தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள் என்று எதை நோக்கினும் பச்சிளங்குழந்தைகள் முதல், பாட்டிகள் வரை வன்புணர்வு செய்து கொல்லப்படும் கொடுமைகள், கொள்ளைகள், ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்கள் நாள்தோறும் நடந்து வரும் செய்திகள் தான்.

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறியே இந்தியாவே பாராட்டிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை அகற்றியுள்ளனர். நாங்கள் வந்தால் ஒரே நாளில் அகற்றி விடுவோம், அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்போம் என்று சவால் விட்டு முழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்து 15 நாள்களிலே இக்குற்றச் செயல்கள் பன்மடங்கு பெருகியுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலேயே மகளிர் பாதுகாப்பு மிக்க மாநிலத்தில் முதலிடம் பெற்றிருந்தது தமிழ்நாடு. முதல் நகரம் சென்னை என்று பெருமைபெற்றது. ஆனாலும், இத்தகைய நிகழ்வுகள் ஆங்காங்கு நடந்து வந்தன. கடும் கட்டுப்பாடுகளும், கண்காணிப்பும், உடனுக்குடன் விசாரணை நடந்து தண்டனை வழங்கப்பட்டும் தான் பாதுகாப்புமிக்க மாநிலம் என்னும் இடத்துக்கு உயர்ந்தது தமிழ்நாடு. ஆனாலும் அது மக்களைச் சேரவில்லை. ஆட்சி மாறியது. ஆனால் காட்சிகள் மோசமாக மாறியுள்ளன. அரசும், அதிகாரமும், காவல்துறையும் மட்டும் தொடர்புடைய பிரச்சினையல்ல இது! மாறாக விரிவாகக் கவனிக்க, ஆராய வேண்டிய பிரச்சினை!

ஏன் இந்த நிலை, இவற்றிற்குக் காரணங்கள் என்ன? அரசியல் சார்பின்றி சமூக அக்கறையுடன் சிந்தித்தால் உண்மைகள் புலப்படும்; உரிய தீர்வுகள் கிடைக்கும். அதைவிடுத்து ஒருவரையொருவர் குற்றஞ் சாட்டிக் கொள்வதும், உண்மைகளை மறைப்பதும், மக்களை ஏமாற்றும் மோசடியாகவே அமையும். எனவே, சமூக அக்கறையுடன் உண்மைகளை ஒளிவுமறைவின்றி ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை, கடும் நடவடிக்கைகளை, உரிய உச்சபட்ச தண்டனைகளை அளிப்பது மட்டுமே இக்கொடிய குற்றங்களை முற்றாக ஒழிப்பதற்கு ஒரேதீர்வாக அமையும்.
சமூகநிலை:
மேற்கண்ட குற்றங்கள் இன்றைக்கு உருவானவை அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக அளவில் நடந்து வருகின்றன. ஆட்சி முறையில்லாமல் இருந்த காலத்திலும், மன்னராட்சிக் காலத்திலும், மக்களாட்சிக் காலத்திலும் இவை நடக்கின்றன. மக்கள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் இவை குறைவாக இருந்தன. மக்கள் கூடிவாழ ஊர்கள் உருவானபோது இக்குற்றங்கள் கூடின. நகரங்கள், மாநகரங்கள் உருவாக்கப்பட்ட போது இவை மேலும் அதிகமாயின. அறிவியல் வளர்ச்சியால் போக்குவரத்து பெருகி மக்கள் பெருமளவில் கூடவும், பழகவும் தொடங்கியபின் இக்குற்றங்கள் பலமடங்கு அதிகமாயின. தொலைக்காட்சி, செல்பேசி, கணினி மேம்பாடும், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதிகரிப்பும் இக்குற்றங்களை அன்றாட நிகழ்வுகளாக்கின.

அப்படியென்றால், இவ் வளர்ச்சிகள் கூடாதா? இக் குற்றங்களுக்கு இவ் வளர்ச்சிகள் தான் காரணமா என்றால் இல்லை. இவை குற்ற நிகழ்வுகளுக்கான சூழல்களை உருவாக்குகின்றனவே தவிர, இவை குற்றங்கள் நிகழக் காரணங்கள் அல்ல.
அன்று பகலில் உழைப்பு, இரவில் உறக்கம். இன்றோ 24 மணிநேரமும் எல்லாமும் இயங்குகின்றன. ஆண்கள், பெண்கள் எல்லோரும் இரவு பகல் வேறுபாடு இன்றி சேர்ந்து பணிபுரிகின்றனர், பழகுகின்றனர், பயணம் செய்கின்றனர்.

ஆண்கள் மட்டுமே வருவாய் ஈட்டியநிலை மாறி பெண்களும் வருவாய் ஈட்டுகின்றனர். சமூகக் கட்டுகள் இன்று பெருமளவு தகர்க்கப்பட்டு, தனி மனிதச் சுதந்திரம் பெருகிவிட்டது. பாலுணர்வுச் செய்திகள் அக்காலத்தில் 20 வயதுக்குமேல் தெரிய வந்தன. இன்று 10 வயதிலேயே முழுமையாகக் கிடைத்துவிடுகின்றன.
போதையென்பது சமுதாயத்தில் ஒரு சிலரிடம் மட்டும் இருந்தநிலைமாறி, இன்று பரவலாக்கப்பட்டுவிட்டது. கல்வி நிலையங்கள் ஒழுக்கம், சமூக பொறுப்பு, கட்டுப்பாடு, தொண்டு எண்ணம் போன்றவற்றை வளர்க்கத் தவறி, மதிப்பெண் ஒன்றையே ஒரு இலக்காகக் கொண்டு இயங்கும் அவலநிலை. இதனால் மேற்கண்ட நல்லியல்புகள் இளையதலைமுறையினரிடம் பெருமளவு இல்லாமல் போய், சுயநலமும், சுகவாழ்வும், உல்லாசமும், ஊர்சுற்றலும் என்று ஆகிவிட்டது.

செல்பேசியே உலகம் என்று ஆகி உண்மை எது? பொய் எது? நல்லது எது?
கெட்டது எது? சரி எது? தப்பு எது? அவதூறு எது? மோசடி எது? என்று பகுத்தறியும் முதிர்ச்சியின்றி சமூக ஊடகங்களில் பார்ப்பவற்றைக் கேட்பவற்றை ஏற்றுச் செயல்படும் அவலம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையைப் பயன்படுத்தி சமூகவிரோதிகள் இளைஞர்களின் மூளையை எளிதாக தங்கள் இலக்குக்கு ஏற்பச் சலவை செய்து விடுகின்றனர்.
இளைஞர்களிடம் மிகுந்து நிற்கும் பாலுணர்வு இச்சையைப் புரிந்துக்கொண்டு அது சார்ந்தவற்றைக் காட்சியாகவும், உரையாகவும் பரப்புகின்றனர். தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் இளைஞர்கள் அவற்றைக் கண்டு கேட்டு 10 வயது முதலே தப்பான வழியில் செயல்படத் தொடங்குகின்றனர். பாலுணர்வு உந்தல் போதை நாட்டத்தை ஏற்படுத்த, தடம் மாறி, தன்னிலை, கட்டுப்பாடு இழந்து, மனம்போன போக்கில் வாழும் தற்குறிகளாக மாறுகின்றனர். அவர்களைச் சுயநலக்காரர்கள் எளிதில் பயன்படுத்தித் தங்கள் நோக்கத்தை அடைகின்றனர். பாலுணர்வு வேட்கை, வெறி ஏறும்போது, போதை நாட்டம் மிக போதைக்கு அடிமையாக மேற்கண்ட குற்றங்கள் சமுதாயத்தில் அதிகமாகின்றன.
அரசின் கடும் நடவடிக்கை:
அனைத்துச் சீர்கேடுகளும், அரசின் கடும் நடவடிக்கை இல்லாமையாலே எழுகின்றன. சிலநாடுகளில் கடும் தண்டனை, அதிக அளவு மரண தண்டனை விதிக்கப்படுவதால் அங்கு குற்றங்கள் அதிகம் நிகழ்வதில்லை. நம் நாட்டிலே வன்புணர்வு செய்து பல இளம்பெண்களைச் சீரழித்த குற்றவாளிகள், குறிப்பாக சாமியார் வேடத்தில் இருப்பவர்கள் எளிதில் விடுதலையாகி விடுகின்றனர். இந்த நிலை இருந்தால் குற்றவாளிகளுக்கு அச்சம் எப்படி வரும்?
மரணதண்டனை குறித்து இருவேறு
கருத்துகள் இருக்கின்றன. வள்ளுவருக்குத் தெரியாத மனித நேயமா?
“கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” – (குறள் 550)
என்றார் வள்ளுவர்.
கொடியவர்கள் கொலை செய்து மன்னன் (அரசு) தண்டித்தல், பயிருக்குக் களையெடுப்பது போன்றது என்கிறார். சமுதாயம் என்ற பயிர் செழுமையாக நலமாக இருக்கவேண்டும் என்றால் கொடியவர்களைக் கொன்றொழிப்பது கட்டாயம் என வலியுறுத்துகிறார். இன்றைய சூழலில் சமூகத்தைச் சீர்கெடுக்கும் போதைக் கும்பலுக்குக் கடும் தண்டனை தருதல் அவசியம் அல்லவா?
தன்னை விரும்பாத பெண்ணைத் தொடர்வண்டி வரும்போது தண்டவாளத்தில் தள்ளிக் கொலை செய்தவனுக்கு மனிதாபிமானம் பார்க்க வேண்டுமா என்னும் கேள்வியும் எழுகிறது!
10வயதுப் பெண்ணை வன்புணர்வு செய்து, கொடுமையாய் கொன்றவனுக்குக் கடும் தண்டனை வேண்டாமா? குற்றம் செய்ய கொடியவர்கள் அஞ்சும் அளவிற்கு அரசின் நடவடிக்கைகள், தண்டனைகள் இருப்பது கட்டாயம். மரண தண்டனை கூடாது என்ற கொள்கையுடன் நாம் இருப்பினும், கொடிய நிகழ்வுகளில் மரணதண்டனை கட்டாயமாகிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களே கூட மனம் நொந்து வேதனையுடன் கூறுகிறார். கூலிக்கு கொலை செய்வதை நம் நாட்டில் தொழிலாகவே கொண்டு குழு குழுவாகச் செயல்படுகிறார்கள் என்றால் இது நாடா? இது அரசா? இதற்கு காவல்துறை எதற்கு?
குற்றவாளி என்று நன்கு உறுதி செய்யப்பட்டவன் கூட, நீதிமன்றத்தில் விடுதலையாகி விடுகிறான். உள்ளே நுழைந்து நோக்கினால் அதில் அரசுகளின் தலையீடு, அழுத்தம் இருப்பது தெரிகிறது. இது நீதிமன்றங்களின் மாண்புக்கு ஏற்றதா? நீதிமன்றம் கடைசி நம்பிக்கை. ஆகவே நம்பிக்கை தராமல் போனால், மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கும் நிலை வராதா? தமிழ்நாட்டில் இருக்கும் விழிப்புணர்வு பிற மாநிலங்களில் இல்லையே!
காவல்துறை:
குற்றவாளிகள் வளர்வதற்கு மிகுவதற்கும், குற்றங்கள் பெருகுவதற்கும் காவல் துறையின் சீர்கேடே பெருங்காரணம். நம் காவலர்கள் திறமையானவர்கள். ஆனால், அவர்கள் தன்னலத்திற்கும், பணம் சம்பாதிக்கவோ, அரசின் அழுத்தம் காரணமாகத் தவறு செய்கின்றனர். எனவே, காவல் துறையை மிகச் சரியாக வைத்தால் ஒழிய மேற்கண்ட கொடுமைகளுக்கு தீர்வு காண இயலாது.
காவல்துறையில் பணியாற்றக்கூடிய காவலர்கள், உயர் அதிகாரிகளே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்படுவது எவ்வளவு பெரிய சீர்கேடு! வேலியே பயிரை மேயும் அவலமல்லவா இது! மேலும், காவல்துறைக்குத் தெரியாமல் எந்த குற்றவாளியும் இருக்க முடியாது. அப்படியிருந்தும் குற்றவாளிகள் அதிகரித்து வருகிறார்கள்; அதிக அளவு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அது காவல்துறையின் கண்ணசைவு இல்லாமல் நடக்கமுடியாது. எனவே, அரசு காவல்துறையை அதிகக் கண்காணிப்புடனும், கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். காவல்துறையைக் கண்டிப்புடன் வைத்திருக்க அரசு நேர்மையாக இருக்க வேண்டும். அதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டியது கட்டாயம். இவை சரியாக இருக்க மக்கள் சரியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம்.
மக்கள்:
மக்கள் தேர்தலில் குற்றப் பின்னணி இல்லாத, மக்களுக்குத் தொண்டு செய்யக்கூடிய நேர்மையானவர்களைத் தேர்வு செய்தால் அரசு சரியாக இருக்கும். அரசு நிர்வாகம் சரியாக இருக்கும், காவல் துறையும் சரியாக இருக்கும்.
குற்றப் பின்னணி, மதவெறி, ஜாதிவெறி, ஊழல், போதை, வன்புணர்வு, கொலைவெறி கொண்டவர்களைத் தேர்வு செய்தால், அவர்கள் அரசு நிர்வாகத்தைக் கெடுப்பர், நீதித்துறையைக் கெடுப்பர், காவல்துறையைக் கெடுப்பர், குற்றவாளிகளுக்குத் துணை நிற்பர். மேற்படி குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகும். எனவே, மக்கள் நேர்மையாக, சரியாக வாக்களிக்க வேண்டியது கட்டாயம்.
கல்வி நிலையங்கள்:
மனப்பாடம் செய்து மதிப்பெண் அதிகம் பெறுதல் என்ற ஒற்றை இலக்கில் கல்வி நிலையங்கள் செயல்படுதல் கூடாது. மாணவர்களைப் பல்லாற்றானும் வார்த்தெடுக்கும் பெரும் பொறுப்பு அவைகளுக்கு உண்டு. ஆனால், நடப்பில் மாணவர்களை ஒருமனனப் பொறியாகவே மாற்றுகின்றனர். நீதிபோதனை வகுப்புகளைக்கூட விலக்கிவிடுகின்றனர். அவர்களுக்குக் கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, வாய்மை, சிறந்த குடிமைப் பண்புகள், நன்றி உணர்வு, தொண்டு மனப்பான்மை இவற்றைக் கற்பிப்பது இல்லை. தீயனவிலக்கல், நல்லன ஏற்றல், வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை பற்றியெல்லாம் எடுத்துக்கூறுவது இல்லை. இப்படிப்பட்ட பொறுப்பற்ற நிலையால் மாணவர்கள் போதைக்கு அடிமையாதல், ஆபாச படங்கள் பார்த்தல், இளம் பருவத்திலே காம உணர்வுகளுக்கு ஆட்பட்டு கட்டுப்பாடு இழத்தல், அதன் வழி தப்பான செயல்களில் ஈடுபடல் என்று பல தவறுகளைச் செய்கின்றனர். எனவே, கல்வி நிலையங்கள் தங்கள் கடமையைச் சமூக நலன் கருதி மாணவர் எதிர்காலம் கருதி செய்தல் வேண்டும்.
அரசியல் ஆதாயம் கருதாது அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்:
நடக்கின்ற வன்கொடுமை நிகழ்வுகளை அரசியல் லாபங்கருதி அணுகுவதைத் தவிர்த்து, சமூக அக்கறையுடன் அதை அணுகவேண்டும், ஆராய வேண்டும். இக்கொடுமைகள் தீரவும் தீர்வு காண வேண்டும்.
இவர்கள் ஆட்சியில் தான் இக்கொடுமைகள் நடக்கின்றன. நாங்கள் வந்தால் எல்லா
வற்றையும் அகற்றி முழுப் பாதுகாப்பு கொடுத்துவிடுவோம் என்று பிரச்சாரத்
திற்காகப் பயன்படுத்துவது சுயநலத்தின்பாற்பட்ட மோசடியாகும்.
இக்கொடுமைகளை ஒழிப்பது ஒரு கூட்டுப்பொறுப்பு. அரசு, காவல்துறை, நீதித்துறை, கல்வி நிறுவனங்கள், சமுதாயத் தொண்டு நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமுதாய மக்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று எல்லாத் தரப்பினரும் பொறுப்பேற்று இதை நீக்க முயற்சிக்க வேண்டும்.
குடும்பம்:
நல்லவர்களை உருவாக்குதல், கொடியவர்
கள் உருவாவதைத் தடுத்தல் போன்றவற்றில் குடும்பத்தின் பங்கு முதன்மையானது. பெற்றோர் பிள்ளைகளின் முன்மாதிரியாக நடக்கவேண்டும். நல்லநெறிகளைக் கூறி, தீயவற்றைக் கண்டித்து வளர்க்க வேண்டும். பல நிகழ்வுகளில் குடும்ப உறுப்பினர்களே குற்றவாளிகளாய் இருப்பதும், அக்கம்பக்கம் உள்ள குடும்பத்தவர்களே குற்றவாளிகளாக இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
எச்சரிக்கை:
குடும்பம் முதல் சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் குழந்தைகளும், பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும். யாரையும் முழுமையாக நம்பாமல் விழிப்போடு இருக்கவேண்டும். காரணம், பெரும்பாலான குற்றவாளிகள் உங்கள் அருகில் உள்ள, அறிமுகமானவர்களாகவே இருப்பர்.
திரைப்படங்கள்:
சமுதாயக் குற்றங்கள் அதிகரிப்பதற்கு, இளம் வயதிலே வன்முறை எண்ணம் வளர்வதற்கு திரைப்படங்களும் காரணமாக அமைகின்றன.
மது குடித்தல், புகைப் பிடித்தல், கொலை, இரத்தக்களறி இன்றைய திரைப்படங்களின் மய்யமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. தணிக்கைக் குழுவிலுள்ளவர்களின் ரசனை கேள்விக்குரியதாகிறது.
கதாநாயகன் எதிரியைக் கொலை செய்து விட்டு, கம்பீரமாக நிற்கும் காட்சி பெருமையாகக் கொள்ளப்
படுகிறது. இதைப் பார்க்கின்ற
இளையதலைமுறை எப்படிச் செல்லும்! சிந்திக்க வேண்டாமா?
எனவே, சமூக ஊடகங்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, வன்முறை, வன்புணர்வு போன்ற காட்சிகள் முடிந்த மட்டும் விலக்கப்படவேண்டும்.
தீர்வு:
பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும். குழந்தைகள் எது நடந்தாலும்
உடனே ஆசிரியரிடமோ, குடும்பத்
திலுள்ளவர்களிடமோ தெரிவிக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். போதைப் பொருள் அறவே தடை செய்யப்படவேண்டும். பாதுகாப்பை பலவகையிலும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். தனிமனித ஒழுக்கத்திற்கு முன்னுரிமை தந்து கல்வித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அறம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, தொண்டு சார்ந்த, கருணை வளர்க்கும் கற்பித்தல் முறை கட்டாயமாக்கப் படவேண்டும். குற்றமிழைக்க வாய்ப்பு இருப்போருக்கும் சிறு அத்துமீறல்களில் ஈடுபடுவோருக்கும் தொடக்கத்திலேயே உளவியல் ஆலோசனைகள் மூலம் தடுக்கும் பக்குவம் குடும்பங்களுக்கு வேண்டும். குழந்தைகள், இளைஞர்களின் அன்றாடப் போக்குகளைப் பெற்றோர் கவனிக்க வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும்.
வாழைக் குருத்து போன்று இளம் வாலிபர்கள் தங்களுடைய உள்ளத்தை வீரத்துடனும், சுயமரியாதையுடனும் வளர்க்கப்பட வேண்டியவர்கள். ஒவ்வொருவரும் லெனின் போலவும், ஸ்டாலின்போலவும் புரட்சி வீரர்களாகவும், சர்வாதிகார சூரர்களாகவும் ஆக வேண்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட வேண்டியவர்கள்.
- ‘குடிஅரசு’, 25.08.1935
குடும்பம், கல்வி நிலையம், சமுதாயம், காவல்துறை, நீதிமன்றம், அரசு போன்றவற்றின்
கூட்டுப் பொறுப்பில் கடுமையாக முயன்றால் தீர்வு நிச்சயம்! கூடி முயல்வோம்! w




