Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகள்

மேநாள் நாயகர் வாழியவே! – இந்த மேதினி வாழ்ந்திட வாழியவே!
ஊதிய மாயூரும் பெற்றதுவே! – இவர்
ஊனுழைப் பாலுயர் வுற்றதுவே!

ஏதிலி யாயிவர் வாழ்ந்திருந்தார்! – வாழ்வில்
ஏற்றமின்றி மிகத் தாழ்ந்திருந்தார்!
கூதிரால் தாக்குண்ட மாந்தரைப்போல் -இவர்
கைகட்டிக் கூனவே தாழ்ந்தது தோள்!

காலைமாலை வேலை நீண்டிருக்கும்! – இவர்
கையுங்காலு மோய்ந்து போயிருக்கும்!
ஆலையூதுஞ் சங்கும் ஓய்வெடுக்கும்! – இவர்
அல்லலோலம் ஓயா தார்ப்பரிக்கும்!

ஒன்றுமற்றே யுள்ளம் வாடும்வேளை – உடன்
ஒன்றித் துணையென வந்தவரை! –
அன்பொழுகுஞ் சொல்லா லழைத்தனரே – என்றன்
தோளொடு தோள்நின்ற தோழரென்றே!

நாதியற்றா போகும் எம்முழைப்பே? என்னும்
நாதம் எட்டுத்திக்கும் கொட்டியதே!
ஊதியம் உழைப்பதற்கு கேற்றபடி – வேண்டி
ஓங்குங் கையிலெல்லாம் செம்மைக்கொடி!

கூடிவந்த தோழர் கூட்டங்கண்டு! தம்மின்
கொள்கை முழங்கிடும் தானைகண்டு!
ஆடித்தான் போனாரே அச்சங்கொண்டு! – முதல்
ஆண்டிருந்த கூட்டம் வாட்டங்கொண்டு!

எட்டுமணி நேர வேலையென்னும் – திட்டம்
ஏற்று வந்ததின்று நல்லசட்டம்!
கொட்டி முழக்கடா பேரிகையை! – வாழ்த்திக்
கொண்டாடு போரிட்ட தோழர்களை!

பெற்றதெல் லாமவர் இட்டபிச்சை! – நாம்
பேணிக்காப் போமவர் இட்டவித்தை!
உற்றவர் அற்றவர் வேற்றுமையை – விட்டே
ஊருல காளட்டும் பொதுவுடமை!

சாதியின் பேராலு ழைப்பவரைக் – கீழாய்த்
தாழ்த்தினரே வேதம் வர்ணம்கொண்டு!
சாதிப்பே யோட்டுவோம் கூடிவந்து – நாம்
சாதிப்போம் பெரியாரின் கொள்கை கொண்டு!

உற்றவர் அற்றவர் வேற்றுமைபோல் – நஞ்சாம்
மேலெனுங் கீழெனுஞ் சாதிமுறை!
அற்றிடச் செய்வோமே பேதங்களை!
அன்பே ஆளட்டும் மாந்தரின் நெஞ்சங்களை
|