Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆரிய பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திய அயோத்திதாசர்

ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி, அதைத் தங்கள் மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துகள் தங்களால் கூறப்பட்டதாக ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர் என்று ஆய்வு செய்து கூறினார் அயோத்திதாச பண்டிதர்.

புத்தர் அருளிய நெறியிலிருந்தே ஆரியர்கள் தங்கள் உபநிடதங்களை உருவாக்கினர் என்பதும் இவர் கருத்து.

கவுடல்லியரின் அர்த்த சாஸ்திரம் திருக்குறளி
லிருந்து திருடி எழுதப்பட்டது. அதிலுள்ள பல செய்திகள் திருக்குறள் கருத்துகளைத் திருத்தி தங்கள் வசதிக்கேற்ப ஆரியர்களால் எழுதப்பட்டது என்பது இவர் முடிவு.

மனு முதலான ஆரிய நூல்கள் உழவுத் தொழிலை இழி தொழில் என்று கூறிய நிலையில், அர்த்த சாஸ்திரம் உழவுக்குச் சிறப்பிடம் அளித்தது. இது திருக்குறளை ஏற்றதன் விளைவு என்றார். அர்த்த சாஸ்திரம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவும் இதை உறுதி செய்கிறது.  மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே. இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துகளைத் தொகுத்து உருவாக்கப்பட்டது இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது.

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

 உழந்தும் உழவே தலை”

என்ற குறளின் அடிப்படையில்தான் அர்த்த சாஸ்திரத்தில் உழவின் சிறப்பு கூறப்பட்டது.

அர்த்த சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்
திலும் பத்தாம் அத்தியாயத்திலும் அரசன் ஆராய்ந்து அறிவது பற்றி கூறப்படும் கருத்து.

“அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்

 திறம்தெரிந்து தேறப் படும்”

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

அமைச்சர் இயல்பு பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் கருத்து.

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

 இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்”

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

 வகுத்தலும் வல்ல தரசு”

என்ற குறளின் கருத்தையே,

“பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், காத்தவற்றை வளர்த்தலும், அவற்றை நல்வழியில் பயன்படுத்தலும்..” என்ற அர்த்த சாஸ்திரப் பகுதி ஏற்றுக் கூறுகிறது.

“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

 அடுமுரண் தேய்க்கும் அரம்”

என்று வள்ளுவர் கூறியதையே,

“கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும்; குறைந்த தண்டம் அவமதிக்கப்படும்; தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும்” என்று அர்த்த சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

“கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய

 சுற்றத்தால் சுற்றப் படும்”

என்ற வள்ளுவர் கருத்தையே,

“மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியல்லாதாரை மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட் கொடை
யாலும், இன்சொற்களாலும் சிறப்பிக்கவேண்டும்” என்று அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

“பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்

 இருள்தீர எண்ணிச் செயல்”

என்று குறள் கூறுவதை,

“காரியத்தைத் தொடங்குவதற்குரிய உபாயம், வினை செய்வாரும் பொருளும் நிரம்ப உடைமை, ஏற்ற காலம், இடங்களை அறிதல், இடையூறு களைதல், காரியத்தின் பயன் என்னும் அய்ந்தும் சூழ்ச்சிக்கு உறுப்புகளாகும்.” என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

“அமைச்சர்க்குரிய குணங்கள் நிறைந்த தொழில் தலைவர் எல்லோரும் அவரவர் ஆற்றற்
கேற்பக் காரியங்களில் நியமிக்கத் தக்கவராவர்..” என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

 அதனை அவன்கண் விடல்”

என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.

அது மட்டுமல்ல, மனு, பிருகஸ்பதி, சுக்கிரன், துரோணாச்சாரியார், பராசரர், நாரதர், வீட்டுமர், உத்தமர், இந்திரன் போன்றவர்களின் கருத்துகளை தாம் எடுத்துக் கூறியதாகக் கூறும் (ஒத்துக் கொள்ளும்) கவுடில்யர், வள்ளுவரிடமிருந்து எடுத்ததாகக் கூறவில்லை. தமிழன் அறிவைப் பயன்படுத்துவதைத் திட்டமிட்டு மறைத்திருக்கிறார் என்பது விளங்கும். திருவள்ளுவர்தான் எழுதினார் என்பது தெரியாமல் போயிருப்பினும், திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதை ஒப்பியிருக்க வேண்டுமல்லவா?”

அர்த்த சாஸ்திரம் போலவே சுக்கிர நீதியும் ஒரு தொகுப்பு நூல். மேலும் ஏராளமான இடைச் செருகல்களையும் உடைய நூல். சுக்கிர நீதியும் திருக்குறள்  கருத்துகளைப் பல இடங்களில் எடுத்தாள்கிறது.

சுக்கிர நீதியும் உழவுத் தொழிலைக் குறள்வழி நின்று ஏற்றிப் போற்றுகிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

 செய்தொழில் வேற்றுமை யான்”

என்ற குறள் கருத்தும்

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

 கருமமே கட்டளைக் கல்”

என்ற குறள் கருத்தும் சுக்கிர நீதியின் முதல் அத்தியாயத்திலும், மூன்றாம் அத்தியாயத்திலும் எடுத்தாளப்படுகிறது.

திருக்குறள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்தே சுக்கிர நீதி எழுதப்பட்டது என்பதை கா.சுப்பிரமணியம் பிள்ளை தனது ஆய்வின் மூலம் கூறுகிறார். சுக்கிர நீதியின் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு என்கிறார்.

அதேபோல், காம சூத்திரம், வள்ளுவரின் காமத்துப் பாலிலிருந்து கருத்துகளைப் பெற்றே பல செய்திகளைக் கூறுகிறது. ஆனால், காம சூத்திரம், காம உடல் உணர்வை விளக்குவது. வள்ளுவம் உள்ளத்து உணர்வுகளை மென்மையாய் கூறும் இலக்கியம்.

தமிழ் நூலான திருக்குறளை மூலமாகக் கொண்டே, ஆரிய நூல்களான சுக்கிர நீதி, அர்த்த சாஸ்திரம், காம சூத்திரம் போன்றவை எழுதப்பட்டன என்ற அயோத்தி தாசரின் ஆய்வு, அவரது கூர்மையான ஆய்வுநுட்பத்தைக் காட்டுவதோடு ஆரியர் சூழ்ச்சியைச் சரியாக வெளிக் கொணர்ந்து அவர்களின் மோசடியை, முகத்திரையைக் கிழித்த திறத்தையும் காட்டுகிறது.

அதேபோல் திருவள்ளுவரின் பெற்றோர் பற்றி ஆரியர்கள் எழுதிச் சேர்த்த அயோக்கியத்
தனமான கட்டுக்கதையை, பிய்த்து எறிந்தார் பண்டிதர்.

1825ஆம் ஆண்டு, ஆங்கில அறிஞர் எல்லீஸ்,
ஒரு தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி, அதற்குப்
பல்வேறு இடங்களிலிருந்தும் ஓலைச்சுவடி
களைத் திரட்டிக் கொடுத்தார். அப்போது ஆரிங்டன் என்பவர் தன்னிடமிருந்த திருக்குறள் மூலம், திருவள்ளுவ மாலை, நாலடியார் ஆகிய மூன்று நூல்களைப் பட்லர் கந்தப்பன் என்பவர் மூலம் எல்லீசுக்கு அனுப்பி வைத்தார்.

எல்லீஸ் 1831ஆம் ஆண்டு, தாண்டவராய முதலியார் மற்றும் மானேஜர் முத்துசாமிப் பிள்ளை இருவரையும் கொண்டு திருக்குறளை அச்சிட்டு வெளியிட்டார்.

இவ்வாறு வெளியிடப்பட்ட திருவள்ளுவ மாலையில், திருவள்ளுவர் பற்றிய இழிவான கட்டுக்கதை ஏதும் இல்லை. ஆனால், 1835இல் விசாகப் பெருமாள் அய்யர் என்பவர் அச்சிட்டு வெளியிட்ட திருக்குறள் நூலின் இறுதியில்தான், ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன என்றும், அதில் ஒருவர் வள்ளுவர் என்றும், அவர் ஒரு வைசியக் குல பெண்ணைத் திருமணம் செய்து வாழ்ந்தபோது, திருக்குறளை எழுதினார் என்றும் ஒரு சிறு அகவற்பா சேர்க்கப்பட்டது. விசாகப் பெருமாள் அய்யரின் தம்பி சரவணப் பெருமாள் அய்யர் 1837இல் வெளியிட்ட நூலில் இதில் மேலும் பல பொய்களைச் சேர்த்தார். குழந்தைகள் பிறந்தபோதே வெண்பா பாடின என்ற கதையெல்லாம் அவரால் சேர்க்கப்பட்டது.

இந்த இருவரும் செய்த மோசடிக் கதையளப்பை வேதகிரி முதலியார் 1847இல் தாம் வெளியிட்ட நூலில் மேலும் விரிவாக்கம் செய்து எழுதினார். அதில் பிரம்மன் ஒரு யாகம் செய்து, அதில் கலைமகள் (சரஸ்வதி) பிறக்க, அவளையே பிரம்மன் மணம் புரிந்து பின் அகத்தியராகத் தோன்றி சமுத்திரக் கன்னிகையை மணந்து பெருஞ்சாகரமென்பாரைப் பெற, அப்பெருஞ்சாகரன் திருவாரூர்ப் புலைச்சி ஒருத்தியைக்கூடி, பகவனைப் பெற்றதாகவும், அப்பகவன் பிரம்ம வம்சித்து தவமுனிக்கும்  அருண்மங்கை என்னும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து, உறையூர்ப் பெரும்பறையனால் வளர்க்கப்பட்ட ஆதியை மணந்து ஏழு பிள்ளைகளைப் பெற்றதாகவும் கதையை விரிவாக்கம் செய்தார். இதில் சங்கப் புலவர்கள் சிவனை அவமதித்ததால் சிவன் சங்கத்தை அழிக்க வேண்டி பிரம்மாவைத் திருவள்ளுவராகவும், சரஸ்வதியை அவ்வையாகவும், விஷ்ணுவை இடைக்காடராகவும் அவதரிக்கச் செய்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. துணைக் கதையும் கூறப்பட்டுள்ளது.” என்று திருவள்ளுவர் பிறப்பு பற்றி மோசடியாகச் சேர்க்கப்பட்ட கதைகளைக் கண்டறிந்து கூறினார். இந்த மோசடிக் கதையை முதலில் ஆரியப் பார்ப்பனர்கள் எழுதியதன் நோக்கம், அறிவும் புலமையும் ஆரியர்களுக்கே உரியது என்பதை நிலைநாட்டவே ஆகும்.

உலகில் ஒப்பற்ற நீதி நூலை, அறிவு நுட்பத்தோடு ஒரு தமிழன் எழுதியதை ஆரியர்
களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, திருக்குறளை எழுதியவன் ஒரு ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்ற கதையை எழுதினர். அதாவது, அறிவு என்பது ஒன்று ஆரியப் பார்ப்பானுக்கு உண்டு. அல்லது  ஆரியப் பார்ப்பானுக்குப் பிறந்தவர்களுக்கே உண்டு என்று நிலைநாட்டவே இக்கதையை எழுதி சேர்த்தனர். திருவள்ளுவர் அவ்வளவு சிறந்த அறிவாளியாக இருந்ததற்குக் காரணம் அவர் ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்ததால்தான் என்று கூறுவதற்கே இக்கதையை எழுதினர். அதன் மூலம் திருக்குறளை எழுதிய பெருமை ஒரு தமிழனுக்குப் போய்விடக்கூடாது; அதுவும் ஆரியர்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே இம்மோசடிக் கதையைச் சேர்த்தனர். இந்த மோசடியை அம்பலப்படுத்தி ஆரியர்களின் அயோக்கியத்தனத்தை வெளிப்
படுத்தியதோடு, தமிழரின் இழிவையும் நீக்கினார்.

திருக்குறள் புத்தரின் திரிபிடகத்திலிருந்து எழுதப்பட்ட வழிநூல் என்றும், முதல் அதிகாரத்தில் குறிக்கப்படுபவர் புத்தரே என்றும் கூறும் அயோத்திதாச பண்டிதரின் முடிவுகள் அறவே ஏற்புடையவை அல்ல என்றாலும், ஆரியர்களின் சூழ்ச்சியைத் தோலுரித்துக் காட்டுகின்ற பணியைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாகவே செய்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது கட்டாயம் ஆகும். திருக்குறள் பற்றிய சரியான முடிவுகளைத் தெரிந்துகொள்ள என்னால் எழுதப்பட்டுள்ள, “திருவள்ளுவர் எழுதாதத் திருக்குறள்” மணிவாசகர் பதிப்பகம், சிங்கர் தெரு, சென்னை (குறளகம் அருகில்) என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொரு தமிழரும், உலகெங்கும் உள்ள ஆய்வாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அது.

‘தமிழன்’ வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்திதாசர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்தின. ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில், அதுவும் கல்வி மறுக்கப்பட்ட, தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்து, இத்தனை மொழிகளை இத்தனை இலக்கியங்களை, இத்தனை மத நூல்களைப் படித்து ஆய்வு செய்து உண்மைகளை, முடிவுகளை வெளிக் கொணர்ந்தார் என்றால் அது எளிய சாதனையல்ல.

அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த ‘சுதேசமித்திரன்’, ‘இந்தியா’ போன்ற தமிழ் இதழ்கள் வெளியிட்ட கட்டுரைகளுடன் அயோத்திதாசர் எழுதிய கட்டுரைகளை ஒப்பிட்டு நோக்கினால், அவரது கட்டுரைகள் நுட்பமும் திட்பமும் நிறைந்தவை என்பதை அறியலாம்.

தமிழகத்தை ஆண்ட தமிழ் அரசர்களின் அவையில் இருந்த ஆரிய அமைச்சர்கள் எவ்வாறெல்லாம், அரசர்களையும், நாட்டையும் கெடுத்தார்கள் என்பவற்றை யெல்லாம் தெளிவாக எழுதினார். பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உவமைகளை அடிக்கடி எழுதுவார். அவை வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை விளக்கப் பயன்படுத்தப்பட்டன. நாடு கெட்டதற்கு ஜாதிப் பிரிவுகளே காரணம் என்று உறுதியாய் எழுதினார். ஜாதியையும், மதங்களையும் நோய் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் சாக்கடைக்கு ஒப்பிட்டார். |