Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கலைஞர் வழிச்செல்வோம்! முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் பேரன்புத் தொண்டர்! போற்றும்

     பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி!

சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச்

     சழக்கினரை இனம்கண்டு மாநி லத்தின்

உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி!

     உதவாத சாதிமத மடமைப் போக்கை

விரிவாக எடுத்துரைத்தே சமூக நீதி

     வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ !

இணையற்ற தலைவன்நீ! தொண்ணூ றாண்டாய்

     எப்போதும் உரிமைப்போர் தொடுத்து வந்தாய்!

துணைநின்றாய் தமிழினத்தார் மேன்மை எய்த்

     துணிவுடனே தடைபலவும் கடந்து வென்றாய்!

முனைப்புடனே அய்ந்துமுறை ஆட்சியேற்று

     முத்தமிழ்க்கு மணிமுடியும் சூட்ட லானாய்!

பனையளவாய்த் தமிழ்நாட்டின் நலன்கள் காத்தாய்!

     பழங்காலப் புலவரெனப் புகழில் பூத்தாய்!

ஆரியத்தேள் கொடுக்கழிக்க அனலாய் நின்றாய்!

     அடர்ந்திருந்த மடமையிருள் அகலச் செய்தாய்!

வீரியமாய் இனமானச் சுடராய் வாழ்ந்தாய்!

     வீறார்ந்த போராட்டக் களங்கள் கண்டாய்!

பாரெங்கும் வாழ்கின்ற தமிழர் நெஞ்சில்

     பாங்குறவே இடம்பிடித்தாய்! நலத்திட் டங்கள்

சீராக அணிவகுக்கச் செய்தாய்! என்றும்

     திரைத்துறையில் முத்திரையும் பல பதித்தாய் !

ஊடகங்கள் உனைப்பேசா, எழுதா நாளும்

     உண்டாமோ? வாணாளில் எந்நே ரத்தும்

கேடியற்றும் கெடுமதியோர் கீழ்மை நெஞ்சர்

     கிழக்கினையே மேற்கென்று கிளத்தி நிற்போர்

பீடழிக்க முற்பட்டுத் தோல்வி காண்பர்!

     பெருமிதமாய் அரசியலில் உயர்ந்த நீயோ

பாடுபொருள் புலவருக்கே! எதிர்த்து வந்த

     பகைப்புலத்துச் சூழ்ச்சிகளை முறிய டித்தாய்!

வள்ளுவர்க்குக் கோட்டத்தை அமைத்தாய்! தெற்கே

     வானுயரக் குமரியிலே படிமம் வைத்தாய்!

விள்ளரிய பயன்சேர்க்கும் சமச்சீர்க் கல்வி

     வியத்தகுசீர் நூலகமோ அண்ணா பேரால்!

தள்ளாத அகவையிலும் தன்மா னத்தைத்

     தன்மதிப்பை நினைவூட்டிப் பெருமை சேர்த்தாய்!

கொள்கலனாம் குறளோவி யத்தைத் தந்தாய்!

     குறளாசான் சிந்தனைகள் வழங்கி வந்தாய்!

வடபுலத்தோர் நடுங்கிடவே செய்தாய்! நம்மோர்   

     வாழ்வியலும் ஒளிர்ந்திடவே போர்தொ டுத்தாய்!

உடன்பிறப்பார் உயிர்த்தெழவே மடல்கள் தந்தாய்!

     ஒப்பரிய சமத்துவநற் புரங்கள் கண்டாய்!

நடமாடும் நச்சரவாம் ஆரி யத்தின்

     நாடகத்தின் முகத்திரையைக் கிழித்தாய்! வெல்லும்

அடலேறாய் நூறாண்டாய்த் தமிழர் நாட்டின்

     ஆளுமையாய் வலம்வந்தே சிகரம் தொட்டாய்!

அருந்தமிழர் முன்னேற்றம் அடைதல் வேண்டி

     அன்றாடம் முரசொலியில் முகத்தைக் காட்டிப்

பெரும்பணிகள் மேற்கொண்டாய்! ஏற்றத் தாழ்வுப்

     பிரிவினையைக் கடிந்துரைத்தாய்! பிற்பட் டோரின்

உரிமைக்குக் குரல்தந்தாய்! வேலை வாய்ப்பில்

     உவகையுடன் முன்னுரிமை வழங்க லானாய்!

கரவுடையோர் வெம்பகையை வென்றாய்! நந்தம்

     கவின்தமிழைச் செம்மொழியாய் ஆக்க லானாய்!

உடன்பிறப்பே எனும்சொல்லை உரைக்கும் வேளை

     உணர்வுகளின் உச்சத்தைத் தொட்டாய்! என்றும்

கடமையினை, கண்ணியத்தை, கட்டுப் பாட்டைக்

     கற்பித்த அண்ணாவின் வழியில் நின்றே

முடமான தமிழ்நாட்டைப் பல்லாற் றானும்

     முன்னேற்றப் பாதைக்கே அழைத்துச் சென்றாய்!

தடம்மாறாக் கொள்கையுரம் நல்கிக் காத்த

     தலைவர்நம் கலைஞர்வழிச் செல்வோம் நாமே ! w