பெண்களுக்கான இடஒதுக்கீடு கொடுப்பதில்
பி.ஜே.பி. தான் தீவிர முனைப்புக் காட்டுவது போலவும், திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதை எதிர்ப்பது போலவும் வரலாற்று உண்மைக்கு எதிரான ஒரு பொய்யை பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மை வரலாறு என்ன என்பதை ஆழமாகப் பார்ப்போம்.
இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக 1920இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சிதான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. பெண்களுக்கான சொத்துரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்தது. பெண்களுக்கு கல்வியிலும், அரசு பணிகளிலும், அரசியல் அதிகாரத்திலும் பங்கு கேட்டு போராடியது திராவிட இயக்கம்தான்.
புரட்சியாளர் அம்பேத்கர் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட சில உரிமைகளை நிலைநாட்ட இந்து சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய முயன்றபோது பிற்போக்கு பார்ப்பன மற்றும் சனாதனக் கும்பலும் எதிர்த்து முறியடித்தனர்.
ஆனாலும், திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 1989இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் அரசுப் பணிகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் 30 விழுக்காடு பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அதுபோலவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறது.
பெரியார் திடலில் 28.8.1979 நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா – பெண்கள் விடுதலை மாநாட்டில்
வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமான அளவில், பெண்கள் இருந்துவரும் நிலையில், தந்தை பெரியார் அறிவுரைப்படி இந்தியாவில் கல்வி, உத்தியோகங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் மற்றும் எல்லாத் துறைகளிலும் சரிபகுதியாக 50 சதவிகித இடங்கள் பெண்களுக்கே ஒதுக்கீடு செய்தாக வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தந்தை பெரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்தக் காலகட்டத்தில், அவர்களின் இந்தக் கருத்திற்குச் சட்ட வடிவம் கொடுப்பது தந்தை பெரியார் அவர்களுக்குச் செய்யும் சரியான சிறப்பும், மரியாதையும் ஆகும் என்று அரசுக்கு இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது என்றும்,
26-12-1996 சென்னையில் நடைபெற்ற பெண்ணுரிமை மாநாட்டு தீர்மானத்தில்,
“அய்க்கிய முன்னணி அரசு ஏற்றுக்கொண்ட குறைந்தபட்ச வேலைத் திட்டங்களில் ஒன்றான நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது என்னும் திட்டத்தைத் தற்போது மத்திய அரசு ஒத்திப்போட்டுள்ளமையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும்;
23-4-1999 தஞ்சாவூரில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டு தீர்மானத்தில்,
“சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 விழுக்காடு இடத்தை அளிக்கும் வகையில் மேலும் கால தாமதத்திற்கு இடமின்றி உடனடியாகச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அப்படிச் சட்டம் நிறைவேற்றப்படும் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் உள் ஒதுக்கீட்டுக்கு வழி வகை செய்யப்பட வேண்டும் என்றும் மத்திய அரசையும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது” என்றும்;
29-6-1999 ஊற்றங்கரையில் நடைபெற்ற பாலியல் 29.6.1999 நீதி மாநாட்டில்,
“மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு இடங்கள் அளிக்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்யப்படுவதை இம்மாநாடு கண்டிக்கிறது” என்றும்,
2.8.2003 பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பகுத்தறிவு இன எழுச்சி மாநாட்டில்,
“பெண்களுக்கு உள்ஒதுக்கீடுடன் கூடிய 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் உள்ஒதுக்கீடுடன் கூடிய 33 சதவிகித இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றாமல் போலிச் சமாதானங்களைச் சொல்லிக்கொண்டு காலம் கடத்தும் மத்திய அரசின் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது” என்றும்,
உள்ஒதுக்கீட்டுடன் கூடிய 33 சதவிகித இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இந்த நாடாளுமன்றத் தொடரிலேயே நிறைவேற்றித் தர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்றும்,
திருவண்ணாமலை (16.10.2004) – திராவிடர் எழுச்சி மாநாட்டில்,
“சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் அமைப்பது வரவேற்கத் தகுந்ததே! உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகள் பெருமளவு தற்போது காலியாக உள்ள நிலையில், சமூக நீதியைப் புறக்கணிக்காமல் அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மகளிர், சிறுபான்மையினர் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்கப்படும் வகையில் இனிவரும் புதிய நியமனங்கள் அமைய வேண்டும்” என்றும்
சென்னை (10.05.2005) திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தீர்மானத்தில்,
“சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நிரப்பப்படாமல் காலியாக உள்ள சுமார் 24 உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், இந்த இடங்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரைக் கொண்டு அப்பதவிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் இந்த செயற்குழு முடிவு செய்கிறது” என்றும்,
சென்னை (11.09.2005) – திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில்,
“பெண்களுக்கு ஒதுக்கீடு தரும் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது” என்றும்,
திருப்பூர் (25.09.2005) – திராவிடர் எழுச்சி மாநாட்டில்
உள்ஒதுக்கீடுடன் கூடிய 33 சதவிகித இடஒதுக்கீட்டை மேலும் காலதாமதம் செய்யாமல் சட்டமாக்க வேண்டுமாய் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
ஜாதிய மனப்பான்மை உள்ள ஒரு சமூக அமைப்பில் பெண்களுக்கு உள்ஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமானது என்பதை இம்மாநாடு முக்கியமாகச் சுட்டிக்காட்டுகிறது என்றும்,
சென்னை (4.1.2006) – சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழா
தீர்மானம் எண் : 5ன் படி
பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தேவை!
மக்கள் தொகையில் சரி பாதியாக இருக்கக்கூடிய பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்றும்.
ஈரோடு (25.03.2006) – திராவிடர் எழுச்சி மாநாடு
நாடாளுமன்றம் – சட்ட மன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம்
1996ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பேசப்படும் பொருள் பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33 சதவிகித இடஒதுக்கீடு தேவை என்பதாகும்.
மகளிர் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுக!
மகளிருக்கான இடஒதுக்கீடு பற்றிய
சட்டத்தை மேலும் காலதாமதம் இன்றி நடப்புக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்
என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.
பல ஆண்டு காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இதனை மேலும் காலதாமதம் இன்றி நிறைவேற்றிட முன்வருதல் அவசியமாகும் என்றும் வலியுறுத்துகின்றது என்றும்,
சென்னை-திருவொற்றியூர் பெண்கள் மாநாடு (10.3.2007)
33 சதவிகித இட ஒதுக்கீடும் மகளிர் போராட்டமும்
1996ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முன்னணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட, ‘சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவிகிதம் அளிக்கப்பட வேண்டும்’ என்ற சட்ட முன்வடிவு 11 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் இதுவரை நிறைவேற்றப்படாதது பெரிதும் வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
‘‘மகளிர் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இந்தத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தவறினால் நாடு முழுவதும் பெண்களை ஒருங்கிணைத்து தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது’’ என்றும்,
திருவாரூர், திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு (2016 – ஜனவரி)
தீர்மானம் : 1
மக்கள் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட ஆவன செய்யுமாறு மாநில, மத்திய அரசுகளையும் தனியார் துறைகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி பதவிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்யுமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்றும்,
தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதுடன் இதற்கான கருத்தரங்குகளையும், போராட்டங்களையும் பலமுறை நடத்தி வந்துள்ளது. அதேநேரத்தில் அனைத்து சமூக பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந்தது.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இம்மசோதா 2023ஆம் ஆண்டு புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முதல் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. அது ஒரு ஏமாற்று மசோதாவாகும். ஏனெனில், அம்மசோதா உடனே அமலுக்கு வந்தால் 543 உறுப்பினர்களில் 181 பெண்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்தும். தமிழ்நாட்டில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 77 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பெண்கள் என்ற எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படும். ஆனால், அம்மசோதாவிலேயே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டிருந்ததால் அது உடனடியாக அமலுக்கு வராது என்பது தெளிவானது. மேலும் அனைத்து சமூக பெண்களுக்குமான சமூக பிரதிநிதித்துவம் இதில் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென்று சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி இந்த மசோதாவை வெளியில் காட்டி அதன் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்ற சூழ்ச்சித் திட்டத்தை ஒளித்து கொண்டு வந்தனர். தேர்தல் காலத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இதன் சூழ்ச்சியை வெளிப்படுத்தி போர் முழக்கமிட்டனர் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் திராவிட இயக்கம் எந்த அளவுக்கு பெண்ணுரிமையிலும், பெண்களுக்கான இடஒதுக்கீட்டிலும் நீண்ட நெடுங்காலமாய் போராடியுள்ளது என்பதை அறியலாம்.
தமிழர் தலைவர் சூளுரை!
வழக்கம்போல, பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மைனாரிட்டி அரசு மக்களைக் குழப்பி, மூன்று வெவ்வேறு பிரச்சினைகளை ஒன்றாக்கி, இதன் பேராபத்தினை மக்கள் உணரவிடாமல், விஷ உருண்டை போன்று உரிமைப் பறிப்பு மசோதாவிற்கு, சர்க்கரையும், தேனையும் தடவி, ஜனநாயகப் படுகொலைக்கு வித்திட்டு – அரசியலமைப்புச் சட்ட அடிக்கட்டுமானக் கூட்டாட்சிக்கும் வேட்டு வைக்க முனைந்துவிட்டது!
1. தொகுதி மறுவரையறை என்பது வேறு;
2. மக்களவையில் இடங்களை அதிகரிப்பது வேறு;
3. மகளிர் இடஒதுக்கீடு சட்ட அமல் என்பது வேறு.
இம்மூன்றையும் திட்டமிட்டே இணைத்துக் காட்டி, குழப்பி, ஏமாற்றி, மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றிட முனைப்புக் காட்டுகிறது!
மகளிருக்கு 33 சதவிகித மசோதாவை விரைந்து நிறைவேற்றிட முனைப்புக் காட்டுவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் சூழ்ச்சி இது.
புதிய, பெரிய நாடாளுமன்றக் கட்டடத் தொடக்கத்தினையே அதில் நடத்தி, இதேபோல் ஒரு நாடகம் போட்டு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, உடனடியாக அது அமலுக்கு வராமல், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அதை ஆக்கி வித்தைக் காட்டினார்கள்.
2021ஆம் ஆண்டுக்குரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியவில்லை!
2021ஆம் ஆண்டுக்குரிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்னும் முடியாத நிலையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கை வைத்தே நாடாளுமன்ற மக்களவை இடங்களை 543இல் இருந்து 816ஆக உயர்த்தி, அதில் 33% இடஒதுக்கீடு வழங்கப்போவதாக அவசர அவசரமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதன் பின்னால் ஒளிந்திருப்பது, தென் மாநிலங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியாகும். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களைக் கூட்டுகிறோம் என்ற போர்வையில், ஒப்பீட்டளவில் தென்மாநிலங்களுக்குக் குறைவான இடங்களும், வட மாநிலங்களுக்கு அதிக இடங்களும் ஒதுக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்கள் பாசிச ஆதிக்கம் நிலைக்கும்படியான கட்டமைப்பைச் சட்ட ரீதியாக உருவாக்கும் வேலையைத் தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.
ஹிட்லர் என்ற சர்வாதிகாரியின் முறைதான் இது!
சில திரைப்படங்களில் வில்லன்களை, காவல்துறையினர் பிடிக்க முனையும்போது, அவர்கள் குழந்தையை அபகரித்து மார்பில் வைத்துக் கொண்டு, மனிதக் கேடயமாக (Human Shield) காட்டித் தப்பிக்கும் காட்சி போன்று மகளிர் மசோதாவை கேடயமாக்கித் தங்கள் திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள். ‘‘மகளிர் மசோதாவையே – எதிர்க்கிறார்கள் எதிர்க்கட்சியினர்’’ என்று திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு, மாநில உரிமைகளை அறவே பறித்து, வரும் சில ஆண்டுகளில், முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் என்ற அதிபர் சர்வாதிகார ஆட்சி முறையை மாற்றினாரே, அதே பாணிதானே இது!
ஹிட்லர் ஆதிக்கம், எதேச்சதிகாரம், பாசிசம் வருவதற்கு வழிவகுத்திருக்கின்ற முன்னோட்டம்!
ஆகவேதான், இது முழுக்க முழுக்க வெறும் தொகுதி மறுவரையறை பிரச்சினை மட்டுமல்ல; அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை, இடித்து நொறுக்கி, மீண்டும் ஒரு ஹிட்லர் ஆதிக்கம், எதேச்சதிகாரம், பாசிசம் வருவதற்கு வழிவகுத்திருக்கின்ற முன்னோட்டம் – அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள்.
அதனைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள். கேரளம் மாநிலமும் உணர்ந்துகொண்டது.
அதேபோல, மற்றவர்களும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் உள்ளவர்கள் உணரவேண்டும்.
மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் அது பெரும் போராட்டத்திற்கு வழிவகுக்கும்! என்று அவர்களின் சூழ்ச்சித் திட்டத்தை வெளிப்படுத்தினர்.
கனிமொழி நாடாளுமன்றத்தில் பேச்சு
பெண் பிரதிநிதித்துவத்தில் உண்மையான அக்கறை பி.ஜே.பி.க்கு இல்லை என்று முழங்கிய கவிஞர் கனிமொழி!
இந்தியாவிலேயே மிக உயர்ந்த எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ள, நாட்டிலேயே மிக உயர்ந்த பெண் தொழிலாளர் பங்களிப்பைக் கொண்டுள்ள, மாநகராட்சி மன்றங்களிலும் மாநில சட்டமன்றங்களிலும் போராடி வெற்றி பெற்ற தமிழ்நாட்டின் பெண்கள், தங்கள் உரிமை அபகரிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டார்கள்.
தொகுதி மறுவரையறை இல்லாமல், 2029 தேர்தல் முதல் சுழற்சி முறையில் தற்போதுள்ள தொகுதிகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை ஏன் உங்களால் வழங்க முடியவில்லை? பெண்களின் பிரதிநிதித்துவத்தில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், பாதை தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கிறது. ஏன்? அதை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள்? இந்த நாட்டின் பெண்கள் பல பத்தாண்டுகளாக, பல நூற்றாண்டுகளாக அரசியல் அதிகாரம் இன்றி வாடி வருகிறார்கள்” என்றுரைத்தார்.
எழுச்சித் தமிழரின் முழக்கம்
நாடாளுமன்றத்தில் இம்மசோதா குறித்து உரையாற்றிய வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில்,
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1951ஆம் ஆண்டு கொண்டுவந்த இந்துச் சட்ட மசோதா சட்டத்தை நிறைவேற்ற விடாமல்
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கொடும்பாவிகளைக் கொளுத்தினார்கள். ஆனால் இன்றைக்கு அது தலைகீழாக மாறியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இன்றைக்கு மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுக்க முன்வந்திருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கருடைய கனவு நனவாகிறது என்பதில் பெருமைப்படுகிறேன்.
மகளிருக்கு இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசின் நோக்கம் இல்லை என்பதை விளக்கி, இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மறுசீரமைப்பு மசோதாவையும் கொண்டு வந்திருப்பதில் ஓர் உள்நோக்கம் இருப்பது தெரிய வருகிறது. மகளிருக்கு இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது முதன்மையான நோக்கம் இல்லை. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையை உடனே நடைமுறைப்படுத்த இதைப் பயன்படுத்துகிறது என்ற சூழ்ச்சி தெரிய வருகிறது என்றார்.
மேலும், “ஒன்றிய அரசு தன் பழைய நிலைப்பாட்டை ஏன் மாற்றி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த முறை பேசும்போது, மகளிருக்கான இடஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த முடியாது. மகளிர் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சென்சஸ் – ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை அமைத்து, மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்ன அரசு, தனது நிலைப்பாட்டை இப்போது மாற்றிக் கொண்டதன் காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த இந்த அரசுக்கு விருப்பமில்லை. ஏனென்றால், அப்படி நடத்தினால் இந்திய அளவில் ஓபிசி மக்கள் தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதன் மூலம் இதுவரையில் மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாமல் போனதை அறிந்து, ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கான ஜனநாயக உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்கக் கூடும். இதற்கு இந்த அரசு அஞ்சுகிறது என்ற ஒரு நிலையை உணர முடிகிறது.
அதுமட்டுமல்லாமல், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பெற்றால், அதன் அடிப்படையில் ஓபிசி சமூகத்தைச் சார்ந்த பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு கோரப்படும், வலியுறுத்தப்படும். அதற்கான போராட்டங்கள் வெடிக்கும் என்கிற நிலையை உணர்ந்து, ஓபிசி சமூகத்தைச் சார்ந்த மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் விருப்பமில்லா இந்த அரசு அதைத் தவிர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்கூட்டியே இந்த மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைகிறது என்கிற அய்யம் எழுகிறது. இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மகளிர் இடஒதுக்கீட்டில் அரசமைப்புச் சட்டத்தின்படி, எஸ்.சி., எஸ்.டி. பெண்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. ஆனால், ஓபிசி பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இங்கே பேசிய பல உறுப்பினர்கள் கூட அந்த உள் ஒதுக்கீடு பற்றிப் பேசினார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எண்ணம் இல்லை. அதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.
அதுமட்டுமில்லாமல், இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்னவர்களை, ‘அர்பன் நக்சல்ஸ்’ என்று பிரதமரே, வசைபாடி இருக்கிறார். இந்த நிலையில் ஓபிசி மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டவும், கண்டிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். ஓபிசி மக்களுக்கு குறிப்பாக, பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
‘இந்து நாளேட்டின்’ எச்சரிக்கை!
இதுகுறித்து ‘இந்து’ ஏடு எழுதியுள்ள தலையங்கத்தில் அரசியலமைப்புச் சட்ட (131-ஆவது திருத்த) மசோதா 2026, மற்றும் அதனுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதாவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (2023-இன் 106-ஆவது திருத்தம்) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்போது இது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிந்தைய தொகுதி மறுவரையறையுடன் பிணைக்கப்பட்டிருந்தது.
பெண்களுக்கான இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் பிணைப்பதில் அரசாங்கம் பிடிவாதமாக இருப்பதற்கு, பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பதை போர்வையாகப் பயன்படுத்தித் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவதே நோக்கம் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
மக்களவை இடங்களைப் பெரிய அளவில் மறு ஒதுக்கீடு செய்வது, பாரதிய ஜனதா கட்சி (BJP) தேர்தல் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களுக்குச் சாதகமாகவும், வரலாற்று ரீதியாக பலவீனமாக இருக்கும் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் அமையும்; இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டாட்சி அமைப்பையே மாற்றியமைத்துவிடும்” என்று தெரிவித்துள்ளது.
தெலங்கானா முதலமைச்சரின் கருத்து
இதுகுறித்து பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானா, “பெண்கள் இடஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்தி மக்கள் தொகை அடிப்படையிலான தேசிய அளவிலான மக்களவைத் தொகுதி மறுவரையறையைத் திணிக்க முயல்வது, மிகக் குறுகிய காலத்திற்கு பாஜகவிற்கு உதவக்கூடும். ஆனால், இது தென்னிந்திய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு அநீதி இழைப்பதாக அமைந்தால், நீண்ட கால அளவில் நமது நாட்டை அது பலவீனப்படுத்தும்” என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “தேசத்தின் பரந்த மற்றும் நீண்டகால நலனைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் வெறும் மக்கள் தொகை விகிதாச்சார மாதிரியைத் தவிர்த்து பிற மாதிரிகளைப் பரிசீலிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கேரளா, கர்நாடகா மாநில முதலமைச்சர்கள் ஏற்கனவே தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
இந்த மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. இது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்து செய்தி வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மசோதாவைப் பொறுத்த வரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறை வேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”–அய் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.
எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.
குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.
இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.
நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டி ருக்கலாம். அதனையும் செய்யவில்லை.
இது நீதியல்ல;
இது உண்மையான நோக்கமல்ல;
இது வெறும் காட்சிப்பிழை!
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடி வெடுத்து விட்டனர்” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கருத்து
”பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி வரும் பெண்களின் கோரிக்கை நிறைவேறவிருக்கும் அருமையான தருணம், அதை முதலமைச்சரால் ஜீரணிக்க முடியவில்லை” என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்து விடக்கூடாது என்பது மட்டும் தான் திமுகவின் எண்ணம்” என தெரிவித்துள்ளார்.
எடப்பாடியின் இக்குற்றச்சாட்டு உண்மைக்கு எதிரானது. பா.ஜ.க.வின் துரோகத்திற்குத் துணைபோகும் குற்றம்.
மகளிர் இடஒதுக்கீட்டின் கட்டாயத் தேவை ஏன்?
வாக்களிக்கும் விகிதத்திலும் மகளிர் 50 விழுக்காட்டினர். என்றாலும், அவர்களுக்குரிய பாலியல் நீதியோ, சமூக நீதியோ, உரிய வகையில் போதிய அளவில் (Adequate) இந்த 75 ஆண்டு சுயராஜ்யத்தில் கிட்டவில்லை.
நீதிக்கட்சி 1920இல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக வாக்குரிமை வழங்கப்பட்டது.
ஆண் – பெண் இருவருக்கும் சுதந்திரம் பெற்றபின் நடந்த முதல் தேர்தலிலேயே (1952) ஓட்டுரிமை வழங்கப்பட்டு. இருப்பினும் 1952-1957இல் முதலாவதாக அமைந்த மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 மட்டுமே. 1952 முதல் 2009 வரை நடைபெற்ற எந்தவொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50அய்க்கூட எட்டியதில்லை. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக பெண்கள் 58 பேர் (10.6 சதவிகிதம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று மக்களவையில் 543 உறுப்பினர்களில் 82 பேர் பெண்கள் (15.2 சதவிகிதம்). ஆனால், இந்தியா இன்னும் உலக சராசரியான 26.5 சதவிகிதத்தை எட்ட இயலவில்லை. பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து 2023 ஜனவரியில் அய்.நா.சார்பில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கையின்படி 185 நாடுகளின் பட்டியலில் இந்தியா 140ஆம் இடத்திற்கு பின்தங்கியுள்ளது. பல்வேறு நாடுகள் இடஒதுக்கீட்டின் மூலமே பாலினச் சமத்துவத்தை எட்டியுள்ளன.
சமூக நீதிக்கான வழி
பாலினப் பாகுபாட்டைக் குறைக்கவும் ஆண்-பெண் சமத்துவத்தை நிலைநாட்டவும் இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகாது என்றாலும், அது பெண்களை அதிகாரப்படுத்துதலில் ஒரு முக்கியமான நகர்வாக இன்று பெண்கள் கல்வியில் ஆண்களுக்கு நிகராக வளர்ந்துள்ள போதிலும் பொருளாதாரத்திலும் நிருவாகத் துறைகளிலும் அரசியல் பங்கேற்பிலும் பின்தங்கியே உள்ளனர். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதன் மூலம் பெண்கள் தங்கள் விடுதலையின் பல்வேறு பரிணாமங்களையும் தங்களுக்கான உரிமைகளையும் பெறுவது சாத்தியம் பெண்களின் பிரச்சினைகளுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாய பிரச்சினைக்காகப் பெண்கள் குரல் கொடுக்கவும் சட்டரீதியான மாற்றங்களைக் கொண்டு வரவும் முடியும். ஒரு சமூகத்தில் மூன்றில் ஒரு பங்கு இடம் இருந்தால் மட்டுமே அக்குழுவின் குரல் பொருட்படுத்தக்கூடிய அளவுக்கு ஒலிக்கும். ஆகவேதான் இந்த 33 சதவிகித இடஒதுக்கீடு. சமமான வாய்ப்பு என்பது 50 சதவிதம் என்றாலும் அதற்கான முதல் முயற்சியாக இதைக் கட்டாயம் செய்ய வேண்டும்.
1950களில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டத்தைச் சனாதனவாதிகள் நிறைவேற்ற விடவில்லை – அதனாலேயே அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலகி வெளியேறினார். பிறகு 2005இல் தி.மு.க. பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில், தி.மு.க.வின் பேராதரவுடன் சொத்துரிமைச் சட்டம் பெரியார் அம்பேத்கர் ஆகியோர் விழைவு சட்டமாகி செயலுருக் கொண்டது.
ஆக, பெண்களுக்கான சொத்துரிமை யென்றாலும், இடஒதுக்கீடு என்றாலும் அதில் முதலில் நிற்பது திராவிட இயக்கங்களே! மாறாக அதற்குத் தடைக்கற்களாய் நிற்பது பி.ஜே.பி. மற்றும் சங்பரிவார அமைப்புகள்.
எனவே, மகளிர் உரிமைக்காகப் பொய்யான நீலிக் கண்ணீர் வடிக்காமல், உண்மையான உணர்வுடன் இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் முதல் கட்டமாக 33% இடஒதுக்கீட்டை உடனே கொண்டுவர வேண்டும். இல்லையேல் பெரும் போராட்டம் வெடிக்கும். பி.ஜே.பி.யின் வேடம் கலையும்! |
