Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாமும் தொடர்வோம், வாருங்கள் !

“மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும் கவலையில்லாமல் இருப்பதற்கும், ‘சர்வ சக்தியுள்ள கடவுள்‘ ஒருவர் இருக்கின்றார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.

‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை‘ என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி,
அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்கு
வதைவிட, உலகில் ஜீவகாருண்யத்தன்மை வேறில்லை என்று சொல்லுவேன்‘ என்றார் தந்தை பெரியார் (‘கடவுள் ஒரு கற்பனையே’ நூல்)

இந்த மேற்கோளைப் படித்தவுடன் அப்படியொரு மகிழ்ச்சி மனதிற்குள் உண்டாகியது. ஜீவகாருண்யத்தன்மை என்பது பற்றிப் பக்கம் பக்கமாக விளக்கங்கள் கூகுளில் தேடிப்பார்த்தால் கிடைக்கின்றன. ஆனால், தந்தை பெரியார் கொடுத்திருக்கும் விளக்கம்போல் ஒரு விளக்கம் எங்கும் இல்லை.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்கின்ற கருத்தை மக்களிடையே பரப்பி,அவர்களுக்கு அறிவுத்தெளிவை உண்டாக்கிய ஜீவகாருண்யத்தன்மை மிகுந்த தந்தை பெரியாரின் தொண்டர்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் என்றார்கள். மனிதர்களுக்குள் வேற்றுமை விளைவிக்கும் ஜாதியை, மதத்தை மனிதர்களின் மனதிலிருந்து அகற்றுவதற்கான பரப்புரையைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருந்தார்கள்.இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கிராமத்து மனிதர்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள். குக்கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர்கள், தங்களது படிப்பால், அறிவுத்தெளிவால் இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும் சம்பளத்தில் பணியில் இருக்கிறார்கள். அதற்கான விதையாகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.  நூற்றாண்டு கடந்து நிற்கும் சுயமரியாதை இயக்கத்தின் வேர்களாகத் திகழ்ந்தவர்கள் ஊர்தோறும் இருந்திருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்த வனிதம் என்னும் ஊரில் பிறந்த சுந்தரபுத்தன் என்னும் எழுத்தாளர்,திராவிடர் கழகத்துக்காரரான தன்னுடைய தந்தை,ஒளிச்செங்கோ என்ற நடராசன் பற்றி ‘பெரியவன்’ என்னும் நாவலை எழுதியிருக்கிறார். அதைப்போல ‘ஒரு கிராமமும் சில மனிதர்களும்’ என்னும் புத்தகத்தில் தன்னுடைய ஊரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்க வீரர்களைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒருவராக அவர் பதிவு செய்திருக்கும் நடேச(நாடார்) பற்றிய செய்தி பெருமிதம் தந்தது.

“அந்தக் காலத்தில்(1960-80) சுற்றுப்பட்ட கிராமங்களில் ஆறேழு பெரும் பணக்கார நிலக்கிழார்கள் இருந்தார்கள். அவர்களின் கெடுபிடிகள் கிராமங்களில் அதிகம்.அவர்கள் சொன்னதுதான் சட்டம். அவர்கள் கொடுப்பதுதான் கூலி என்ற காலம் அது.அடக்குமுறை எங்கு அதிகமிருந்ததோ, அங்கே புரட்சிகளும் வெடிக்கத் தொடங்கின.

தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் பாதிப்பு அடைந்தால் ஏனென்று கேட்க ஆளில்லாமல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடேச(நாடார்) மளிகைக் கடை நடத்தி வந்தார். ‘குடிஅரசு’, ’விடுதலை’  இதழ்கள் வழியாகத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பெற்றிருந்தார். அதனால் அவர் திராவிடர் கழகத்தைத் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காவாலகுடி சா.மாரிமுத்து ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையைச் சைக்கிளில் வந்து போடுவார். அவரிடம் பேசி திராவிடர் கழகத்தில் சேர்த்தார். படிப்படியாக ஆதிதிராவிட விவசாயிகள் திராவிடர் கழக உறுப்பினர்களாக ஆனார்கள்.

ஒவ்வொரு கிராமத்திலும் தி.க.காரர்கள் நிறைந்திருந்தார்கள். அவர் கடைக்கு முன்பாகத் தந்தை பெரியார், மணியம்மையாருடன் வந்து உரையாற்றியிருக்கிறார். அடுத்தடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறைய கூட்டங்கள். இன்றைய தி.க.தலைவர் கி.வீரமணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது நடேச(நாடார்), அவரை அழைத்து வந்து கூட்டங்கள் நடத்திய அனுபவங்கள் அவரை முக்கியப் பிரமுகராக மாற்றின. எந்தத் தலைவரோ, பேச்சாளரோ வந்தாலும் அவர் வீட்டில்தான் உணவு பரிமாறப்படும்.

இதுமாதிரியான பணிகளில் மிராசுதாரர்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டார்கள்.அவதூறாக வழக்கு தொடர்ந்தார்கள். ஒரு பிரச்சனையில் துப்பாக்கி சூடு (16 ரவுண்ட்) நடந்து, அதில் யாரும் காயம் படாமல் தப்பியிருக்கிறார்கள். அவரின் வழிகாட்டுதலில் சா.மாரிமுத்து சமாளித்திருக்கிறார். நடேச(நாடார்) என்ற அந்தப் புரட்சி மனிதரைப் பற்றிய தகவல்களைப் பலரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தக் கிராமத்தில் ஏற்பட்டிருக்கிற சமத்துவத்திற்கும்,முன்னேற்றத்திற்கும் நடேச (நாடாரை)த்தான் முன்னோடியாகச் சொல்லமுடியும் (பக்கம் 52,53)

நடேச(நாடாரை)ப் போன்ற சுயமரியாதை இயக்க, திராவிடர் கழக வீரர்களால்தான் ஒவ்வொரு கிராமமும் முன்னேறி இருக்கிறது. சுயமரியாதை உணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைவருக்கும் அனைத்தும் என்னும் நிலையை எட்டுவதற்கும் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் களமாடிய தீரர்களைக் கொண்டது திராவிடர் கழகம்.

இன்றைய சமூகத்தைப் பார்க்கையில் அரசியல் கட்சிகளில் சேரும்போதே என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடுதான் அரசியல் கட்சிகளில் இணைகிறார்கள். வரும்போதே எம்.எல்.ஏ. ஆகவேண்டும், எம்.பி. ஆகவேண்டும் என்றுதான் வருகிறார்கள். ஆனால், திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் உண்மையான போராளிகளாய் களத்தில் அன்றும் இன்றும் நிற்கிறார்கள்.

உணர்வா, அறிவா என்றால் அறிவுக்கு முதன்மை கொடுப்பவர்கள் திராவிடர் கழகத்துத் தோழர்கள். இயக்கமா? தன்மானமா? என்றால் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். தனிப்பட்ட நலனா? இயக்க நலனா என்று வருகின்றபோது இயக்க நலனுக்கு முதன்மை கொடுப்பவர்கள். சிலர் தனிப்பட்ட வாழ்க்கையில் சொல்லொண்ணாத் துயரங்களைச் சந்திக்கின்றபோதும், அதையெல்லாம் தூரத் தள்ளிவிட்டு சமூக நலனுக்காக நாளும் உழைப்பவர்கள் திராவிடர் கழகத்துத் தோழர்கள்.

எங்கெங்கு தேடினும் இப்படிப்பட்ட ஓர் இயக்கத்தை நீங்கள் வேறெங்கும் பார்க்க இயலாது. உனக்கு ஓர் வேலையைத் தேடிக்கொண்டு, சொந்தக்காசில் சாப்பிடு
கிறவர்களைத் தான் தனது இயக்கத்திற்கு அழைத்தார் தந்தை பெரியார். இயக்கத்திற்கு வருவதற்கு முன் நீ எவ்வளவு வேண்டுமானாலும் சிந்தி. ஆனால் இயக்கத்திற்கு வந்துவிட்டால், தலைமை என்ன சொல்கிறதோ அதனை இராணுவக் கட்டுப்பாடு போலக் கடைப்பிடிக்கவேண்டும்,அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று கட்டளையிட்டவர் தந்தை பெரியார். இன்றைக்கு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காலத்திலும் அவ்வண்ணமே தொடர்கிறது. அது மட்டுமல்ல இயக்கத்தில் வருவதற்கு முன் கதவு திறந்து இருப்பதுபோலப் பின் கதவும் திறந்தே இருக்கிறது.இருப்பவர்கள் இருக்கலாம். பிடிக்காதவர்கள் பின்கதவு வழியாகத் தாராளமாகச் செல்லலாம் என்று அனுமதி அளித்த இயக்கமும் திராவிடர் கழகம்தான்.தன்னை எத்தனை பெரிய ஆளுமையாக கருதிக்கொண்டவர்களும் இயக்கத்தை விட்டுச் சென்றபோது கலங்காதவர் தந்தை பெரியார்.தொடர்ந்து எந்தத் தொய்வும் இல்லாமல் இயக்கத்தை வழி நடத்தியவர் தந்தை பெரியார்.அதே வழியில்தான் அம்மாவும், இன்றைக்கு அய்யா ஆசிரியர் அவர்களும்.

இந்தச் சமூகத்தில் உண்மையான ஜீவகாருண்யவாதிகளாய் உழைப்பவர்கள் திராவிடர் கழகத்துத் தொண்டர்கள். அப்படி உழைப்பதற்கு அவர்கள் கையில் இருக்கும் கேடயம், ஆயுதம் விடுதலை நாளிதழ்.அதைப்போல அன்றைக்குச் சுயமரியாதை இயக்க வீரர்களின் கையில் இருந்த ஆயுதம் ‘குடிஅரசு’ இதழ். இந்தக் கடவுள் என்ற கருத்தால் மக்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்கள். வேதனைக்கு உள்ளாகிறார்கள். அந்த வேதனையில் இருந்து அவர்களை நீக்குவதற்குக் கடவுள் என்று ஒருவர் இல்லை என்னும் அறிவுத்தெளிவை உண்டாக்கும் வேலை அவ்வளவு எளிதான வேலை இல்லை. ஆனால், தந்தை பெரியாரின் தொண்டர்கள் தொடர்ந்து  நேரடியான, இணைய வழிப்பரப்புரை மூலமும், ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்டு’, ‘திராவிடப்பொழில்’ போன்ற இதழ்கள் மூலமும் அந்த வேலையைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னத்தி ஏராய், களத்தில் நின்று வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார்.

கடவுள் இருக்கிறார் என்று எண்ணும் பாமர மக்கள், உழைக்கும் மக்கள் கால்களில் செருப்பின்றித் திருச்செந்தூர், பழனி, வேதாரண்யம் என்று அலைஅலையாய் கடும் வெயிலில் கூட நடக்கின்றார்கள். அவர்கள் மனதில் இருக்கும் கடவுள் இருக்கிறார் என்னும் நம்பிக்கை, நமக்கு நல்லது கடவுள் செய்வார் என்னும்  நம்பிக்கை அவர்களுக்குப் பலவித இன்னல்களைத் தருகிறது. துயரப்பட்டுக்கொண்டே நடக்கிறார்கள், திருவிழாக்களில் தீ மிதிக்கிறார்கள். குழந்தைகளைத் தீமிதிக்க உடன் அழைத்துச் சென்று அவர்களோடு தீக்குள் விழுந்து, காயம்பட்டுத் துன்புறுகிறார்கள்.

பார்ப்பனர்கள் இதைச் செய்வதில்லை. அவர்கள் அலகு குத்துவதில்லை. தீ மிதிப்பதில்லை. கடும் வெயிலில் காலில் செருப்பின்றி நடப்பதில்லை. ஆனால், நமது மக்கள் இவற்றைச் செய்கிறார்கள். இப்படிச் செய்வதால் உங்களது உடலுக்குத் தீங்குதான் விளையும் நன்மை விளையாது என்னும் அறிவுத் தெளிவு உண்டாக்கும் வேலையைத் தான் தந்தை பெரியாரின் தொண்டர்கள் செய்கிறார்கள்.

அந்த ஜீவகாருண்யத்தன்மை மிகுந்த அந்த வேலையைச் செய்வதற்கு அவர்கள் கூலியை எதிர்பார்ப்பதில்லை. எந்தப் பலனையும் எதிர்பார்ப்பதில்லை. தேர்தல் நடைமுறையில் இருக்கும் அத்தனை கூத்துக்களையும் பார்த்துக்கொண்டே தங்கள் வேலையைத் தொய்வின்றித் தொடர்கின்றார்கள். நாமும் தொடர்வோம் வாருங்கள்! |