மும்மொழிக் கொள்கை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
புதுச்சேரி பகுதிகளில் உள்ள CBSE பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையின்படி,பிரெஞ்சு மொழி நீக்கம் செய்யப்பட்டு, தமிழ் மற்றும் ஹிந்தி மட்டுமே கற்பிக்கப்படும் என்னும் சுற்றறிக்கை, பெற்றோர்கள் முதல் அனைத்துத் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் மிக முக்கியமான கலாச்சார அடையாளங்களின் ஒன்றான அவர்களின் பிரெஞ்சு அடையாளமும், அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் பரவலாக இருப்பதை அனைத்து நிலைகளிலும் காண முடிகிறது.
அதில்தான் கை வைத்துள்ளார்கள் தற்போது. கூடவே, ஏதேனும் இரண்டு இந்திய மொழி என்னும் கட்டாயத்தில் ஹிந்தி மட்டுமே முன்நிலைப்படுத்தப்படுகிறது. மற்ற மொழியைத் தேர்வு செய்யும் வாய்ப்பைக் குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ கொடுக்கப்படவே இல்லை. அதேபோல் ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழி என்னும் வரிசையில் ஆங்கிலம் மட்டுமே முன்நிலைப்படுத்தப்படுகிறது.
இதனைத்தான் நேரடி ஹிந்தித் திணிப்பு எனச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இவற்றை எல்லாம்விட குழந்தைகளின் மனோநிலையில், வாழும் நிலத்திற்கு தொடர்பில்லாத மொழியின் திணிப்பு என்பது எத்தனைப்பெரியச் சுமையையும் உளவியல் மாற்றங்களையும் கொடுக்கக் கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தவரை அங்கு பிரெஞ்சு மொழியே அவர்களுக்குப் பயனுள்ளது. அதை நீக்குவது எப்படிச் சரியாகும்?
ஒரு மொழித் திணிப்பு என்பது எப்போதுமே பேராபத்துகள் நிறைந்த ஒன்று. எக்காலத்திலும் அதனை அனுமதிக்கக் கூடாது.
