1) கே: த.வெ.க. அமைச்சரவையில் வி.சி.க. மற்றும் இ.யூ.மு.லீக் கட்சிகள் இடம்பெறுவது ஏற்புடையதா ?
– எம்.சதீஷ், திண்டிவனம்.
ப: தமிழ்நாட்டில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற ஆர்.எஸ்.எஸ். ஆட்சி ஏற்படுவதைத் தடுக்கவேண்டிய அவசர அவசியம் காரணமாகவும் மதச் சார்பின்மை, சமூகநீதி போன்ற மிக முக்கிய லட்சியங்களுக்கெதிரான பா.ஜ.க.வின் ஆட்சியை வரவிடாமல் தடுக்கவும், ‘‘யார் வரக்கூடாது’’ என்ற கொள்கை அடிப்படையிலும், மீண்டும் அவசரமாக ஒரு தேர்தலை, வாக்காளர்கள்மீது திணிக்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தோடும், அணுகவேண்டிய ஓர் அரசியல் சூழல்! அவர்கள் ஆதரவு அளிக்கவேண்டிய நிலை தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஏற்பதைத் தவிர வழியற்ற சூழல்.
2) கே: த.வெ.க. ஆட்சியில் செய்யப்
படும் வழக்கமான அரசின் பணிகளைக்கூட சாதனைகளைப் போல கூறுவதும், இப்போது அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பாலுறவு வன்முறை, நிருவாகச் சீர்கேடுகளை அறவே மறைப்பதும் ஓர் அரசுக்கு அழகா?
– அய்.ஜெகன்னாதன்,
கும்மிடிப்பூண்டி.
ப: ஆட்சியாளரிடம் கேட்கவேண்டிய கேள்வி இது!
3) கே: திராவிட இயக்க அரசியலையே ஒழித்துவிட்டது போன்ற இறுமாப்பில் எதிரிகள் வெளியிடும் கருத்துகள், சாதாரண மக்களைத் திசை திருப்பும் என்பதால், விளக்கப் பிரச்சாரங்கள்
முழு அளவில் நடக்க ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்
கிணைத்துத் திட்டமிடுவது அவசியம்தானே ?
– எல்.கமலேஷ், விருத்தாசலம்.
ப: பொதுப் பிரச்சினையில் ஒன்றாகத் தானே ஒத்தக் கருத்துள்ளவர்கள் இருக்கிறார்கள்… பின் என்ன?
4) கே: கவர்னரால் நடத்தப்படும் பதவியேற்பு போன்ற நிகழ்வுகளில் ‘‘வந்தே மாதரம்’’ பாடல் முதலில் பாடப்படுவதை தமிழ்நாடு அரசால் தடுக்கமுடியாதா ?
– என்.தமிழச்சி, மதுரை.
ப: மனமும் உறுதியும் இருந்தால் – முந்தைய திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி செய்ததுபோல் தடுத்து நிறுத்தமுடியும்.
5) கே: இந்தியா கூட்டணியின் கட்டமைப்பை இனி எப்படிக்
கொண்டு செல்ல
வேண்டும்? தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பங்கு எப்படி இருக்கவேண்டும்?
– எஸ்.நிருபமா, குடந்தை.
ப: பொறுத்திருந்து பார்க்கவேண்டியது.
6) கே: பிரிந்து நிற்கும் திராவிடக் கட்சிகள் எல்லாம் பழைய தி.மு.க.வாக ஒன்று சேரவேண்டியது கட்டாயம் என்றால், தாய்க் கழகம் அதைச் செய்யுமா? ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வுதானே?
– ப.புருஷோத்தமன், வல்லம்.
ப: அப்படி ஓர் அவசியமும் சூழ்நிலையும் வரும்போது தவறாமல் தாய்க் கழகம் தேவையானதைச் செய்யும்.
7) கே: மருத்துவமனைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது ஏற்புடையதா?
– எம்.காந்திமதி, தஞ்சாவூர்.
ப: மறுத்திருக்கிறாரே சம்பந்தப்பட்ட அமைச்சர்! தமிழ்நாட்டில் அரசு
மருத்துவமனைகள் எவ்வளவு
இருந்தும் தனியார் மருத்துவ
மனைகள்தானே ஓங்கிவரும் நிலைதானே இப்போது!
8) கே: தற்போதுள்ள கட்டமைப்பில் தடையற்ற மின்சாரம் வழங்கியது திராவிட மாடல் அரசு. அதே கட்டமைப்பில் தற்போது மின் வெட்டுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது! புதிய அரசின் சாக்குப் போக்கு, சமாதானம் எப்படிச் சரியாகும்?
– த.பங்காரு, பாண்டிச்சேரி.
ப: செயலை வைத்து மட்டுமே மக்கள் தீர்மானிப்பார்கள். நிழலின் அருமை வெய்யிலில், வெளிச்சத்தின் அருமை இருட்டில்தான் என்பது போகப் போக விளங்கும். w
