Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்து சமய அறநிலையத் துறைக்குமுதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையாரா?

அண்மையில் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என்று ஒருவரை நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல.
அவர் முதலமைச்சர் அவர்களின் ‘ஆஸ்தான ஜோதிடர்’ என்று அறியப்படுபவர். ஜோதிடம், தியானம் என்றே தன்னை ஊடகங்களிலும், பொது வெளியிலும் அறிமுகப்படுத்திக் கொண்டவர்.  அப்படிப்பட்ட ஒரு ஜோதிடரை அரசின் செலவில் சிறப்பு அலுவலராக நியமித்துப் பக்கத்திலேயே வைத்துக் கொள்வது, இது மதச்சார்பற்ற அரசு என்பதற்கு ஏற்புடைய செயலல்ல… அரசியலமைப்புச் சட்டம் கூறும் அடிப்படைக் கடமை களை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சி மன்றத்தின் தலைமைக்கும் உண்டு – கூடுதலாகவே உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூறு
51 ஏ(எச்) அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதை அடிப்படைக் கடமையாக்குகிறது. ஆனால், அதற்கு மாறாக அறிவியலுக்குப் புறம்பான ஜோதிடத்தை மாநில முதலமைச்சரே முன்னிறுத்துவது சரியானதல்ல என்ற
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பையடுத்து, ஜோதிடரைச் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்த அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது. முதலமைச்சரின் இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது

இந்த நியமனம் உடனடியாகத் திரும்பப் பெற்றதுடன், இனி இத்தகைய நடவடிக்கைகள் தொடரக் கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
சமூகச் சிந்தனையாளர்கள், பொதுமக்களின் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதையும், சட்டமன்றத்திலேயே பல்வேறு கட்சியினரும் இதனைக் கண்டித்திருப்பதையும் வரவேற்கிறோம். தமிழ்நாடு பெரியார் மண் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன இந்த எதிர்ப்புகள்! இதனைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதே, புதிய அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் நல்லது.

மற்றொரு புறம், தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்று 50 ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதி மன்றத்திலும் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்தின்படி, பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசால் நியமிக்கப்பட்டனர்.
இதன்மூலம் ஈராயிரம் ஆண்டு ஜாதி – தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டும் பணி நடந்தது. அதில் இன்னமும் கூட பல்வேறு தடைகள் இருக்கின்றன; நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்த கட்டங்களில் புதிய நியமனங்கள், அர்ச்சகர் பயிற்சிகள் தொடர வேண்டிய தேவை இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து சமய அறநிலையத் துறைக்கு முதன்மைச் செயலாளராகப் பார்ப்பன அம்மையார் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.
இந்த நியமனம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுவரையில் நாம் பெற்று வந்துள்ள வெற்றியையும், ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தையும் எக் காரணம் கொண்டும் நாம் இழந்து விட முடியாது. மிக முக்கியமான கால கட்டத்தில் மிகுந்த கவனத்துடன் இப்பிரச்சினைகளை அணுக வேண்டும்.