Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாழும்போது பேணுவோம்!சடங்குகளைத் தவிர்ப்போம்!

திடீரென விபத்தில் சிக்கி, கால்களை இழந்து நிரந்தரமாக நடக்க முடியாமல் போகலாம்.அல்லது முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளைச் செய்து இயல்பாக இருக்கமுடியாமல் போகலாம். தீடீரென்று பக்கவாதம் ஏற்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்படலாம்.

முதுமையால் வீட்டிற்குள்ளேயே அடங்கிப் போய்விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை எந்தக் குடும்பத்திற்காக உழைத்தார்களோ அவர்களே சுமைகள் என ஒதுக்குவதும், எப்போது இறப்பார்கள் என எதிர்பார்ப்பதுமான நிலைமை இன்றைய குடும்ப அமைப்பில் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. நாம் நம்மைச் சுற்றிப் பார்க்கும்போது காணும் காட்சிகள்.

தெரிந்தவர் ஒருவர் தன்னுடைய தந்தை இறக்கவேண்டும் என்று கடவுளைக் கும்பிட்டதாகக் கூறினார். அதற்கென்று தனிக் கடவுள் இருக்கிறது என்றும், அங்கு போய்க் கும்பிட்டால் தனது தந்தை சீக்கிரம் இறந்துவிடுவார் என்றும் கூறினார். கடவுள் நம்பிக்கை உள்ள பல முதியவர்கள் சொல்லும் சொல், ’என்னைச் சீக்கிரம் வந்து எடுத்துக்கொள் கடவுளே’என்பதுதான். ஏதோ கடவுள் வந்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் வந்து உயிரை எடுத்துக்கொண்டு போவது போல், என்னை எடுத்துக்கொண்டு போ, என்னைச் சீக்கிரம் வந்து அழைத்துக்கொண்டு போ என்னும் சொற்றொடர்களைக் கேட்கிறோம்.

முதியவர்களை, நோய்வாய்ப்பட்டவர்களைப் பராமரிக்க மறுக்கிற பெரும்பாலானக் குடும்பங்கள், அவர்கள் இறந்தபிறகு திவசம் கொடுப்பதற்கு மறப்பதில்லை. இறந்தவர்க்குப் பிடித்த திண்பண்டம் என்று சொல்லி உறவுகள் எல்லாம் கூடி, இறந்தவர் படத்தை வைத்துக் கும்பிட்டு அந்தத் திண்பண்டங்களை உண்ண மறப்பதில்லை. உயிரோடு இருக்கும்போது அலட்சியப்படுத்தி, அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் குடும்பங்கள்தான் இப்படித் திவசம் என்று சொல்லிப் பணத்தைச் செல்வழித்துப் பார்ப்பனர்களுக்குக் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்தத் திவசம் என்பது எவ்வளவு கொடுமையானது, பாமர மக்களை எவ்வளவுதூரம் அறியாமையிலேயே வைத்திருப்பது. மூடநம்பிக்கை  சொல்லும் நரகம், சொர்க்கம் என்பதையெல்லாம் விளக்கி, தந்தை பெரியார் உரையாற்றியிருக்கிறார். அது மட்டும் அல்ல, சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னால் திவசம் செய்யாதவர்களின் பெயர்களை வாங்கி அதனைக் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டிருக்கிறார்.

“காலமான பிறகு ஒரு வருடம் கழித்துத் திவசம் செய்யாதவர், பெயரெல்லாம் கேட்டுக் ‘குடிஅரசு’ இதழில் போட்டோம். ஏராளமாகத் தொடர்ந்து வந்தது. அதில் எங்காவது ஒரு குமாஸ்தா இருந்திருப்பான். அதைக் கண்டுபிடித்து, நீ என்ன திவசம் செய்யமாட்டேன் என்று ‘குடிஅரசி’ற்குப் பெயர் கொடுத்தாயா என்பான். அய்யய்யோ நானில்லை வேறு யாரோ என்று கூறிவிடுவான். 1926-27லேயே இப்படி மதுரையில் இந்தக் கருத்தைக் கூறித் துவக்கினோம். பத்துச் சதவீதம் பேர்தான் திருந்தினார்கள். மீதி தொண்ணூறு சதவீதம் பேர்கள் திருந்தவில்லை” (தந்தை பெரியார், விடுதலை 9-4-1959)

இன்றைக்கும் அந்த விகிதாச்சாரம் மாறவில்லை. தொண்ணூறு சதவீதம் பேர்கள் இன்னும் இறந்துபோன பெற்றோர்களுக்குத் திவசம் செய்கிறார்கள். இருக்கும்போது பெற்றோர்களைக் கவனிக்காமல் விட்டதை மறைப்பதற்கு இந்தத் திவசம் கொடுப்பதை வழக்கமாக வைத்து நடத்துகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

மற்றவர்களுக்காகத் தொண்டு செய்து வாழ்பவர்கள் தனக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், அதனை எண்ணி எண்ணி வருந்தி வருந்திச் சாவதில்லை.வரும் நோயை ஏற்றுக்கொண்டு அதனோடு வாழ்ந்து பழகுகின்றார்கள். மறைந்த சென்னை ஆவடியைச் சேர்ந்த அய்யா கோரா அவர்கள், தனக்குப் புற்றுநோய் ஏற்பட்டு வீட்டில் இருந்த நேரத்தில், அவரிடம் பேசினால் அவர் நேர்மறையாக உரையாடுவார். ‘எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டால், எனக்கு என்ன மாப்பிள்ளை மாதிரி வீட்டிலேயே இருக்கிறேன் என்பார். என்னை எனது மனைவியும் பிள்ளைகளும் அப்படி வைத்துக் கவனித்துக் கொள்ளுகிறார்கள். எனக்கு என்ன குறை என்பார். தொடர்ந்து பெரியாரியல் சார்ந்த செய்திகளை வாட்சப்பில் அனுப்புவார். தெலுங்கில் வெளிவந்த நாத்திகக் கட்டுரைகளை மொழிபெயர்த்து அனுப்புவார். அவர் இறந்தபோது அவரது மகள் தமிழரசி கோரா அவர்கள், ‘அங்கிள், அவர் தன்னுடைய உடல் வேதனையை ஒருபோதும் பகிர்ந்ததில்லை. இறப்பிற்கு முதல் நாள் தான்  கொஞ்சம் வலிக்கிறது என்று சொன்னார்’ என்றார். பெரியாரியல் தொண்டு செய்யக் கற்றுக் கொடுக்கிறது. உடல் வேதனையைத் தாண்டி இந்தச் சமூக வேதனையைத் தீர்ப்பதற்கு வேலை செய்யச் சொல்கிறது. அதனால்தான் 93 வயதிலும் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டும் உழைப்பும் மற்றவர்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது.

நமது இயக்கத்தோழர்கள் இறந்தால், நாம் படத்திறப்பு விழா நடத்துகிறோம். அது எதற்காக என்பது பற்றித் தந்தை பெரியார் அவர்கள் கூறியுள்ளார்.

“நாம் உருவப்படத் திறப்புவிழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் வைத்து ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த-செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதி, நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை.மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை
செய்யும்படியோ,கோவில்களிலோ தேர்,இரதம்,விமானம்,சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால், மற்றதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு, சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரதிப் பிரயோஜனம் பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன்மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும்-பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபடவேண்டும் என்கின்ற மேலான பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.” (‘குடிஅரசு’ கட்டுரை – 10-1-1942)

நாம் பெரியாரியலைப் பின்பற்றித் தொண்டு செய்வது மட்டுமல்ல, நாம் மறைந்த தோழர்களுக்குப் படத்திறப்பு செய்வதும் கூட மனித நேயத்தைப் பரப்புகின்ற ஒரு வேலையாகத்தான் செய்கிறோம். அவர்களைப் போலத் தொண்டாற்ற மற்றவர்களும் வரவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம் என்பது எவ்வளவு நுட்பமும் ஆழமும் பொதிந்த கருத்து.

நமது தோழர்கள் உடல்கொடை கொடுக்கிறார்கள். கண் தானம் கொடுக்கிறார்கள். வாழும் காலத்திலேயே அதனை எழுதி வைக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையைச் சேர்ந்த தோழர்கள் நாற்பது பேர், நாங்கள் அய்யா ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளன்று உடல்கொடை படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தோம். அந்தப் படிவங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு பேராசிரியர், திராவிடர் கழகத் தோழர்கள் எழுதிக் கொடுத்தார்கள் என்றால், அவர்களின் குடும்பத்தினர் அதனை உறுதியாக நிறைவேற்றுவார்கள் என்று அருகில் இருந்தவரிடம் சொன்னார்.

நமது கருப்பு மெழுகுவர்த்திகளின் நினைவு
நாள் என்பது தொண்டற நாளாகத்தான் மாறுகிறது. முதியோர்கள் இல்லம், ஆதரவற்
றோர் இல்லங்களுக்கு நம் இயக்கத்தினரின் குடும்பத்தினர் நன்கொடை கொடுக்கின்றனர். நமது நாகம்மையார் இல்லத்திற்கு நன்கொடை கொடுக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் சோம.இளங்கோவன், அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் போன்றவர்கள் நாகம்மையார் இல்லத்து குழந்தைகளுக்கு, சிறப்பு உணவு அளித்து தாங்களும் உண்டு பங்கேற்கின்றனர்.

“திவசம் என்பதன் பொய்ம்மையை அனைத்து ஜாதியினரும் உணருகின்றனர்.”

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர்.தண்டபாணி அய்யர், விசாலம், த.ராஜகோபால், ஆர்.தேவகி, ஆர்.பாலகிருஷ்ணன், சா.குணசேகரன்,  சு.இளங்கோவன்  இவர்களின் நினைவாக 24.7.2025 ஆடி அமாவாசை சடங்குகளைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் வடை, பாயாசத்தோடு உணவிற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது. (‘விடுதலை’ ஜூலை 23, 2025)

அவர்களே திவசம் என்பதைத் தவிர்த்து,ஆடி அமாவாசை சடங்குகள், என்பது மூடத்தனம் என்பதை உணர்ந்து தொண்டறத்துக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில், அந்தச் சடங்குகளால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்டவர்கள் திவசம் கொடுக்கிறோம் என்று கூட்டம் கூட்டமாக நிற்பது வருத்தம்தான் அளிக்கிறது என்றாலும், தொடர்ந்து தொண்டறப்பணியைச் செய்வோம்.

தந்தை பெரியாருக்குப் பின்னால் உலகமெல்லாம் தந்தை பெரியார் கொள்கை பரப்பும், அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், நமது தோழர்களின் எத்தனை உருவப்படங்களைத் திறந்துவைத்து உரையாற்றி இருக்கிறார். அதை மட்டுமே ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறலாம் என்ற அளவிற்கான உரைகள் அவை. குடும்பம் என்னும் வட்டத்தை விட்டுப் ‘பொதுத்தொண்டு’ செய்பவர்களே என்றும் உலகில் வாழ்பவர்கள் என்னும் உணர்வை ஊட்டுவோம். திவசம் என்னும் பொய்ம்மையை அகற்ற  தொடர் பரப்புரை செய்து, விழிப்புணர்வூட்டுவோம். |