உணவு என்பது ஒருவரின் தனிநபர் பிரச்சனை! அதில் கொண்டு போய் தங்களின் மத உணர்வு மூக்கை நுழைப்பது நேர்மையானதோ, மனிதத் தன்மையுடையதோ அல்ல. ஆனால், சங்பரிவார் கும்பலிடம் இந்த இரண்டும் இல்லையே.
உத்தரகாண்ட் மாநிலத்தின் கோயில் நகரம் ஹரித்துவார். கும்பமேளா நடைபெறும் இடங்களில் இந்நகரமும் ஒன்று. இந்த நகரம் 1950 ஆண்டுவரை பழங்குடியினர் மற்றும் இசுலாமியர்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த நகரம்; மெல்ல, மெல்ல ஆர்.எஸ்.எஸ்., விசுவஹிந்து பர்ஷத் போன்ற அமைப்புகள் பழங்குடியினரின் மூளையைச் சலவை செய்து இசுலாமியர்களுக்கு எதிராகத் திருப்பின, அடுத்த ஆண்டு ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற உள்ளது.
இந்த விழாவின் போது, துறவிகள் ஹரித்துவாருக்கு வருகை தருவார்களாம். அவர்களின் மத உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், இந்துக்களின் மனம், புண்படாத வகையிலும் ‘புனித’த் தன்மையைப் பேணவும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து இறச்சிக் கடைகளையும் நிரந்தரமாக மூடுவதற்கு மாநகராட்சி நிருவாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைகள் மட்டுமின்றி, உணவு விடுதிகள் இறச்சி உணவுகளைப் பரிமாறுவதற்கும், தடை விதிப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனராம். ஹரித்துவார் ஒரு ‘புனித’த்தலம் – ஆதலால் அதன் ஆன்மிகச் சூழலைப் பராமரிக்க இத்தகைய முடிவுகள் அவசியம் என்ற அயோக்கியத்தனமான வாதம் அரசுத் தரப்பால் வைக்கப்படுகிறது.
பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட உள்ள இந்த அதிரடி முடிவு, தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஹரித்துவாரில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 30 விழுக்காடு உள்ளது. பழங்குடியினரும், தாழ்த்தப்பட்டச் சமூகத்தினரும் 40 விழுக்காடு உள்ளனர். வெறும் 20 விழுக்காடு மட்டுமே உயர்ஜாதியினர் உள்ளனர். அதிலும் பார்ப்பனர்கள் ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே (0.9 விழுக்காடு மட்டுமே) உள்ளனர். ஹரித்துவாரைப் பொறுத்தவரையில், அங்கு பெரும்பான்மையான இந்துக்கள் இறச்சி உண்பவர்கள் தான். 0.9 விழுக்காடு பார்ப்பனர்களுக்காக, 90 விழுக்காட்டு மக்களின் புரதஉணவில் கை வைத்துள்ளது இரட்டை எஞ்சின் பா.ஜ.க அரசு!
இந்து ராஜ்யத்தை அமைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் அதற்கான பரிசோதனைக் கூடமாக வடமாநிலங்களில் பல முக்கிய நகரங்களை, மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், மாட்டுக் கறியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் பி.ஜே.பி.யினர்
தான் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, குறிப்பாக 2024–2025 நிதியாண்டில், மாட்டுக்கறி இறச்சி ஏற்றுமதி சுமார் 4.16 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த மாட்டுக்கறி நிறுவனங்கள் பி.ஜே.பிக்கு நன்கொடைகளை வாரி வழங்குகின்றன.
இந்தியாவின் மிகப் பெரிய மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனமான ‘அலானா குரூப்’ பி.ஜே.பிக்கு நன்கொடையாக ரூ.30 கோடி, வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
உள்நாட்டில் ‘பசுப் பாதுகாப்பு’ப்பற்றி நீட்டி முழங்கும் கட்சியினரின் ஆட்சியில், மாட்டிறச்சி ஏற்றுமதியில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதிலிருந்து, அவர்களது யோக்கியதை என்ன என்பதை எடுத்துக்காட்டும்!
‘‘கும்பமேளா நடக்கும்போது, இறச்சி உண்ணக் கூடாது – இறச்சிக் கடைகள் இருக்கக்
கூடாது’’ என்று எந்தக் கடவுள், யாரிடம் நேரில் வந்து சொன்னாராம்? ஏதோ, எவரோ கிறுக்கி வைத்தது எல்லாம் மத நம்பிக்கை என்று கூறி, அடுத்த மனிதனின் தனிப்பட்ட உரிமையில், ‘ஆட்சி – அதிகாரம்’ இருக்கின்ற காரணத்தால் தலையிடுவது எவ்விதத்திலும் சரியல்ல – இது அப்பட்டமான மனித உரிமை மீறல் அன்றி வேறென்ன?
மதவாதம் இந்திய ஒற்றுமையைச் சிதைக்கும் அணுகுண்டே!
இது ஒரு புறத்தில் என்றால் சில நாட்களுக்கு முன் விளையாட்டுத் துறையிலும் மதவெறி விளையாடியுள்ளது.
டில்லியில், ஒன்றிய அரசின் கீழ் வரும் விளையாட்டுக் கழகம் ‘ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா’’வின் சார்பில் விளையாட்டில் திறமையான மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, அவர்களின் கல்விச் செலவு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்று விளையாட ஊக்கத் தொகை தரும் அமைப்பு ஆகும்.
இந்த அமைப்பு 2026–2027ஆம் ஆண்டிற்
கான நேர்காணலை டில்லியில் நடத்தியது.
இந்தியா முழுவதிலுமிருந்தும் சுமார் 1000 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ஷான் முகமதுவும் ஒருவர். இவருக்கு விளையாட்டுக் கழகத்தின் சார்பில் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கடிதத்தில், குறிப்பிட்ட நாளில் அவர் டில்லி சென்று, நேர்காணலில் கலந்து கொள்ளச் சென்றார். இவர் கல்வி மற்றும் விளையாட்டில் திறமையானவர்; ஒன்றிய விளையாட்டுக் கழகம் இவருக்கு விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அறைக்குள் நுழைந்தார். நேர்காணலில் அமர்ந்திருந்த குழுவினர், முதலில் அவரைப் பார்த்து அவர்களுக்குள் ஏதோ கூறிக்கொண்டனர். முகமது மலர்ந்த முகத்தோடு தனது பெயரைச் சொன்ன அடுத்த வினாடியே நிலைமை தலைகீழானது. நேர்காணல் குழுவினர் அவரைத் தடுத்து நிறுத்தினர். ‘‘இது உங்களுக்கானது அல்ல” (This isn’t for you) என்ற ஒற்றை வரியுடன், எந்தவிதக் கேள்வியும் கேட்பதற்கு இடமளிக்காமல் ‘‘வெளியே செல்லுங்கள்; உங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’’ என்று கூறிவிட்டனர்.
அவரது கல்வி – விளையாட்டு – இதர திறன் சோதனைகள் பற்றி, எந்தக் கேள்வியையும் கேட்காமல், பெயரை மட்டும் கேட்டுவிட்டு, ஒரு (இஸ்லாம்) மாணவரை வெளியேற்றியுள்ளனர். இந்நிகழ்வு ஒன்றிய அரசின் கீழ் வரும் அமைப்பின் உறுப்பினர்களின் கண்ணோட்டம் குறித்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு திறமையை இழிவுபடுத்தாமல் மதத்தை முன்னிலைப்படுத்துவது, ஒன்றிய அரசின் அமைப்புகளில் ஊடுருவியுள்ள மதவாத நஞ்சினை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஓர் அமைப்பு வளர வேண்டுமெனில் அங்கு பன்முகத்தன்மையும், தகுதியும் (விளையாட்டுப் போட்டிகளில் இதுதானே முக்கியம்) அடிப்படைத் தேவைகளாக இருக்க வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்தில் திறமைக்கு மாற்றாக, மத அரசியல் அடையாளம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
‘‘ஒரு மாணவனின் பல ஆண்டுகால உழைப்பும், கனவும் அவனது பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே நிராகரிக்கப்படுவது – ஒரு ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல’’ என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியேறும் மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக வேலைவாய்ப்பு நிறுவனங்களைப் பார்க்கிறார்கள். அங்கும் மத அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது எப்படிச் சரியாகும்? தகுதியிருந்தும் இளைஞர்கள் நிராகரிக்கப்படும் போது, அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும், சமூகத்தின் மீதான கசப்பும் உருவாகிறது. தகுதியான நபர்களை விடுத்து, (மத) அடையாளத்தின் அடிப்படையில் ஆட்களைத் தேர்வு செய்வது அவர்களின் திறன்களைப் பாதிக்கும். அவர்களின் திறன், தேவைப்படும் துறைகளின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் நிலவும் இந்தப் பாரபட்சம் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நஞ்சாக மாறுகிறது. ஷான் முகமதுவுக்கு நேர்ந்தது வெறும் தனிப்பட்ட நிராகரிப்பு அல்ல; அது ஒட்டுமொத்த ஒன்றிய அரசின் துறைகளுக்கு விடப்பட்ட சவால்! ஒன்றிய அரசு இது குறித்து மவுனம் காப்பது மேலும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது.
இதுநாள் வரை ஒடுக்கப்பட்டச் சமூக மக்கள் மீது, நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த நிராகரிப்பு – காழ்ப்புணர்ச்சி தற்போது சிறுபான்மையினர் பக்கமும் திரும்பி உள்ளது.
மூடப் பழக்க வழக்கங்களையும், அவற்றிற்குத் தந்தைமார்களாக இருந்து வளர்ந்து வரும் புரோகிதர்களின் ஆதிக்கங்களையும், இந்தப் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பு
வஞ்சகச் செயல்களுக்கெல்லாம் ஆதரவு கொத்து வரும் மதங்களையும் அழித்துத் தவிடுபொடி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டின் வாலிபர்கள் என்பதை உலக ஞானம் உள்ள
எவரும் அறிவார்கள்.
- ‘குடிஅரசு’, 12.09.1926
100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் எல்லாத் துறைகளிலும் ‘அவாளே’ இருக்கவேண்டும் என்ற ஆபத்தான திசையை நோக்கி மீண்டும் திரும்பி உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், மதச் சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, பதவிப் பொறுப்பை ஏற்பவர்கள், நடைமுறையில் அதற்கு நேர் எதிராக மதவாதக் கண்ணோட்டத்தோடு, வன்மத்தோடு எதையும் அணுகுவது இந்திய ஒற்றுமைக்கு வைக்கப்படும் அணுகுண்டாகும். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் வளர்ச்சியும், அதிகார பலமும் நாட்டை அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லும்; மக்களை வாழ விடாது செய்யும் – எச்சரிக்கை! |
