1) கே: தொண்ணூற்று மூன்று வயதில், சுட்டெரிக்கும் வெயிலில், திராவிடத்தின் மூத்தத் தலைவரான தங்களின் திறந்த வாகனப் பரப்புரை, அனைவரையும் வியப்படையச் செய்த சாதனை! பாசிச, சனாதன எதிர்ப்புணர்வுதான் தங்களுக்கான சக்தி! சரிதானே?
– கே.மகேஷ், ஈரோடு
ப: இதிலென்ன கேள்வி? உங்கள் கணிப்புக்குப் பாராட்டு, “குடிசெய்வார்க் கில்லை பருவம்” என்பது நமது அறிவு ஆசானின் அன்புக் கட்டளை. போர் வீரனுக்கு ஏது பருவம்? காலம் – கடமையைத் தவிர.
2) கே: அமலாக்கத் துறை விசாரணையில் தலையிடுவதாக மம்தாவைக் கண்டிக்கும் உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை பி.ஜே.பி. அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதைக் கண்டிக்காததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– வெ.சண்முகம், நிலக்கோட்டை
ப : ஓர்ந்து கண்ணோ
டாத நீதித்தராசை, இப்போது தேடிக் கண்டு
பிடிக்க வேண்டியுள்ளதே!
3) கே: இன்றைய தமிழகச் சூழலில், இளைய தலைமுறையினருக்கு அரசியல் விழிப்புணர்வூட்ட சிறப்புப் பயிற்சிப் பட்டறைகள் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தப்படுவதோடு, தொடர்ந்து திராவிட இயக்க வரலாற்றை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது கட்டாயம் அல்லவா?
– ந.பாபு, தாம்பரம்
ப: ஆம். உங்கள் கேள்விக்கு பதில் எழுதுவதே, தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முகாமிலிருந்துதான்!
4) கே: “தீமைகளை ஒழிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு; ஆனால், அரசின் அதிகாரம் மக்களின் மதச்சுதந்திரத்தை விழுங்கி விடக்கூடாது” என்ற உச்சநீதிமன்றக் கருத்தை வரையறுத்து செயல்படுத்த முடியுமா? எதைத் தடைசெய்வது, எதை அனுமதிப்பது என்பதில் அளவுகோல் ஏது? மதநம்பிக்கை
என்று கூறி எதையும் நடைமுறைப்
படுத்துவார்கள் அல்லவா?
– கு. பரணிகுமார், திண்டிவனம்
ப: அந்த 9 நீதிபதிகள் அமர்வில் தரப்படும் கருத்துகள் ‘பல குரலிசையாக’ இருக்கிறது! முடிவு…? பொறுத்திருந்து பார்ப்போம்!
5) கே: பி.ஜே.பி.யின் பினாமியாகிவிட்ட சந்திரபாபு நாயுடுவை இனி திருத்தவே முடியாதா? ஆந்திராவைக் காப்பாற்ற வழி என்ன? பிகாரைப் போன்று அங்கு ஒரு தேஜஸ்வி தேவையல்லவா?
– அ. விஜயலட்சுமி, கும்மிடிப்பூண்டி
ப: அவரைப் பொறுத்த
வரை பழைய வரலாறு, அவரது மாமனார்
என்.டி.ராமராவ் காரு
அவர்களையே ஏமாற்றி
பதவியைப் பறித்தவ
ரென்பது. இம்மாதிரி கூடுவிட்டுக் கூடுபாயும் கலை அவருக்குப் புதிதா? காலம் காத்திருந்து பாடம் புகட்டும்.
6) கே: “தமிழ்த் தேசியம்” பெயராலும், சினிமா கவர்ச்சி மூலமாகவும் தி.மு.க. மீது வெறுப்பை, இளைய தலைமுறையிடம் வளர்க்கப்படுவது மிக ஆபத்தானது என்பதால், திராவிட இயக்கத் தலைவர்கள் சரியான செயல்திட்டம் வகுத்து அதை எதிர்கொண்டு இளைஞர்களுக்கு விழிப்பூட்ட வேண்டியது கட்டாயம் அல்லவா?
– ம. நல்லதம்பி, நீலகிரி
ப: நிச்சயம் அவர்கள் செய்வார்கள் அதற்கு நம்மைப் போன்ற பலரும் உறுதுணையாக இருப்போம்!
7) கே: “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநில வளர்ச்சி அதிகமாகும்” என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
– ப.பிரகாஷ், அருப்புக்கோட்டை
ப: இது ஜனநாயகத்தின் அடிவேரை
அறுத்து எறிவது. எதிர்க்கட்சிகளை அழித்து, ஒரே கட்சி ஆட்சியிலிருக்கும்
போது ஒன்றிய அரசு உதவும் என்று கூறுவது அரசியல் அமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் நேர் எதிரானது! என்பது ஆழமாகச் சிந்தித்தால் புரியும்!
8) கே: சபரிமலைக் கோயிலுக்குப் பெண்கள் செல்வது சார்ந்து, “பிரம்மச்சரியக் கடவுள் என்பதால், அத்தன்மைக்கு ஏற்ப பெண்கள் தடை செய்யப்படுவது சரிதான்”, என்று உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வாதம் ஏற்புடையதா?
– ர.இளஞ்செழியன், குன்றத்தூர்
ப: பத்தாம் பசலித்தனமானவாதம்! கேலிக்குரியது! |
