Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் குருகுல மாணவர் கலைஞர்!

“ஆ

யிரம் ஆண்டெனும் மூதாட்டி

அணிந்திராத அணியாவார்

          அறிந்திடாத அறிவாவார்”

– என்று கவிநயம்  பொங்க அழிவில்லா அறிவுக் காவியம் படைத்திட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைப் பாடிய கவிஞன், புகழ் ஏணியின் உச்சியில் வைத்திட்டார்.‘

“அவர் பிறக்கவில்லை என்றார்

 அறிவில்லை ஆக்கமில்லை

 அறிஞர்கள் பிறப்பேயில்லை”

– என்றிட்டார்.

அந்த தந்தை பெரியாரின் பேருழைப்பால் பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள், அமைச்சர்கள், ஆளுமைமிகு அறிவியக்கச் செம்மல்கள், திராவிடத்தின் புகழ் பரப்பிடும் பெருமக்கள் எனப் பலர் தோன்றினார்கள்.

அவ்வரிசையில் தோன்றிய அய்யா பெரியாரின் குருகுலத்தில் தோன்றிய அளப்பரியவர்களில் ஒருவர் தான் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

திருவாரூர் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள திருக்குவளை (இன்றைய நாகை மாவட்டத்திலுள்ளது) எனும் ஊரில் 03.06.1924ஆம் ஆண்டு முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்தார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் சிறுவனாக இருக்கும்போதே ஈர்க்கப்பட்டார்.

திருவாரூரில் பள்ளியில் படிக்கும்போதே பெரியாரின் மாணவராக பகுத்தறிவுக் கருத்துகளை, இனமானச் சிந்தனைகளை, கையெழுத்துப் பிரதியாக தானே எழுதி, “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற அமைப்பின் வழியாக பரப்பியவர்.

பின்னாளில் மேடைப்பேச்சாளராக – எழுத்தாளராக வளர்ந்திட்டார். 1946ஆம் ஆண்டு புதுச்சேரியில் கூட்டத்தில் பேசிவிட்டு வரும்போது எதிரிகளால் தாக்கப்பட்டு சாலையோரத்தில் கிடந்தவரை தந்தை பெரியார் அழைத்து வந்து, ‘குடிஅரசு’ ஏட்டில் பிழைதிருத்தும் பணிசெய்யும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்பணியில் சேர்ந்து மகிழ்வோடு அய்யா பெரியார் இயக்கத்தில் பயணித்தார்.

தி.மு.க. எனும் அரசியல் கட்சியை அண்ணா தொடங்கியபோது அவரது தலைமையில் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்திட்ட அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அண்ணா அமைத்திட்ட பார்ப்பனர் அல்லாத முதல் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.

அண்ணா மறைவுக்குப்பின் 1969ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது ஆட்சிக்காலம் நவீன தமிழ்நாட்டின் தொடக்கக் காலமாக மலர்ந்தது. பல்வேறு அரிய திட்டங்களை நாட்டுக்கு உருவாக்கிக் காட்டினார்.

கலைஞர் முதலமைச்சராக வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். காரணம் மிக, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்தவர் என்பதால் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களைக் கைதூக்கி விட்டு சமத்துவத்திற்கான சமூகநீதியை நிலைநாட்டுவார் என்பதால் தந்தை பெரியார், கலைஞரை முதலமைச்சராகிட தனது பெரும் ஆதரவைத் தந்தார்.

கல்வி – வேலைவாய்ப்பில் அன்றைய நாளில் நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டி தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அதன் காரணமாகத் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு 16%லிருந்து 18%ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25%லிருந்து 31%ஆகவும் உயர்த்தி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆணையிட்டார்.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 41% விழுக்காட்டிலிருந்து 49%ஆக உயர்ந்தது. சமூகநீதியை இந்த அளவிற்கு உயர்ந்திட தந்தை பெரியார் காரணமாக அமைந்தார் – கலைஞர் காரியமாக இருந்தார் என்பதுதான் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டின் வரலாறாகும்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்டோர் – தாழ்த்தப்பட்டோருக்காக தனித்தனி அமைச்சகமும், தனித்தனித் துறையும் உருவாக்கப்பட்டு அச்சமுதாய மக்கள் உயர்ந்திட காரணமானவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கொள்கையை ஏற்று – சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் புரட்சிகரமான நோக்கில் ஜாதி ஒழிப்புத் திருமணம் செய்யும் மணமக்களுக்கு பணமுடிப்புகள், பரிசளிப்புகள், அரசு வேலைவாய்ப்பில் தனியாக சிறப்பு இடஒதுக்கீடு என உருவாக்கினார்.

பெண் கல்வியை உயர்த்திடும் வகையில் திருமண உதவித்திட்டம் அறிவித்து, அதற்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று இருந்ததை பின்பு படிப்படியாக மாற்றி பத்தாம் வகுப்பாக்கி, பின்னர் பன்னிரண்டாம் (+2) வகுப்பு, அதன் பின்பு பட்டப் படிப்பு என்று படிப்படியாக உயர்த்தி பெண் கல்வியை உயர்த்தியவர் கலைஞர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையைச் சட்டமாக்கித் தந்தவரும் அவரே. தந்தை பெரியாரின் இறுதிப் பேருரையிலும் – அவர் உருவாக்கிய போராட்டக் களத்திலும் வெற்றி பெறாது இருந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நிறைவேற்றாது தந்தை பெரியாரை அவரின் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்துள்ளோம் என்று கூறி அதனை எடுக்க உறுதி பூண்டு அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிட ஆணையிட்டவர் கலைஞர் ஆவார்.

தந்தை பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கி நாடே சமத்துவபுரமாக மாற்றிட சிந்தித்து – செயலாற்றிய பெருமகன் தான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார்.

தமிழ்நாட்டில் 240 இடங்களில் சமத்துவ
புரங்கள் அமைத்து, அதில் ஒவ்வொன்றிலும் ஒரு மார்பளவு பெரியார் சிலை என்று 240 இடங்களில் பெரியார் சிலையை அமைத்திட்ட பெரியாரின் கொள்கைச் சீடர் தான் கலைஞர்.

எங்கும் தமிழ் – எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன்வைத்து, சமஸ்கிருதப் பெயர்களை நீக்கி தமிழ்ப் பெயரை வைத்ததோடு, தமிழை முதன்மையாக்கி படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமையும், பதவி உயர்விலும் முன்னுரிமையும் வழங்கியவர் கலைஞர் ஆவார்.

தமிழ்நாட்டை நவீனமயமாக்கி – கணிப்பொறி கல்வியைக் கொண்டு வந்த இந்தியாவின் முதல் மாநிலம் என்ற இடத்திற்கு கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். ‘டைடல் பார்க்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கிய இந்தியாவின் ஒரே முதலமைச்சர் கலைஞர் ஒருவரே ஆவார். இதன் காரணமாக ‘நவீன தமிழ்நாட்டின் தந்தை’ என்ற சிறப்புக்குரியவர் அவர் தான்.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை நாட்டுக்கு வழங்கிய பெருமைக்குரியவர் ஆவார். கல்வித்துறையில் உயர்கல்வி பெறத் தடையாக இருந்திடும் நுழைவுத் தேர்வைத் தமிழ்நாட்டில் தடை செய்து அதற்காக, தனிச் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை – மறுமண உரிமை – காவல் துறையில் முதன் முதல் பெண்களைத் தேர்வு செய்து இடம்பெற வைத்து பெரியார் வழியில் ஆட்சி நடத்தியவர்.

சமூகநீதியின் சரித்திர நாயகர், மகளிர் உரிமை காத்த மாண்பாளர் எனப் பல சிறப்புகளுக்கு உரிய கலைஞர் திராவிடத்தை நிலைநிறுத்தி – திராவிட மாடல் ஆட்சிக்கு தனது தனையன் தளபதி மு.க.ஸ்டாலினை தந்திட்ட கலைஞரின் புகழ் காலத்தை வென்று கலங்கரை விளக்கமாய் திகழ்ந்திடும். w