| சி |
ல ஆண்டுகள் கழித்து தனது நண்பர் செல்வழகனைக் காண வனக்குப்பம் கிராமத்திற்கு வந்தார் நீதிராசன்.
அவரை அன்புடன் வரவேற்ற செல்வழகன் மறுநாள் தனது தோப்பிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
நீதிராசன் தாவரவியலில் பட்டமேற்படிப்பு படித்தவர். செடி, கொடி, மரங்களைப் பற்றிய அறிவு அவருக்கு நிறையவே உண்டு.
ஆனால், செல்வழகனுக்குத் தோப்பு துரவுகள் நிறையவே உண்டு என்றாலும் அங்குள்ள மரங்களைப் பற்றி அதிகம் தெரியாது. மரத்தின் பெயர்கள் கூட அவருக்குத் தெரியாது.
இந்நிலையில் பல செய்திகளை நீதிராசன் மூலம் அறிந்து கொள்ள விரும்பினார் செல்வழகன்.
திட்டமிட்டப்படி மறுநாள் நீதிராசனைத் தனது தோப்பிற்கு அழைத்துச் சென்றார் செல்வழகன்.
சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள சிறிய தோப்புதான் அது. ஆனால், மரங்கள் அடர்த்தியாகக் காணப்பட்டன. கிராமங்களில் அழிந்துபோன இலுப்பை மரமும் அங்கிருந்தது. அதில் பூத்த இலுப்பைப் பூவிலிருந்து வீசிய மணம் மனதை மயக்கும் வகையில் இருந்தது.
இலுப்பை மரத்திலிருந்து பூக்களும், இலுப்பைக் காய்களோடு பழங்களும் கீழே தரையில் உதிர்ந்து கிடந்தன.
நீதிராசன் ஆவலுடன் அவற்றைப் பொறுக்கி எடுத்தார்.
பழங்களைப் பிட்டு சுவைத்துப் பார்த்தார். அதிலிருந்த இலுப்பைக் கொட்டையை எடுத்து ஆசையுடன் பார்த்தார்.
“செல்வழகா, இந்த இலுப்பைக் கொட்டையைப் பார். எவ்வளவு அழகாக, வழவழப்பாக இருக்கிறது பார்” என்றார்.
“ஆமாம் நீதிராசன், சிறு வயதில் சில்லி விளையாட்டு விளையாட இந்த இலுப்பைக் கொட்டைகளைப் பயன்படுத்துவோம்”.
“இதன் மேல் ஓட்டை உடைத்தெடுத்து உள்ளே உள்ள பருப்பினை எடுத்து அரைத்து எண்ணெய் தேய்த்த தலையில் பூசி குளிப்பதும் உண்டு. மேலும் இலுப்பை எண்ணெய்க்கு மேலும் பல மருத்துவக் குணங்களும் உண்டு”.
“என்ன குணங்கள் நீதிராசன்?”
“இடுப்பு வலி மூட்டு வலிக்கெல்லாம் நல்லது. வலி உள்ள இடங்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். ஆஸ்துமா, சளித்தொல்லையைக் குறைக்கும். அது மட்டுமல்ல, விஷப் பூச்சிகள் கடித்தால் அதன் நஞ்சைக் குறைக்கவும், புண்களை ஆற்றவும் இந்த எண்ணெய் பயன்படும்.”
“இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா நீதிராசன்?”
“ஆமாம் இதன் வேர் முதல் இலுப்பைக் கொட்டை வரையும் மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் பூக்களைப் பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் தீரும். மேலும், இந்தப் பூக்கள் சர்க்கரை தயாரிக்கவும், எரி சாராயம் தயாரிக்கவும் பயன்படும்.
இப்படி நீதிராசன் சொன்னதும் மீண்டும் சில பூக்களைப் பொறுக்கி எடுத்து முகர்ந்து பார்த்தார் செல்வழகன். அதன் மணம் அவரை மிகவும் சுண்டி இழுத்தது.
அவர்கள் இருவரும் மேலும் நடந்தார்கள். அடர்ந்த மரங்களுக்கிடையே இருந்த மரங்களில் ஒரு மரத்தைப் பார்த்து வியந்து நின்றார்.
“என்ன பார்க்கிறாய் நீதிராசன்?”
இந்த மரத்தின் பெயர் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார் நீதிராசன்.
“தலைமுறை தலைமுறையாக இந்த மரம் இங்கே இருக்கிறது. ஆனால், இதன் பெயரை நான் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லையே” என்று பதில் சொன்னார் செல்வழகன்.
“இது ஓர் அரிய வகையான மரம். பாலைவனப் பகுதியில் வளரும் மரம். உன் தோப்பில் இருப்பது வியப்பாகவும், மகிழ்வாகவும் உள்ளது.
“இந்த மரம் பற்றிச் சொல்லேன் நீதிராசா?
“சொல்கிறேன், என்று சொல்லியபடியே அந்த மரத்தின் அருகே சென்றார்” நீதிராசன்.
அந்த மரம் நன்கு பெருத்திருந்து தரைக்குச் சற்று மேலேயே கீழ் நோக்கி தவழ்ந்து வளர்ந்து பிறகு அப்படியே மேல் நோக்கி வளர்ந்திருந்தது. மரத்தின் மேல் பகுதியிலிருந்து இலைகள் அடங்கிய கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. இலைகள் முட்டை வடிவில் காணப்பட்டன. அதில் காய்த்திருந்த காய்கள் மணத்தக்காளி போல் சிறிய அளவில் இருந்தன.
நீதிராசன் சொல்லத் தொடங்கினார்.
“செல்வழகா, இந்த மரத்தின் பெயர் களர் உகாய். இந்த மரம் களர் நிலத்திலும், பாலைவனப் பகுதியிலும் வளரும். நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதன் தண்டுகள் புறாவின் முதுகு போல் வளைந்திருப்பதைப் பார்”.
நீதிராசன் சொல்லச்சொல்ல அந்த மரத்தை நன்கு உற்று நோக்கினார் செல்வழகன்.
நீதிராசன் தொடர்ந்தார்.
“இது பாலைத் திணைக்குரிய மரமாகவும் கருதப்படுகிறது. புறநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும் இம்மரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை. கடுமையான நாள்பட்ட வயிற்று வலியைப் போக்கக் கூடியது. மேலும் இதன் இலைகளைச் சுவைத்தால் அறுசுவைகளையும் உணரலாம்”, என்று சொல்லிக்கொண்டே சில இலைகளைப் பறித்து தான் குடிக்கக் கொண்டு வந்திருந்த தண்ணீரில் இலைகளைக் கழுவி செல்வழகனிடம் கொடுத்தார் நீதிராசன்.
அதைச் சுவைத்த செல்வழகன், நீதிராசன் சொன்னது உண்மை என்பதை உணர்ந்தார்.
“இந்த மரம் பற்றி வேறு பல தகவல்களும் உள்ளனவா?” என்று ஆவலுடன் கேட்டார்.
“நிறையவே உள்ளது இதான் பழங்கள் சிறுநீரகக் கற்களைக் கரைக்குமாம். இதன் தாவரவியல் பெயர் சால்வடோரா பெர்சிக்கா என்பதாகும் ஆங்கிலத்தில் இதை மிஸ்வாக் என்றும் அழைக்கிறார்கள்”.
“மிஸ்வாக் என்று சொன்னவுடன் செல்வழகன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார்.
“நீதிராசன், மிஸ்வாக் என்று சொன்னாயே. அது ஒரு பற்பசையின் பெயரல்லவா? அந்தப் பற்பசையை நான் உபயோகித்திருக்கிறேன்”.
“ஆமாம் அந்தப்பற்பசையை இந்த மரத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மேலும் நாம் இந்தக் குச்சிகளை ஒடித்தும் பல்துலக்கலாம்,” என்று சொல்லிக் கொண்டே பல்துலக்க மரத்திலிருந்து சிலகுச்சிகளை ஒடித்துக் கொண்டார் நீதிராசன்.
“பாலைவனப் பகுதியில் முகமது நபி அவர்கள் இந்தக் களர் உகாய் மரத்தின் குச்சிகளைக் கொண்டுதான் பல் துலக்கினாராம், என்று கூடுதல் தகவலையும் சொன்னார் நீதிராசன்.
“இதன் விதைகள் மிகவும் காரமிக்கவை. வறண்ட நிலம் கொண்ட இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த மரங்களை அதிகம் காணலாம். நம் கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த மரங்களைக் காணலாம். உன் தோப்பில் இருப்பது மிகவும் வியப்பாகவே உள்ளது”.
இது நாள் வரையிலும் இந்த விவரங்களைச் செல்வழகன் அறிந்திருக்கவில்லை. நூறாண்டுகளுக்கு மேற்பட்ட உகாய் மரம் தன் தோப்பில் இருப்பதை நினைத்து மகிழ்ந்தார்.
மேலும் அத்தி மரமும் அந்தத் தோப்பில் காணப்பட்டது.
“அத்தி பூத்தார் போல்….” என்பார்கள். அதுபோலத்தான் அத்திமரமும் உன் தோப்பில் உள்ளது. நீண்ட நாட்களுக்குப்பிறகு இந்த மரங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆலமரம் போல் பால் வடியும் மரம் இது.
இதன் பழங்கள் உடலுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் தெரியுமா?
அது பற்றி ஏற்கனவே செல்வழகன் அறிந்திருந்தாலும் நீதிராசன் வாயால் சொல்லட்டுமே என்றிருந்தார். மேலும் கடந்த முறை வந்தபோது அவரை இந்தத் தோப்புக்கு அழைத்து வரவில்லையே எனவும் வருந்தினார்.
அத்திப்பழம் புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்யுமாம் மலச்சிக்கலை நீக்கும். இதிலுள்ள கால்சியம் சத்து பற்களையும் எலும்புகளையும் காக்கும். இது நார்ச்சத்து நிரம்பிய பழம் நீரழிவையும் கட்டுப்படுத்தும். பொட்டாசியம் சத்தும் நிரம்பியது இந்த அத்திப்பழம். இந்தப் பழத்தை நீ சாப்பிடுகிறாய் அல்லவா”.
“சாப்பிடுகிறேன் நீதிராசன். இதிலுள்ள பழங்களைப் பறித்துச் செல்வோம்,” என்று சொல்லியபடியே பழங்களைச் சேகரித்தார் செல்வழகன்.
அதன் அருகில் பெரிய இலுப்பை மரம் ஒன்று இருந்தது. அதை ஆவலுடன் பார்த்தார் நீதிராசன்.
“என்ன பார்க்கிறாய் நீதிராசன். இந்த இலுப்பை மரத்தைச் சிலர் அதிக விலை கொடுத்து வாங்க வந்தார்கள்”, என்று சொன்னார் செல்வழகன்.
“ஏன் விற்க முடிவு செய்தாய்? எதற்காக இந்த மரத்தை வாங்குகிறார்களாம்?”, என்று கேட்டார் நீதிராசன்.
”ஊரில் சாமி சிலைகளை வைத்து ஊர்வலம் செல்ல சகடை தேவைப்படுகிறது. வைரம் பாய்ந்த இந்த மரம் கட்டை வண்டிகள் தயாரிக்க மிகவும் பயன்படும். அதனால் இந்த மரத்தை வாங்கி சகடை எனப்படும் வண்டி செய்ய பக்தர்கள் விரும்புகிறார்கள்”, என்று பதிலளித்தார் செல்வழகன்.
”இன்னும் வேறு என்னவெல்லாம் செய்ய உத்தேசம் செய்துள்ளாய் செல்வழகன்?”
”பக்தர்களுக்கு இந்தக் கோயில் மிகவும் ராசியான கோயிலாக உள்ளதாம். எனது தோப்பில் இருக்கும் இந்தக் கோயிலில் வந்து சாமி கும்பிட்டால் நினைத்த காரியம் நடக்கிறதாம். அதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர, வேண்டுமெனவும், கிராம மக்கள் எனக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.”
இதைக் கேட்டு மிகவும் எரிச்சலடைந்தார் நீதிராசன். செல்வழகனைப் பார்த்து சற்று வருத்தத்துடனும் கோபத்துடனும் பேசினார்.
”செல்வழகா, பக்தர்களுக்கு என்ன வசதி செய்து தர வேண்டுமாம்? அவர்கள் என்ன அறிவியலாளர்களா? இங்கு வந்து ஆய்வு செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கப்போகிறார்களா? பால், பழம், தேங்காய், பூசணிக்காய் போன்ற உணவுப்பொருட்களை வீணாக்க வருவார்கள். அதற்காக நீ வசதிகள் செய்து தரப்போகிறாயா? மருத்துவக் குணங்கள் கொண்ட இந்த அரிய மரங்களையெல்லாம் வெட்டி சாய்க்கப் போகிறாயா?
இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டார் நீதிராசன்.
செல்வழகன் சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு பிறகு பேசத் தொடங்கினார்.
”நீதிராசன், பல ஆண்டுகளுக்கு முன் நீ இங்கு வந்த போது சொன்ன கருத்துகளை நான் உள்வாங்கிக் கொண்டேன். இடையில் உன்னோடு தொலைபேசியில் பேசியபோதும் நீ சொல்லும் பகுத்தறிவு கருத்துகளையும் மனதில் பதியவைத்துக் கொண்டேன். மெல்ல மெல்ல நானும் உன்னைப் போல் பகுத்தறிவாதியாக மாறிவிட்டேன்.
இலுப்பை மரத்தை மட்டுமல்ல, களர் உகாய் மரத்தையும் சாமிக்கு வண்டி செய்யக் கேட்டார்கள். பக்தர்களுக்கு வசதி செய்து தரவும் கேட்டார்கள்.
ஆனால், அவர்களுக்கு நான் என்ன பதில் சொன்னேன் என்பதை நீ என்னிடம் கேட்கவில்லையே!
நான் மரங்களைத் தரமுடியாது என கண்டிப்புடன் சொல்லிவிட்டேன். மாறாக இதன் மருத்துவக் குணங்களை ஆய்வு செய்து மருந்துகள் தயாரிக்க ஆய்வாளர்களை நாடவும் முடிவு செய்து விட்டேன்.
முடிவாக பக்தர்களுக்கு வசதி பற்றிக் கேட்டாய் அல்லவா! எனது தோப்பு இது. மூடநம்பிக்கைகளை வளர்க்கும் இடமாக இதை நான் மாற்றப் போவதில்லை மண்டபத்தை அகற்றி அந்த இடத்திலும் மரக்கன்றுகளை நடப்போகிறேன்.
மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், விளையாடவும், பகுத்தறிவு கருத்தரங்குகள் நடத்தவும் வசதிகள் செய்து தர முடிவு செய்துள்ளேன்.
மொத்தத்தில் இந்தத் தோப்பை மக்களுக்குப் பயன்படும் தோப்பாக மாற்றப் போகிறேன். அறிவுத்தீ, அதாவது பகுத்தறிவுத் தீ எனக்குள்ளும் பரவி விட்டது. நீயும் சில நாள்கள் என்னுடன் தங்கியிருந்து எனது பணிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முக்கியமாக இதற்காகத்தான் உன்னை இப்போது வரச்சொன்னேன்”.
செல்வழகன் சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார் நீதிராசன். ஒவ்வொரு ஊரிலும் பயனுள்ள மரங்களை வளர்த்து, மக்களுக்குப் பயன்படச் செய்ய வேண்டும். இருக்கும் மரங்களைப் பாதுகாப்பதும் கட்டாயம். எங்கள் ஊரிலும் நான் ஒரு மரத்தோப்பை உருவாக்க முடிவு செய்து விட்டேன். w
