Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

சமுதாயப் போராளிஅன்னை நாகம்மையார்

தந்தை பெரியார் ஒரு ஒப்பற்ற புரட்சியாளர். அவர் பணக்காரர் – ஏழைகளுக்கு குரல் கொடுத்தார். உயர் ஜாதியில் பிறந்தவர் – ஜாதியை ஒழிக்கப் போராடினார். ஆணாகப்பிறந்தவர் – பெண்ணடிமைக்கு எதிராய், ஆணுக்கு நிகராய்ப் பெண்கள் உரிமைபெற சாகும்வரை சமர்புரிந்தார். மொழி – இனம் – மாநிலம் – நாடு என்ற எல்லையைக் கடந்தவர். உலகப் பொதுமையைப் போற்றினார். கடவுள் – மத நம்பிக்கைக் குடும்பத்தில் பிறந்து உலக நாத்திக இயக்கத்திற்குத் தந்தை ஆனவர். எப்பற்றும் அற்றவராய் மனிதப்பற்றே பெற்றவராய் மனிதம் வாழ வாழ்ந்திட்ட மனிதநேயத்தின் மறு வடிவமானார். தனக்கென இருந்த கோடிக்கணக்கானச் சொத்துகளை அப்படியே பொதுவாக்கி, தனக்கென வாழா தனிப்பெரும் வள்ளலானவர். பதவியின் பக்கம் சற்றும் சாயாது – தேர்தலில் நிற்காது – பலரைப்  பதவியில் அமரச் செய்திட்டப் பேராளர். பெரியாரை ஆங்கிலேய வைஸ்ராய் இருமுறை சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தபோதும் மறுத்திட்ட மானமிகு என்ற சொல்லின் புகழுக்கு உரியவரானவர்.

அத்தகு பெருமைக்குரிய பெரியார் திராவிடர் இனத்து மக்கள் ஆரிய இனத்தின் தத்துவமான ஜாதி, மத, மூடத்தனத்திலிருந்தும் அடிமை இனம் என்ற இழிவிலிருந்தும் விடுதலை அடைய பாடுபட்டத் தலைவர் தான் தந்தை பெரியார்.

நாகம்மையார்

உலகம் போற்றும் தந்தை பெரியாருக்கு வாழ்க்கைத்துணையாக அமைந்தவர்தான் நாகம்மையார். இவர் தந்தை பெரியாரின் தாய்மாமன் மகளாவார். சேலம் தாதம்பட்டி கிராமத்தில் ரங்கசாமி – பொன்னுத்தாயி இணையர்க்கு மகளாகப் பிறந்தவரே நாகம்மையார் ஆவார். இவரது குடும்பம் வறுமைவாய்ப்பட்ட குடும்பமாகும். ஆனால், பெரியாரின் குடும்பமோ செல்வச் செழிப்புமிகு குடும்பம் ஆகும். பெரியாருக்கு பணக்கார வீட்டுப் பெண்ணைத் திருமணம் முடிக்க அவரது தாயார் விரும்பிய போதும், பெரியார் அதை ஏற்காது, தான் சிறுவயதிலிருந்தே விரும்பிய நாகம்மையாரையே திருமணம் செய்துகொண்டார்.

தந்தை பெரியாரின் கொள்கையில் முழு உடன்பாடு இல்லாத போதும் திருமணத்திற்குப் பின் பெரியாருக்கு அனைத்து நிலையிலும் ஒத்துணர்ந்து, பங்களிப்பைத் தந்து, அய்யாவின் விருப்பத்திற்கேற்ப பொதுவாழ்வில் கொள்கையில் இரண்டறக் கலந்து இலட்சிய வாழ்வு வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவரானார் நாகம்மையார்.

கள்ளுக்கடை மறியல் போராட்டம்

1921ஆம் ஆண்டு காந்தியார் ஒத்துழை யாமை இயக்கம் கண்டபோது நடத்திய கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெரியார்
தீவிரமாக ஈடுபட்டார். 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பெரியார் 100 பேர்களுடன் ஈடுபட்டு கைதாகி 1 மாத சிறைத் தண்டனைப் பெற்றார்.  இதுவே பெரியார் பொதுவாழ்வில் முதன்முதல் சிறை சென்ற நிகழ்வாகும்.‘

போராட்டத்தில் தந்தை பெரியாரைத் தொடர்ந்து இவரது துணைவியார் நாகம்மையாரும், சகோதரியார் கண்ணம்மாளும் கலந்துகொண்டனர். இப்போராட்டம் பெண்கள் இருவர் தலைமை ஏற்க நடந்ததால் மிகப்பெரும் பரபரப்பை உருவாக்கியது. மக்கள் பேராதரவு நாடெங்கும் பெருகியது.

இந்நிலையில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைக் கைவிட காந்தியார் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை நேரிலும், கடிதம் மூலமாகவும் வேண்டுகோளாக வைக்கப்பட்டது. சர்.சங்கரன் நாயரும், பண்டிட் மாளவியாவும் தொடர்ந்து காந்தியாரிடம் வேண்டினர். 1921ஆம் ஆண்டு காந்தியார் தனது “யங் இந்தியா” இதழில் பின்வருமாறு எழுதினார்.

When the all parties conference met on 19th January 1922 under the Presidentship of Sir Sankaran Nair, Mr.Gandhi in his speech regarding the calling of the civil disobedience Movement said, If Civil Disovendience is to be called of the two ladies at Erode must be consulted.

(‘உண்மை’ – 15.05.1980)

இச்செய்தி 19.11.1922 ஹிந்து பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, காந்தியாரே பெரியாரின் துணைவி மற்றும் சகோதரி ஆகிய இருவரின் முடிவுக்கு கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை விட்டுவிட்டாரென்றால் பெரியாரின் குடும்பத்துப் பெண்களின் போர்க்குணம் எப்பேர்ப்பட்டது என்பதை அறியமுடிகிறது. நாகம்மையார் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டமே இந்திய அரசியலில் ஒரு பெண் தலைமை ஏற்று நடத்திய முதல் போராட்டம் என்றால் அது மிகையாகாது. அப்பெருமை நாகம்மையாரையும் – கண்ணம்மையாரையுமே சாரும். பெரியாரின் குடும்பமே போராட்டக் குடும்பம் என்பதற்கு இதுவே சான்றாகும்.

வைக்கம் போராட்டம்

வைக்கம் போராட்டம் என்பது 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்தியாவில் மனித சமத்துவத்துக்காக நடைபெற்ற முதல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆகும். அப்போராட்டத்தில், போராட்டம் தொடங்கி 19ஆம் நாள் நடைபெற்ற பின் தொடர்ந்து போராட ஆளின்றி பெரியாருக்கு ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகியோர் கடிதம் எழுதி வரச்செய்தனர்.

பெரியார் வைக்கம்
வந்து போராடினார். கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்
பட்டார். 6 மாதம் சிறைத் தண்டனைக்கு உள்ளானார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தினார்கள். நாகம்மையார். கண்ணம்மாள் முதலானோர் கைதானார்கள். இந்தியாவில் அரசியல் போராட்டத்தில் கைதான முதல் பெண்மணி நாகம்மையாரேயாவார். வைக்கம் போர் வென்றது. கேரள மாநிலம்,  வைக்கத்திலுள்ள வைக்கத்தப்பன் கோவிலின் நான்கு பக்கத் தெருக்களிலும் ஈழவர்களுக்குத் தெருவில் நடக்கும் உரிமை வாங்கித் வழங்கப்பட்டது. பெரியார் ‘வைக்கம் வீரர்’ என்று போற்றப்பட்டார்.

நாகம்மையாரின் போர்க்குணம் தமிழ்நாடு தாண்டி அண்டை மாநிலத்தில் கனலாக எரிந்து, களத்தில் வெற்றி காண காரணமானது என்கிறபோது அன்னை நாகம்மையாரின் போர்த்திறத்தை என்னவென்று புகழ்வது.

நாகம்மையார் மறைவு

இத்தகு புகழுக்குரிய அன்னை நாகம்மையார் 11.05.1933 அன்று இயற்கையடைந்தார். தந்தை பெரியார் தனது வாழ்விணையரின் மறைவு குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதிய தலையங்கம் வரலாற்றுச் சிறப்புக்குரிய இரங்கல் இலக்கியம் என்ற பெருமைக்குரியது. மேலும், நாகம்மையார் மறைவால் “எனக்கு எல்லாமே போயிற்று” என்று அவர் கூறியதிலிருந்து அவரது இறப்பின் தாக்கம் புலப்படுகிறது.

மே 10ஆம் நாள் ‘உலக அன்னையர் தினமாகக்’ கொண்டாடப்படுகிறது, ஒருவகையில் அன்னைக்கு புகழ் சேர்ப்பதாகவும் இந்நாள் அமைந்துவிட்டது.

வாழ்க! அன்னை நாகம்மையார்!  |