சென்னை அய்.அய்.டி., வளாகத்தில் இயங்கி வரும் அய்.அய்.டி. (டிசைன் மற்றும் மேலாண்மை) காஞ்சிபுரம், புதிதாக ஆந்திரப் பிரதேசம் மேடக்கில் அமையவிருக்கும் அய்.அய்.டி ஆகிய மூன்று நிறுவனங்களின் ஆசிரியர் பணிக்கு நியமிப்பதில் எஸ்.சி.எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர்க்கான இடஒதுக்கீடு எதுவும் அளிக்காமல் முற்றிலும், பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிக்காரர்களையே தேர்ந்தெடுத்து நியமிக்கும் “திருப்பணியில்” சென்னை அய்.அய்.டியின் இயக்குநரான எம்.எஸ். ஆனந்த் எனும் பார்ப்பனர் மும்முரமாக ஈடுபட்டார் எனத் தெரிய வந்தது.
சென்னை அய்.அய்.டி.இல் கற்பிக்கும்
பிரிவில் (Faculty) 432 நபர்கள் இருந்த
நிலையில், இவர்களில் 296 நபர்கள் பேராசிரியர்களாகவும், கூட்டுப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இந்த இயக்குநர் காலத்தில் நியமிக்கப்
பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் உயர்ஜாதிக்காரர்கள்தாம்.
அய்.அய்.டி.களின் பார்வையாளரான இந்தியக் குடியரசுத் தலைவர், இத்தேர்வுக் குழுவுக்குத் தனக்குப் பதிலாக ஒருவரை (Nominee) இன்னும் நியமிக்காத நிலையில், இவர் இப்படிப் பதவி நியமனப் பணியை மேற்கொண்டதே சட்டவிரோதமாகும். Nominee தேர்வுக் குழுவில் இருக்க வேண்டியது சட்டப்படிக் கட்டாயம்!
இந்த அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு விகிதாச்சாரப்படி எஸ்.சி., எஸ்.டியினர் 97 பேர் இருக்க வேண்டும் ஆனால் இருப்பதோ ஆறு பேர் (எஸ்.சி. 4: எஸ்.டி. 2) மட்டுமே. இது ஒன்று மட்டுமே போதும், இயக்குநர் எப்பேர்ப்பட்ட சமூக அநீதியாளர் என்பதற்கு!
1995இல் இடஒதுக்கீடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது,
அய்.அய்.டி.க்கள் விலக்கு அளிக்கப்பட்
டவை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அதற்
கான அரசாணை நகலைக் கேட்டபோதுதான் இவர்களது பொய் அம்பலமானது. ஏடுகளிலும் (‘தி டெலிகிராப்’ 28.3.2008) இந்தச் செய்தி வந்தது.
அய்.அய்.டிக்களின் நிலைக்குழுவில் இந்தியப் பிரதமரின் மூத்த அறிவியல் ஆலோசகர் திரு சி.என்.ஆர்.ராவ், மற்றும் ஒன்றிய உயர்கல்வி அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோர்களால் எதிர்காலத்தில் நிரப்பப்படும் எல்லாப் பதவிகளிலும் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன. இது நடந்தது பிப்ரவரி 2008இல், ஆனால்,
தினமணி (31.3.2008) ஏட்டில் வெளிவந்துள்ள
விளம்பரத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்
பட்டோருக்கான இடஒதுக்கீடு பற்றிய குறிப்பே இல்லை. எனவே இயக்குநர் அதனை
உதாசினம் செய்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே, இந்த நிலையில் இதற்கு எதிராக சமூகநீதி சக்திகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்து, அறிக்கை வெளியிட்டோம்.
மேலும், இந்த இயக்குநர் இந்தப் பதவியில் இருப்பது எந்த அதிகாரத்தின் கீழ் என்று தாக்கல் செய்யப்பட்ட நீதிப்
பேராணை(ரிட்) வழக்கு (எண்.37252/07) நிலுவையில் இருந்தது. 4.2.2008இல் இந்த
வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்
பட்ட நிலையில், இவரது பதவியே கேள்விக் குறியாக உள்ள நிலையில், இவர் அவசர அவசரமாகப் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமித்து, இன்னும் 30 ஆண்டுக்காலம் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் பேராசிரியர்களாக நுழைய முடியாத அபாய நிலையை உருவாக்கியதை எடுத்துக்காட்டினோம்.
இப்படிச் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகச் செயல்படும் வகுப்புவாதியான இவர், இந்தப் பதவியில் ஓய்வு பெற்ற பின்னரும் நீடிக்கிறார். மூன்று நிறுவனங்களின் இயக்குநராக நீடிக்கிறார் என்றால் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பொசுக்கப்படுகிறது என்றே பொருள்படும் என்பதை மக்களுக்கு விளக்கினோம். இன்றும் இந்த நிலை மாறிவிட்டதா?
அய்.அய்.டி.யின் நிலை இப்படி என்றால் அடுத்த நாள் எய்ம்ஸ் பற்றிய மற்றொரு செய்தி வந்தது. அதாவது புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநரான ஆந்திராவைச் சேர்ந்த பார்ப்பனர் வேணுகோபால் என்பவரை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அய்ந்து ஆண்டுகள் பதவியில் நீடிக்க முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இன்னொரு கொடுமை அந்த அமைப்பின் நிருவாகக் குழுவினர் கூட அந்தப் பதவி நீட்டிப்பு அய்ந்து ஆண்டுகள் என்பதை பின்னர் தான் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டனர். இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த பார்ப்பன அம்மையாரான சுஷ்மா சுவராஜ், இந்தப் பணியைச் செய்துவிட்டு சென்றார். அதன் பிறகு 30.11.2007 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் படி, எய்ம்ஸ் நிறுவனத்தின் இந்த இயக்குநர் பதவியில் உள்ளவர்கள் 65 வயதுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இந்தச் சட்டம் தமக்கு எதிராகவே கொண்டு வந்துள்ளதாக வாதாடினார். அதை விசாரித்த நீதிபதிகளான எச்.எஸ். பேடி தருண் சாட்டர்ஜி ஆகியோர் இந்தச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பளிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அந்த நிறுவனத்திற்குச் சென்று தமது இருக்கையில் அமர்ந்தார் வேணுகோபால். இதனைக் கண்டித்து நம் கருத்தை அழுத்தமாக வெளியிட்டோம்.
அந்தத் தீர்ப்பு தவறானத் தீர்ப்பு என்பதையும் பல்வேறு உண்மைகள் மூலம் எடுத்துக்காட்டினோம். நாடாளுமன்றம் எடுத்த முடிவுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் உரிமை உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா? என்று கேள்வி எழுப்பினோம். தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்றும், ஒரு தனி நபருக்கு வேலைவாய்ப்பு தர ஒரு சட்டமே செல்லாது என்பது மோசடியானது என்றும் தெரிவித்து, அமைச்சரவை நாடாளுமன்றம் இது பற்றி ஆழமாகப் பரிசீலித்து இந்தப் போக்குக்கு முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
திராவிட இயக்க வீரர் சுயமரியாதைச் சுடரொளி காரைக்குடி ராம.சுப்பையா நூற்றாண்டு விழா 10.5.2008 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஒரு கொள்கை
திருவிழாவாக நடை
பெற்றது. இதில் பங்கேற்று, முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட காரைக்குடி கிராம சுப்பையா நூற்றாண்டு விழா மலரைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினோம். தி.மு.க. பொதுச்செயலாளரும் நிதி அமைச்சருமான, இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் வரவேற்புரையாற்றினார். எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் இராம.வீரப்பன் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்.
10.5.2008 அன்று சென்னை எம்.எம்.டி.ஏ பகுதியில் கே.பி.ராஜேஷ் – எம்.சுபத்ரா ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தோம்.
சென்னை குரோம்பேட்டையில் 16.5.2008 அன்று பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் கலியபெருமாள் தனமணி ஆகியோரின் பேத்தியும், ரா.ராஜசேகரன் -தேன்மொழி ஆகியோரின் மகளுமான செல்வி. இரா.ராதிகா – செல்வன் ர.அரவிந்தன் (ரத்தினம் – குஞ்சம்மாள் ஆகியோர் மகன்) ஆகியோர் வாழ்க்கை இணையேற்பு விழாவை தலைமை ஏற்று நடத்தி வைத்தோம். மணமகளின் தாத்தா கலியபெருமாள் அவர்கள் கடலூரில் பணியாற்றிய பொழுது, எனது மூத்த அண்ணனின் நண்பர் என்ற வகையிலே எனக்கு அறிமுகம் ஆகி பின்னர் தந்தை பெரியார் கொள்கைக்கு வந்து, தீவிரமான இயக்கத் தொண்டாற்றியவர். அவரது மணவிழா கணபதி அக்கிரகாரத்தில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடந்த போது, நான் அந்த விழாவில் பங்கேற்றேன். அதன் பிறகு அவரது மகள் தேன்மொழி – ராஜசேகரன் மணவிழாவினை நானே நடத்தி வைத்தேன். தற்போது மூன்றாவது தலைமுறையாக, அம்பத்தூர் கலியபெருமாள் அவர்களின் பேத்தியின் திருமணத்தையும் நடத்தி வைக்கும் வாய்ப்பைப் பெற்றதையும், மூன்று தலைமுறையாக இந்த இயக்கத்தில் அவர்கள் இருந்து செயல்பட்டு வருவதற்கு இதுவே சாட்சி என்றும் தெரிவித்தேன். இந்த நிகழ்வில் பெரியார் பேருரையாளர் பெரும் புலவர் மா. நன்னன், தாம்பரம் மாவட்ட தலைவர் தி.ரா.ரத்னசாமி, அனகை ஆறுமுகம், ஆர்.டி. வீரபத்திரன், மு.நீ.சிவராசன், கரசங்கால் நாத்திகன், தாம்பரம் முத்தையன் கோவை ரவி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், திடீரென கழுத்து வலி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நாம் கழகப் பொறுப்பாளர்களுடன் 16.5.2008 அன்று அவரை நேரில் சந்தித்து உரையாடிவிட்டு திரும்பினோம். அடுத்த மாதம் ஜூன் மூன்றாம் தேதி அவரது 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் வரும் நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதையொட்டி கலைஞர் அவர்கள் தமக்கு பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
நாம் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவது தமிழர்களின் உரிமையும் கடமையும் ஆகும் என்றும், அதற்கு மறுப்பு சொல்வது சரியில்லை என்றும் வற்புறுத்தினோம். பேராசிரியர் அவர்கள் தலைமையில் தி.மு.க. முக்கியப் பொறுப்பாளர்கள் கலைஞரை நேரில் சந்தித்தும் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைத் திராவிட இயக்க பெருவிழாவாகக் கொண்டாடுவது கழக குடும்பத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாத உரிமை என்பதை வலியுறுத்தினர். இந்த வேண்டுகோளை ஏற்று கலைஞர் அவர்கள் அவரது 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவைக் கொண்டாட அனுமதித்தார். அது குறித்து அவர் எழுதிய “ஒப்புவித்தேன் உம் ஆணைக்கு“ என்னும் கவிதையில் குறிப்பிட்டிருந்தார்.
17.5.2008 அன்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் பெரிய கருப்பு அய்யாவின் மகள் பி.வீனா – ஆர்.சுரேஷ் ஆகியோர் திருமண வரவேற்பில் பங்கேற்று வாழ்த்தினோம்.
சிதம்பரம் வழக்குரைஞர், தில்லை வில்லாளன் அவர்கள் தம் 80ஆம் வயதில் 20.05.2008 அன்று காலை 8 மணி அளவில் கடலூர் தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் என்ற தகவலறிந்து அதிர்ச்சி யடைந்தோம்.
திராவிடர் மாணவர் கழகத்தின் முன்னோடியாகவும், அறிஞர் அண்ணா அவர்களின் உற்ற நண்பராகவும், மாநிலங்களவையின் உறுப்பினராகவும் இருந்தவர்; சிறந்த எழுத்தாளர் ஆவார். சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் இலவச சட்ட உதவி மய்யத்தின் ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். அவரது வாழ்விணையருக்கு இரங்கலை அனுப்பினோம்.
ஒரத்தநாட்டில் 25.5.2008 அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலைத் திறப்பு மற்றும் வாழ்க்கை இணையேற்பு விழாக்களில் பங்கேற்றோம். முதலில் ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது. நம் தலைமையில் ஒன்றிய நிதித்துறை இணைஅமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சிலையைத் திறந்து வைத்தார். செயலவைத் தலைவர் ராஜகிரி கோ.தங்கராசு முன்னிலை வகித்தார். அதன் பின் நெடுவாக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் வை.குப்புசாமி – குஞ்சம்மாள் ஆகியோர் பேரனும் கு.வீரமணி – தேனம்மாள் மகனுமான வீ.அகிலன் மற்றும் பேய்க்கரும்பன்கோட்டை கு.மணியன் – ரேணுகா ஆகியோர் மகள் ம.தமிழ் பிரியா ஆகியோரின் மண விழாவை ஒன்றிய இணைஅமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் முன்னிலையில் நாம் தலைமையேற்று நடத்தி வைத்தோம்.
அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் திறந்த போட்டியில் வெற்றி பெறுபவரைத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுப் பிரிவுகள், சமூக நீதிக்கு எதிராகக் கொண்டு செல்லும் செயல்பாடுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்த அநீதியை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 2006 – ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மத்திய நிருவாக தீர்ப்பாயத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தது. ஆனால், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமோ, அந்தத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களான கே.சந்திரசேகர், ரமேஷ் ராம் உள்ளிட்ட சில மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஆர்.சிங்காரவேலு, எல்லிப் தர்மராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பளித்தது. மத்திய நிருவாக தீர்ப்பாணையத்தின் தீர்ப்பையும் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காத மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சிக்கிங் தாக்கூர், லோகேஸ்வர் சிங் பாண்டா ஆகியோர், சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில், அமைந்த, மத்திய நிருவாக தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை முடக்கும் விதமாக இடைக்காலத் தடை விதித்தனர். இதனைக் கண்டித்தும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் 22.5.2008 அன்று, நம் கருத்துகளை எடுத்துக் கூறினோம். மேலும் சட்ட விரோதமாகச் செயல்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போக்கு அதாவது மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும், சட்ட விரோதமாக நடந்து கொண்டால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு, அந்த அமைப்பு பொறுப்பாக்கிட வேண்டும் என்றும், இல்லையேல் சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில், பிற்படுத்தப்
பட்டோர் பட்டியலில் இருந்த குஜார் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியிருந்தனர். ஒரு கட்டத்தில் மிக உக்கிரமாக ரயில் மறியல், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வாறு வரகூர் மாவட்டம் மாரியா என்ற இடத்தில் மே 24ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் திடீரென்று கலவரம் ஏற்பட்டது. அப்பொழுது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பி.ஜே,பி.யைச் சேர்ந்த வசுந்தரா ராஜே இருந்தார். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் அய்ந்து பேர் அதே இடத்தில் பலியான நிலையில், பலர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நாம், குஜார் மக்களின் சமூக நீதிப் போராட்டம் என்பது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அல்ல என்பதும் அவர்களது வாழ்வுரிமைக்கானப் போராட்டம் என்பதையும் எடுத்துக்காட்டினோம். பொது அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் முடிவுகளின்படி எஸ்.டி. பட்டியலில் சேர்க்கலாம் என்றும் தெரிவித்து குஜார் மக்களின் போராட்டத்தைத் திராவிடர் கழகம் ஆதரிக்கிறது என்ற கருத்தையும் தெரிவித்தோம். அதே நேரத்தில் அம்மக்கள் வன்முறையை கைவிட்டு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தோம்.
சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 30.5.2008 அன்று அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஓ.பி.சி. மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நாம் எழுதிய Social justice multi-dimension புத்தக வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றன. அதில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டி,
யு.பி.எஸ்.சி. தேர்வுத் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் தம்மை இணைத்துக் கொண்டு வாதாடும் என்று தெரிவித்தோம்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் பெ.ஜெகதீசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறைச் செயலாளர் அசோக் வரதன் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாம் எழுதிய புத்தகத்தை அசோக் குமார் செட்டி அய்.ஏ.எஸ். அவர்கள் வெளியிட பேராசிரியர் கருணானந்தம், திருவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பெற்றுக்கொண்டார்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உத்திரமேரூர் உ.து.சிங்காரம் அவர்கள் (தமது வயது 93ஆம் வயதில்) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்தினோம். அவர் தொடக்கத்தில் சோசலிஸ்டுக் கட்சியில் இருந்து பணியாற்றியவர், பிறகு திராவிடர் கழகத்தில் தம்மை ஒப்படைத்துக் கொண்டு இறுதி மூச்சு அடங்கும் வரை கொள்கைப் பணியாற்றி வந்தவர். உத்திரமேரூரில் தந்தை பெரியார் சிலையை நிறுவி
யவர்.
தம் மரணத்துக்குப் பின் எவ்வித சடங்கு
களும் செய்யக்கூடாது என்று மரணசாசனம் (உயில்) எழுதி வைத்து மறைந்தவர்.
(நினைவுகள் நீளும்…)
