Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புலவர் வெற்றியழகனின்திருக்குறள்பகுத்தறிவு உரை

உலகப் பொது நூலாம் திருக்குறள் மனித இனத்துக்கான அறிவுக் களஞ்சியம், . அரசியல், வாழ்வியல், நல்லொழுக்கம் அனைத்தையும் விளக்கும் நூல்.

தந்தை பெரியார் ஏற்று போற்றிய ஒரே இலக்கியம்

அதற்கு பகுத்தறிவுபூர்வமான உரையைத் தந்திருக்கிறார் புலவர் வெற்றியழகன். புலவர் அவர்கள் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அருந்தொண்டாற்றி வரும் பெருமகன்.

இலக்கியங்களையும் அவற்றின் இலக்கண சுவையையும் இளையோருக்கு எளிமையாக இனிமையாக கற்பிக்கும் ஆற்றல் பெற்றவர். தேர்ந்த பகுத்தறிவாளர் அனைத்திலும் பகுத்தறிவு பார்வையை முன்வைத்தே செயலாற்றுபவர். ஏராளமான இலக்கண, இலக்கிய நூல்களை வழங்கியவர். தற்போது திருக்குறளுக்கு ஒரு பகுத்தறிவு உரையை வழங்கியுள்ளார்.

320 பக்கங்களில் தனித்தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல் அறிவுக்களஞ்சியமான குறளை எளிமையாய் சரியான புரிதலுடன் இளையோரிடம் போய்ச்சேருகிறது.

திருக்குறளுக்கு உரை எழுதிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் அவரவர் மதக்கருத்தினை திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் திணித்து விட்டார்கள் என்று கூறும் உரையாசிரியர், திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை விளக்கி, அவருக்கு அந்த நம்பிக்கை இருந்திருக்கும் ஆனால் 1330 குறள்களில் ஓர் இடத்திலாவது ‘கடவுள்’ என்று சொல்லைப் பயன்படுத்தி இருப்பார் என்றும் அவர் காலத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருத்தல் வேண்டும் என்றும் விளக்கி உள்ளார்.

‘கடவுள்’ என்ற சொல்லையே பயன்
படுத்தாத வள்ளுவர் கடவுள் வாழ்த்து எப்படி பாடுவார் என்று கேள்வி எழுப்பி, ‘இறைவன்’, ‘இறை’, ‘தெய்வம்’,
‘தேவர்’ உள்ளிட்ட சொற்களை ‘கடவுள்’
என்னும் பொருளில் அவர் பயன்படுத்த
வில்லை என்று விளக்குகிறார்.

“திருவள்ளுவர் மாந்தனைப் பற்றியும் மாந்தனின் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட்டாரே தவிர கடவுளைப் பற்றியோ, கடவுளை வணங்குவதைப் பற்றியோ கவலைப்படாதவர். கடவுளைத் தொழுவதால் எந்தப் பயனும் இல்லை என்பதனைத் தெளிவாக உணர்ந்து உள்ளார்” என்று கூறுகிறார்.

முதல் குறளிலேயே ‘ஆதி பகவன்’ என்பதற்கான பொருளைத் தமது முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆதிபகவன் என்பதில் சொற்களுக்கிடையே ‘ப்’ மிகாமையால் அது இரண்டு பேரைக் குறிக்கும் சொற்கள் அல்ல என்றும், ஒரே சொல் என்றும் ஆதிபகவன் என்பது முழுமுதற் காரணமான சூரியன் என்று குறிப்பிடுகிறார்.

மேலும், ‘ஆதிபகவன் உலகில் தோன்றிய முதல் மாந்தனை முதலாகக் கொண்டுள்ளது உலகம் என்று குறிப்பிடுகிறார்.

‘வாலறிவன்’ – கற்றுத் தந்த ஆசானை வழிபடுதல் என்றும்;

‘மலர்மிசை யேகினான்’ என்பதற்கு கள்ளங் கபடமற்ற முனிவர் என்றும்; வேண்டுதல் வேண்டாமை இலான் என்பதற்கு அனைவரையும் ஒன்றாகக் கருதும் முற்றுணர்ந்த சான்றோன் என்றும்;

‘‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’’ என்பதற்கு ‘இறைவன்’ என்று போற்றப்பெறும் சான்றோன் என்றும்; பொறிவாயில் அய்ந்தவித்தான் என்பதற்கு ‘துறவனாகிய சான்றோன்’ என்றும்; தனக்குவமை இல்லாத சான்றோன் என்றும்;

 எண் குணத்தான் என்பதற்குத் தந்தை தாயாகிய சான்றோர் என்றும்; இறைவன் என்பதற்கு ஆற்றல்சால் சான்றோன் என்றும் பொருள் கொண்டு உரைகளை யாத்துள்ளார்.

 இரு வினையினைப் பெருவினை என்று கூறுகிறார்.

‘தன்நீர்மை குன்றும்’ என்பதற்கு நீரின் தன்மை குன்றும். அஃதாவது உப்புநீரின் தன்மை கூடி நன்னீரின் தன்மை குன்றும் என்று பொருள் கொண்டுள்ளார்.

‘நீத்தார்’ என்பதற்குத் துறவியர் என்கிறார்.

‘இந்திரன்’ என்பது புராண இந்திரன் இல்லை. இனிமையான திறமை மிக்க அறிவன் என்கிறார்.

மேலும், “தெய்வம் என்பதற்குத் தேவர், ஊழ் என்று பரிமேலழகர் பொருள் கொண்டுள்ளார். தெய்வம் என்பதற்கு மணக்குடவர் புண்ணியம் என்றும் தேவர் என்றும் கொண்டுள்ளார். காலிங்கர் விதி என்று கொண்டுள்ளார். பரிதியார் குலதேவதை என்று கொண்டுள்ளார். ஆனால் புலவர் வெற்றியழகன் ‘சான்றோர்’, ‘இயற்கை’ என்று கொண்டு உரை எழுதியுள்ளார்.

தொழுதல் – என்பதற்கு மதித்தல்

நிறை என்பதற்கு அன்பு

புத்தேளிர் – புத்தித் தெளிவான சான்றோர்

என பல்வேறு திருக்குறளில் பயன்படுத்தப்
படும் பல்வேறு சொற்களுக்கு பகுத்தறிவு பூர்வமான விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இதன் சிறப்பாக திருக்குறளிலும் அதன் உரைகளிலும் தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை முழுமையாகப் பின்பற்றி உள்ளார் என்பதைக் குறிப்பிடத்தக்கதாகும்.

திருக்குறளைப் பரிசளிக்க விரும்பும் முற்போக்காளர்கள் இந்தப் பகுத்தறிவு உரையைப் பரிசளிக்கலாம். |