்வுகாண வேண்டியது கட்டாயக் கடமையாகும். {
