திட்டக்குடி பெரியார் பெருந்தொண்டர் டி.ஆர்.குப்புசாமி அவர்களின் படத்திறப்பு 31.05.2008 அன்று காலை திட்டக்குடியில் நடைபெற்றது. அதில் பங்கேற்று அவரது
படத்தைத் திறந்து வைத்து அவரது பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினோம்.
பெரியார் பெருந்தொண்டர்
டி.ஆர்.குப்புசாமி அவர்கள் திட்டக்குடி பகுதியில் அந்தக் காலத்தில் இயக்கத்திற்கு பல சோதனைகள் எதிர்ப்புகள் எல்லாம் வந்த போதும் அதனையெல்லாம் துணிச்சலோடு எதிர்த்தவர். அவரது மகன் டி.ஆர்.கே.அழகேசன் அவர்களும் பகுத்தறிவுவாதி; எனது ஆசான் ஆ.திராவிடமணி குப்புசாமி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். கடலூரில் எனது தந்தையார் கடையிலே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்.
இவரது பிள்ளைகளின் திருமணங்
களுக்கு தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் தலைமையேற்று நடத்தியுள்ளனர். அதன் பின் நம் காலத்திலும்
இக்குடும்பத்தில் பல திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம். கழக மாநாடுகளில் கலந்து கொள்வதைக் கடமையாக கருதியவர் டி.ஆர்.குப்புசாமி அவர்கள்.
சாலியமங்கலம் பெரியார் பெருந்
தொண்டரும் மேனாள் ஊராட்சி மன்றத்
தலைவருமான ஜெ.துரைராஜன் அவர்களின்
மகன் துரை.செல்லத்துரை விபத்தில் மறைந்த
நிலையில் அவரது படத்திறப்புவிழா 31.05.2008 அன்று சாலியமங்கலத்தில் நடை
பெற்றது. இராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று படத்தினைத் திறந்து வைத்தோம்.
அடுத்த நாள் (01.06.2008) புதுக்கோட்டை விடுதி க.தமிழ்மணி – இராஜகுமாரி ஆகியோர்
மகன் டாக்டர் த.ஈவெரா மற்றும்
ஆ.ஜெயராமன் – சிலம்புச் செல்வி ஆகியோர்
மகள் ஜெ.விஜி இவர்களின் மணவிழாவைத் தலைமையேற்று தஞ்சையில் நடத்தி வைத்தோம்.
பின்னர் காலை 11 மணியளவில் சரஸ்வதி
மகாலில் நடைபெற்ற முதுபெரும்
பெரியார் பெருந்தொண்டர் கோயில் பி.வி.இராமச்சந்திரன் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வில் பங்கேற்று “வாழ்வில் பொது நலமே” மகிழ்வு என்னும் தலைப்பில் உரையாற்றினோம். பி.வி.இராமச்சந்திரன் அவர்கள்
எஸ்.ஆர்.எம்.யூ எனப்படும் ரயில்வே தொழிற்சங்கத்தை தொடங்கியவர்களில்
ஒருவர். பெரியார் பன்னாட்டு அமைப்பின்
தலைவரான சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் சித்தப்பா
நிகழ்வுக்கு பி.வி.வீரமணி வரவேற்புரை
யாற்றினார். இந்த நிகழ்வில் ஒரத்தநாடு ஒன்றிய கழகத்தின் சார்பில் இருநூறு விடுதலை சந்தாக்களை வழங்கி மகிழ்வித்தனர்.
அன்று மாலை குத்தாலத்தில் அமைக்கப்
பட்டிருந்த தந்தை பெரியார் சிலையை அமைச்சர் கோ.சி.மணி அவர்கள் தலைமை
யில் கடும் மழையில் திறந்து வைத்தோம்.
சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன், மேனாள் சட்டமன்ற
உறுப்பினர் கல்யாணம், கழகச் செயலவைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிலையின் அருகே மயிலாடுதுறை
வட்டத்தில் தந்தை பெரியார் அவர்களை தளபதிகளாக இருந்து தியாகம் செய்து கல்வெட்டுகளில் ஒன்றாக பொறித்து வைத்திருந்தனர்.
ஜூன் 3ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமது 85ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவருடன் இனமான பேராசிரியர், அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரை.முருகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்த
துடன், அவர் செய்திருந்த சமூகப்புரட்சி நடவடிக்கையான அனைத்து ஜாதியின
ருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தைப் பாராட்டி ஒரு கல்வெட்டை தந்தை பெரியார்
நினைவிடத்தின் முகப்பில் உருவாக்கி
யிருந்தோம். அதனைத் திறந்து வைத்தோம்.
05.06.2008 அன்று கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் நம்மை வரவேற்று அழைத்துச் சென்றார்.
திருவச்சூரில் 7.6.2008 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மேனாள் பொருளாளர் பொறியாளர் சோ.ஞானசுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் பங்கேற்று நினைவுநாள் மலரை வெளியிட்டோம். தென்கச்சி சாமிநாதன், பொருளாளர் கோ.சாமிதுரை, மீனா ஞானசுந்தரம் உள்ளிட்
டோர் பங்கேற்றனர்.
திராவிட இயக்கத்தின் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும், கவிஞரும்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களு
டன் அணுக்கமாக இருந்து எழுத்துப் பணி புரிந்தவருமான சுவிக்கொண்டல் மானமிகு மா.செங்குட்டுவன் அவர்
களின் 80ஆம் அகவை
நிறைவு முத்துவிழா 8.6.2008 அன்று காலை
இனமான பேராசிரியர் க.அன்பழகன்
தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று மலரை வெளியிட்டோம். தமிழ் எழுத்தாளர் கழக இணைச் செயலாளர் யுவராச அமிழ்தன் பெற்றுக்கொண்டார்.
முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – தி.மு.க. மாணவர் அணி சார்பில் சென்னை – தேவநேய பாவாணர் மய்ய நூலக அரங்கில் 7.6.2008 அன்று மாலை கலைஞர் அவர்களின் நூல்களை அரசு நூலகங்களுக்கு வழங்கும் விழாவாக நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. மாணவரணி மாநிலச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி தலைமை வகித்தார். சென்னை மாவட்ட நூலக ஆணையத்
தலைவர் கயல் தினகரன் வரவேற்புரையாற்றி
னார். தி.முக அமைப்புச் செயலாளர் கே.எஸ்.இளங்கோவன், தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய மா.சுப்பிரமணியன், வட சென்னை மாவட்ட செயலாளர் எல்.பலராமன், பொது நூலக இயக்குநர் வெ.ரமணி, அன்பகம் கலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி வெளியிட பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார். “கலைஞரின் படைப்பாற்றல்” எனும் தலைப்பில் நாம் உரையாற்றினோம். தமிழன் பிரசன்னா (சட்டக்கல்லூரி மாணவர்) வழக்குரைஞர் கணேசகுமார் ஆகியோர் நன்றி கூறினர்.
அதுபோல் 9.6.2008 அன்று மாலை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் பங்கேற்றேன். தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் பங்கேற்று உரையாற்றினார்.
என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாகப் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தோழர்கள் தங்களை நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 15 நாள்கள் நடைபெற்ற நிலையில் 11,250 மெகாவாட் உற்பத்தி இழப்பு ஏற்பட்ட நிலையில் இதனை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று 10.6.2008 அன்று வேண்டுகோள் விடுத்தோம்.
அந்த அறிக்கையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் எத்தனை ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே நீடிப்பது? என்று கேள்வி எழுப்பி, இவர்களில் பலர் ஏற்கனவே நிறுவனத்
திற்கு இடம் தந்த குடும்பங்களைச் சார்ந்த
வர்கள். அவர்களை அலட்சியம் செய்வது சரியல்ல என்பதை தெரிவித்ததுடன்,
என்.எல்.சி. நிறுவனம் லாபத்தில் நடக்கும் நிறுவனம் அந்த நிறுவனத்தின் இலாபத்திற்கு காரணமான தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்த்தால் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தேன்.
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி முகாமில் பங்கேற்று ஜூன் 13.14 ஆகிய தேதிகளில், பயிற்சி வகுப்பின் தேவை மற்றும், தாழ்த்தப்பட்டவர்களும் திராவிடர் கழகமும் எனும் தலைப்புகளில் சுமார் 100 மாணவர்களுக்கும் மற்றும் 100 பார்வையாளர்களுக்கும், வகுப்பு எடுத்தோம்.
இடையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்
றோம். இராசபாளையம் கிருஷ்ணாபுரம் பெரியார் பெருந்தொண்டர் ச.தவமணி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது படத்தினைத் திறந்து வைத்து குடும்பத்திற்கு ஆறுதல் கூறினோம். இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் வானவில் மணி, மாவட்ட செயலாளர்
தி.ஆதவன், மதுரை மாவட்ட தலைவர் வே.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் இல. திருப்பதி, இராசபாளையம்.
நகர் செயலாளர் பூ.சிவகுமார் இளைஞரணி பொறுப்பாளர் மா.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகளை மா.பால்ராசேந்திரம் –
இரா.கஸ்தூரி பாய் ஆகியோரின் செல்வன்.
பா.இராசேந்திரன், தாம்பரம் அண்ணாநகர் பெரியார் தெரு, சி.பெருமாள். கஸ்தூரி
ஆகியோரின் செல்வி. பெ.இராதிகா தேவி
ஆகியோர் மண விழாவை 15.6.2008 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தோம். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பேராசிரியர் இர.கனகராசு, மாவட்ட தி.க செயலாளர் மு.முனியசாமி, வேளாண் கூட்டுறவு வங்கி மா.சேசுராசன் முன்னிலை வகித்தனர்.
பாளையங்கோட்டை கட்டபொம்மன் நகர் அருகில் 15.6.2008 அன்று காலை பாரதி நகரில் நயினார் இறைவி ஆகியோரது ‘புயல் புகழ்’ இல்லத்தைத் திறந்து வைத்தோம். அப்போது பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் உரைகள், ‘இதழாளர் பெரியார்’ இறையனார் இறுதிப் பேருரை’ இவற்றின் குறுந்தகடுகளை நாம் வெளியிட, புலவர் ந.பாலையா, மதுரை தே.எடிசன்ராசா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உடன் திருமகள், திருச்சி தங்காத்தாள், மதுரை வே.செல்வம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் பகுதியில் இயக்கத்தின் தூணாக விளங்கி கழகப்பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர்
உ.து.சிங்காரம் அவர்
களின் படத்திறப்பு விழா உத்திரமேரூரில் நடைபெற்றது. அதில் பங்கேற்று அவரது படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினோம். உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அவை தலைவருமான க.சுந்தர் உள்ளிட்ட தோழர்கள் நினைவு உரையாற்றினர்.
சென்னையில் 21.06.2008 அன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றோம். திராவிட இயக்கம் ஒருபோதும் இஸ்லாமியர்களைக் கைவிடாது என்பதை விளக்கி உரையாற்றினோம். இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரி கட்சிகளுக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் ஒற்றுமையுடன் திகழ வேண்டியதை விளக்கினார். கருத்து வேறுபாடுகள் குறித்து விரிவாக பேசினார்.
இந்திய அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஒரு மசோதாவில் இடதுசாரிகள் முழுமையாக வேறுபட்டனர். இந்த நிலையில் அந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டிய தேவை குறித்து நம் கருத்தினை 23.6.2008 அன்று தெரிவித்தோம். பொது எதிரி மதவாத சக்திகள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்களும், இடதுசாரிகளும் முடிவு எடுப்பதே உகந்ததாகும் என்று அந்த வேண்டுகோளில் குறிப்பிட்டிருந்தோம்.மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்களின் வேண்டுகோள் இது என்றும் விளக்கி இருந்தோம். மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்க இடதுசாரிகளுக்கும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் இணக்கமான உறவு அவசியமாகும் என்று தெரிவித்தோம்.
சென்னையில் 22.6.2008 அன்று காலை 9.30 மணியளவில் லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி – செல்வி நந்தினி ஆகியோரது மணவிழாவில் பங்கேற்றோம். விழாவினைத் தமிழ்நாட்டு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்தார்.
சட்டம் இயற்றும் அவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனும் சட்ட முன்வரைவு, தேவகவுடா பிரதமராக இருந்தபொழுது 1996இல் உருவாயிற்று. அதன் பின்பு வந்த குஜ்ரால் மற்றும் வாஜ்பேயி ஆகியோர் காலத்தில் அச்சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் எதிர்ப்பை எதிர்கொண்டு நிறைவேறாமல் போயிற்று.
பின்னர் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பேற்ற பின், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தி, சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் உள்ள நாடாளுமன்ற கூட்டு நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
நிலைக்குழு டில்லியில் பல்வேறு கட்சிகளிடம் கருத்தை அறிந்தது. ஜூன் 23இல் சென்னையில் கருத்தறியும் அமர்வை நடத்தியது. திருவாளர் சுதர்சன நாச்சியப்பன் தனது முன்னுரையில் அழைக்கப்பட்டிருந்த கட்சிகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் என்றும், திராவிடர் கழகம் மட்டும் சமூக இயக்கம் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற நிலைக் குழுவினர் மற்றும் பிற அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில், பெண்ணுரிமை பேணிவரும் சமுதாய இயக்கமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் நாம் பங்கேற்று நம் நிலைப்பாட்டைத் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துரைத்தோம். முன்னதாக திராவிட கழகம் தெரிவிக்க விரும்பும் கருத்துகள் அச்சடிக்கப்பட்டு அங்கிருந்த அனைவருக்கும் கொடுக்கப்
பட்டது.
நம்முடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கு.வெ.கி.ஆசான், மாநிலப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி ஆகியோர் வந்திருந்தனர்.
(நினைவுகள் நீளும்)
