ஸ்ட்ரோக்
மூளை தான் உடலின் அத்தனைச் செயல்பாடுகளையும் கண்காணிக்கும். செயல்படுத்தும் தலைமைச் செயலகம் ஆகும். அதற்குள் ஏராளமான பிரிவுகள் அதற்கென வேலைகளைப் பிரித்து செயல்படுகிறது. உடல் அசைவுகளுக்கென ஒரு பிரிவு. உணர்ச்சிகளுக்கான ஒரு பிரிவும், பேச்சுக்கான ஒரு பிரிவு, பார்வைக்கென ஒரு பிரிவு என்று தனியே தனியே மிக துரிதமாக ஒவ்வொன்றும் இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை செய்துக் கொண்டே இருக்கும்.

அப்படி இடைவெளியின்றி வேலை செய்வதற்கு மிக துரிதமான புரதங்களும், ஆக்சிஜன் விநியோகமும் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் இடைவெளியோ, சிக்கலோ ஏற்பட்டால் எந்தப் பகுதிக்குரிய விநியோகம் நிற்கிறதோ அவற்றிற்கான செயல்பாடுகள் தடைபடும். இந்த விநியோகம் இரத்த ஓட்டத்தின் ஊடாகத் தான் மூளையெங்கும் பயணிக்கும். எனவே, இரத்த அழுத்தத்தில் ஏற்படும் வேறுபாடு மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கும்.
எதனால் இரத்த ஓட்டத்தில் வேறுபாடு வரலாம்?
இரத்தக் குழாய்களில் இரத்தம் ஒரு சீராக ஓட ஏற்படும் தடைகள்; ரத்தம் உறைந்து போகுதல், கொழுப்பு நிறைந்து இரத்தக் குழாய்களை அடைத்தல் மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள். இதில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே 80% ஸ்ட்ரோக் ஏற்படக் காரணமாக இருக்கிறது. இப்படி ஏற்படும் பாதிப்புகளால் வாழ்நாள் முழுக்கச் சார்பு தன்மைகளுக்கு பாதிப்படைவோர் தள்ளப் படுகிறார்கள். மருத்துவம் என்பது ஒரு குழுமம். அதற்குள் பல்வேறு பரிணாமங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையென்று பகிரப்படுகிறது. இப்படி மூளையில் ஏற்படும் இரத்த ஓட்டத்தடைகளுக்கு உடனடியாக மருத்துவமனையை அடைவது முக்கியம். முதல் 60 நிமிடங்களில் மருத்துவமனையை அடைதலை “கோல்டன் அவர்”. அதற்குள் செல்லும்போது பாதிப்பைக் குறைக்க முடியும்.

அது எப்படி?
மூளைக்கான இரத்தப் பகிரல் என்பது அதைச் சுற்றிலும் ஒரு வளையம் போல கட்டமைக்கப்பட்டிருக்கும். ஒரு வேளை அங்கே ஏதேனும் அடைப்புகளோ அல்லது குழாய்களில் வெடிப்போ ஏற்பட்டு இரத்தப் பகிரலில் ஏதேனும் தடை ஏற்பட்டால், சுற்றி இருக்கும் குழாய்களின் வழி அவை சமன் செய்ய முயற்சிகள் நடக்கும். ஆனால், கால விரயம் ஆகும்போது சமன்படுத்த முயன்ற குழாய்களுக்கும் அதிக அழுத்தம் ஏற்பட்டு மேலும் பாதிப்புகள் அதிகரிக்கும். எனவே, 60 நிமிடங்களில் மருத்துவமனை கொண்டு செல்லும்போது பாதிப்புகளைக் குறைக்க முடியும். அதற்குள் அந்த அடைப்பைக் கரைப்பதற்கான மருந்துகள் வழங்கிப் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
என்ன அறிகுறிகள் இருந்தால் விரைந்து செயல்பட வேண்டும்?
கை, கால்கள் உணர்ச்சியற்றுப் போகுதல்
பேசுவதிலும், புரிந்துகொள்ளுதலில் குழப்பம்
நடப்பதில் சிரமம், சமநிலை இழத்தல், தடுமாறுதல் அதிக தலைவலி.

இதன் தொடர்ச்சியாய் மருந்துகள், தொடர் கண்காணிப்பு, இரத்த அழுத்த சமன்படுத்தல் இதற்கான மருத்துவம் வழங்கப்படும். இந்தப் பாதிப்பின் விளைவாக எந்தப் பகுதிகள் பாதிக்கப்பட்டனவோ, அதற்குரிய செயல்பாடுகள் இல்லாமலோ அல்லது குறைந்தோ காணப்படும். கைகள், கால்கள் அசைக்கும் திறனை இழத்தல், உணர்ச்சியோடு சேர்ந்து கை, கால்களை அசைக்கும் திறனை இழத்தல், முக வாதம், அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் இழத்தல் போன்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். இதன் நீட்சியாய் ஒருவர் தன்னுடைய தினசரி வேலைகள் எதையும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாய் அல்லது பிறரை மொத்தமாய்ச் சார்ந்து இருக்கும் நிலை ஏற்படலாம்.
இதற்கு தீர்வு என்ன?
இரத்த அழுத்தம் அதிகம் ஆகாமல் மருந்துகள் தடுத்தாலும், ஒருவரைப் படுக்கையில் இருந்து மீண்டும் எழுந்து உட்காரவும், நடக்கவும் அவருடைய இயல்பு தன்மைகளுக்கு மீட்டெடுக்கவும் இயன்முறை மருத்துவம் மிக பெரிய பங்காற்றுகிறது.
எப்படி?
மூளைக்கும் நம்முடைய உடற் தசைகளுக்கும் தொடர்பு உண்டு. நீங்கள் இதைப் படிப்பதும், இந்தப் புத்தகத்தைத் தூக்கிப் பிடிப்பதையும் மூளையும் உங்கள் தசைகளும் தொடர் தகவல் பரிமாற்றங்களால் நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. நீங்கள் வியந்து புருவங்களை உயர்த்துவதும் கூட மூளைக்கு தகவல் பரிமாறப்பட்டு இதற்கு இப்படித்தான் எதிர்வினையாற்ற வேண்டும் என்ற கட்டளைக்குப் பின்புதான். யோசித்துப் பாருங்கள் எத்தனைத் துரிதமான தொடர்பு!.
மூளைக் குழாய்களின் பாதிப்பு இந்தத் தொடர்புகளைத் துண்டித்து விடுகிறது. இதுவரை உங்கள் கட்டளைகளை எண்ணங்களைப் பிரதிபலித்த கைகளும் கால்களும் முற்றிலும் செயலற்றுப் போகிறது. இதுவரை நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைக்கும் முன்பே செயலாற்ற முனையும் கைகளும், கால்களும் எவ்வளவு கேட்டும் அசையாது அப்படியே உடலில் கட்டைகள் போல ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
இயன்முறை மருத்துவம்!!
இயன்முறை மருத்துவம் அதற்கான ஓர் அளவீடு முறைகளை வைத்து அந்தப் பாதிக்கப்பட்டவர்களின் தாக்கங்களைக் கணக்கெடுப்பார்கள். அதன்படி, நரம்புகளின் செயல்பாடுகள், ஒவ்வொரு மூட்டின் அசைவுகள் மற்றும் அளவுகள், தசைகளின் பலம், தசைகளின் உணர்ச்சிகள். அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல், பேச்சு, ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அளவீடு, நடத்தல் அளவீடு என்று பல்வேறு பிரிவுகளாய்ப் பிரித்து ஒவ்வொன்றும் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் சிகிச்சை முறைகள் வகுக்கப்படும்.
நரம்புகளின் செயல்பாட்டில் குறை இருப்பின் அவை அதற்குரிய தூண்டுதல் வழியாகவும், மின்சார இயந்திரங்களோடு அவற்றைத் தூண்டி அவற்றுக்கான அத்தனைச் செயல்பாடுகளும் மீட்கப்படும்.
மூட்டின் அசைவு மற்றும் அளவு என்பது நமது கை அல்லது காலை எத்தனை உயரம் தூக்க முடிகிறது. பாதிப்படையாத கை கால்களின் அளவில் இருந்து எவ்வளவு வேறுபடுகிறது என்பதைக் கணக்கெடுத்து அதற்குரிய தசைகளைப் பலப்படுத்துவது இயல்பாய்த் தூக்க வைப்பது.
தசைகளில் உணர்ச்சியின்மை ஏற்படும்போது அதற்குரிய பிரத்யேக தூண்டுதல் பயிற்சிகள் கொடுத்து உணர்ச்சிகளை மீட்டெடுப்பது. அதாவது, மூளைக்கும் தசைகளுக்கும் இடையில் இருந்த தகவல் பரிமாற்றத்தை மீட்டுக் கொண்டு வருவதையே இலக்காய் வைத்து அதற்குரிய பயிற்சிகளை வழங்குவது.
ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது தோள் பட்டை முழங்கை, உள்ளங்கை ஒருங்கிணைந்து செயல்படும்போதே நம்மால் நம்முடைய உணவைக் கைகளில் எடுத்து வாய்க்குக் கொண்டு செல்ல முடியும். ஆனால், இந்த நரம்பியல் தொடர்பு துண்டிப்பால் இந்த மூன்று மூட்டுகளுக்கும் இருந்த ஒருங்கிணைப்பு குறைந்து இருக்கும். எனவே அதற்குரிய சிகிச்சைகளைப் பிரத்யேகமாக ஒவ்வொரு வருக்கும் வடிவமைத்து வழங்க வேண்டும்.
அறிவாற்றல் என்பது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் உடன் இருப்பவர்களின் பெயர்கள், அவர்கள் பிறந்த தேதி, சின்னச் சின்ன கணக்குகள் இவையெல்லாம் கூட மறந்து இருப்பார்கள். அவற்றைத் தூண்டுவதற்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்குவது மூளைக்குள் இருக்கிற தொடர்புகளைத் துரிதப்படுத்தும்.
ஒருவர் தன்னை முழுமையான விடுதலையோடு உணர்வதற்கு அவரே அவரைப் பராமரித்துக் கொள்ளும் அளவிற்குத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, சாப்பிடுவது, கழிவறைச் செல்வது, குளிப்பது, உடைமாற்றுவது, நடப்பது,நினைவாற்றல், அறிவாற்றல், சமூக பங்கெடுப்பு என்று சில அளவுகோல்கள் வைத்து அவரைக் கணக்கெடுக்க முடியும். இதில் மேல் கூறிய அத்தனை அளவீடுகளையும் அடைய வைப்பதே இயன்முறை மருத்துவத்தின் இலக்கு. அதற்குரிய பயிற்சிகளும், சிகிச்சைகளும், ஆய்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் உபநோய்களை அதற்குரிய அளவுகளில் வைக்கவும் உடற்பயிற்சிகள் உதவும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மருந்துகள் பாதிப்புகளைத் தடுத்தாலும் தொடர் பயிற்சிகளே உங்களை இயல்பு தன்மைக்கு மாற்றும். உங்களை முழு விடுதலை பெற்றவராய் வாழ அனுமதிக்கும். உங்கள் தினசரி வாழ்வியல் பழக்கமாய் உடற்பயிற்சியை மாற்றுங்கள். பல நூறு நோய்களில் இருந்து காத்திடுங்கள்.
(தொடரும்…)




