சிறுபிள்ளைத் தனமான செயல்க ளாலே
சிறுமைகளே நாடெங்கும் விளையக் காண்போம்!
வெறுப்பான அரசியலை ஏந்தி நின்றால்
வெந்துயரத் தீயெங்கும் பரவி மாய்க்கும்!
பொறுப்பான இளைஞர்களே நாட்டின் வேர்கள்!
புதுமைகளைப் படைக்கின்ற புரட்சி உள்ளம்
திரண்டிருப்பின் நல்லோரைத் தேர்தல் மூலம்
தேர்ந்தெடுக்கும் நல்வாய்ப்பைப் பெறலாம் அன்றோ?
வீண்பேச்சுப் பேசுவதால் பயனும் உண்டோ?
வெளியுலகம் காணாராய் வெற்றர் ஆகி
மாண்பெல்லாம் தொலைத்திடுவர்! இனத்தை, மண்ணை,
மானத்தைப் பெரிதாக எண்ணி டாமல்
வேண்டாத துன்பமெலாம் விளைப்பர்! என்றும்
வெற்றிக்கே துணையிருப்பர்! பெருமை சேர்ப்பர்!
தூண்டலுமே இல்லையெனில் துலங்கல் உண்டோ?
துன்பங்கள் மலைமலையாய்க் குவிந்து நிற்கும்!
எவர்நல்லர்! எவர்தீயர்! பகைவர் யாராம்?
என்பனவும் விளங்காமல் தீயோர் தம்மை
உவகையுடன் ஆதரிப்பர்! களத்தில் வெற்றி
உவந்தளிப்பார்! நாட்டுநலன் எண்ணிப் பாரார்!
தவறுகளைச் செய்வோர்க்கு வாழ்வில் என்றும்
தருநிழலாய் இருந்திடுவார்! பதவி வேண்டி
அவலங்கள் சூழ்ந்திடவே ஆர்வம் கொள்வார்!
ஆனவரை போக்கிலிகள் பிழைக்கச் செய்வார்!
பண்பாட்டை மறந்திடுவார்! பெருமை சேர்க்கும்
பகுத்தறிவைத் தொலைத்திடுவார்! மடமைப் போக்கால்
கண்மூடிப் பழக்கத்தைத் தொடர்வார்! என்றும்
காரிருளில் தவித்திடுவார்! விரும்பு கின்ற
முன்னேற்றம் விழையாமல் முடங்கித் தங்கள்
முகவரியை இழந்திடுவார்! இவர்கள் தம்மைப்
பண்படுத்தி மனத்திண்மை தூய்மை எய்தப்
பதியமிட்டு வளர்த்திடவே வேண்டும் இந்நாள்!
அறியாமைச் சேற்றினிலே உழல்வோர் தம்மை
அறிவியக்கப் பாதைக்கே அழைத்துச் செல்லும்
செறிவார்ந்த நல்வழிகள் காண்போம்! நாட்டின்
சீர்திருத்தம் வாழ்வியலின் மேன்மை யாவும்
அறிவாண்மைத் திறத்தாலே அமைத்து மக்கள்
அகத்தினிலே ஒருமாற்றம் கொணரல் வேண்டும்!
நெறியற்ற கூட்டத்தால் எந்த நாளும்
நிலையான வளர்ச்சியினை நாடும் எய்தா!
கொள்ளையராய் இருந்திடுவார்! குமுகம் பேணார்!
குலைநடுங்கும் திரைக்கவர்ச்சி தன்னில் வீழ்வார்!
விள்ளரிய சீரியநம் மரபைக் காக்கும்
வீறார்ந்த நல்லுணர்ச்சி மறந்தோ ராகிக்
கள்ளமனம் கொண்டோரின் கயமைப் போக்கைக்
கனன்றெதிர்க்கும் பேராண்மை இழப்பர்! நெஞ்சில்
பள்ளத்தைச் சேர்க்காமல் எழுச்சி பெற்றால்
பாராட்டும் எதிர்காலம் அமையும் அன்றோ?
வாழ்கின்ற காலத்தில் குமுக மேன்மை
வளர்ச்சிக்கே நல்லிளைஞர் உழைத்தல் வேண்டும்!
தாழ்வினையும் இழிவினையும் தடுக்கும் ஆற்றல்
தக்காங்கு மிக்கோராய்த் திகழ்தல் வேண்டும்!
பாழ்ச்செயல்கள் புரிவோரின் வஞ்சம் யாவும்
பஞ்சாகப் பறந்திடவே களத்தில் நின்று
காழ்ப்புணர்ச்சி மிக்கோரை வீழ்த்தி என்றும்
கடமையினைக் கண்ணிரண்டாய்ப் போற்று வீரே! |




