Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்

தந்தை பெரியார்

உலக மாறுதலை, வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும். மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள் கடவுள் சக்தி கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.

கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட தெய்வீகச் சக்தி என்கின்ற எண்ணமோ மனிதனுக்கு இல்லாமல் இருந்து இருக்குமானால், இன்று மனிதன் குறைந்தது இந்த 3,000-4,000 ஆண்டுகளில் அவனது அறிவின் பயனாய் சிந்தனா சக்தியின் பயனாய் 500 ஆண்டுகளாவது உயிர் வாழத்தக்கத் தன்மையை அடைந்திருப்பாள். இறக்கை இல்லாமலேயே ஆகாயத்தில் பறக்கும் சக்தியை அடைந்திருப்பாள் என்பதோடு, கவலை இல்லாமலேயே வாழும் தன்மையையும் அடைந்திருப்பாள்.

சர்வசக்தி உள்ள கடவுள் ஒன்று இருக்கிறது. *எல்லாம் கடவுள் செயல்’ எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலையும் இல்லாமல் இருக்க முடிகிறது?

எனவே, மனிதச் சமுதாய வளர்ச்சிக்கும். மனித ஜீவனுக்குத் துக்கமும் கவலையும் இல்லாமல் இருப்பதற்கும் “சரி சக்தி உள்ள கடவுள்” ஒருவர் இருக்கிறார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்து ஆகவேண்டும்.

கடவுள் இல்லை; இல்லவே இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்
களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்குவதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறு இல்லை என்றே சொல்லுவேன்.

மோட்சம் என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், “துக்க நாசம் சுகப்பிராப்தி” என்று தான் சொல்லப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆதாரப்பூர்வமான பொருளும் (அர்த்தமும் இதுவாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலைக்கு அறிவுதான் காரணம் அதாவது ஞானம்தான் என்றும் காணப்படுகிறது. இதனாலேயேதான் ”ஞானிக்கு துக்கமில்லை. கவலை இல்லை” என்று சொல்லப்படுவதோடு ”ஞானிக்கு கடவுளும் இல்லை. கல்லெடுப்பும் இல்லை” என்று சொல்லப்படுகிறது.

ஞானி என்றால் என்ன பொருள்? அவன் யார் என்று பார்த்தால் ஞானமுடையவன் ஞானி – புத்தி உடையவன் புத்தன் – அறிவை உடையவன் அறிஞன் என்பதாகும் இவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?

அறிவையோ, புத்தியையோ, ஞானத்தையோ கொண்டு சிந்திப்பதாலேயே கடவுள் என்ற சொல்லே தென்படுவதற்கு இல்லாமல் போய் விடுகிறது. ஞானிக்கு கடவுள் இல்லை என்பது மாத்திரமல்லாமல். “துறவிக்கு கடவுள் இல்லை” என்று சொல்லப்படுகிறதல்லவா? அதன் பொருள் என்ன? துறவி என்றால் ஆசை அற்றவன், பற்று அற்றவன் என்பதுதான் பொருள். துறவிக்கு ஆகவேண்டிய காரியம் ஒன்றும் இல்லை. அவனுக்கு எதைப் பற்றியும் ஆசை இல்லை. அதனால் அவனுக்குக் கடவுளைப் பற்றிய கவலை இல்லை என்பதோடு, அவனுக்குக் கடவுள் தேவையும் இல்லை இயற்கையோடு இயைந்து கொள்ளுகிறான்.

எனவே. இயற்கையை நல்ல வண்ணம் உணர்ந்து கொள்ளுவது அதற்கேற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் அறிவுதான் முன் குறிப்பிடப்பட்ட ஞானமாகும்.

எனவே. பகுத்தறிவுப் பெற்ற மனித சமுதாயம் ‘மனிதத் தன்மை’ அடைவதற்குப் பகுத்தறிவுவாதியாக, அதாவது பஞ்சேந்திரியங்
களுக்குப் புலப்படாத. தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை அவை எவையானா
லும் சிந்திக்காமலும் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் இருப்பதுதான் மனிதத் தன்மையாகும்.

–  (தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை – ‘விடுதலை’ -10.6.1971

சிந்தனை அறிவே மனித வாழ்வை உயர்த்தும்!

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி – உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்
குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ. அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.

பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.

மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படி செய்து விட்டார்கள்.

பொதுவாக கடவுளைப் புகுத்தியவன் கடவுளுக்கு முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுள் பற்றி சிந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஏற்படுத்தினான்.

கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கு எட்ட முடியாத வஸ்து: அறிவுக்கு எட்ட முடியாத வஸ்து: பஞ்சேந்திரியம் என்றால் மெய், வாய். கண். மூக்கு. செவி இந்த அய்ந்துக்கும் கடவுள் எட்ட மாட்டார்: இந்த அய்ந்தும் கொண்டு கடவுளைத் தேடவும் கூடாது என்பதாகும்.

இந்தப் பஞ்சேந்திரியங்களையெல்லாம் மீறி சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளையும் போட்டு கடவுளைச் சொன்னான்.

கடவுள் என்றால் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

கடவுள் போலவே மதத்தைப் பற்றியும் என்ன என்று சிந்திக்கக் கூடாது. மதம் எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? என்ன ஆதாரம் என்று சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால் மதம் போய்விடும். எனவே. அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

கடவுள். மதம் போலவே சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றானோ அவன் நரகத்துக்குப் போவான் என்று எழுதி வைத்துள்ளார்கள்.

எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது. மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக் கொள்வது ஆகும்.

நமது இழிநிலை, முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாக பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவிவிடும்.

நமது கொள்கை பகுத்தறிவு – பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும்.

கடவுள், மனதுக்கும் வாக்குக்கும் எட்டாதவர் என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி, நம்மை எல்லாம் நடத்துக்கின்றது; எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகத்துக்கு ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள். நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு, கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்.

மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியது இல்லை. நமது நாட்டுக் கடவுளுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியவை எல்லாமுமே வேண்டும்.

மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் யோக்கியம். நாணயம். ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம். நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்ன என்ன குணங்கள் இருக்குமோ. அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.

இப்படி ஏராளமாக பேதங்களும், நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும் காரியத்தில் கேடான குணங்களும், கடவுளுக்குக் கற்பித்து இருக்கின்றார்கள்.

இவைகளையெல்லாம் நம்புவதுதான் மூட நம்பிக்கை நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து ஏற்கின்றதை ஏற்றுக் கொண்டு மற்றதைத் தள்ளுவதுதான் பகுத்தறிவு.

நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை.

உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள், தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக் கூடாது?

நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே. சைவ சமயத்தில் கந்தன், முருகன், சுப்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்குப் போட்டியாக வைணவத்தில் இராமன் என்று ஒரு கடவுள். இப்படியாகப் பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்தக் கந்தனைப் பற்றிய கதையும் அசிங்கம். ஆபாசமாக இருக்கும்; இராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக் கேடாக இருக்கும். காரணம், இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை.

வாலிபத் தோழர்களே! உண்மை, ஒழுக்கம், தைரியம் ஆகிய மூன்றையும்
நீங்கள் கொண்டு காரியத்தைத் துணிவுடன் நடத்தினீர்களானால்,
வெற்றி உங்களிடம் வந்து பணியும்.

  • ‘குடிஅரசு’, 30.09.1944

மக்கள் அறிவு கொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே  பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை. சிந்திக்க ஒட்டாத நிலை. சிந்தனையே அறிவு: அதுவே மனித வாழ்வை உயர்த்தும்.

(தந்தை பெரியார் அவர்கள்
அறிக்கை – 5.5.1971)