Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ் செம்மொழிஒன்றிய அரசு அறிவிப்பு

தமிழர்களின் நீண்டகால விருப்பமான தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து என்னும் அங்கீகாரம்  ஒன்றியத்தில் ஆளும் முற்போக்குக் கூட்டணி அரசால் – குறிப்பாக அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களது முயற்சியால், கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் ஒத்துழைப்பால் ஒன்றிய மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்சர் அர்ஜூன்சிங் அவர்களது ஆணையால் அறிவிக்கப்பட்டது. ஒன்றியத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆரிய அதிகார வர்க்கத்தின் முட்டுக்கட்டைகளைக் கடந்து இது நடைமுறைக்கு வந்தது.

 இது ஒரு நீண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். நீதிக்கட்சி 1918 மார்ச் 30, 31
ஆகிய நாள்களில் நிறைவேற்றிய தீர்மானம், அந்த நீதிக்கட்சியின் வழிவந்த கொள்கை விழுதாம் தி.மு.க.வின் ஆட்சியில், அரியச் சாதனைகளில் தலையாயதான ஒன்றாக செயல்வடிவம் பெற்றது.

அதோடு, பழம் நழுவி பாலில் விழுந்து, மேலும் அது வாயிலும் விழுந்து சுவைக்க வாய்ப்பளித்ததுபோல அதற்கு செம்மொழி நிறுவனம் – (Central Institute of Tamil Classical Language) தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் அமைந்திட அன்றைய முதலமைச்சர் கலைஞர் அயராத தொடர் முயற்சியை மேற்கொண்டார். அந்த முயற்சியும் வெற்றி பெற்று, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் அமைந்தது. 30.6.2008 அன்று நடைபெற்ற அதன் தொடக்க விழாவில் முதல்வர் அவர்கள் தமது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் (ஏற்கெனவே தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க புத்தக வெளியீட்டாளர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி விழாவில் 2007ஆம் ஆண்டு ஒருகோடி ரூபாய் சொந்தப் பணத்தினைத் தந்து, அதன் வட்டித் தொகையை ஆண்டுதோறும் சிறந்த தமிழ் எழுத்தாளருக்குப் பரிசாக வழங்கும்படிக் கேட்டுக்கொண்டார்கள்) ஒதுக்கி தனி அறக்கட்டளை அமைத்து, அதன் வட்டியிலிருந்து விருது வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அதனைப் பாராட்டி 01.07.2008 அன்று
நம் கருத்தை வெளியிட்டோம். அப்போது
அவ்விருதுகள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
செய்த தந்தை பெரியார் – மறுமலர்ச்சிக்குக்  காரணமான அண்ணா பெயர்களில்  அமைதல்
அவசியம் என்றும் தெரிவித்தோம்.

அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து அன்று ஒன்றியத்தில் ஆட்சியிலிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அதனை ஆதரிக்கும்  இடதுசாரிகளுக்கும் இடையிலான கருத்து வேற்றுமை மோதல் கவலை அளிப்பதாக இருந்த நிலையில்  இது குறித்த நமது அச்சத்தைத் தெரிவித்தோம். இடதுசாரிகளின் நிலைப்பாட்டால் இன்றைய இந்தியா காணாமல் போய் இந்து ராஷ்டிரம் ஏற்படும் நிலை உருவாகும் என்று தெரிவித்திருந்தோம். அதே நேரத்தில் மதவாத சக்திகளை மீண்டும் அரியணையில் ஏற்ற விடாமல் செய்யும் முயற்சியாக முடிவெடுத்த சமாஜ்வாதி கட்சியின் முடிவை வரவேற்று முற்போக்குச் சக்திகள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள நவ பாரத் பதிநிலைப் பள்ளியில் 02.07.2008 அன்று நடைபெற்ற முத்தமிழ் மன்ற தொடக்க விழாவில் பங்கேற்றோம். கவிஞர் தமிழ் ஒளி இயற்றமிழ் மன்றம், பாவலர் வரதராசன் இசைத்தமிழ் மன்றம் டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகத்தமிழ் மன்றம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த முத்தமிழ் மன்றம்
தொடங்கப்பட்டது. இயற்றமிழ் மன்றத்தை வழக்குரைஞர் செந்தில்நாதனும், இசைத்தமிழ் மன்றத்தைத் தமிழ் இசைக்கல்லூரி இயக்குநர் திருப்பாம்பரம் சண்முகசுந்தரமும், நாடகத்தமிழ் மன்றத்தை நாடக ஆசிரியர் பிரளயனு தொடங்கி வைத்து உரையாற்றினர். இறுதியாக நாம் நிறைவுரையாற்றினோம்.

புத்தகப் பணிகளுக்காக சிங்கப்பூர் சென்ற நமக்கு, சிங்கப்பூர் நண்பர்கள் குழு சார்பிலும் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பிலும் விருந்தோம்பல் நிகழ்வு 20.7.2008 அன்று ஆனந்தபவன் ஓட்டலில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி
பெரியார் திரைப்படம் வெளிவந்ததையும், இந்திய அரசால் நம் கல்வி நிறுவனம்
பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டதை
யும் நினைவுபடுத்திப் பாராட்டி மகிழும் வகையில் அமைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு (சிங்கப்பூர்) பெரியார்
சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் தலைமை வகித்தார்.
செயலாளர் இலியாஸ் வரவேற்புரை
யாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சிங்கப்பூர் வானொலியில் “வானம் வசப்படும்” என்ற நிகழ்ச்சியில் அழகியபாண்டியன் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது.

கவிஞர் அமலதாசன் அவர்கள், நன்றி பாராட்டுதல் உரையில், பெரியார் கல்வி நிறுவனங்களைப் பாராட்டியும், தினசரி ‘விடுதலை’யை இணையதளத்தில் படிப்பதைப் பெருமையாகவும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் படிப்பதற்கு முன்னால், இங்கு நாங்கள் படித்து விடுகிறோம் என்று மகிழ்ச்சியாகச் சொன்னார். தன்னு
டைய இளமைக்காலத்தில் பெரியார் அவர்
களின் கொள்கைகளில் தங்களை முழுமை
யாக இணைத்துக் கொண்டு வேகமாகச் செயல்படாததற்கு வருத்தப்பட்டும், தற்போது நாம் பெரியார் அய்யா கொள்கைகளை எவ்வளவு வேகமாக மக்களிடத்தில் எடுத்துச் செல்வதையும் கண்டு பெருமிதம் கொண்டு, மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார். மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகளைக் கூறியும், தமிழர்கள் – தமிழ் உணர்வுடன் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் “நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைப் பற்றிய குறும்படம்” காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்து வியந்து குழந்தைகளுக்கு உதவுவதற்
காக பலர் முன் வந்து இல்லத்திற்கு நன்கொடை வழங்கினார்கள்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சார்பாக இங்கு Nanyang Technological University மேற்படிப்பு படித்து சிங்கப்பூரில் பணிபுரியும் செல்வி இந்துமதி அவர்கள், பெரியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை எப்படி தன்னம்பிக்கை கொண்டவர்களாக உருவாக்குகிறது என்பதை, தாம் அந்தக் கல்லூரியில் பயின்ற அனுபவங்களை உணர்ச்சி பொங்கக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக மலையரசி நன்றி கூறினார். அனைவரும் சேர்ந்து விருந்து உண்டபின் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பெருவணிகர்கள், பேராசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தாய்மார்கள் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்புச் செய்து தங்களின் அன்பினையும் மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொண்டனர்.

சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும்; ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ.சாமி அவர்கள் மறைந்தார் என்னும் செய்தி  பேரிடியாக கிடைத்தது. பிரபல வழக்குரைஞராக அய்தராபாத்தில் இருந்த போதும் சமூகநீதிக்கான போராளியாக இருந்து 1980களில் மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்காகக் களமாடி இறங்கிப் போராடிய வீரராவார்.

உயர்நீதிமன்ற நீதிபதியான பின்னரும்
கூட அவர் அந்த இலட்சிய உணர்விலிருந்து சிறிதுகூட பின் வாங்காமல் அதே உணர்வைத் தம்முள் தேக்கி வைத்து அவர் சார்ந்த துறையில்-உயர்நீதிமன்றத்தில் சமூக அநீதி நடைபெற்ற போதெல்லாம் துணிந்து எதிர்த்துப் போராடியவர். ஒடுக்கப்பட்ட சமுதாய வழக்குரைஞர்கள், மாவட்ட மற்றும் துணை நீதித்துறை அதிகாரிகளுக்கு உயர்ஜாதி வர்க்கம் கொடுமை இழைத்தபோது பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்து, இதன் காரணமாக பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தேவையற்ற வெறுப்பு, கோபத்திற்கு ஆளாகி, தாம் உயர்நிலை பெற வேண்டிய அரிய வாய்ப்புகளை இழந்தவர் ஆவார், ஆனால், அதுபற்றிக் கவலைப்படாமல் தமது நன்றி பாராட்டாத (Thankless Job) பணியைச் செய்யத் தவறியதில்லை.  ஜோதிபாபூலே அவர்களது பெயரில் ஆந்திராவில் ஒரு சமூகநீதிமன்றம் அமைத்து அதைப் பெரியார் வழியில் நடத்தி சமூகநீதிக்கான மாபெரும் இயக்கத்தினைக் கட்டியவர்.

ஓய்வு பெற்ற பின் ஆந்திராவின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அவரைத் தம் கட்சிகளில் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குச் சென்று ஒன்றிய அமைச்சராகலாம் என்று சொன்னபோதுகூட, பிடிவாதமாக மறுத்து, தந்தை பெரியாரும். திராவிடர் கழகமும் எப்படி, தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதவி  தேடா இயக்கமாக வளர்ந்து தொண்டு சமூகநீதி செய்கிறதோ, அதன்படியே செல்வேன் என்று ஓய்வு பெற்ற நிலையிலும் உறுதி பூண்டார்!

நமது இயக்கத்திடமும், நம்மிடமும் இயக்கத்தின்மீதும் மிகுந்தபாசம், அன்பு, மரியாதை கொண்டவர். திராவிடர் கழகத் தோழர்களின், தொண்டர்களின் ஒப்புவமையற்ற தியாகத்தை அவர் பாராட்டி ஆந்திராவில் உள்ளவர்களுக்கு எடுத்துரைப்பார். பதவி ஓய்வு பெற்ற பின்பு, ஒரு வேன் தயாரித்து அதில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் சுற்றுப்பயணம் செய்து, பல லட்சம் மக்களையும் சந்தித்து சமூகநீதிப் பிரச்சாரம் செய்தவர்.

‘மன பத்திரிகா’ (நமது ஏடு) என்ற பெயரில் தெலுங்கு வார ஏட்டினைத் துவக்கி மிகவும் கஷ்டப்பட்டு பல்லாயிரக்கணக்கில் ரூபாய் நட்டத்துடன் நடத்தி வந்து, விழிப்புணர்வை வெளிப்படுத்தி சமூகநீதிக் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.

அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான வழக்கறிஞர் அறக்கட்டளையை (Lawyers Forum for Social Justice) உருவாக்கி, வற்புறுத்தி நம்மை முதலில் உறுப்பினராக்கினார்.
அதன் தலைவராக இருந்த திரு.ஹாவானூர் மறைவுக்குப்பின் தலைவராக்கிட வற்புறுத்தி இசைவைப் பெற்ற உற்ற உடன்பிறவாத சகோதரர் ஆவார். அவருக்கு இதய, மூச்சுப் பிரச்சினை இருந்தும்கூட அதைப் பொருட்படுத்தாமல் தொடர் தொண்டு ஆற்றினார்!

அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் அவருக்கு ‘வீரமணி சமூகநீதி விருதினை’ அமெரிக்காவில் உள்ள அதன் இயக்குநர்கள் டாக்டர்
சோம.இளங்கோவன், டாக்டர் இலக்குவன்
தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி
பெருமைப்படுத்தினர். ஆந்திராவின் அன்றைய ஆளுநர் சுஷில்குமார் ஷிண்டே
அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

இவரது படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்வு 03.08.2008 அன்று ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் நடைபெற்றது. ஆந்திர மாநில மேனாள் தலைமைச் செயலாளர் மாதவராவ் அய்.ஏ.எஸ்., (ஓய்வு) தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று புகழ் வணக்கத்தைச் செலுத்தி நினைவுரையாற்றினோம்.

மகாராட்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பிவால் நாஸ்கி மற்றும் பரத்பூஷன், ஜெயப்பிரகாஷ், முன்னாள் நீதியரசர் அனுமந்தப்பா, நீதியரசர் சுகுமாரன், பேராசிரியர் காஞ்ச அய்லையா, பேராசிரியர் ரவிவர்மகுமார், முன்னாள் இந்திய சட்ட அமைச்சர் சிவசங்கர், வடகிழக்கு
மாநிலங்களின் தலைமை நீதிபதி செலமேஸ்வர் (பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதி), ஆந்திர வழக்குரைஞர் சங்கத் தலைவர் சச்சன் ரெட்டி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஏட்டில் சிறப்பு கட்டுரை
களையும் அவர் பற்றிய செய்திகளையும் வெளியிட்டிருந்ததை விழாவில் அறிமுகப்
படுத்தினோம்.

சென்னை கலைவாணர்  அரங்கில் 26.8.2008 அன்று நடைபெற்ற பேராசிரியர் ந.வேலுச்சாமி அவர்கள் தொகுத்த  “கலைஞர் படைப்புலகம்” என்ற தலைப்பில் வெளியான பன்னாட்டு கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினோம்.

அப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களைப் பற்றி அமெரிக்கப்
பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கூறிய செய்தி
களை மேற்கோள் காட்டி உரையாற்றினோம். மறுநாள் சென்னை பெரியார் திடலில்  பேராசிரியர் மு.நீ.சிவராசன் இயக்குந
ராக பொறுப்பேற்று நடத்திய சிவில் ஜட்ஜ் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினோம். நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் நடை
பெற்ற இந்த விழாவில் வரியியல் வல்லுநர்
ச.இராசரத்தினம் வழக்கறிஞர் தியாகராசன்,
வழக்கறிஞர் இராஜேந்திரன், பேராசிரியர்
வணங்காமுடி, பேராசிரியர் பாலதண்டாயுத
பாணி, வழக்கறிஞர் த.வீரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

07..08.2008 அன்று தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினோம். சென்னை கலைவாணர் அரங்கில் 10.08.2008 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினோம்.

சென்னை கலைஞர் அரங்கில் 11.08.2008  நடைபெற்ற “கலைஞரின் சட்டமன்ற உரைகள் ” புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று நூலினைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினோம். இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அன்றைய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். நூலினை அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன் வெளியிட்டார். மற்றொரு நூலான ‘‘Budding moustache – Blooming poetry’’ புத்தகத்தைப் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் வெளியிட மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்,  கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். முதலமைச்சர் கலைஞர் நிறைவுரையாற்றினார். கவிஞர் கனிமொழி நன்றியுரை ஆற்றினார்.

தென்னிந்திய கணக்காயர் கூட்டமைப்பில் (ICAI) 13.08.2008 அன்று
நடைபெற்ற வைர விழாவில் (Diamond Jubilee year 2008) பங்கேற்று உரையாற்றினோம். நம்முடன் பெரியார் பன்னாட்டு மய்ய அமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் கலந்து கொண்டார். தணிக்கையாளர் மன்ற கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரகுமார் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.  ஆடிட்டர் இராமச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கித் தலைவர் வீரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறையில் 16.08.2008
அன்று நடைபெற்ற பெரியார் பெருந்
தொண்டர் புத்தகரம் நாகரத்தினம் கமலி 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில்
பங்கேற்று அவரது தொண்ட
றத்தையும் கொள்கைப் பயணத்தையும் பாராட்டி
னோம். கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்
கோ.சி.மணி கலந்து கொண்டார்.

அடுத்த நாள் (17.08.2008) அன்று மதுரையில் நடை
பெற்ற தென் மாவட்ட திராவிடர் கழகப் பிரச்சார குழுத் தலைவர் எடிசன் ராஜா – சுசிலா ராணி விஜயலட்சுமி ஆகியோரது செல்வி நாகமணி – பாலாஜி
(தூத்துக்குடி ஆதிமுத்து – சீனி தங்கம் ஆகியோரின் செல்வன்) மணவிழா வரவேற்பில் பங்கேற்றோம்.  மாலை 4 மணிக்கு
மதுரை ஹோட்டல் ஆர்த்தியில் நடைபெற்ற திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோம். ஏராளமான வழக்குரைஞர்கள் பங்கேற்கும் வகையில் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் 18.08.2008 அன்று நடைபெற்ற  பாலிடெக்னிக் கல்லூரியின் 29 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவினைத் தலைமையேற்று நடத்தி
னோம். இந்நிகழ்வில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் தி.சங்கரலிங்கம், அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின்
இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

(நினைவுகள் நீளும்)