Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டமுதல் சுயமரியாதைத் திருமணம் !

உயிரினங்களின் இயற்கைத் தன்மையில் எல்லா உயிர்களுக்கும் தனது இனத்தைப் பெருக்கும் தன்மை அமைந்துள்ளதை அறிவோம். இவ்வியற்கை நிகழ்வு பகுத்தறிவு உடைய மனிதர்களிடம் அறிவார்ந்து ஓங்கி வளர்ந்து, தனக்குத் தேவையான விரும்பிய துணையை ஏற்று வாழும் அறிவார்ந்த முறை வளர்ந்து சிறந்ததாகும்.

அதன் தொடர்ச்சியாக தனக்குரிய துணையை அடையாளப்படுத்தி ஒன்றி வாழும் முறையில் தலைவன், தலைவி என்ற நிலையில் தமிழர்கள் பண்பட்ட பண்பாட்டு வாழ்வை வகைப்படுத்தி அமைத்துக்கொண்டனர்.

தமிழர் திருமணம்:

தமிழர்களின் அகவாழ்க்கையை அகநானூற்றில் இடம்பெறும் பாடல் மூலம் அறியலாம். அவ்வகையில் அகப்பாடல் 86 மற்றும் 136 ஆகிய இரு பாடல்களும் தமிழர்களின் திருமண முறையைச் சிறப்பாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது.

ஆகப் பழமையாக தமிழர் திருமண முறைக்கு “வதுவை மணம்” என்று “விற்றூற்று மூதையினனார்” பாடிய அகப்பாடல் 136 கூறுகிறது.

தொல்காப்பியக் கற்பியல் சூத்திரத்திலிருந்து (செய்யுள் 86) உரையாசிரியரும் வதுவை மணமுறை குறித்துக் குறிப்பிடுகிறார்.

சுயமரியாதைத் திருமணம்:

தமிழர் திருமண முறையில் தோற்றமும் – சிறப்பும் இவ்வாறிருக்க, இன்றைய புரோகித திருமண முறையில் காணப்படும் வடமொழி மந்திரம், புரோகிதர், எரிஓம்பல், தீவலம், பொரிமுகந்து போடல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தாலி கட்டுதல், கோத்திரம் கூறல், காசி யாத்திரை போன்றவைகள் எதுவும் பழந்தமிழர் திருமண முறையில் அறவே இல்லை. திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய பண்டைத் தமிழர் வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் (பக்கம் 131-132) ஆகிய நூல்கள் இதற்கான மறுக்க முடியாத ஆதாரச் சான்றாகும் என்று சுயமரியதைத் திருமணம் தத்துவமும் வரலாறும் எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் காட்டும் மணமுறை:

தமிழர்களின் திருமண முறை இப்படி இருக்கும் நிலையில் ஆரியர்களின் திருமண முறையான கன்னிகாதானம் – ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் வழியாக திராவிடர்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருமண முறை ஒழிந்த நிலையில் கோலோச்சிய புரோகித திருமண முறையால் பெண்ணடிமை, ஜாதி, பார்ப்பன மேலாதிக்கம், மூடநம்பிக்கை, பஞ்சம – சூத்திர இழிநிலைகள், சமஸ்கிருத மயம் எனப் பலகொடுமைகளைக் கண்ட தந்தை பெரியார் தமிழர்களின் மொழி – இனம் ஆகியவற்றின் சுயமரியாதையைப் பாதுகாக்கவும், ஜாதி – வர்ண இழிவைப் போற்றும், கடவுள் மத மூடநம்பிக்கைகளை ஒழிக்கவும், பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து திராவிடர்களை விடுதலை அடையச் செய்யும் “சுயமரியாதைத் திருமணம்” என்ற புரட்சிகரமான திருமண முறையை உருவாக்கினார். இத்திருமண முறையானது ஆரியர்கள் எண்வகைத் திருமண முறைகளான பைசாசு, ராட்சசு, அசுர, காந்தர்வ, பிரம்ம, தெய்வ, பிரஜாத்திய, ஆர்ஷ என்பனவற்றிற்கு எதிரான, தமிழர்களுக்குரியனவான அறிவார்ந்த திருமண முறையாகும். பண்டைய தமிழர் திருமண முறை உணர்வு சார்ந்தது. சுயமரியாதைத் திருமணம் என்பது உணர்வினைக் கடந்து உரிமையோடு அறிவு சார்ந்தது ஆகும்.

முதல் சுயமரியாதைத் திருமணம்:

சுயமரியாதைத் திருமண முறையை தந்தை பெரியார் உருவாக்கி, மக்களிடையே அறிமுகப்படுத்தி மாபெரும் பிரச்சாரத்தைச் செய்திட்டார். அதன் விளைவாக இத்திருமண முறை தமிழர்களால் ஏற்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் – இலட்சக்கணக்கில் நடைபெற்றுள்ளது – நடைபெற்று வருகிறது. என்றாலும், பெரியாரின் புரட்சிகரமான சுயமரியாதைத் திருமணத்தை ஏற்று செய்து கொண்டவர்கள் – முதன்முதல் நடந்த  அத்திருமணத்தின் சிறப்பு முக்கியத்துவத்தை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். மே திங்களில் அதுகுறித்து இக்கட்டுரை வரைவதும் சாலப்பொருத்தமாகும். ஆம், மே மாதத்தில் 28.05.1928ஆம் ஆண்டு தான் தமிழர் வரலாற்றில் – தமிழ்நாட்டில் சமூக அரசியலில், திராவிடர் இனத்திற்கு ஒரு பெரும் திருப்புமுனையான சுயமரியாதைத் திருமண முறையின் முதல் திருமணம் நடைபெற்றது.

முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்ற சுக்கிலநத்தம்

தமிழ்நாட்டின் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த அருப்புக்கோட்டைக்கு அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள “சுக்கிலநத்தம்” எனும் சிற்றூரில் தான் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.

தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் அதில் தன்னை இணைத்துக்கொண்ட பெரியாரின் தொண்டர் துரைசாமி ரெட்டியார் என்ற சுப்பாரெட்டியாரின் மகன் அரங்கசாமி ரெட்டியாருக்கும் – அழகர்சாமி ரெட்டியார் மகள் நாகம்மாள் – ஸ்ரீநிவாச ரெட்டியார் மகள் ரத்தினத்தாயம்மாள் ஆகிய இருவருக்கும் திருமணம் 28.5.1928 காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. மணமகன் அரங்கசாமியை இரு பெண்கள் மணக்க விரும்பியதால் (உறவுக்காரர்கள்) ஒரே நேரத்தில் இருவரை மணமுடிக்கும் நிகழ்வு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது.

மற்றொரு திருமண நிகழ்ச்சியும் அதே மேடையில் காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. சுப்பாரெட்டியாரின் சகலப்பாடி நாராயண ரெட்டியாரின் மகன் கோபால்சாமி ரெட்டியார் திருமணமும் முதல் திருமணம் போல் இரண்டு பெண்களை சிரோண்மணி அம்மாள், கமலத்தம்மாள் ஆகியவர்களையும் துணையாக்கிக்கொள்ளும் நிகழ்வு சுயமரியாதைத் திருமண முறையில் பெரியார் தலைமையில் நடைபெற்றது.

இத்திருமண முறையைப் பார்த்துக் கொண்டிருந்த மாரி ரெட்டியார் என்பவர் பார்ப்பனர் வைத்து திருமணம் செய்ய இருந்த தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு, அதே மேடையில், சுப்பா ரெட்டியாரிடம் அனுமதி பெற்று தனது திருமணத்தை மூன்றாவது திருமணமாக நடத்திக் கொண்டார். மாரி ரெட்டியார் – சீதாலட்சுமி அம்மாள் திருமணம் அதே மேடையில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்றது.

மூன்று திருமணங்களையும் தந்தை பெரியார் தலைமை ஏற்று, ஒரே நாளில், ஒரே மேடையில் நடத்தி வைத்திட்டார். திருமண விழாவில் கலந்துக் கொண்டு சென்னை ஜே.எஸ்.கண்ணப்பர், சிதம்பரம் என்.தண்டபாணிப் பிள்ளை, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

ஒமம் வளர்க்கப்படாமல், திருவிளக்கு ஏற்றப்படாமல், கற்பூரம் கொளுத்தாமல், தீவலம் சுற்றாமல், அம்மி மிதித்து – அருந்ததி பார்க்காமல் திருமணம் நடந்தது. தாலி கட்டும் போது சுயமரியாதைக்கு ஜே! வைக்கம் வீரருக்கு ஜே! என்று மக்கள் முழக்கமிட்டனர். முதன் முதலில் நடைபெறும் இத்திருமணத்தில் தாலி கட்டுவது இருந்தபோதும், புரோகிதர் இன்றி நடைபெற்றதே பெரும் மாற்றாக கருதப்பட்டு நடந்தேறியது.

தந்தை பெரியார் மூன்று திருமணங்களையும் நடத்திவிட்டு மறுநாள் 29.01.1928 காலை புறப்படும்போது சுப்பா ரெட்டியார் பெரியாரிடம், சுக்கிலநத்தத்தைச் சுற்றியுள்ள 116 ஊர்களிலும், சுயமரியாதைத் திருமணத்தை மட்டுமே செய்தி உறுதி கொண்டுள்ளோம் என்று கூறி வழியனுப்பியிருக்கிறார். இத்திருமண விழாவில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.

சுயமரியாதைத் திருமணச் சட்டம்:

1928இல் எந்தச் சட்ட அங்கீகாரம் இல்லாது நடைபெற்ற சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது இல்லை சென்னை உயர்நீதி மன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் சுயமரியாதைத் தொண்டர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். இந்த நிலையில் பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் 27.11.1968இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணம் செல்லும் எனும் சட்டமுன்வரைவை கொண்டு வந்து நிறைவேற்றி 17.01.1968இல் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, 20.01.1968 சென்னை அரசிதழில் வெளியிடப்பட்டது.

இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதால், இத்திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியோடு, இரட்டை மகிழ்ச்சியாக சட்டம் நிறைவேறுவதற்கு முன் நடைபெற்ற அனைத்து சுயமரியாதைத் திருமணங்களும் செல்லத்தக்கது என்றானது. சட்டம் பின் தேதி
யிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னர் நடந்த திருமணங்கள் அனைத்தும் செல்லத்தக்கதாக அமைந்துவிட்டதால் நாடு மகிழ்ந்தது. மொழி – இன – மானம் காக்கப்பட்டது.

அயல்நாடுகளும் அங்கீகரிக்கிறது:

1968இல் தமிழ்நாட்டில் சட்டமாக்கப்பட்ட இத்திருமண முறைக்கு இன்று சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கீ காரம் தந்து சுயமரியாதைத் திருமணம் ஏற்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளிலும், எந்நாட்டிற்கும் பொருந்தும் அறிவார்ந்த முறையான இத்திருமண முறையைப் போற்றிப் பரப்பிடுவோம். சுயமரியாதை வாழ்க்கைப் பாதையில் பயணிப்போம்.|